Published:Updated:

கோல்பக் டீல்... ப்ளேயிங் லெவன் ரிசர்வேஷன்... ட்ரான்ஸிஷன்... மீண்டெழுமா தென்னாப்பிரிக்கா! #SAcricket

De villiers
De villiers

''43 வீரர்கள் மட்டுமல்ல இன்னும் பல வீரர்கள் கவுன்ட்டி அணியில் இணைய காத்துக்கொண்டிருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா விதித்து இருக்கும் ப்ளேயிங் 11 விதிதான் காரணம்.''

21 வருடங்களாக கிரிக்கெட்டில் கோலோச்சிய அணி கடந்த ஓராண்டாக கோமாவில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஹான்சி குரோனியே, ஷான் போலாக், கிரீம் ஸ்மித், டிவில்லியர்ஸ் என லெஜண்டுகளின் கேப்டன்ஷிப்பில் வெற்றிமேல் வெற்றிகண்டுகொண்டிருந்த தென்னாப்பிரிக்கா அணி, இன்று வீழ்ச்சியின் பாதையில். எதனால் அடுத்தடுத்த தோல்விகள், எங்கே சறுக்கியது இந்த மாவீரர்களின் அணி?

2015 வரை எல்லாமே சரியாகச் சென்றுகொண்டு இருந்தது. 2015 உலகக்கோப்பை அரையிறுதித் தோல்வி தென்னாப்பிரிக்காவை உலுக்கிவிட்டது. மைதானத்திலேயே வீரர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். அந்தத் தோல்வியின் பாதிப்பிலிருந்து மனரீதியாக மீள எல்லோருக்கும் பல மாதங்கள் ஆகின. வழக்கமாக ஒரு உலகக்கோப்பை முடிந்தால் அடுத்து வரப்போகும் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு அணி தயார் செய்யப்படும். அணிக்கு புது சிந்தனைகளைப் புகட்டுவதற்காக கோச்சிங் டீம் மாற்றப்படும். கேப்டன் மாற்றப்படுவார். புதிய வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அதில் நன்றாக விளையாடும் வீரரை அணியில் தக்கவைத்து அவர்களை மேம்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் தயார்படுத்துவர். ஆனால், தென்னாப்பிரிக்க அணி 2015 உலகக்கோப்பை முடிந்தவுடன் இது மாதிரியான எந்த முயற்சிகளுக்கும் மெனக்கெடவில்லை.

டி வில்லியர்ஸ் குழப்பம்!

கேப்டன் டி வில்லியர்ஸ் 2015-க்குப் பிறகு, அணிக்கு வருவதும் போவதுமாக இருந்தார். அவருக்கு விருப்பப்பட்ட போட்டியில் ஆடினார். மீதி நேரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டார். 2 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டும் ஆடவில்லை. அவருக்கு இருந்த ஸ்டார் வேல்யூ காரணமாகத் தென்னாப்பிரிக்கா நிர்வாகத்தாலும் அவரை நிர்ப்பந்திக்க முடியவில்லை. 2017 ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆடச்சென்று மூன்றில் 2 போட்டிகள் தோற்று பரிதாபமாக வெளியேறியது டிவில்லியர்ஸ் தலைமையிலான அணி.

2017 ஆகஸ்ட் 23 ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் டி வில்லியர்ஸ். ‘ஒரு ப்ளேயராக 3 வகையான போட்டிகளில் ஆடுவேன்’ என்றும் அறிவித்தார். அணிக்கு 3 ஃபார்மேட்களிலும் டுபிளெஸ்ஸிஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 2017 டிசம்பர் அணிக்குத் திரும்பிய டிவில்லியர்ஸ் 5 மாதம் மட்டும் விளையாடிவிட்டு 2018 மே மாதம் 23 -ம் தேதி ஓய்வு முடிவை அறிவித்தார். 2019 உலகக்கோப்பைக்கு 1 வருடம் மட்டுமே இருக்கும்போது அவர் அறிவித்த ஓய்வு முடிவு பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் கிளப்பியது. இப்படி ஒரு வீரரை கேள்வி கேட்க முடியாத அளவுக்குத்தான் அந்த அணியின் நிர்வாகம் இருக்கிறது. இது வேறெப்படிப் பிரதிபலிக்கும்?!

SOUTH AFRICA CRICKET
SOUTH AFRICA CRICKET

30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள்!

2015 உலகக்கோப்பை விளையாடும்போதே டிவில்லியர்ஸ், ஆம்லா, டுமினி, இம்ரான் தாஹிர், ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், டு பிளெஸ்ஸிஸ் என 7 வீரர்கள் 30 வயதைக் கடந்து இருந்தார்கள். இருந்தும், 2019 உலகக்கோப்பைக்கும் இவர்களையே நம்பியிருந்து பெறும் தவறு செய்தது தென்னாப்பிரிக்கா. இளம் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பு அவர்களிடம் தெரியவில்லை.

உலகக்கோப்பைக்கு ஒரு வருடத்திறதுக்கு முன்பு டி வில்லியர்ஸ், மோர்கல் ஓய்வை அறிவித்துவிட்டுச் செல்ல, மீதி இருந்த 5 வீரர்களை 2019 உலகக்கோப்பைக்குக் கூட்டிச் சென்று அடி மேல் அடி வாங்கியது. ஸ்டெய்ன் காயத்தின் காரணமாக விலக மற்ற வீரர்கள் ஒருவர்கூட சரியாக விளையாடவில்லை. முடிவு - தோல்விகளே பரிசாகக் கிடைத்தது. 2019 உலகக்கோப்பை முடிந்த உடன் ஆம்லா, டுமினி, இம்ரான் தாஹிர் என மூவரும் ஓய்வை அறிவித்துச் சென்றுவிட்டனர்.

கிரிக்கெட் விளையாட்டில் ‘Transition phase’ என்று ஒரு முறை இருக்கும். பல மாற்றங்கள் நடைபெறும். ஒவ்வொரு ஸ்டார் பிளேயர் ஓய்வு பெறுவதற்கு முன்பும் அவருக்கு மாற்றான புது வீரரைக் கண்டறிந்து வாய்ப்பு கொடுப்பார்கள். இருவரும் ஒன்றாக ஆடும்போது, தன்னுடைய ரோல் என்ன, தன் மீதான அணியின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அந்த இளம் வீரர் புரிந்துகொள்வார். சீனியரின் அனுபவமும் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும். உதாரணம், தோனி - பன்ட்! ஆனால், தென்னாப்பிரிக்கா இது மாதிரியான Transition phaseகளை வீரர்களுக்கு உருவாக்கி கொடுக்கவில்லை. அதன் காரணமாக அணி தடுமாறிக்கொண்டிருக்கிறது.

கோல்பக் டீல்!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டின் வளத்தை அறிக்கும் கறையானாக மாறியிருக்கிறது இந்த கோல்பக் டீல். கோல்பக் டீல் என்றால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் உறுப்பு நாடுகள் சேர்ந்து செய்யும் ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்குச் சென்று மக்கள் வேலை பார்த்து கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தில் ஆப்பிரிக்கா நாடுகளும் அடங்கும். இந்த ஒப்பந்ததைப் பயன்படுத்தி இங்கிலாந்து கவுன்ட்டி அணிகள், இதுவரை தென்னாப்பிரிக்காவின் 43 வீரர்களை மொத்தமாக இழுத்துவிட்டது .

SOUTH AFRICA
SOUTH AFRICA

இங்கிலாந்து கவுன்ட்டி அணிகள் மிகவும் பாரம்பர்யமானவை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விதிப்படி ஒவ்வொரு கவுன்ட்டி அணியும் ஒரு வெளிநாட்டு வீரரை ஆட வைத்துக்கொள்ளலாம். இந்த விதிப்படி பல நாட்டு வீரர்கள், தங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள இங்கிலாந்து சென்று ஆடியுள்ளனர். வருடங்கள் செல்ல செல்ல இங்கிலாந்து கவுன்ட்டி அணிகள் 1 வெளிநாட்டு வீரருக்குப் பதில் 2 வீரர்களை ஆட வைத்தால் என்ன என்று யோசிக்க, இந்த கோல்பக் டீல் அவர்களுக்கு கை கொடுத்தது. கோல்பக் டீலின் முலமாக ஒரு வெளிநாட்டு வீரரை ஒப்பந்தம் செய்தால் அவர்கள் உள்ளூர் வீரராகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவர். இங்கிலாந்து கவுன்ட்டி அணிகள் இதைப் பயன்படுத்தி ஆப்பிரிக்க அணி வீரர்களை வளைக்க ஆரம்பித்தது. குறிப்பாக, வெள்ளை நிற வீரர்களைக் குறிவைத்து வளைத்தது. காரணம் தென்னாப்பிரிக்கா வைத்திருக்கும் ப்ளேயிங் 11 விதி.

தென்னாப்பிரிக்க ப்ளேயிங் 11-ல், 5:6 என்ற விகிதப்படியே வெள்ளை நிற வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதன் காரணமாக நிறைய வீரர்கள் தங்களுக்கு அணியில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில், இங்கிலாந்து கவுன்ட்டி அணிகளைத் தேர்வு செய்கிறார்கள். தேசிய அணிக்காக விளையாடும்போது கிடைக்கும் பணத்தைவிட இங்கிலாந்து கவுன்ட்டி அணியில் வரும் பணம் அதிகம். அது அவர்களை கவுன்ட்டி அணிக்குச் செல்லத் தூண்டுகிறது. கைல் அபாட், ரில்லி ரூஸோ, வெய்ன் பர்னல், ஆலிவர், காலின் இங்ரம் என இதுவரை 43 வீரர்களை இழுத்து இருக்கிறது இந்த ஒப்பந்தம்.

இதில் பெரும் சோகம் என்னவென்றால், இந்த ஆண்டில் 2 தொடர்களில் மட்டும் ஆடி 34 விக்கெட் எடுத்து மிரட்டிய வேகப்பந்துவீச்சாளர் டுவேன் ஆலிவர் என்பவரும் தென்னாப்பிரிக்காவை விட்டுவிட்டு இங்கிலாந்து கவுன்ட்டி அணியான யார்க்ஷைரில் இணைந்துவிட்டார். தென்னாப்பிரிக்கா எவ்வுளவு போராடி பார்த்தும் கவுன்ட்டி அணியில் அவர் இணைவதை தடுக்க முடியவில்லை.

SOUTH AFFRICA
SOUTH AFFRICA

ஒருமுறை மோர்னே மோர்கல் இது தொடர்பாகப் பேட்டியளித்தபோது, “43 வீரர்கள் மட்டுமல்ல இன்னும் பல வீரர்கள் கவுன்ட்டி அணியில் இணையக் காத்துக்கொண்டிருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா விதித்து இருக்கும் ப்ளேயிங் 11 விதிதான் காரணம். அது என்று மாற்றப்படுகிறோதோ அன்றுதான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு விடிவு காலம்” என்று சொல்லியிருக்கிறார்.

முதன்மையான வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டெய்ன், பிளான்டெர் தங்களது கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டங்களை நெருங்கியுள்ளனர். மிச்சம் இருப்பது ரபாடா மட்டுமே! அவருக்கும் பிரஷர் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. சப்போர்ட் இல்லாமல் அவரும் தவித்துக்கொண்டிருக்கிறார்.

பேட்டிங்கில் டுபிளெஸ்ஸி, டிகாக், டீன் எல்கர் மட்டுமே ஓரளவு ஆடிக்கொண்டு இருக்கின்றனர். 50 ஓவர் போட்டிகளில் 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கும், 2019 உலக்கோப்பைக்கும் இடையே 300 ரன்களை 6 முறை மட்டுமே எடுத்துள்ளது தென்னாப்பிரிக்கா. மற்ற முன்னணி நாடுகள் 17 - 20 முறை இந்த இலக்கை எட்டியுள்ளன.

சரியான பயிற்சியாளர்கள் இல்லை, transition phase முலம் திறமையான வீரர்கள் உருவாக்கப்படவில்லை, கோல்பக் டீல் முலமாக நல்ல வீரர்கள் அனைவரையும் கோட்டை விடுவது என வீழ்ச்சியின் பாதைக்கே சென்றுவிட்டது தென்னாப்பிரிக்கா. இந்த சோதனைக்கட்டங்களை தென்னாப்பிரிக்கா அணி தாண்டுமா, வீழ்ச்சியின் பிடியில் இருந்து மீண்டெழுமா என்கிற கேள்விகளோடு காத்திருக்கிறான் கிரிக்கெட் ரசிகன்.

50-வது டெஸ்ட்... நம்பர் 1 டீம்... கேப்டன் கோலி செய்த அந்த முக்கிய மாற்றம் என்ன?! #Kohli50
அடுத்த கட்டுரைக்கு