Published:Updated:

`முரட்டு சிங்கிள்'களால் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியாவின் சிங்கப் பெண்கள்! #INDVsAUS

Ind Vs Aus
Ind Vs Aus

செம சர்ப்ரைஸுடன் தொடங்கியிருக்கிறத, இந்தியாவின் உலகக் கோப்பை பயணம். ஆஸ்திரேலியாவை ஆல் அவுட்டாக்கி வெற்றியைத் தொடங்கியிருக்கிறார்கள், இந்தியாவின் சூப்பர் உமன்ஸ்.

நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சைத் தேர்வுசெய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா முதலில் பேட் செய்தால், ஸ்கோர் 140-ஐ தாண்டாது என்பதுதான் சமீபத்திய வழக்கம். அந்த வழக்கம் நேற்றும் தொடர்ந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பலால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களையே எடுத்தது இந்தியா. 133 என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, பூனம் யாதவின் ஸ்லோமோஷன் சுழற்பந்துகளினால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் 115 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின்மூலம் உலகக் கோப்பையில் ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

ரிச்சா கோஷுக்கு பதில் வேதா கிருஷ்ணமூர்த்தி, ராதா யாதவ் -வுக்கு பதில் பூனம் யாதவ் என ஆஸியின் முத்தரப்பு போட்டியில் விளையாடிய அதே அணியில் சிறிய மாற்றங்களோடு களமிறங்கியது இந்தியா.

இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா
டி20

ஆஸ்திரேலிய அணியில், காயம் காரணமாகத் தொடரிலிருந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் வலாமிக்கு பதிலாக மாலி ஸ்டார்னோ அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்திய அணியின் சார்பாக, தொடக்க வீரர்களாக ஷெஃபாலி வர்மாவும் ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினர். ஆஃப் ஸ்பின்னரான மாலி ஸ்டார்னோ முதல் ஓவரை தொடங்க, முதல் ஓவரிலேயே விக்கெட் கீப்பர் அலைஸா ஹீலி, மந்தனா கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பைத் தவறவிட, கடுப்பான ஸ்டார்னோ, பெர்ரி வீசிய அடுத்த ஓவரில் மந்தனா கொடுத்த கேட்சை தவறவிட்டு திருப்திப்பட்டுக்கொண்டார். முதல் இரண்டு ஓவர்களைப் பொறுமையாகக் கடக்க, அடுத்தடுத்த ஓவர்களில் `ஷேவாக்' ஸ்டைலில் `ஹைலைட்' காட்டத்தொடங்கினார் ஷெஃபாலி வர்மா. ஸ்டார்னோ வீசிய மூன்றாவது ஓவரில் 1 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்த ஷெஃபாலி, அடுத்த ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார்.

Ind Vs Aus
Ind Vs Aus

கடைசியாக விளையாடிய 23 போட்டிகள் அத்தனையிலும் விக்கெட் எடுத்துள்ள சாதனை, பௌலரான மேஹன் ஷூட்-டின் ஓவரில் ஆஃப், மிட் ஆஃப், ஃபைன் லெக் என நாலாபக்கமும் நான்கு பவுண்டரிகளை விளாசினார். இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கடைசிப் போட்டியில், 5 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டிய ஜோனேசன் வீசிய 5-வது ஓவரில் மந்தனா எல்பிடபிள்யூ ஆகி, இந்தியாவின் டாப் ஆர்டர் சறுக்கலைத் தொடங்கி வைத்தார். 10 ரன்களுடன் மந்தனா வெளியேற, பெர்ரி வீசிய அடுத்த ஓவரிலேயே அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஷெஃபாலியும் மிட் விக்கெட்டில் தூக்கி அடித்து சதர்லேண்டிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்த போட்டிக்கு வருவதற்கு முன், ஷேவாக்கிடம் ஷெஃபாலி ஒரு குட்டி ஸ்டோரியை கேட்டுவிட்டு வரலாம்.

``ஸ்பீடா போனா ஸ்டெடியும் மஸ்ட்டு.... ஆங்கரி பேபியானாலும் ஆங்கர் இன்னிங்ஸும் ஆடணும் பேபி"

அடுத்ததாக, அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் களமிறங்கினார். முதல் 6 ஓவர் பவர்பிளே முடிந்த நிலையில், இந்திய அணி 46 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. 6 - 14 ஓவர்கள் வரை பொறுப்பாக ஆடி இன்னிங்ஸை பில்டு செய்திருக்க வேண்டிய ஹர்மன்ப்ரீத், ஜானேசன் பந்தில் தேவையே இல்லாமல் பொசுக்கென்று இறங்கிவந்து ஸ்டம்ப்பிங் ஆனார். மந்தனா, ஹர்மன்ப்ரீத் என்ற இரண்டு அனுபவ வீரர்கள் சொதப்பிவிட, பழைய பாசஞ்சர் ரெயில் வேகத்துக்கு இறங்கியது இந்திய அணியின் ஸ்கோரிங் ரேட். 4-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த தீப்தி ஷர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் நிலைமையை உணர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களில் கவனம் செலுத்தாமல், சிங்கிள்களால் ஆஸ்திரேலியாவை கடுப்பாக்கினார்கள். 7-வது ஓவருக்கும் 16-வது ஓவருக்கும் இடையே மட்டும் 37 `முரட்டு சிங்கிள்'களை எடுத்தது ரோட்ரிக்ஸ் - தீப்தி ஜோடி. கிம்மின்ஸ் வீசிய 16-வது ஓவரின் கடைசிப் பந்தில் ரோட்ரிக்ஸ் அவுட் ஆக, வேதா கிருஷ்ணமூர்த்தி களமிறங்கினார். 17-வது ஓவரில் தீப்தி இரண்டு பவுண்டரி அடித்துவிட்டு, கடைசி மூன்று ஓவர்களில் மீண்டும் சிங்கிள்தான் கெத்து என ஒரே சிங்கிள்களாக எடுத்துத்தள்ளினார். கடைசி ஓவரில் மட்டும் 5 சிங்கிள்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்தது. தீப்தி ஷர்மா 49 ரன்களை எடுத்தார். அத்தனை சிங்கிள் ஓடியும் அரைசதம் அடிக்க ஒரு சிங்கிள் மிஸ் ஆனதுதான் வருத்தம்.

Ind Vs Aus
Ind Vs Aus

சொதப்பல் ஆஸி

133 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற எளிய இலக்கு. கொஞ்சம் ஜாலி மூடில்தான் களமிறங்கினர் ஆஸி ஓப்பனர்கள். சர்ப்ரைஸ் எதுவுமில்லாமல், வழக்கம்போல ஸ்பின்னருடனே பந்துவீச்சைத் தொடங்கியது இந்தியா. இந்தியா அளவுக்கு வேகம் காட்டாமல் கொஞ்சம் மெதுவாகவே ரன் எடுத்தது ஆஸி. ஃபார்ம் இழந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் இந்திய பெளலிங்கை அடித்துத்தான் மீண்டும் ஃபார்முக்கு வருவார்கள் என்ற நீண்ட கால தியரி அலைஸா ஹீலி மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டது. நல்ல பந்துகளை மட்டும் பவுண்டரி அடித்து, மற்றவற்றை சைலன்ட் மோடில் கடந்து, ஹீலி செட்டில் ஆகிக்கொண்டிருக்க, ஷிகா பாண்டே வீசிய 6-வது ஓவரில் மூனி கொஞ்சம் அவசரப்பட்டு அடித்து ஆட முயன்று ராஜேஷ்வரியிடம் கேட்ச் கொடுத்தார். பவர்பிளேயின் முடிவில் ஆஸி 33-க்கு 1 என்ற நிலையில் இருந்தது. அடுத்தடுத்த ஓவர்களில் ஹீலி பவுண்டரிகளால் மிரட்ட ஆரம்பித்தார். 9-வது ஓவரில் ராஜேஷ்வரி பந்துவீச்சில் கேப்டன் லானின் இறங்கி வர, விக்கெட் கீப்பர் பாட்டியா பந்தைப் பிடித்து ஸ்டம்ப்பில் அடிக்காமல் கூச்சலிட்டுக்கொண்டு ஓடிவர, ஈஸியான ஸ்டம்ப்பிங்கை மிஸ் செய்துவிட்டார் என்று ரசிகர்களெல்லாம் ஒரு நிமிடம் டென்ஷனாகப் பார்த்தால், அது `க்ளீன் கேட்ச்' என அம்பயர் அவுட் கொடுத்தார். தோனியே கேட்ச் பிடித்தாலும் எதற்கும் சேஃப்டிக்கு பெயில்ஸை தட்டிவிடுவார். ஆனால், பாட்டியா அப்படிச் செய்யாமல் இருந்தது `ஏ சாலா கப் நம்தே' வரிசையில் சேர்க்கப்படவேண்டிய அதிதன்னம்பிக்கைக் குறியீடு. ஒரு பக்கம் ஹீலி நிலைத்து நிற்க, மெதுமெதுவாக ஸ்டெடி ஆகிக்கொண்டே வந்த ஆஸிக்கு பூனம் யாதவ் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஸ்லோவாக பந்தை காற்றில் தூக்கிப்போட்டு பூனம் யாதவ் எடுத்த ரிஸ்க்கிற்கு சிறப்பான பலன் கிடைத்தது. பூனம் வீசிய 10-வது ஓவரின் 4-வது பந்தை சிக்ஸருக்கு அடித்த ஹீலி, அடுத்த பந்தில் பூனமிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தின் திருப்புமுனை இதுதான்.

இங்கிருந்துதான் இந்தியாவின் கை ஓங்கத் தொடங்கியது. அடுத்ததாக, பூனம் வீசிய 12-வது ஓவரில், ரேச்சல் ஹேனஸ் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் பெர்ரி இருவரும் கூக்ளியால் வீழ்ந்தனர். ஹாட்ரிக் வாய்ப்பில் ஜோனசெனின் கேட்சை விக்கெட் கீப்பர் பாட்டியா தவறவிட்டார். இல்லையேல், இந்த உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக்கை பூனம் எடுத்திருப்பார். பூனம் ஏற்படுத்திய சேதாரத்திலிருந்து ஆஸியால் கடைசி வரை மீளமுடியவில்லை. கார்ட்னர் மட்டும் கடைசி வரை ஆட்டத்தை இழுத்துக்கொண்டுபோனார். அவரும் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, ஆஸி 19.5 ஓவரில் 115-க்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாகப் பந்துவீசிய பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

Poonam Yadav
Poonam Yadav

ஜெமிமா ரோட்ரிக்ஸும் தீப்தி ஷர்மாவும் விக்கெட்டை இழக்காமிலிருக்க பெரிய ஷாட்டுக்கு செல்லாமல் சிங்கிள்களாக எடுத்த காரணத்தினால்தான், இந்தியா ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. ஸ்டெடியாகத் தொடங்கிய ஆஸியும் இந்த 7 முதல் 16-வது ஓவருக்குள் கையிலிருந்த ஆட்டத்தை இழந்தது. 9 முதல் 12 வரையான நான்கு ஓவர்களில் மட்டும் கேப்டன் லானிங், ஹீலி, ஹேனஸ், பெர்ரி ஆகிய நான்கு முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இழந்தது ஆஸி. இந்திய பௌலிங்கைப் பொறுத்தவரை வைடு நோபால்களைக் குறைத்து, எக்கனாமிக்கலாகப் பந்துவீசியுள்ளனர். அருந்ததி ரெட்டியின் பந்தை மட்டும் ஆஸியினர் கொஞ்சம் எளிதாக சமாளித்தனர். இறுதியாக, இந்தியா திறமையான ஸ்பின்னர்கள் மூலம் உலகக் கோப்பை முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அடுத்த போட்டி, வருகிற 24-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியில், இந்தியா தனது பேட்டிங் தவறுகளை நிச்சயம் திருத்திக்கொள்ள வேண்டும்.

கமான் கேர்ள்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு