மீண்டும் ஒரு டி20 தொடரை இந்திய அணி வெகு இலகுவாக வென்றிருக்கிறது.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. முதல் போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியையும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என வென்றிருக்கிறது. இந்த போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயரே ஸ்டார் பெர்ஃபார்மராக ஜொலித்திருக்கிறார்.
தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்திருந்தார். இந்திய ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருந்திருக்கவில்லை.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 183 ரன்களை எடுத்திருந்தது. எதிர்பார்த்ததைவிட இது கொஞ்சம் அதிகமான ஸ்கோரே. இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு நிஷாங்கா மற்றும் ஷனாகா இருவருமே மிக முக்கிய காரணமாக அமைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நிஷாங்கா 53 பந்துகளில் 75 ரன்களையும் ஷனாகா 19 பந்துகளில் 47 ரன்களையும் எடுத்திருந்தனர்.

நிஷாங்கா மற்றும் குணதிலகா இருவரும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். முதல் 4 ஓவர்களை பும்ராவும் புவனேஷ்வர் குமாரும் வீசியிருந்தனர். புதிய பந்து நன்றாகவே மூவ் ஆக புவனேஷ்வர் குமார் பந்து நன்றாக அவுட் ஸ்விங் செய்ய, பும்ரா பேட்ஸ்மேனுக்கு உள்பக்கமாக பந்தை திருப்ப இருவருமே பேட்ஸ்மேன்களை கடுமையாக திணறடித்தனர். இதனால் முதல் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. 5 வது ஓவரிலிருந்து ஹர்ஷல் படேல் மற்றும் ஸ்பின்னர்களை வைத்து ரோஹித் அட்டாக் செய்யத் தொடங்கினார். இதன்பிறகுதான், இலங்கை அணியின் ஸ்கோர் கொஞ்சம் வேகமாக உயர ஆரம்பித்தது. ஜடேஜாவின் ஒரே ஓவரில் இரண்டு சிக்சர் மற்றும் பவுண்டரியை அடித்து அந்த ஓவரிலேயே மீண்டும் இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று குணதிலகா 38 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். அஷலங்கா, மிஷாரா, சண்டிமால் ஆகியோரும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 103-4 என்ற நிலையில் இருந்தது. இந்த சமயத்தில்தான் நிஷாங்காவும் கேப்டன் ஷனாகாவும் கூட்டணி சேர்ந்தனர்.
இந்தக் கூட்டணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 80 ரன்களை சேர்த்திருந்தது. குறிப்பாக, டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டான ஹர்ஷல் படேல் வீசிய 2 ஓவர்களில் மட்டும் 42 ரன்களை அடித்திருந்தனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
கொஞ்சம் மெதுவாக ஆடிக்கொண்டிருந்த நிஷாங்கா கியரை மாற்றி ஆட, ஷனாகா வந்த வேகத்திலேயே டாப் கியருக்கு சென்றார். ஹர்ஷல் படேலின் ஸ்லீயர் யார்க்கர்களையும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் தேர்டுமேனிலும் ஃபைன் லெக்கிலும் லாவகமாக திருப்பிவிட்டிருந்தனர். புவனேஷ்வர் குமாரின் ஓவரிலும் அவரின் தலைக்கு மேலேயே சிக்சரை பறக்கவிட்டார் ஷனாகா. இன்னிங்ஸின் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சராக்கி இலங்கையை 180+ ஸ்கோரை ஷனாகா எட்ட வைத்தார்.
இந்திய அணிக்கு 184 ரன்கள் டார்கெட். சமீரா வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா போல்டை பறிகொடுத்து வெறும் 1 ரன்னில் வெளியேறினார். இஷான் கிஷன் 16 ரன்களில் அவுட் ஆகி லகிரு குமாராவின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். சமீரா, லகிரு குமாரா இருவருமே தொடர்ச்சியாக 140+ வேகத்தில் வீசி திணறடித்தனர். ஓப்பனர்கள் இருவருமே சீக்கிரம் வெளியேறியிருந்தாலும் இந்திய அணி 17.1 ஓவரிலேயே இலக்கை எட்டியது. அடுத்தடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஜடேஜா மூவருமே மிகச்சிறப்பாக ஆடியிருந்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த போட்டியில் 28 பந்துகளில் 57 ரன்களை எடுத்திருந்தார். அதே ஃபார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்தார்.

அதிகமான பந்துகளை விரயம் செய்து குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார் என்பதே ஸ்ரேயாஸ் மீதான குற்றச்சாட்டாக இருந்தது. குறிப்பாக, ஐ.பி.எல் போட்டிகளில் 120 ஸ்ட்ரைக் ரேட்டை சுற்றியே ஆடிக்கொண்டிருந்தார். இந்திய அணிக்கும் இப்படி ஆடினால் அது பிரச்னையாக அமையும் என கருதப்பட்டது. அதை உணர்ந்துக் கொண்டு தன்னுடைய அணுகுமுறையை மாற்றி தொடர்ச்சியாக நல்ல அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வருகிறார். கடந்த போட்டியில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியவர் இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடினார். அதேமாதிரி, இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சனும் அதிரடியாக ஆடியிருந்தார். சஞ்சு சாம்சனை பொறுத்தவரைக்கும் அவரின் சீரற்ற தன்மையே பிரச்னையாக இருந்தது. அதற்கு அவர் சந்திக்கும் முதல் 10 பந்துகளில் கண்ணாபின்னாவென ஷாட் ஆடி அவுட் ஆவது மிக முக்கிய காரணமாக இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சாம்சன் க்ரீஸிற்குள் வந்த போது 'Shot Selection தான் இவரின் பிரச்னை' என சுனில் கவாஸ்கரும் கமென்ட்ரியில் பேசியிருந்தார்.

ஆனால், சமீபமாக சாம்சன் இந்த விஷயத்தில் கொஞ்சம் சிறப்பாக செயல்படத் தொடங்கியிருக்கிறார். முதல் 10 பந்துகளில் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் நின்று ஆடிவிட்டு அதன்பிறகு பேட்டை சுழற்ற தொடங்கியிருக்கிறார். நேற்றைய போட்டியிலும் முதல் 10 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே எடுத்திருப்பார். ஆனால், அடுத்த 15 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 200+. ஸ்ரேயாஸ் ஐயர், சாம்சன் இருவருவருமே சிறப்பாக ஆடி போட்டியை இந்தியா பக்கமாக சாய்க்க ஜடேஜா நம்பர் 5 க்கு ப்ரமோட் ஆகி வெளுத்தெடுத்து சிறப்பான ஃபினிஷிங்கை கொடுத்தார். இந்திய அணி சிரமமேயின்றி 17 பந்துகளை மீதம் வைத்து போட்டியை வென்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் 74 ரன்களையும் ஜடேஜா 18 பந்துகளில் 45 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரை 3-0 என வென்றிருந்த இந்தியா இப்போது இலங்கைக்கு எதிரான தொடரையும் 2-0 என வென்றிருக்கிறது. மூன்றாவது போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இலங்கை அணி ஆறுதல் வெற்றியையாவது பெறுமா?