Published:Updated:

`சேஸிங்கில் ரெக்கார்டு; ஈடன் பார்க்கில் தரமான ஆட்டம் காத்திருக்கு!’ - எச்சரிக்கும் டாம் லாதம்

டாம் லாதம், ராஸ் டெய்லர்
டாம் லாதம், ராஸ் டெய்லர்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணியின் அதிகபட்ச சேஸிங் இதுதான்.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து வென்றுள்ளது. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக இழந்த நிலையில், ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது நியூஸிலாந்து. முதலில் பேட் செய்த இந்திய அணி 347 ரன்களை எடுத்தது. ஒருநாள் போட்டியில் இது நல்ல டார்க்கெட்தான். இந்தியாவின் பந்துவீச்சு யூனிட்டும் வலுவாகவே இருந்தது. ஷமி, பும்ரா, ஜடேஜா என அனுபவ பந்துவீச்சாளர்களும், குல்தீப், ஷ்ர்துல் தாக்கூர் என இளம்படையுடன் களம் இறங்கியது இந்தியா.

நியூஸிலாந்து வீரர்கள்
நியூஸிலாந்து வீரர்கள்

நியூஸிலாந்து கப்தில், நிகோலஸ் நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் ராஸ் டெய்லர் மிரட்டினார். அவர் வழங்கிய எளிதான கேட்சை இந்தியா தொடக்கத்தில் தவறிவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றம். டி-20 தொடரில் இரண்டு போட்டிகளில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்ததிருந்தது நியூஸிலாந்து. அந்த இரண்டு போட்டிகளிலும் முக்கியமான கட்டத்தில் ராஸ் டெய்லர் விக்கெட் இழந்தது, இந்தியாவுக்கு சாதகமான முடிவு கிடைக்கக் காரணமாக அமைந்தது. இந்தப் போட்டியில் அதைக் கருத்தில்கொண்டு, அவர் நிதானமாகவே விளையாடினார். சதம் அடித்து அசத்திய டெய்லர், ஆட்டமிழக்காமல் 109 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார், ராஸ் டெய்லர்.

இதற்கு முன்பாக, 2007-ம் ஆண்டில் ஹாமில்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 347 என்ற இலக்கை எட்டிப்பிடித்தது. அதன்பின்னர், தற்போது இந்தியாவுக்கு எதிரான 348 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது. ஆட்டநாயகன் விருது வென்ற ராஸ் டெய்லர் பேசுகையில், ``கோட்டைக் கடந்து செல்வது நன்றாக இருந்தது. இந்திய அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. ரைட் - லெப்ட் காம்பினேஷன் எங்களுக்கும் மிகவும் உதவியாக இருந்தது. டாம் ஆடவந்ததும் எனக்கு இருந்த அழுத்தத்தை அவர் எடுத்துக்கொண்டார். ஹாமில்டன் ஒரு மகிழ்ச்சியான வேட்டை மைதானமாக இருந்தது. இனிவரும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்”என்றார்.

லாதம்
லாதம்

நியூஸிலாந்து கேப்டன் டாம் லாதம் பேசுகையில், ``வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இலக்கை எட்டியது மகிழ்ச்சி அளித்தது. நல்ல பார்ட்னர் ஷிப் உருவாக்கியதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. நாங்கள் நினைத்ததைவிட அதிக ரன்களை சேஸ் செய்ய வேண்டியிருந்தது. சிறப்பான தொடக்கம் மற்றும் விக்கெட் கைவசமிருந்ததால் பயமின்றி பேட்டிங் செய்ய முடிந்தது. இந்த வெற்றியில் என்னுடைய பங்களிப்பும் இருந்தது மகிழ்ச்சி. ராஸ் டெய்லர் அற்புதமாக விளையாடினார். திட்டமிட்டபடி சரியாகப் பந்துவீச முடியவில்லை. எனவே, நாங்கள் அதை மேம்படுத்த வேண்டும். ஈடன் பார்க்-கில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு