இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயம் நேற்று முதல் தொடங்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்ததன் பயனாக ஐ.பி.எல் ஐ போன்றே பெண்களுக்கென்றே ஒரு தனி ப்ரீமியர் லீக் தொடராக வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டு அதன் முதல் போட்டியும் நடந்து முடிந்திருக்கிறது.

அந்த போட்டியின் சுவாரஸ்ய தருணங்களை பார்ப்பதற்கு முன்பு வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் தேவை என்னவென்பதை பற்றி கொஞ்சம் பேசிவிடுவோம்.
2008 இல் இந்தியாவில் முதல் முதலாக ஐ.பி.எல் போட்டி தொடங்கப்பட்டது. முழுக்க முழுக்க கால்பந்தின் ப்ரீமியர் லீக் போட்டிகள் மாதிரியான செட்டப். வண்ணமயமாக சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் அசரடித்ததால் பெரிய வெற்றியை பெற்றது ஐ.பி.எல் இன் வெற்றியை ஊக்கமாக கொண்டு பல நாடுகளிலும் இதே மாதிரியான ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன்கள் தொடங்கப்பட்டது. அவையும் பெரும்பாலும் ஹிட்தான். பிக்பாஸ் லீக், தி 100 போன்றவையெல்லாம் ஐ.பி.எல் ஐ பின்பற்றொ தொடங்கப்பட்டவைதான். ஆனால், ஐ.பி.எல் நிர்வாகம் செய்ய தவறிய முக்கியமான விஷயத்தை இவை கையில் எடுத்தன. அது பெண்களுக்கான பிரத்யேக ப்ரீமியர் லீக் சீசன். வுமன்ஸ் பிக்பாஸ் லீக் என ஆஸ்திரேலியாவில் தொடங்கி பல சீசன்களை நடத்தி அதிலும் ஹிட் அடித்தார்கள். இங்கிலாந்தில் தி 100 ஆரம்பிக்கும் போதே பெண்களுக்கான சீசனோடுதான் ஆரம்பித்தார்கள்.

பாகிஸ்தானோ ஆசியாவிலே முதல் நாடாக நாங்கள்தான் பெண்களுக்கென தனி ப்ரீமியர் லீக் தொடரை நடத்தவிருக்கிறோம் என உறுதியளித்தது. இவ்வளவும் நடக்கும்போதுதான் பிசிசிஐ இங்கே இந்தியாவில் வெறுமென நான்கே நான்கு ஐ.பி.எல் போட்டிகளை மட்டும் பெண்களுக்காக நடத்திக் கொண்டிருந்தது. பெரும் மனித வளம் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் பெரும் செல்வத்தை வைத்திருக்கும் பிசிசிஐ போன்ற கிரிக்கெட் போர்ட் இருந்துகொண்டு ப்ரீமியர் லீக் போட்டிகள் அறிமுகப்படுத்தப்படாமல் இருந்ததை மெத்தன கணக்கை தவிர வேறெதிலுமே சேர்க்க முடியாது. எப்படியோ ஒரு வழியாக இப்போதுதான் வுமன்ஸ் ப்ரீமியர் லிக் தொடரை நடத்துவதற்கான மனம் பிசிசிஐ க்கு வந்து நினைத்ததை நடத்தியும் காட்டியிருக்கிறது.
மும்பையின் டீ.ஒய்.பாட்டீல் மைதானத்தில் அரங்கம் நிறைந்த ரசிகர்களுக்கு மத்தியில் வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் அறிமுக விழா கோலாகலமாக நடந்திருந்தது. அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய முதல் போட்டி தொடங்கியது. ஆண்களுக்கான ஐ.பி.எல் தொடர் தொடங்கிய போது முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதியிருந்தது. அந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக பிரண்டன் மெக்கல்லம் 158 அடித்து அதகளம் செய்திருந்தார். ஐ.பி.எல் இன் இத்தனை பெரிய வெற்றிக்கான ரெட் ரிப்பன் இன்னிங்ஸாக மெக்கல்லமுடைய அந்த இன்னிங்ஸ் அமைந்திருந்தது. மெக்கல்லமின் சதத்தின் விளைவால் அந்த போட்டியில் கொல்கத்தா அணியும் 140 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும். ஐ.பி.எல் க்கு அதிரடி தொடக்கம் கிடைத்ததை போல வுமன்ஸ் ப்ரீமியர் லீகிற்கும் அதிரடி தொடக்கம் கிடைக்குமா? மெக்கல்லம் ஆடியதை போன்ற இன்னிங்ஸை இங்கே ஆடப்போவது யார்? கொல்கத்தாவை போல வரலாற்று வெற்றியை பதிவு செய்யப்போகும் அணி எது? என்பது போன்ற எக்கச்சக்கமான கேள்விகள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த கேள்விகள் அத்தனைக்கும் நேற்றைய போட்டியில் விடை கிடைத்திருந்தது. அங்கே மெக்கல்லம் செய்த வேலையை இங்கே ஹர்மன்ப்ரீத் கவுர் செய்து கொடுத்தார். அங்கே கொல்கத்தா பெற்ற அசாத்திய வெற்றியை இங்கே மும்பை பெற்றிருக்கிறது.
டாஸை வென்ற குஜராத் அணியின் கேப்டனான பெத் மூனியிடம் ரவிசாஸ்திரி 'Go out and have a Blast' என வாழ்த்து கூறி அனுப்பியிருந்தார். ஆனால், உண்மையில் நேற்று 'Blast' ஐ நிகழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்தான். குறிப்பாக, ஹர்மன்ப்ரீத் கவுரின் அந்த அதிரடி ஆட்டம் யாரும் எதிர்பாராதது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை எடுத்திருந்தது. பெண்கள் டி20 போட்டிகளில் 200+ ஸ்கோர் என்பது அடிக்கடி நிகழ்வதல்ல. சமீபத்தில் நடந்த பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 200+ ஸ்கோரை எடுத்திருந்தது. பெண்கள் டி20 உலகக்கோப்பையில் 200+ ஸ்கோரை எட்டிய முதல் அணி எனும் பெருமையை இங்கிலாந்து பெற்றது. பெண்கள் கிரிக்கெட்டுக்கும் 200+ ஸ்கோருக்கும் இடையேயான அரிய பந்தத்தை இந்த புள்ளி விவரம் மூலமே புரிந்துகொள்ள முடியும். அப்படியிருக்கையில், இப்படி ஒரு புதிய சீசனின் அறிமுக போட்டியிலேயே ஒரு அணி 200+ ஸ்கோரை எட்டியது பெரிதும் பாராட்டப்பட வேண்டியது. மேலும், மும்பை இந்தியன்ஸின் இந்த பெர்ஃபார்மென்ஸ் இந்தத் தொடரின் தரம் என்னவாக இருக்கப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவும் அமைந்திருந்தது.
மும்பை இந்தியன்ஸ் 207 ரன்களை எட்டியதற்கு மிக முக்கிய காரணம் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்தான்.
ஹர்மன்ப்ரீத் கவுர் 9 வது ஓவர் முடிகையில் க்ரீஸூக்குள் வந்தார். அப்போது மும்பை அணியின் ரன்ரேட் 7 ஐ சுற்றிதான் இருந்தது. அதன்படி பார்க்கையில் மும்பை அணி 20 ஓவர் முடிகையில் ஒரு 150-160 ரன்களை எடுக்கக்கூடும். அதுவே ஒரு நல்ல ஸ்கோர் என்ற எண்ணம்தான் இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் இந்த எண்ணத்தை அப்படியே நொறுக்கிப் போட்டார் ஹர்மன்ப்ரீத். ஹர்மன்ப்ரீத் - அமலியா கெர் இந்த இணை அட்டகாசமாக ஆடியிருந்தது. இருவரும் இணைந்து 11-17 இந்த 7 ஓவர்களில் மட்டும் 89 ரன்களை சேர்த்திருந்தனர். அதாவது, 42 பந்துகளில் 89 ரன்களை சேர்த்திருந்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பின் ஸ்ட்ரைக் ரேட்டே 200+ ஆக இருந்தது. இந்த இருவரில் இந்த கூட்டணிக்கு அதிக பங்களிப்பை கொடுத்தது ஹர்மன்ப்ரீத் கவுர்தான். இருவரும் சேர்ந்து அடித்திருந்த 89 ரன்களில் 26 ரன்களை மட்டுமே அமலியா கெர் அடித்திருந்தார். எனில், ஹர்மன்ப்ரீத்தின் அடியை நினைத்துப் பாருங்கள்.

மொத்தமாக 30 பந்துகளில் 65 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 216. அவர் எதிர்கொண்டிருந்த 30 பந்துகளில் 14 பந்துகளை பவுண்டரியாக்கியிருந்தார். அதாவது, ஏறக்குறைய ஒவ்வொரு இரண்டு பந்துக்கும் ஒரு பவுண்டரி. சதவீதமாக கணக்கிட்டால் 86% ரன்களை பவுண்டரியில் மட்டுமே ஸ்கோர் செய்திருந்தார்.
இந்திய அணியில் மிகப்பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய வல்லமை உடைய ஒரு சில வீராங்கனைகளில் ஹர்மன்ப்ரீத் கவுர் முக்கியமானவர். ஆனால், அவர் இந்த அதிரடியான இன்னிங்ஸில் ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. இதிலிருந்தே அவரின் அணுகுமுறையை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஹார்ட் ஹிட்டிங் ஷாட்களை பெரிதாக ஆடாமல், ஃபீல்டர்களுக்கு இடையேயான இடைவெளியை பயன்படுத்தி பந்துகளை சரியாக டைமிங் செய்து ஆடுவதில் மட்டும்தான் அதிக கவனம் செலுத்தினார். ஸ்வீப், கட், கல்லிக்கும் தேர்டு மேனுக்கு இடையேயான ஸ்லாஷ் என அத்தனையுமே ரொம்பவே நுணுக்கமாக ஃபீல்டர்களை ஏமாற்றி பவுண்டரியாக்கியிருந்தார். ஹர்மன்ப்ரீத்தின் இந்த இன்னிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் 200+ ஸ்கோரை எட்ட பெரிதும் உதவியதுதான். ஆனால், அவருக்கு உறுதுணையாக ஹீலி மேத்யூஸூம் அமலியா கெர்ரும் ஆடிய ஆட்டத்திற்கு தகுந்த மதிப்பை அளிக்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் ஆண்கள் அணியில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பொல்லார்ட் எப்படி ஒரு மைய வீரராக மாறினாரோ அப்படி பெண்கள் அணிக்கான மையமாக மாறும் திறன் தனக்கும் இருக்கிறது என்பது இந்த வெஸ்ட் வீராங்கனையும் காட்டியிருக்கிறார். அமலியா கெர் ஒரு முனையில் விக்கெட் விடாமல் நின்ற காரணத்தினால் ஹர்மன்ப்ரீத்தால் அத்தனை இலகுவாக ஆட முடிந்திருந்தது. இவர்களின் கூட்டு முயற்சியால் மும்பை அணி 208 ரன்களை குஜராத் அணிக்கு டார்கெட்டாக நிர்ணயித்தது.

ஆண்கள் ஐ.பி.எல் இன் அறிமுக போட்டியிலும் கொல்கத்தாவை எதிர்த்து சேஸ் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சொற்ப ரன்னில் ஆல் அவுட் ஆகியிருக்கும். இங்கே பெங்களூருவின் அந்த இடத்தை குஜராத் நிரப்பியது. வெறும் 64 ரன்களில் குஜராத் அணி ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டனும் சமீபத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் Player of the Match விருதை வென்றவருமான பெத் மூனி முதல் ஓவரிலேயே காயம் காரணமாக வெளியேறியது துரதிஷ்டவசமானது.
ஆனால், அதற்காக அவரை தவிர மற்ற எல்லா வீராங்கனைகளும் வந்த வேகத்திலேயே வெளியேறியதையும் ஏற்கவே முடியாது. குறைந்தபட்ச போட்டியையும் சவாலையும் கூட குஜராத் அணியின் பேட்டர்கள் மும்பை அணியின் பௌலர்களுக்கு அளிக்கவில்லை. மும்பை அணி பேட்டிங் ஆடிய போது 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் பேட்டர்கள் எதோ ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து அவுட் ஆகி சென்றதன் விளைவாக வந்தது. ஹீலி மேத்யூஸ் மட்டுமே போல்ட் ஆகியிருந்தார்.
அதேநேரத்தில் குஜராத் அணியில் பெத் மூனியை தவிர்த்துவிட்டு அவர்கள் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தார்கள். இந்த 9 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகள் Lbw / போல்ட் முறையில் வீழ்ந்திருந்தது. மும்பையின் இசாக் எனும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த 4 விக்கெட்டுகளுமே Lbw / போல்ட் முறையில் வீழ்த்தப்பட்டதுதான். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப்பாக மும்பை பௌலர்கள் வீசிய எந்த பந்துக்கும் குஜராத் பேட்டர்களிடம் பதில் இல்லை.

மேலும், மும்பை சார்பில் நட்சீவர், வாங், இசாக், அமலியா கெர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்த நான்கு பேருமே தாங்கள் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். மும்பையின் பௌலர்களுக்கு குஜராத் பேட்டர்கள் இம்மியளவு கூட சவாலளிக்கவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த புள்ளிவிவர உதாரணத்தை காட்டவே முடியாது.
ஒன் சைட் மேட்ச்சாக அமைந்திருந்தாலும் மும்பையின் ஆதிக்கத்தால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத போட்டியாகத்தான் இது அமைந்திருந்தது. நிகழ்வுகள் அரங்கேறிய விதத்தில் ஆண்கள் ஐ.பி.எல் இன் அறிமுக போட்டிக்கு பெரிதும் ஒத்ததாக இருந்தது. அத்தோடு நின்றுவிடாமல் ஆண்கள் ஐ.பி.எல் அடைந்த வெற்றியையும் எட்டிய வீச்சையும் இந்த வுமன்ஸ் ப்ரீமியர் லீகும் அடைய வேண்டும்.