Published:Updated:

`பவர்ரேஞ்சர்' ஷெஃபாலியின் அடிதடிகள்... மிரண்டுபோன வங்கதேச லேடீஸ்! #INDvBAN

இந்திய அணி
இந்திய அணி ( Image courtesy : ESPN cricinfo )

ஆஸியை ஆல்-அவுட் ஆக்கி முதல் வெற்றியைப் பெற்ற பிறகு, 'கத்துக்குட்டி' வங்கதேசத்தை தோற்கடித்து மீண்டும் கெத்துக்காட்டியிருக்கிறது இந்திய மகளிர் அணி.

ஒருபுறம் இங்கிலாந்தைப் போட்டுத்தள்ளிய தென்னாப்பிரிக்கா ஆஸியை கடைசி ஓவர்வரை இழுத்துச்சென்ற இலங்கை, வெஸ்ட் இண்டீஸை 80 ரன் எடுப்பதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கவைத்த தாய்லாந்து என குட்டி அணிகள் எல்லாம் எகிறியடிக்க ஸ்லீப்பர்செல்லான வங்கதேசத்தோடு மோதியது இந்திய அணி. ஏற்கெனவே கடைசியாக இந்த இரு அணிகளும் மோதிய ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இந்திய அணியில் ஸ்மிருத்தி மந்தனா காய்ச்சல் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து வெளியேறிவிட, கோலி இல்லாத இந்திய ஆண்கள் அணிபோல இந்திய பேட்ஸ்வுமன்கள் களமிறங்கினர்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் சல்மா முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தார். ஷெஃபாலி வர்மாவுடன் மந்தனாவுக்கு பதில் லோயர் மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டிருந்த விக்கெட் கீப்பர் டானியா பாட்டியா, ஓப்பனராக களமிறங்கினார். வேகப்பந்துவீச்சாளரான ஜஹனாரா முதல் ஓவரை வீச முதல் ஓவரிலிருந்தே வாணவேடிக்கைகளை நிகழ்த்தினார் ஷெஃபாலி. இந்த ஓவரில் ஆஃப் சைடில் சிக்சர் விளாசிய ஷெஃபாலி அடுத்து வங்கதேச கேப்டன் சல்மா வீசிய ஓவரில் முட்டிபோட்டு தலைக்கு மேல் ஒரு சிக்சர் அடித்தார்.

ஒருபக்கம் ஷெஃபாலி சிக்சராக விளாச, மறுபக்கம் ஸ்ட்ரோக் வைத்துக்கொண்டிருந்த டானியா சல்மா பந்தில் `நானும் சிக்சர் அடிக்கிறேன்' என வைடு லைனில் வந்த பந்துக்கு வேகமாக இறங்கி வந்து ஸ்டம்பிங் ஆகி நடையைக்கட்டினார். அடுத்ததாக, கடந்த போட்டியில் சிங்கிள்தான் கெத்து என நிரூபித்த ஜெமிமா உள்ளே வந்தார். ஷெஃபாலி ஜஹனாரா வீசிய 3-வது ஓவரில் 2 பவுண்டரியும் லாங்க் ஆஃப்-ல் ஒரு சிக்சரும் விளாசினார். ஷெஃபாலியின் அதிரடியில் என்ன செய்ய எனத் தெரியாமல் வேகப்பந்து வீச்சாளர் பன்னாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் சல்மா. பன்னாவின் முதல் பந்தையே சிக்சருக்கு விளாசினார். ஆனால் அதே ஓவரில் இன்னொரு சிக்சருக்கு முயற்சி செய்து தூக்கி அடித்து மிட் ஆஃப்-ல் கேட்ச் ஆனார். 4 சிக்சர் 2 பவுண்டரிகள் விளாசி 17 பந்துகளில் 39 ரன் அடித்து பவர்ப்ளேயில் இந்திய அணியை 54 ரன்கள் என்ற நல்ல நிலையில் செட்டில் ஆக்கிவிட்டு வெளியேறினார் ஷெஃபாலி.

இந்திய பேட்டிங் பலவீனமான வீரபாகு மூடுக்கு சென்றது இங்கிருந்துதான். ஆஸிக்கு எதிராக சொதப்பிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் இந்த ஆட்டத்திலும் வைடாக வந்தபந்தை தேடிச்சென்று வம்படியாக தூக்கியடிக்க கேட்ச் ஆனார். 8 ரன்னில் கேப்டன் வெளியேறிய பிறகு கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தீப்தி களமிறங்கினார். கடந்த ஆட்டத்தைப் போலவே சிங்கிள்களில் ஸ்கோர் நகர்ந்துகொண்டிருக்க ஒரு சிங்கிளுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார் ஜெமிமா. அடுத்து தோனி ஸ்டைல் பேட் கட்டிக்கொண்டு களமிறங்கிய 16 வயது ரிச்சா தோனி ஸ்டைலிலேயே ஒரு ஷாட் ஆடி அவுட் ஆனார். அடுத்துக்களமிறங்கிய வேதா கிருஷ்ணமூர்த்தி கடைசிக்கட்டத்தில் மூன்று பவுண்டரிகளை அடித்து இந்தியாவை 140 ரன்கள் தாண்ட வைத்தார்.

`பவர்ரேஞ்சர்' ஷெஃபாலியின் அடிதடிகள்... மிரண்டுபோன வங்கதேச லேடீஸ்! #INDvBAN
Image courtesy : ESPN cricinfo

வழக்கமாக இந்தியா என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் களமிறங்கும் வங்கதேசம், இந்த முறை நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. தீப்தி ஷர்மா முதல் ஓவரை தொடங்கி சிக்கனமாக முடிக்க ஷிகா பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் ஓப்பனர் சுல்தானா தீப்தியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த முர்ஷிதாவும் சஞ்சிதாவும் ஸ்டெடியாக விளையாடினார். முர்ஷிதா தீப்தி ஷர்மாவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். ஒன்றும் இரண்டுமாக இந்தக்கூட்டணி மெதுமெதுவாக எடுத்து செட்டில் ஆகிக்கொண்டிருந்த நிலையில் ராஜலெட்சுமி ஓவரில் முர்ஷிதாவுக்கு ஒரு நல்ல எல்பிடபிள்யு-க்கு ரிவ்யூ எடுக்காமல் வேஸ்ட் செய்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாத முர்ஷிதா அருந்ததி வீசிய அடுத்த ஓவரில் ரிச்சாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதுதான் சரியான நேரமென்று துருப்புச்சீட்டான பூனம் யாதவை பந்துவீச அழைத்தார் கேப்டன் ஹர்மன்ப்ரீத்.

ஒருபக்கம் அருந்ததி கொஞ்சம் ரன் கொடுக்க மறுபக்கம் பூனம் எக்கனாமிக்கலாக வீசினார். 11வது ஓவரில் ஒரு டாட் பாலை வீசி விட்டு பூனம் மட்டும் கேட்சுக்கு அப்பீல் செய்தார். கீப்பரே கேட்ச் அப்பீல் செய்யாத நிலையில் பூனமின் உறுதியைப் பார்த்து ரிவ்யூ சென்றார் ஹர்மன்ப்ரீத். ரிவியூவில் பந்து மிக லேசாகப் பேட்டை உரசிக்கொண்டு செல்வது தெளிவாகத் தெரிய அவுட் வழங்கப்பட்டது. பௌலிங்கைத் தாண்டி பூனம் ஆட்டத்தில் நுணுக்கமான கவனத்தைச் செலுத்துகிறார் என்பது தெரிகிறது. இந்த விக்கெட்டுக்குப் பிறகு, ரன்ரேட் எட்டுக்கு மேல் எகிறிவிட வங்கதேச வுமன்கள் பெவிலியனுக்கும் பிட்சுக்கும் இடையில் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடும் அளவுக்கு வேகவேகமாக வந்துபோய்க்கொண்டிருந்தனர். இறுதியில் பூனம் 3, ஷிகா 2, அருந்ததி 2, ராஜேஷ்வரி 1 என வங்கதேசத்தை இந்தியா காலி செய்தது.

`பவர்ரேஞ்சர்' ஷெஃபாலியின் அடிதடிகள்... மிரண்டுபோன வங்கதேச லேடீஸ்! #INDvBAN
Image courtesy : ESPN cricinfo

குரூப் ஏ-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிட்ட நிலையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடலாம். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னை இந்தியாவுக்கு ஒரு தலைவலியாக இருக்கும். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலே கூட பவர்ப்ளேவுக்குப் பிறகு, 14 ஓவர்களில் 88 ரன்கள்தான் சேர்த்துள்ளது. தோல்வியுற்ற வங்கதேசம் இந்த 14 ஓவர்களில் 91 ரன்கள் அடித்துள்ளனர். இந்தியாவைப்போன்றே பவர்ப்ளேயில் எதிரணி சிறப்பாக விளையாடிவிட்டால் இந்தியா வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்படும். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஃபார்முக்கு திரும்பி இந்த இடைப்பட்ட ஓவர்களில் ரன்ரேட்டை உயர்த்த வேண்டியது அவசியம். அடுத்ததாக வருகிற 27-ம் தேதி பலமான நியூசிலாந்தை இந்திய அணி சந்திக்க இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு