கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

கேப்டன்ஸி களேபரங்கள்!

World Cup captains
பிரீமியம் ஸ்டோரி
News
World Cup captains

இந்த உலகக் கோப்பையில் ஒவ்வோர் அணியின் கேப்டனின் செயல்பாடும் எப்படி இருந்தது? ஓர் அலசல்...

finch

ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியா)

அக்ரெசிவான கேப்டன். எந்த ஒரு தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் உலகக் கோப்பையில் அடியெடுத்து வைத்த ஆஸ்திரேலியாவை சிறப்பாகவே வழிநடத்திச் சென்றார். அவரின் சவால் மைதானத்தைத் தாண்டி டிரெஸ்ஸிங் ரூமை எப்படி குதூகலமாக வைத்திருப்பதில்தான் இருந்தது. 1 ஆண்டு தடைக்குப் பின் முக்கிய வீரர்கள் இரண்டு பேர் அணியில் இடம்பெறுகிறார்கள். எந்த ஒரு போட்டியும் ஆடாமல் அணியில் இடம் பெற்றதால் சில வீரர்களுக்கு அது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்திருக்கும். சிலருக்கு மனக்கசப்பும் ஏற்படும். அவற்றையெல்லாம் சிறப்பாகக் கையாண்டு அணியில் harmony-யை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டார். அணியில் உள்ள குறைகளை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதில்தான் கேப்டனின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். ஸ்டாயினிஸுக்கு காயம் ஏற்பட்ட போதும் அணியில் நான்கு ப்ரீமியம் பெளலர்களை மட்டுமே வைத்து விளையாடி மேக்ஸ்வெல்லை ஐந்தாவது பெளலராகப் பயன்படுத்தி வெற்றி கண்டார் ஃபின்ச். ஃபின்ச்சுக்கு விக்கெட் வேண்டும் எனும்போதெல்லாம் ஸ்டார்க்கை அழைப்பார். அவருக்கு எத்தனை ஓவர் மிச்சம் இருக்கிறது என்பதையெல்லாம் யோசிக்காமல் விக்கெட்டின் முக்கியம் அறிந்து அவரை பந்து வீச அழைப்பார். அந்தத் தைரியம்தான் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

Kane Williamson ( AP )

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)

‘கேப்டன் காம்’ எனப் பெயர் எடுத்தவர். ஆனால், உண்மையில் இந்த உலகக் கோப்பையின் அக்ரெசிவ் கேப்டன் கேன் வில்லியம்சன்தான். எதிரிகளை வலிக்காமல் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் வித்தகர் கேன். இந்தியாவுக்கு எதிரான அவரின் ஃபீல்டிங் செட்டப்பே அதற்குப் பெரிய உதாரணம். அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கோப்பையில் கேப்டனாகப் பிட்சை அழகாக ரீட் செய்து இந்த பிட்சில் என்ன ஸ்கோர் நல்ல ஸ்கோராக அமையும் என சக வீரர்களுக்குத் தெளிவாக கடத்தித் தான் நினைத்ததை நிறைவேற்றிவிடுவார். ஓரீரு போட்டிகளைத் தவிர அவரின் கணக்கு பெரிதாகத் தப்பாகவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அதை சகவீரர்களுக்கும் தெளிவுபடுத்தி தன்னுடைய நோக்கத்தில் வெற்றிகண்டுள்ளார். அண்டர்டாக்ஸ் எனக் கருதப்பட்ட நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் இவரின் பங்கு அளப்பரியது. ஆஃப் தி ஃபீல்ட் நடக்கும் பிரஸ் மீட்டிலும் தெளிவான பதிலைத் தருவது என கேப்டனாக இவரின் பங்கை சிறப்பாகச் செய்தார். ஐ.சி.சி வெளியீட்டிருக்கும் இந்த உலகக் கோப்பையின் சிறந்த லெவனின் கேப்டனாக வில்லியம்சனை தேர்வு செய்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

Virat Kohli

விராட் கோலி (இந்தியா)

இவர் வில்லியம்சனுக்கு அப்படியே நேரெதிர். இந்த உலகக் கோப்பையில் பேட்ஸ்மேனாக அவரிடம் எதிர்பார்த்ததை முழுவதுமாகச் செய்யாவிட்டாலும், இந்திய அணியின் கேப்டனாக அவரின் செயல்பாடு டாப் க்ளாஸ். இந்த உலகக் கோப்பையில் கேப்டனாக அவர் செய்த தவறு மிக அரிதே! கேப்டனாக அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரின் ரோலையும் தெளிவாக எடுத்துக்கூறி அவர்களை திறம்படச் செய்ய வைத்தார். இந்த உலகக் கோப்பையில் கோலி ஃபீல்டிங் செட் செய்த விதத்தில்தான் ஸ்கோர் செய்தார். உதாரணத்துக்கு தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் பும்ரா வீசியபோது மூன்றாவது ஸ்லிப் வைத்து டி காக்கை அவுட்டாக்கியதை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவையெல்லாம் போக அவரின் ட்ரம்ப் கார்டான பும்ராவை பயன்படுத்திய விதம்தான் டாப்.

holder

ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)

இவரின் முடிவுகள் பற்றி நாம் சொல்லவா வேண்டும்? இந்த உலகக் கோப்பையில் ஆச்சர்யமூட்டும் அதிசயங்கள் எல்லாம் இவர் எடுத்த முடிவுகள்தான். பாகிஸ்தான் போட்டியில் ஷார்ட் பால் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்து வெற்றி கண்டனர். அது ஆஸ்திரேலியா போட்டிக்கும் கொஞ்சம் கைகொடுத்தது. ஆனால் அதே பிளானை எல்லாப் போட்டிகளுக்கும் செயல்படுத்தியது பெரிய தவறு. கேப்டன் ஹோல்டருக்கு ‘பிளான் பி’ என்ற ஒன்று இல்லவே இல்லை போல. ஷார்ட் பால் போடுவதுதான் அந்த அணியின் பிளானாக இருந்தது. பத்திரிகையாளர் சந்திப்பில் “ரஸல் ஆடுவாரா?” என்ற கேள்விக்கு, ``நாளை காலை அவர் முடிவு செய்வார்” என பதிலளித்தார். ஒரு வீரர் விளையாடுவதை கேப்டன் முடிவு செய்வதா அல்லது அந்த வீரர் முடிவு செய்வதா? இதுவே ஹோல்டரின் COMMAND அந்த அணியில் பெரிதாக இல்லை என்பதை காட்டிவிடுகிறது. இதெல்லாம் போக கெயிலை கவர் பொசிஷனில் நிற்கவைத்தது, பிராத்வையிட்டை டெத் ஓவர்களில் போட வைத்தது என அவரால் மட்டுமே சிந்திக்க முடிகிற சில அன்பிரடிக்டபிள் முடிவுகளை எடுத்தார் ஹோல்டர்.

Karunaratne

டிமுத் கருணரத்னே (இலங்கை)

எதிரணியை விடவும் பலவீனமாக இருந்தாலும் ஒரு கேப்டனாக குறைந்தபட்சம் வீரர்களின் உடல்மொழியிலாவது மாற்றம் கொண்டு வர வேண்டும். இலங்கையின் கேப்டன் கொண்டுவந்த மாற்றத்தை விட மலிங்காவின் பெளலிங்தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்தது. ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படாமல், ஏற்கெனவே டிரஸ்ஸிங் ரூமில் என்ன பிளான் செய்திருந்தார்களோ, அது தவறாகப் போனாலும், மாற்றம் செய்யாமல் அதன் படியே தன்னுடைய முடிவுகளை எடுத்தார் டிமுத். உதாரணத்துக்கு ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் சூழ்நிலை மாறிக்கொண்டே இருந்த போதிலும் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரை மாற்றாமல், அதே பேட்டிங் ஆர்டரைப் பயன்படுத்தினார். இது கேப்டனாக அவரின் அனுபவமின்மையைக் காட்டியது. நான்கு வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஒரு வீரரை உலகக் கோப்பைக்கான அணியில் கேப்டனாக அறிவித்தது அந்த நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறு.

du plessis

டுப்ளெஸ்சிஸ் (தென்னாப்பிரிக்கா)

“இந்தத் தொடர்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான நிகழ்வு” எனப் பேட்டியளித்தார். உண்மைதான். தென்னாப்பிரிக்கா ப்ளேயர்களின் செயல்பாடு மட்டுமல்ல கேப்டன்சியும் கடைசி இரண்டு லீக் போட்டிகளில்தான் சொல்லிக்கொள்ளும்படி இருந்தது. அணியின் செலக்‌ஷன் படுமோசம். ‘சைனாமேன்’ ஷம்சியை எந்த மேட்சில் எடுக்க வேண்டுமோ அதில் எடுக்காமல், எதில் எடுக்கக் கூடாதோ அதில் எடுத்தார்கள். ஓப்பனர் மார்க்ரமை இரண்டாவது டவுனில் ஆடவிட்டது, அம்லா ஓப்பனராக சரியாகச் செயல்படாத போதிலும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கியது எனத் தவறுகள் பல செய்தார் டூ ப்ளெஸ்சிஸ். நெருக்கடி இருக்கும் போது ஒருவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதுதான் அவரின் மகத்துவத்தைக் கூறும். டுப்ளெஸ்சிஸ் அந்த வித்தையை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.

Sarfaraz Ahmed

சர்ஃபராஸ் அஹமத் (பாகிஸ்தான்)

இவரும் மோர்கனைப்போல், பெரிதாகச் செயல்பாட்டினால் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஹோல்டரிடமும், கருணாரத்னேவிடமும் இல்லாத அந்த COMMAND மற்றும் ஊக்கப்படுத்தும் திறன் இவரிடம் அதிகம் தென்பட்டது. முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் பலத்த அடிவாங்கி அடுத்த போட்டியில் பலமான இங்கிலாந்தை தோற்கடிப்பது எல்லாம் எளிதான காரியம் இல்லை. அந்தத் தோல்வியிலிருந்து வீரர்களை விரைவாக வெளிக்கொண்டுவர வேண்டும். வீரர்களை தோல்வியிலிருந்து விரைவாக வெளிக்கொண்டு அவர்களுக்கான ஊக்கத்தை அளித்ததில் சர்ஃப்ராஸ் கேப்டனாக வென்றுவிட்டார். இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாமே!

Morgan ( AP )

இயான் மோர்கன் (இங்கிலாந்து)

இங்கிலாந்து இந்த உலகக் கோப்பையை ஜெயித்திருந்தாலும் அதை ஜெயித்துக்கொடுத்த பெருமை எல்லாம் இவரைச் சேருமா என்றால் தெரியவில்லை. ஏற்கெனவே அந்த அணி மிகவும் பலமாக இருந்தது. அதைச் சரியாக வழிநடத்த வேண்டியதுதான் இவரின் வேலை. ஆனால் இலங்கை ஆஸ்திரேலியாவுடனான தோல்விக்குப் பிறகு இக்கட்டான நிலையில் இருந்தது இங்கிலாந்து. அந்தச் சூழ்நிலையில் அணியை இவர் அழகாக வழிநடத்திச் சென்ற விதம் சிறப்பு. அதுபோக பெளலர்களை சரியான முறையில் ரொட்டேட் செய்தது, முக்கியமாக எதிரணியின் பலம் பலவீனத்தை முன்கூட்டியே அறிந்து செயல்படுதியபோது கேப்டனாக மோர்கன் பாஸ் மார்க் வாங்குகிறார். இந்தியாவுடனான போட்டியில் பாண்டியா மற்றும் தோனிக்கு ஃபீல்ட் செட் செய்த விதம் மிக அற்புதம். பாண்டியாவின் மூவ்மென்டை அறிந்து லெக் சைடில் ஃபீல்டர்களை வைத்து ரன்கள் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்திய விதம் அற்புதம். எந்தச் சூழ்நிலையிலும் பதற்றம் அடையாமல் இருப்பது அவரது பெரிய பலமாக இருந்தது.

Gulbadin Naib ( AP )

குல்புதின் நைப் (ஆப்கானிஸ்தான்)

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் வெளியேறிய உடனே வெளிவந்த செய்தி “ரஷீத் கான் ஆப்கானிஸ்தானின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுகிறார்’’ என்பதுதான்.. இதுவே இந்த உலகக் கோப்பையில் குல்புதின் நைப்பின் செயல்பாடு எப்படி என்பதை காட்டிவிடுகிறது. இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் இருந்த ஒரே அணி ஆப்கானிஸ்தான்தான். பாகிஸ்தானுக்கு எதிராக எளிதாக வெற்றிபெறும் நிலமையில் இருந்து நைப்பின் தவறான முடிவினால் ஆட்டம் அப்படியே மாறிவிட்டது. அவர் பந்துவீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால் அவரின் செயல்பாட்டுக்கு முழுப் பொறுப்பையும் ஆப்கானிஸ்தான் போர்டே ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகக் கோப்பைக்கு முன்பு அஸ்கர் ஆப்கானை நீக்கி, சக வீரர்களின் எதிர்ப்பையும் தாண்டி இவரை கேப்டனாக்கியது ஆப்கானிஸ்தான் அணி. அதற்குச் சரியான விலையைக் கொடுத்துவிட்டது.

Mortaza

மஷ்ரஃபே மோர்டாசா (வங்கதேசம்)

இவர் கேப்டன் என்ற காரணத்திற்காக மட்டுமே அணியில் இடம்பிடித்தார். இந்த உலகக் கோப்பையில் கேப்டனாக இருந்தவர்களில் யாரின் செயல்பாடு படுமோசமாக இருந்தது என்று லிஸ்ட் எடுத்தால் அதில் இவரின் பெயர்தான் முதலில் வரும். ஒரு கேப்டனாக மற்ற வீரர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இவர் விளங்கவில்லை. அணிக்காக எந்த ஒரு பங்களிப்பையும் கொடுக்காத பட்சத்தில் ஓரிரு போட்டிகளில் இவர் வெளியே உட்கார்ந்திருக்கலாம். அதுகூட கேப்டனாக இவர் எடுத்த சிறந்த முடிவாக மாறியிருக்கும். அணியில் ஷகீப், முஷ்ஃபிகுர் போன்ற கேப்டன்சியில் அனுபவமிக்க வீரர்கள் இருந்தும் இவர் எல்லா போட்டிகளிலும் ஆடினார். இந்த உலகக் கோப்பையில் வெறும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். வங்கதேசத்திற்காக இவரின் பங்களிப்ப்பு என்று பார்த்தால் மற்றபடி ஜூரோதான். DRS-ல் வெற்றி விகிதமும் 20 சதவிகிதம்தான். நியூசிலாந்துடனான போட்டியில் அந்த அணி 8 விக்கெட் இழந்தது. அப்போதும் டிஃபென்சிவ் கேம் ஆடினார்கள் வங்கதேச வீரர்கள்.