காட்டுத்தீயால் வறண்டுபோயிருக்கும் ஆஸ்திரேலியாவை சிக்ஸர் மழையால் நனைக்க இருக்கின்றனர், உலக சிங்கப் பெண்கள். வருகிற 21-ம் தேதி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியோடு 20/20 மகளிர் உலகக் கோப்பை தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி, மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று, உலகின் பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை உட்பட, நேரடியாக லீக் போட்டிக்குத் தேர்வான அணிகளோடு சேர்த்து குவாலிஃபையர் போட்டிகள்மூலம் வெற்றிபெற்ற வங்கதேசம் மற்றும் தாய்லாந்து அணிகளும் விளையாட இருக்கின்றன. மிகப்பெரிய அரங்கில் முதல்முறையாக கிரிக்கெட் விளையாடத் தயாராகியிருக்கிறது தாய்லாந்து.
10 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியோடு ஒரு லீக் போட்டியில் மோதுமாறு போட்டி அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில், இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். ஏ பிரிவில் இந்திய அணியோடு சேர்த்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பி-பிரிவில், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஓப்பீட்டளவில் பார்த்தால், பி-பிரிவைவிட இந்திய அணி இடம்பெற்றுள்ள ஏ-பிரிவுதான் கொஞ்சம் சவாலானதாக இருக்கும்.

ஆஸ்திரேலியாதான் டாப்பர்!
2009-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் பெண்களுக்கான இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு, இது 8-வது முறை. இதற்கு முந்தைய 7 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவே அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்றுள்ளது. 2010, 2012, 2014-ல் ஹாட்ரிக் வெற்றி மற்றும் நடப்பு சாம்பியனும் ஆஸ்திரேலியாதான். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மட்டுமே ஆஸி பெண்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறவில்லை. எஞ்சிய ஆறு தொடர்களிலும் ஆஸியினர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். 'ஆல் ஏரியாலயும் கில்லிடா' எனக் களமிறங்கும் ஆஸ்திரேலியா இந்த முறை தொடரை நடத்தும் ஹோம் டீமாக இருப்பதால், இந்த முறையும் எதிரணிகளுக்கு ஒரு காட்டு காட்டிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஃபைனல் நிச்சயம்... கோப்பை லட்சியம்' என்ற மூடில் களமிறங்கும் ஆஸியைத்தான் தொடரின் முதல் போட்டியில் இந்தியா சந்திக்கவிருக்கிறது. ஆஸியின் ஆல்ரவுண்டரான வுமன்ஸ் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் எலிஸ் பெர்ரி இந்த முறையும் கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கலாம். 116 டி-20 போட்டிகளில் விளையாடியிருக்கும் பெர்ரி, 1192 ரன்களோடு 113 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். பிக்பேஷ் லீகில் அதிக ரன் அடித்தவரும் இவர்தான். 53.30 என்கிற சராசரியோடு, 2612 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது துல்லியமான யார்க்கர்களையும், அதிரடியான பேட்டிங்கையும் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
நியூஸிலாந்தின் இரண்டு சிங்கப் பெண்கள்!
ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அணியான நியூஸிலாந்தும் பலமான அணியாகவே உள்ளது. முதல் இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து அணி, அதன்பிறகு உலகக் கோப்பைகளில் சோபித்ததில்லை. 2018-ம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. இருப்பினும், 'யார் சாமி இவங்க' என ஆச்சர்யப்பட்டு கேட்குமளவுக்கு இரண்டு சூப்பர் வுமன்கள் நியூஸிலாந்து அணியைத் தாங்கி நிற்கின்றனர்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில், முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமித்திருக்கும் சூசி பேட்ஸும், சோஃபி டிவைனும்தான் அந்த இருவர். சோஃபி டிவைன் ஆடிய கடைசி 4 டி20 போட்டிகளில் 3 அரை சதம் மற்றும் ஒரு சதம் என விளாசி, அசுர ஃபார்மில் இருக்கிறார். வுமன்ஸ் பிக்பாஷ் லீகில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் தொடர்ச்சியாக இவர் அடித்த 5 சிக்சர்கள், மிரட்டல் ரகம். நியூஸிக்காக டி20-க்களில் சதமடித்த இரண்டாவது பெண்ணும் டிவைன்தான். அப்படியென்றால், முதல் பெண் யாராக இருக்க முடியும்? முதலில் குறிப்பிட்டிருந்த சூசி பேட்ஸ்தான். வுமன்ஸ் டி-20 போட்டிகளில் முதல் முறையாக 3000 ரன்களைக் கடந்ததும் இவர்தான். டி-20-களில் அதிக ரன் அடித்தவர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவரும் இவர்தான்.
பயிற்சி ஆட்டத்தில், தாய்லாந்துடனான போட்டியில் அரை சதம் அடித்துவிட்டு லீக் போட்டிகளுக்கு ஆர்வமாகக் காத்திருக்கிறார் பேட்ஸ். டிவைனும் பேட்ஸும் எக்கனாமிக்கலாக பந்தும் வீசக்கூடிய ஆல்ரவுண்டர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இந்த இரு போராளிகளையுமே பெரிதாக நம்பி களமிறங்குகிறது கருஞ்சட்டை அணி.

கத்துக்குட்டிகள்!
இந்திய அணியோடு ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் இலங்கை இரண்டு அணியும் கத்துக்குட்டி வகையறாக்கள். குவாலிஃபையர் போட்டி மூலம் உள்ளே நுழைந்துள்ள வங்கதேசம், கடந்த இரு உலகக் கோப்பைகளிலும் ஒரு போட்டியில்கூட வெற்றிபெறவில்லை. இருப்பினும், சீனியர், ஜூனியர், மென்-வுமன் என எந்த வகையான போட்டியிலும் இந்தியாவுக்கு எதிர்பாராத நேரத்தில் ஷாக் கொடுப்பவர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது, வங்கதேசம்தான். 2018-ம் ஆண்டு, ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணியைத் தோற்கடித்திருக்கிறது வங்கதேசம். அதனால் ஆஸி, நியூஸியைப் போன்றே வங்கதேசத்தையும் கொஞ்சம் கவனத்துடனே எதிர்கொள்ள வேண்டும். இலங்கை அணியும் இதுவரை நாக்அவுட் சுற்றுகளுக்குத் தகுதிபெற்றதில்லை. வங்கதேசம் மற்றும் இலங்கையுடன் இந்தியா பெறப்போகும் மிகப்பெரிய வெற்றிதான், இந்தியாவை அரை இறுதிக்கு அழைத்துச்செல்லும்.
இந்தியாவின் பலம், பலவீனம் என்ன?
2018-ம் ஆண்டு, டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, அரையிறுதியில் இங்கிலாந்துடன் மட்டுமே தோல்வியைத் தழுவியது. அதுவும் மித்தாலி ராஜ் போன்ற அனுபவ வீரரை பெவிலியனில் உட்காரவைத்து, சர்ச்சையான முடிவினால் அது நடந்தது என்றும் சொல்லலாம். மற்றபடி அந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய வீரர்களில் பெரும்பாலானோர், இந்த உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றிருப்பது அனுபவரீதியாக இந்தியாவுக்கு பலமளிக்கும். கடந்த ஒரு வருடத்தில், நியூஸிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்திருந்தாலும், சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 'வொயிட் வாஷ்' செய்தது இந்திய அணிக்கு பாசிட்டிவிட்டியை உண்டாக்கியிருக்கும். மேலும், கடைசி சில வாரங்களாக ஆஸ்திரேலியாவிலேயே இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்பு போட்டிகளில் விளையாடியிருப்பது, இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.
சாதிப்பாரா ஸ்மிருதி?!
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்த வரை டாப் மற்றும் மிடில் ஆர்டரில் ஸ்டார் ப்ளேயர் ஸ்மிருத்தி மந்தனாவும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் என இருவர் மட்டுமே அனுபவத்தோடு நிலைத்துநின்று ஆடுகின்றனர். மந்தனா, 2019-ல் மட்டும் 19 இன்னிங்ஸில் 621 ரன்கள் மற்றும் கடைசியாக ஆஸியில் நடைபெற்ற ட்ரை சீரிஸில் 216 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஓப்பனிங்கில் மந்தனாவோடு களமிறங்கும் 15 வயதே ஆகும் ஷெஃபாலி வர்மா, சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு 'வெறித்தனமான' அறிமுகம். யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் ஸ்டைலில் இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்தே சிக்ஸருக்கு பேட்டை ஓங்கும் ஷஃபாலி வெஸ்ட் இண்டீஷ் தொடரில் அதிரடி சரவெடி காட்டி, சச்சினின் நீண்டகால சாதனையான குறைந்த வயதில் அரை சதம் அடித்த சாதனையை முறியடித்தார்.
மீடியம் பேஸரை, ஸ்பின்னர் போல நினைத்து இறங்கிவந்து பெளலர் தலைக்கு மேல் சிக்ஸர் அடிப்பதெல்லாம் பிரமிப்பாக இருந்தாலும், அணி பிரச்னையில் இருக்கும்போதும் ரிஷப் பன்ட்போல ஆர்வக்கோளாறில் ஆடி அவுட் ஆகும் பிரச்னை ஷஃபாலிக்கும் இருக்கிறது. சீனியர்களைக் கொஞ்சம் கைடு செய்து, ஷஃபாலி கொஞ்சம் கன்ட்ரோலாக ஆடினால், இந்த உலகக் கோப்பையின் கதாநாயகி ஷஃபாலியாகத்தான் இருப்பார்.
இங்கேயும் லோயர் மிடில் ஆர்டர் பிரச்னைதான்!
இந்திய அணியின் ஸ்டார் பர்ஃபாமர்களில் ஒருவர், ஜெமிமா ரோட்ரிக்ஸ். ஆனால், அம்மணி கொஞ்ச நாளாக ஃபார்மில் இல்லை. மந்தனா, ஷஃபாலி, ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் தாண்டி லோயர் மிடில் ஆர்டர் சுத்தமாக ஃபார்மில் இல்லை என்பது இந்தியாவின் பலவீனம். ஆனால், இந்தப் பிரச்னையை சரிசெய்கிறேன் என கோலி தன் ஒன் டவுன் இடத்தை முதலில் ராகுலுக்கு விட்டுக்கொடுத்ததைப் போல ஹர்மன்ப்ரீத் கவுரும் தன்னுடைய இடத்தை 16 வயதான ரிச்சா கோஷுக்கு விட்டுக்கொடுத்தார். விளைவு பின்னடைவுதான். ரிச்சாவும் சரியாக ஆடவில்லை. ஹர்மன்ப்ரீத்தும் அவுட் ஆஃப் ஃபார்ம்.

ஸ்பின் ஓகே... ஆனால் வேகம்?!
பெளலிங்கைப் பொறுத்தவரை சுழற்பந்து ஏரியாவில் ராஜேஷ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், பூனம் யாதவ் என அனுபவமும் இளமையும் சேர்ந்து நல்ல எக்கனாமிக்கல் பந்துவீச்சாளர்கள். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை அருந்ததி ரெட்டி, ஷீகா பாண்டே இருவரும் இன்னும் நல்ல வேரியேஷன்களில் பந்து வீசினால், அது ஆஸியின் மிகப்பெரிய மைதானங்களில் இந்தியாவுக்கு கூடுதல் பலமாக அமையும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஃபீல்டிங்கில் கூடுதல் கவனம் தேவை. 7 உலகக் கோப்பை தொடர்களில் மூன்றுமுறை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த முறை கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பிருந்தும் தவறான முடிவுகளால் அரையிறுதியில் சொதப்பியது. 'இந்த முறை, ஃபைனலுக்குச் சென்றுவிட வேண்டும்' என்ற ஹர்மன்ப்ரீத்தின் பேட்டி உண்மையாவது, அவர் எடுக்கப்போகும் முடிவுகளில்தான் உள்ளது.
பி- பிரிவில் உள்ள இங்கிலாந்து அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு ஒப்பிடலாம். மும்பை இந்தியன்ஸ் உடனான ஃபைனல் என்றால், சிஎஸ்கே-வுக்கு எப்படி அலர்ஜியோ அப்படித்தான் இங்கிலாந்துக்கு ஆஸியுடனான இறுதிப்போட்டிகள். முதல் உலகக் கோப்பையில் ஹோம் டீமாக கோப்பையை வென்ற இங்கிலாந்து, அதன்பிறகு 2012,2014,2018 ஆகிய மூன்று வருடங்களும் ரன்னர் அப் இங்கிலாந்து... வின்னர் ஆஸ்திரேலியா. முக்கிய வீரரான சாரா டெய்லரின் ஓய்வுக்குப் பிறகு, ஹீத்தர் நைட்டின் தலைமையில் ஆஸியைத் தாண்டிவிட்டால், மற்ற எல்லாம் ஈசி என்ற நிலையில் களமிறங்குகிறது இங்கிலாந்து.
கியா சூப்பர் லீகில் 166 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் கலக்கிய டேனியல்லா வொய்ட் பேட்டிங்கில் இங்கிலாந்தின் துருப்புச்சீட்டாக இருப்பார். கடந்த ஆண்டு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு போட்டியில் ஃப்ரான் வில்சன் பிடித்த கேட்ச், வுமன்ஸ் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேட்சாக கொண்டாடப்பட்டது. ஏபிடி, ஜடேஜா,ரெய்னா வரிசையில் ஃப்ரான் வில்சனின் ஃபீல்டிங்குக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இங்கிலாந்தைப் போன்று அதே ஆஸி அலர்ஜியில் தள்ளாடும் வெஸ்ட் இண்டீஸ், இதுவரை விளையாடிய 24 உலகக் கோப்பை போட்டிகளில் 6-ல் மட்டுமே வென்றுள்ள பாகிஸ்தான், சீரற்ற தென்னாப்பிரிக்கா, முதல்முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கும் தாய்லாந்து என க்ரூப்-B கொஞ்சம் எளிதாக இருப்பதால், ஏறக்குறைய இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸும்தான் அரையிறுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால், குரூப் A -க்குள் நடக்கப்போகும் ஆஸி, நியூஸி, இந்தியாவுக்கு இடையேயான போட்டிகள்தான் நெயில் பைட்டர்களாக பீபி எகிறவைக்கும்.
இந்திய சிங்கப் பெண்களின் சூப்பர் பர்ஃபாமென்ஸுக்காகக் காத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கூட்டம்!