Published:Updated:

`அடித்து நொறுக்கி ஆட வேண்டும்!’ - ராஜ்கோட்டில் மையம் கொண்ட ரோ`ஹிட்’ புயல்

ரோஹித் சிக்ஸர்கள் பறக்கவிட்டு ரசிகர்களைக் கொண்டாட்ட மோடிலே வைத்திருந்தார். 10 -வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டு மாஸ் காட்டினார் ரோஹித்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

இந்திய வங்கதேச அணிகள் மோதிய இரண்டாவது டி20 ஆட்டம், மஹா புயலின் தாக்கம் காரணமாக வரும் மழையால் தடைபடும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சொன்னது. ஆனால் வந்ததோ ரோஹித் புயல். `ஹிட்மேன்’ ரோஹித் ரியல் ஹிட் மோடிலிருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்திய அணி
இந்திய அணி

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பனியின் தாக்கத்தை மனதில் வைத்து பேட்டிங்குக்குச் சாதகமாக ராஜ்கோட் ஆடுகளத்தில் முதலில் பந்துவீசும் முடிவை எடுத்தார். வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினர். பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழக்காமல் வங்க தேசம் விளையாடியதால், பெரிய இலக்கை இந்தியா சேஸ் செய்ய வேண்டி வரும் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால், வாஷிங்டன் சுந்தர், சஹால், தீபக் சஹார் ஆகியோரின் நேர்த்தியான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து, அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது வங்கதேசம். இறுதியாக வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் - தவான் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. குறிப்பாக ரோஹித் சிக்ஸர்கள் பறக்கவிட்டு ரசிகர்களைக் கொண்டாட்ட மோடிலே வைத்திருந்தார். 10 -வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டு மாஸ் காட்டினார் ரோஹித். தவான் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த ரோஹித், 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ராகுல் கம்பெனி கொடுக்க, ஸ்ரேயஸ் ஐயர், அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை 15.4 ஓவர்களில் எட்ட வைத்தார். இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் ஷர்மா, ``சுந்தர், சஹால் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள் இருவரும் எப்போதும் முன்னேற்றத்தை விரும்புபவர்கள்.. சுந்தர் குறிப்பாக புதிய பந்தில் சிறப்பாகச் செயல்படுவார். அவருக்கு ஆட்டத்தின் பின்பகுதியில் சில ஓவர்களைக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு மைதானத்தின் அளவும் ஒரு காரணம். பெரிய மைதானம் என்பதால் அந்தமுடிவை எடுத்தேன்.

ராஜ்கோட் மைதானத்தில் எப்போதும் பேட்டிங் செய்வதை விரும்புவேன். அதுவும் இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதை அறிவேன். அதை முடிந்த வரை பயன்படுத்திக்கொண்டோம். எதிரணி எதுவாக இருந்தாலும் நாங்கள் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. என்னைப் பொறுத்த வரை மைதானத்தில் நின்று பந்தை அடித்து நொறுக்கி ஆட வேண்டும் என்பதுதான் மனதில் இருந்தது. அதைச் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

இதுவரை இந்த ஆண்டு சிறப்பாக இருக்கிறது. வங்கதேச தொடர் இன்னும் இருக்கிறது. டெஸ்ட் போட்டி, அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர்கள் இருக்கின்றன. இந்த ஆண்டைச் சிறப்பாக முடிக்க வேண்டும்” என்றார்.