Published:Updated:

`கற்பனையிலும் இவர்களை வெல்ல முடியாது!'- ஆதிக்கம் செலுத்தும் உலக சாம்பியன்ஸ் ஆஸ்திரேலியா

Australia ( ICC )

உலகக்கோப்பை வெற்றிக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் சரிவிகிதத்தில் கொட்டி படைக்கப்பட்ட பெரும் விருந்தாகத்தான் ஆஸியின் பெர்ஃபார்மென்ஸ் அமைந்திருந்தது.

Published:Updated:

`கற்பனையிலும் இவர்களை வெல்ல முடியாது!'- ஆதிக்கம் செலுத்தும் உலக சாம்பியன்ஸ் ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை வெற்றிக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் சரிவிகிதத்தில் கொட்டி படைக்கப்பட்ட பெரும் விருந்தாகத்தான் ஆஸியின் பெர்ஃபார்மென்ஸ் அமைந்திருந்தது.

Australia ( ICC )

ஆஸ்திரேலிய வீராங்கனையான பெத் மூனி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். பலரும் பல கேள்விகளை வரிசையாக அடுக்கினர். ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்வி மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருந்தது. "ஒரு கற்பனையான உலகத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஓர் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறீர்கள். உங்களின் அந்த அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவை வெல்ல நீங்கள் என்ன ஆலோசனையை வழங்குவீர்கள்?" என்பதுதான் கேள்வி.

"`நீங்க ஆடுறதுக்கே போகாதீங்க. அவங்கள ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். மேட்ச்சுக்குப் போகாம இருக்குறதுதான் உங்களுக்கு நல்லது' எனக் கூறுவேன்" எனப் பதில் சொல்லிவிட்டு பெத் மூனி பலமாகச் சிரித்தார்.

கேட்பதற்கு ஆணவமான பேச்சை போலத் தோன்றும். ஆனால், இன்றைய தேதிக்கு பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா இத்தகைய ஆதிக்கத்தைத்தான் செலுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆறாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. உலகக்கோப்பையை கைப்பற்றுவதில் ஆஸ்திரேலியா அடிக்கும் இரண்டாவது ஹாட்ரிக் இது. அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற கேப்டன்களின் வரிசையில் ரிக்கி பாண்டிங், தோனியையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இத்தனையையும் மனதில் வைத்து பார்த்தால் பெத் மூனியின் அந்தப் பதில் நிச்சயமாக ஆணவத்தின் வெளிப்பாடாகத் தெரியாது.

Australia
Australia
ICC

நியூலாண்ட்ஸின் கேப்டவுனில் நடந்த அந்த இறுதிப்போட்டியில் உண்மையிலேயே தென்னாப்பிரிக்கா அணிக்குதான் அதிக ஆதரவு இருந்தது. உள்ளூர் மைதானம் என்பதைத் தாண்டி வெளியிலிருந்த ரசிகர்களுமே தென்னாப்பிரிக்காவிற்குதான் அதிகமாக ஆதரவு தெரிவித்திருந்தனர். காரணம், உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் இதுவரையிலான பயணம். எல்லாமே இருந்தும் சாதிக்கவே முடியாத ஒரு துரதிஷ்ட அணியாகத்தான் தென்னாப்பிரிக்கா பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்கர்களின் கண்ணீரைக் கண்டிராத உலகக்கோப்பை தொடரே இல்லை. எல்லா உலகக்கோப்பைகளுமே அவர்களுக்கு சோகத்தின் வடுக்களாகத்தான் இருந்திருக்கின்றன. அப்படி ஒரு சூழலில் சீனியர் கிரிக்கெட்டில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது எனும்போது இயல்பிலேயே அவர்களின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியிருந்தது. அதற்கு ஏற்ற வகையில் அரையிறுதிப்போட்டி வரைக்குமே கூட தென்னாப்பிரிக்க அணி சிறப்பாகத்தான் ஆடியிருந்தது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பை கைப்பற்றி விடுவார்கள் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், கணிப்புகளையும் விருப்பங்களையெல்லாம் கடந்தும் ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது. இறுதிப்போட்டி என்பது யுத்தக்களம் இங்கே விருப்பு வெறுப்புகளைக் கடந்து களத்தில் திறம்படச் செயல்படுபவர்களால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை ஆஸ்திரேலியா மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் ஆகியிருந்தார். ஹர்மனைப் பொறுத்தவரைக்கும் இது துரதிஷ்டத்தால் அரங்கேறிய சோக நிகழ்வு. இந்த ரன் அவுட்தான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், அதே ரன் அவுட்டை ஆஸ்திரேலியாவின் அலிஸா ஹீலி அடிப்படைகளில் தவறிழைப்பதன் வெளிப்பாடாகப் பார்த்தார். "ஹர்மன்ப்ரீத் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ரன் அவுட்டிலிருந்தும் தப்பித்திருப்பார். அதிர்ஷ்டத்தின் மீதும் பழி போட்டிருக்க வேண்டாம்" என்றார். மேலும், "ஒரு அணியாக நாங்கள் இந்த மாதிரியான அடிப்படையான விஷயங்களில்தான் அதிக கவனத்தை செலுத்துகிறோம்" என்றார்.

Australia
Australia
ICC
சின்னச்சின்ன விஷயங்களில் சரியாக இருப்பதன் வழியே பெரிய பெரிய பலன்களை எட்டுதல் என்பதுதான் அலிஸா ஹீலியின் கூற்றின் மூலம் நம்மால் விளங்க முடிந்தது.

இந்த விஷயத்தை ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறையோடும் ஆட்டத்தோடும் ஒப்பிட்டுப் பார்த்தாலுமே எளிதில் புரிந்துக்கொள்ள முடியும். டி20-க்களில் பவர்ப்ளே என்பது ரொம்பவே முக்கியமானது. அதை எவ்வளவுக்கு எவ்வளவு சரியாகப் பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு வெற்றி நெருங்கி வரும். ஆஸ்திரேலியா இந்த விஷயத்தில் படு உஷாரான அணி. இறுதிப்போட்டியிலுமே சேஸிங்கின் போது தென்னாப்பிரிக்கா பவர்ப்ளேயில் எடுத்த ஸ்கோரை விட ஆஸ்திரேலியா பவர்ப்ளேயில் எடுத்த ஸ்கோர் அதிகம். பவர்ப்ளேயில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஓவரில் கூட 6 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக ரன்ரேட்டும் 6 க்கு கீழ்தான் இருந்தது. அதேமாதிரி, ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி தொடக்கத்திலிருந்து கடைசி வரை நின்று ஸ்கோரை உயர்த்த காரணமாக இருந்தார்.

டாப் 4 வீராங்கனைகளில் யாரோ இருவர் தவறாமல் பெர்ஃபார்ம் செய்து விடுவதை எப்போதுமே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அது இந்த இறுதிப்போட்டியிலும் தொடர்ந்திருந்தது. தென்னாப்பிரிக்க அணியிலும் வோல்வார்ட் அரைசதம் கடந்து பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தார். ஆனால், அவரால் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முடியவில்லை. 17வது ஓவரிலேயே அவுட் ஆகினார். பந்துவீச்சை எடுத்துக் கொண்டாலும் தென்னாப்பிரிக்கவை விட ஆஸ்திரேலியாவிற்கு கூடுதல் ஆப்ஷன்கள் இருக்கவே செய்தன. மொத்தம் 7 பௌலர்களை ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தியிருந்தது. கேட்ச் ட்ராப்களையும் இந்தத் தொடர் முழுவதிலும் பெரிதாக காண முடியவில்லை. உலகக்கோப்பை வெற்றிக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் சரிவிகிதத்தில் கொட்டி படைக்கப்பட்ட பெரும் விருந்தாகத்தான் ஆஸியின் பெர்ஃபார்மென்ஸ் அமைந்திருந்தது.

Australia
Australia
ICC

ஆறு உலகக்கோப்பை வெற்றிகளில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை மூன்று முறையும் நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை தலா ஒரு முறையும் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியிருக்கிறது. ஆஸ்திரேலியா வீழ்த்தியது அனைத்துமே டாப் அணிகள்தான். இறுதிப்போட்டியில் அத்தனை அழுத்தங்களையும் தாண்டி இப்படி முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதெல்லாம் அசாத்தியம்.

"உங்களின் சிரிப்பைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ஆனால், நீங்கள்தான் இந்தப் பெண்கள் கிரிக்கெட்டுக்கான முன்னுதாரணம். உங்களின் வெற்றிக்கு வாழ்த்துகள்" என தென்னாப்பிரிக்க கேப்டன் சுனே லூயிஸ் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் குறித்து பேசியிருக்கிறார். சுனே லூயிஸின் வார்த்தைகள் நிஜமானவை. இந்த ஆஸ்திரேலிய அணியைப் பிடிக்காவிட்டாலும் அவர்களைப் புறந்தள்ளிவிடவே முடியாது. பெண்கள் கிரிக்கெட்டுக்கான பெரிய இன்ஸ்பிரேஷன் இந்த அணி!

வாழ்த்துகள் ஆஸ்திரேலியா!