Published:Updated:

சூப்பர் ஷஃபாலி, மிரட்டல் பௌலிங், பதற்றமேயில்லாத ரன்அவுட்! எப்படி மீண்டெழுந்தது இந்திய மகளிர் அணி?

பிரன்டைக் கதறவைத்த ஷஃபாலியின் பேக் டு பேக் ஐந்து பவுண்டரிகள், கனகச்சித பௌலிங் மிரட்டல்கள், குறி தப்பாத ரன் அவுட்கள் என அதகளம் காட்டியது இந்திய மகளிர் அணி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விம்பிள்டன் இறுதிப் போட்டி, யூரோ கால்பந்து ஃபைனல் என சூடு பறக்கும் வார இறுதியில், சத்தமேயில்லாமல் அனல் தெறிக்க விட்டிருக்கிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை சமன் செய்திருக்கிறது இந்தியா.

முதல் டி20-யின் முடிவால், இப்போட்டி இங்கிலாந்தைவிட இந்தியாவுக்கே மிக நெருக்கடியான ஒன்றாக இருந்தது. டாஸை வென்ற நைட், இந்திய மகளிரை பேட்டிங் செய்யப் பணித்தார். இருபக்கமும் எந்த மாற்றமுமின்றி அணிகள் களமிறங்கின.

மந்தனாவோடு இறங்கிய ஷஃபாலி, முதல் ஓவரில் மட்டுமே சற்றே பொறுமை காத்தார். இரண்டாவது ஓவரில், பிரன்டைப் பார்த்ததும் ஏக குஷியாகி விட்டார். இச்சுற்றுப் பயணத்தில் தொடக்கத்தில் இருந்தே விக்ரம் வேதாவாகத் தொடரும் ஷஃபாலி வெர்ஸஸ் பிரன்ட் சுவாரஸ்ய மோதல், இப்போட்டியிலும் தொடர்ந்தது. போன போட்டியில் அவரை 'சில்வர் டக் அவுட்' ஆக்கி அனுப்பி இருந்த பிரன்டை சிறப்பாகக் கவனிக்கப் போகிறேன் என்பதை அவரது ஓவரில் தான் அடித்த முதல் பவுண்டரியோடே சொல்லாமல் சொன்னார் ஷஃபாலி. மறுபுறம், 'நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள் சீனியர்', என மந்தனாவை நிற்க வைத்து, அதிரடி காட்டத் தொடங்கினார்.

ENGvIND | Women's Cricket
ENGvIND | Women's Cricket
twitter.com/BCCIWomen

குறிப்பாக, பிரன்ட் வீசவந்த இரண்டாவது ஓவரில் ஆறு பந்துகளில் ஐந்து பவுண்டரிகளைத் தொடர்ச்சியாக அடித்து அதகளம் காட்டினார். பயமறியாத அவரது ஆட்டம், எப்போதும் போல் இப்போதும் அவரிடமிருந்து வெளிப்பட்டது. சேவாக்கோடும், பன்டோடும் ஒப்பிடப்பட்டுக் கொண்டிருந்தாலும், தனக்கென ஒரு தனி பாணி ஷஃபாலியிடம் இருக்கவே செய்கிறது. அதுதான், டி20-ல் 'நம்பர் 1' வீராங்கனை என்ற இடத்தில் அவரை உட்கார வைத்துள்ளது. பிரன்ட், நைட், இங்கிலாந்து என ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் அழுத்தத்தை ஏற்றினார் ஷஃபாலி. பவர்பிளே ஓவர்களை மிகச் சரியாகக் கையாண்டது இந்தியா. இங்கிலாந்தும் சோர்ந்து விடவில்லை. பவர்பிளேயின் கடைசி ஓவரை மெய்டனாக்கி, எக்கில்ஸ்டோன் பதிலடி கொடுத்தார்.

6 ஓவர்கள் முடிவில், 49 ரன்களைத் தொட்ட இவர்களது 50 ரன்கள் பார்ட்னர்ஷிப், 37 பந்துகளில் வந்து சேர்ந்தது. இதன்பிறகு, மந்தனாவும் தனது ஸ்ட்ரைக்ரேட்டைக் கூட்டத் தொடங்கி, மிட் ஆஃபில் சிக்ஸரைப் பறக்க விட்டார். அபாயமானதாக மாறத் தொடங்கியது இந்தக் கூட்டணி.

இம்முறை இங்கிலாந்துக்கான பிரேக்கை டேவீஸ் கொண்டு வந்தார். அவர் வீசிய பந்தை மந்தனா சரியான கோணத்தில் பிளேஸ் செய்யாமல் விட, அது வில்லியர்ஸின் கையில் சுலபமான கேட்ச் ஆனது. அதற்கடுத்த ஓவரிலேயே 48 ரன்களோடு அறைகூவல் விடுத்துக் கொண்டிருந்த ஷஃபாலியின் விக்கெட்டை வில்லியர்ஸ் வீழ்த்தினார். கைக்கு வரும் எந்தக் கடினமான கேட்சையும் விடாத இங்கிலாந்து இதையும் விடவில்லை. அரைசதத்தை இரு ரன்களில் தவறவிட்ட ஷஃபாலி வெளியேறினார். டி20-ல் இதுவரை, 6 போட்டிகளில், 40களில் ஆட்டமிழந்திருக்கிறார் ஷிஃபாலி. இதுவே சொல்லும் எதற்கும் அஞ்சாத அவரது அணுகுமுறையை! இதன்பின், ஒன்டவுனில் இறங்கிய ஹர்மன்ப்ரீத்தோடு, தீப்தி வந்து இணைந்தார்.

இந்தச் சமயத்தில், ரன் ரேட் கிட்டத்தட்ட, 8ஐ நெருங்கியே இருந்தது. ஆனால், இதற்குப்பின் இந்தியாவின் ரன் குவிப்புக்கு இங்கிலாந்து தடையிட முயல அவ்வப்போது அடித்த பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலம் நிலைமையை சரிக் கட்டினார் ஹர்மன்ப்ரீத். ஆனால், தீப்தி அதனைச் செய்யத் தவறியதோடு, பந்துகளை வீணடித்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில், தனது ஓவரில் பேக் டு பேக் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்த ஹர்மன்ப்ரீத்தின் விக்கெட்டை கிளென் அதற்கடுத்த பந்திலேயே விழச் செய்ய, டெத் ஓவர்களை கவனிக்க ரிச்சா கோஷை இந்தியா அனுப்பியது.

ENGvIND | Women's Cricket
ENGvIND | Women's Cricket
twitter.com/BCCIWomen

கடைசி நான்கு ஓவர்களில் 34 ரன்களை இந்தியா குவித்திருந்தது. ஒரு சிக்ஸரோடு ரிச்சா கோஷ் விடைபெற, இறுதியாக உள்ளே வந்தார் ஸ்நே ராணா. இறுதியில், 148 ரன்கள் என்ற நிலையில் வந்து நின்றது இந்தியா. நல்ல தொடக்கத்தை ஓப்பனர்கள் கொடுத்தும், 170-க்கு வந்து நிற்க வேண்டிய இலக்கை, 149 என நிர்ணயித்திருந்தது இந்தியா. பிக் ஹிட்டரான டியோல், ஸ்நே போன்றவர்களை ஆட்டத்தின் போக்கைப் பொறுத்து முன்னால் இறக்காமல், தீப்திக்குப் பின்னதாக இறக்கி தவறு செய்தது இந்தியா.

149 என்பது சவாலான இலக்கில்லை என்பதால், இங்கிலாந்தின் வெற்றி இலகுவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கணிப்பாக இருந்தது. அதே போலத்தான் தொடங்கியது இங்கிலாந்தும். அருந்ததியின் ஓவரில் பீமண்ட் சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரின் இறுதிப் பந்திலேயே, வியாட்டின் விக்கெட்டை வீழ்த்தி அதிரடித் தொடக்கம் கொடுத்தார் அருந்ததி.

இரண்டாம் பாதி ஆட்டம் முழுவதுமே, "இது உங்கள் இடமாக இருக்கலாம், ஆனால், இது எங்கள் நாள்" என்ற உத்வேகத்துடனே ஆடியது இந்தியா. பௌலிங், ஃபீல்டிங் இரண்டிலும் தெறிக்க விட்டனர் இந்தியப் பெண்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் போட்டியைப் போலவே, இப்போட்டியிலும் ஒரு அட்டகாசமான ரன் அவுட் மூலமாக, ஆபத்தான ஸிவரை ரிச்சா கோஷ் வெளியேற்றினார். இரண்டு பவுண்டரிகள், வைடு பாலில் ஐந்து ரன்கள் எனப் பல வித்தியாசமான நிகழ்வுகள் நடந்தேறிய ஷிகாவின் அந்த ஓவர், போன போட்டியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அந்த 19-ம் ஓவரை நினைவுக்குக் கொண்டு வந்தது. பின்னர், வைடு பாலில் ஸிவரின் ரன் அவுட்டோடு முடிவுக்கு வந்தது.

ஆறு ஓவர்களிலேயே, 52 ரன்களைக் குவித்துவிட்ட இங்கிலாந்து, வெற்றியைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாகவே உணர்ந்திருக்கும். ஆனால், இந்தியா அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுப்பதாக இல்லை, பதிலடி கொடுத்தது.

முதலில் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர். கடைசி பத்து ஓவர்களில், 69 ரன்கள் வேண்டுமென்று கொண்டு வந்தவர்கள், அடுத்ததாக விக்கெட்டுகளை வீழ்த்தாவிடில் வேலைக்காகாது என அதில் கவனம் செலுத்தத் தொடங்கினர். மிக மிகப் பரபரப்புடனே காணப்பட்டது மைதானம். இந்தத் தருணத்தில், கியரை மாற்றி, ரன்ரேட்டைக் கூட்டத் தொடங்கியது, நைட் - பீமண்ட் கூட்டணி. கடைசி 42 பந்துகளில், 44 ரன்கள்தான் வேண்டுமென்னும் நிலையில், இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து, போட்டியை அங்கேயே வென்றது போலத்தான் இருந்தது.

ENGvIND | Women's Cricket
ENGvIND | Women's Cricket
twitter.com/BCCIWomen

அங்கிருந்து மீண்டு வந்தது இந்தியா. தீப்தி வீசிய பந்தில், 59 ரன்களோடு நின்றிருந்த பீமன்ட் ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியின் திருப்புமுனை. அதற்கடுத்த பந்திலேயே நைட்டை தீப்தியே அற்புதமாக ரன்அவுட் செய்திருந்தார். செட்டிலான இரண்டு பேட்டர்களும் வெளியேற, இந்திய ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அவர்களை இருக்கை நுனிக்குக் கொண்டு வர வைத்தன அடுத்த சில நிமிடங்கள்.

இந்நிலையில் கூட, 36 பந்துகளில், 43 ரன்கள் வேண்டுமென இங்கிலாந்துக்கு எட்டக் கூடியதாகவே இலக்கு இருக்க, அதை எட்டாக் கனியாக மாற்றியது இந்தியப் படை. டங்லியை ரன்அவுட் செய்ததுடன், அதற்கு அடுத்த ஏழாவது பந்திலேயே ஜோன்ஸையும் வெளியேற்றியது.
ஆஸ்திரேலியாவை ஊருக்குள் விட்டு வெளுத்தெடுக்கும் வெஸ்ட் இண்டீஸ்…2-0 முன்னிலையில் களமாடும் கரீபியன்ஸ்!

கடைசி மூன்று ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில், பிரன்டும், எக்கில்ஸ்டோனும் களத்தில் நிற்க, அப்போதும் போட்டி கயிறு இழுப்பது போல் இரண்டு பக்கமும் மாறி மாறிப் போய்க் கொண்டிருக்க, ரசிகர்களின் இதயத் துடிப்பு எகிறியது. ஆனால், பூனம், 19-வது ஓவரில் பிரன்டை வீழ்த்தி போட்டியை இந்தியாவின் பக்கம் மொத்தமாக நகர்த்தினார். இறுதி ஓவரில், 14 ரன்கள் வேண்டுமென்ற கடின இலக்கு வர, முதல் பந்தில் சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை எக்கில்ஸ்டோனிடம் கொடுத்தார் வில்லியர்ஸ். ஆனால், இரண்டாவது பந்திலேயே ரன் அவுட்டாகி வில்லியர்ஸ் வெளியேறினார். இது இங்கிலாந்து இன்னிங்ஸில் நான்காவது ரன் அவுட்! பதற்றத்திலேயே இங்கிலாந்து தவறிழைக்க, அவ்வளவு பதற்றத்திலும் பக்குவமாக ரன் அவுட்களை சிறப்பாகவே செய்தது இந்தியத் தரப்பு.

ENGvIND | Women's Cricket
ENGvIND | Women's Cricket
twitter.com/BCCIWomen

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், 140 ரன்களை மட்டுமே சேர்த்து, எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இங்கிலாந்து. அதுவும் கடைசி ஐந்து ஓவர்களில், ஸ்பின்னர்களை வைத்தே இங்கிலாந்தின் கதையை இந்தியா முடித்ததுதான், இன்னமும் சிறப்பு! தோல்வியின் விளிம்பில் இருந்து விடாமல் போராடி, அற்புதமான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. தீப்தி ஷர்மா ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13-வது ஓவர் வரை இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இங்கிலாந்து மிகப் பாதுகாப்பாக வெற்றியே நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் அசாத்தியமானதை சாத்தியமாக்கி, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்திய மகளிர் படை.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அந்த இன்டென்டோடே இந்தியா ஆடியிருந்தாலும், போட்டியின் லகான் பலமுறை இந்தியாவிடமிருந்து நழுவியது. ஆனால். அதை சாமர்த்தியமாகவும் அடாவடியாகவும் தங்கள் பக்கம் கொண்டு வந்து, தொடரை உயிர்ப்போடு வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. இந்தச் சுற்றுப்பயணத்தின் இறுதிச் சுற்றான, மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, வரும் புதன்கிழமை நடைபெற இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு