Published:Updated:

IND vs WI: `Born to Pull' ரோஹித்; ஃபினிசிங் குமாராக மாறிய சூர்யகுமார்! என்னாச்சு இஷன் கிஷன்?

Rohit Sharma ( BCCI )

தொடக்கத்திலிருந்தே இஷன் கிஷன் தடுமாற அவருக்கும் சேர்த்து வைத்து ரோஹித் அதிரடி காட்டினார். ஒடியன் ஸ்மித்தின் ஒரே ஓவரில் மட்டும் 2 சிக்சர்களையும் 2 பவுண்டரிகளையும் அடித்து 21 ரன்களைச் சேர்த்திருந்தார்.

Published:Updated:

IND vs WI: `Born to Pull' ரோஹித்; ஃபினிசிங் குமாராக மாறிய சூர்யகுமார்! என்னாச்சு இஷன் கிஷன்?

தொடக்கத்திலிருந்தே இஷன் கிஷன் தடுமாற அவருக்கும் சேர்த்து வைத்து ரோஹித் அதிரடி காட்டினார். ஒடியன் ஸ்மித்தின் ஒரே ஓவரில் மட்டும் 2 சிக்சர்களையும் 2 பவுண்டரிகளையும் அடித்து 21 ரன்களைச் சேர்த்திருந்தார்.

Rohit Sharma ( BCCI )

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஓடிஐ தொடரை முழுமையாக வென்ற நிலையில் டி20 தொடரின் முதல் போட்டியையும் இந்தியா சிறப்பாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கத்தில் அதிரடி காட்ட, சூர்யகுமார் யாதவ் அற்புதமாக போட்டியை முடித்து வைத்தார். அறிமுக வீரரான ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நேரமாக ஆக பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் இது நல்ல முடிவாகவே பார்க்கப்பட்டது.

Mayers
Mayers
Windies Cricket

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ப்ராண்டன் கிங்கும், கைல் மேயர்ஸும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசியிருந்தார். இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்த ப்ராண்டன் கிங் ஐந்தாவது பந்திலேயே கேட்ச் ஆகி விக்கெட் விட்டிருப்பார். விக்கெட் விழுந்த அந்தப் பந்திற்கு முந்தைய பந்தை புவனேஷ்வர் குமார் லாகவமாக ஸ்விங் செய்திருப்பார். அதில், கிங் Beaten ஆகியிருப்பார். அடுத்த பந்தில் அந்த ஸ்விங்கைத் தடுப்பதற்காக இறங்கி வந்து ஆடவே பந்தை சரியாக கனெக்ட் செய்யாமல் பாயின்ட்டில் நின்ற சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியிருப்பார்.

நம்பர் 3 இல் நிக்கோலஸ் பூரன் இறங்கினார். மேயர் மற்றும் பூரன் இருவருமே இடக்கை பேட்ஸ்மேன்கள். கொஞ்ச நேரத்திற்கு இந்திய பௌலர்களுக்கு வித்தை காட்டினர். குறிப்பாக, மேயர்ஸ் எப்படிப் போட்டாலும் லெக் சைடிலேயே மடக்கி பவுண்டரி அடித்து மிரட்டினார். புவியும் சஹாரும் தடுமாறியதால் ஹர்ஷல் படேலையும் ரோஹித் பவர்ப்ளேக்குள்ளாகவே அழைத்து வந்தார். இரண்டு ஸ்லிப், இரண்டு டீப் ஃபீல்டர்களையுமே லெக் சைடில் என ரோஹித் ஃபீல்ட் செட்டப்பில் கட்டம் கட்ட முயன்ற போதும் மேயர்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஸ்பின்னர்கள் வந்த பிறகே மேயர்ஸின் ஆட்டம் ஓய்ந்தது.

சஹால் வீசிய முதல் ஓவரிலேயே மேயர்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஒரு அட்டகாசமான கூக்ளியை வீசி Beaten ஆக்கிவிட்டு அடுத்த பந்தை சஹால் கொஞ்சம் நேராக வீசியிருப்பார். முட்டிப் போட்டு ஷாட் ஆட முயன்ற மேயர்ஸ் lbw ஆகியிருந்தார். 31 ரன்களில் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, க்ரீஸுக்குள் வந்த ரஸ்டன் சேஸ் வேகத்தடையாக அமைந்தார். 10 பந்துகளை எதிர்கொண்டவர் 4 ரன்களில் அவுட் ஆனார். ஆடிய அந்த 10 பந்துகளையுமே ஒரு வித தடுமாற்றத்துடன்தான் ஆடியிருந்தார். ரவி பிஷ்னோய் இவரை lbw ஆக்கி வெளியேற்றினார். அதே ஓவரில் ரோவன் பவலின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Bishnoi
Bishnoi
ICC
அறிமுக போட்டியில் ஆடிய ரவி பிஷ்னோய் தனது வழக்கமான கூக்ளிக்களால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

வரிசையாக விக்கெட் விழுந்த போதும் பூரன் மட்டும் ஒரு முனையில் நின்று அதிரடியாக ஆடி அரைசதத்தைக் கடந்திருந்தார். அவரும் 61 ரன்களில் ஹர்ஷல் படேலின் ஓவரில் லாங் ஆஃபில் கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பவர்ப்ளே முடிந்த பிறகு சஹால் வீசிய முதல் பந்திலேயே பூரன் ஒரு கேட்ச்சைக் கொடுத்திருப்பார். அதை லாங் ஆஃபில் நின்ற ரவி பிஷ்னோய் சரியாகப் பிடித்த போதும் பவுண்டரி லைனை நினைவில் கொள்ளாமல் பின்னால் ஒரு அடி எடுத்து வைத்து சிக்சராக்கி விட்டிருந்தார். அதே லாங் ஆஃபில் வெங்கடேஷ் ஐயரும் பூரனுக்கு ஒரு எளிமையான பவுண்டரியைத் தடுக்காமல் விட்டிருப்பார். இந்தச் சொதப்பல்களுக்கு பிறகு கோலி லாங் ஆஃபிற்கு சென்றார். வந்த கேட்ச்சை எந்த சிரமமுமின்றி கூலாக பிடித்து அசத்தினார். கடைசியில் பொல்லார்ட் கொஞ்சம் ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் 157 ரன்களைச் சேர்த்தது.

Pooran
Pooran
Windows Cricket

இந்திய அணிக்கு டார்கெட் 158. ரோஹித் சர்மாவும் இஷன் கிஷனும் ஓப்பனிங் இறங்கினார்கள். தொடக்கத்திலிருந்தே இஷன் கிஷன் தடுமாற அவருக்கும் சேர்த்து வைத்து ரோஹித் அதிரடி காட்டினார். ஒடியன் ஸ்மித்தின் ஒரே ஓவரில் மட்டும் 2 சிக்சர்களையும் 2 பவுண்டரிகளையும் அடித்து 21 ரன்களை சேர்த்திருந்தார். இந்த ஓவரில் ஒரு ஷாட் பாலில் ஸ்கொயர் லெகில் ரோஹித் ஒரு புல் ஷாட்டில் சிக்சர் அடிக்க...

"Don't bowl short to this man, he was born to pull!"
ஹர்ஷா போக்ளே

என ஹர்ஷா போக்ளே கமெண்ட் அடிக்க ஒரே குதூகலமாக இருந்தது.

Rohit Sharma
Rohit Sharma
BCCI

ஆனால், ரோஹித் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 19 பந்துகளில் 40 ரன்களை எடுத்த நிலையில் சேஸின் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு, ஆட்டம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம் எனும் சூழல் உருவானது. 11-15 இந்த 5 ஓவரில் மட்டும் இஷன் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட் என 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. 42 பந்துகளில் 35 ரன்களை எடுத்து தடுமாறிக்கொண்டிருந்த இஷன் கிஷனை மிடில் & லெக் ஸ்டம்பிலேயே வீசி பெரிய ஷாட் ஆட வைத்து சேஸ் கேட்ச் ஆக்கினார். விராட் கோலியும் பெரிய ஷாட்டுக்கு முயன்று பவுண்டரி லைனில் பொல்லார்டிடம் கேட்ச் ஆகியிருப்பார். காட்ரெல்லின் ஓவர் தி விக்கெட் ஷார்ட் பாலை ஃபைன் லெக்கில் தட்ட முயன்று பண்ட் 8 ரன்களில் கேட்ச் ஆகியிருந்தார்.எடுக்க வேண்டிய ரன்கள் குறைவுதான் என்றாலும் விக்கெட் விழுந்தால் பிரச்னையாகும் என்ற சூழலில் சூர்யகுமார் யாதவும் வெங்கடேஷ் ஐயரும் மேற்கொண்டு விக்கெட் விடாமல் ஆட்டத்தைச் சிறப்பாக முடித்து வைத்தனர்.

காட்ரெல் வீசிய 17 வது ஓவரில் சூர்யகுமார் அடித்த ஒரு பவுண்டரியும் சிக்சரும் ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்து கொடுத்தது.

ஃபேபியன் ஆலன் வீசிய ஒரு லோ ஃபுல் டாஸை வெங்கடேஷ் ஐயர் வின்னிங் ஷாட்டாக சிக்சர் அடித்து மேட்ச்சை முடித்து வைத்தார். இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 34 ரன்களை அடித்திருந்தார்.

SuryaKumar Yadav
SuryaKumar Yadav
ICC

எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டி கொஞ்சம் கடினமானதற்கு இஷன் கிஷனின் சொதப்பலும் ஒரு காரணமாக இருந்தது. ஐ.பி.எல் ஏலத்தில் அதிக தொகைக்குச் சென்று ஆச்சர்யப்படுத்திய இஷன் கிஷன் ஓப்பனிங்கில் கடுமையாக தடுமாறியிருந்தார். அவருக்கும் சேர்த்து வைத்து ரோஹித் அட்டாக்கிங்காக ஆடியிருந்தார். நீண்ட நேரம் க்ரீஸில் நின்ற போதும் இஷன் கிஷனால் சிறப்பாக ஆடமுடியவில்லை. போட்டிக்கு முன்பாக அவர் அளித்த பேட்டியில்,

நம்பர் 3-4 ஐ விட ஓப்பனிங் இறங்குவதுதான் எனக்கு மகிழ்ச்சி!
இஷன் கிஷன்

என இஷன் கிஷன் பேசியிருந்தார். ஓப்பனிங் ஸ்லாட்டிற்கு ஏகப்பட்ட போட்டி நிலவும் சூழலில் கிடைக்கின்ற வாய்ப்பை இஷன் கிஷன் சிறப்பாகப் பயன்படுத்தி தனக்கான இடத்தை தக்கவைக்க முனைப்பு காட்ட வேண்டும்.