Published:Updated:

IPL 2021: சிஎஸ்கே டு சன் ரைஸர்ஸ்... விமர்சனங்களுக்குப் பதில் சொல்வாரா கேதார் ஜாதவ்?!

Kedar Jadhav

முதலில், ஒரேயொரு சீசனை மட்டும் வைத்து ஒரு வீரரை விமர்சிக்கும் தன்மை மாறியாக வேண்டும். எல்லா வீரர்களுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்படவே செய்கின்றனர். ரன்மெஷின் கோலியின் ஒரு சதத்துக்காக 2 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து பார்த்திருப்போமா?!

Published:Updated:

IPL 2021: சிஎஸ்கே டு சன் ரைஸர்ஸ்... விமர்சனங்களுக்குப் பதில் சொல்வாரா கேதார் ஜாதவ்?!

முதலில், ஒரேயொரு சீசனை மட்டும் வைத்து ஒரு வீரரை விமர்சிக்கும் தன்மை மாறியாக வேண்டும். எல்லா வீரர்களுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்படவே செய்கின்றனர். ரன்மெஷின் கோலியின் ஒரு சதத்துக்காக 2 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து பார்த்திருப்போமா?!

Kedar Jadhav

சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் மிக மோசமாக ஆடி லீக் போட்டிகளோடு வெளியேறியிருந்தது. ஓர் அணியாக முழுவதுமாகவே சிஎஸ்கே வீரர்கள் சொதப்பியிருந்தாலும், கேதார் ஜாதவ் மீது மட்டும் ரசிகர்கள் அதீத கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சிஎஸ்கே-வின் தோல்வியை மொத்தமாக ஜாதவின் தலையில் கட்டி ட்ரோல்களையும் செய்திருந்தனர். கடந்த சீசனில் அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பார்த்தபோது, அவர் கரியரே அவ்வளவுதான் என்கிற எண்ணமே தோன்றியது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஜாதவை ஏலத்தில் எடுத்து ஆச்சர்யப்படுத்தியது. இந்த முறை விமர்சனங்களுக்குப் பதில் கொடுப்பாரா ஜாதவ்?!

2012-ம் ஆண்டு ரஞ்சி போட்டியில் முச்சதம் அடித்ததோடு, ஒரு சீசனில் ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை அடித்ததன் காரணமாக கவனம் பெற்றார் கேதார் ஜாதவ். டெல்லி அணி இவரை முதன்முதலாக ஏலத்தில் எடுத்தது. அதன்பிறகு, கொச்சி அணிக்கு ஆடினார். மீண்டும் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டவர், அந்த அணிக்காக இரண்டு சீசன்கள் ஆடினார். அதன்பிறகு, ஆர்சிபி இவரை ஏலத்தில் எடுத்தது. இந்த சீசன்களில் எல்லாம் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு ஒரு சில நல்ல இன்னிங்ஸ்களை மட்டுமே ஆடியிருந்தார் ஜாதவ். பெங்களூர் அணியும் இவரை விடுவிக்க, 2018 சீசனுக்காக 7.8 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டார்.

Kedar Jadhav
Kedar Jadhav

சென்னை அணியின் கம்பேக் சீசனான 2018 சீசனில், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு மேட்ச் வின்னிங் கேமியோ ஆடி சென்னை ரசிகர்கள் மத்தியில் மதிப்பைப் பெற்றார். அந்தப் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் அதன்பிறகு பெரிதாக ஆடவில்லை. 2019 சீசனில் பெரும்பாலான போட்டிகளில் ஆடியிருந்தாலும் பெரிதாக சோபிக்கவில்லை. ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். சென்னை அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் தனிப்பட்ட முறையில் எந்த வீரர் மீதும் விமர்சனங்கள் பாயவில்லை. அதனால் கேதரும் தப்பித்திருந்தார். துபாயில் நடைபெற்ற கடந்த சீசனில்தான் ரசிகர்களை கொலைவெறியாக்கினார் அவர். டெத் ஓவர்களில் வந்து கட்டையை போட்டு சிஎஸ்கே கப்பலில் மிகப்பெரிய ஓட்டையைப் போட்டார். மற்ற கேப்டன்களைப் போல் இல்லாமல், தோனி கேதாருக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால், எதையுமே கேதார் ஜாதவ் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 8 போட்டிகளில் ஆடி வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்நிலையில்தான் சென்னை அணி அவரை விடுவித்திருந்தது. இந்த ஆண்டுக்கான ஏலத்தில் விற்கப்படாத வீரராக இருப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், சன்ரைசர்ஸ் அணி அவருடைய அடிப்படை விலையான 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. எந்த நம்பிக்கையில் சன்ரைசர்ஸ் அணி கேதார் ஜாதவை தேர்வு செய்தது?

Kedar Jadhav
Kedar Jadhav

சன்ரைசர்ஸ் அணியின் தேவை என்ன என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, நடராஜன், கலீல் அஹ்மத், ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் என வெறித்தனமான பௌலிங் லைன் அப்பை சன்ரைசர்ஸ் வைத்திருக்கிறது. வார்னர், பேர்ஸ்ட்டோ, மணீஷ் பாண்டே, வில்லியம்சன் என டாப் ஆர்டரும் கச்சிதமாக இருக்கிறது. சன்ரைசர்ஸுக்குப் பிரச்னையாக இருப்பது மிடில் ஆர்டர் மட்டுமே. பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத் என அனுபவமில்லாத இளம் வீரர்களே மிடில் ஆர்டரில் நிறைந்திருக்கின்றனர். விஜய் ஷங்கர் மிடில் ஆர்டரில் இருந்தாலும் அவர் சீராக பெர்ஃபார்ம் செய்வதில்லை. மேலும், அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொள்ளக்கூடிய வீரராக இருக்கிறார். இதனால், சன்ரைசர்ஸுக்கு மிடில் ஆர்டரில் நின்று ஆடக்கூடிய, இளம் வீரர்களின் மீது அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் நல்ல அனுபவமிக்க ஒரு வீரர் தேவைப்பட்டார். அதற்காகவே கேதார் ஜாதவை தேர்வு செய்திருக்கிறது சன்ரைசர்ஸ்.

கேதார் ஜாதவிடமிருந்து சன்ரைசர்ஸ் பெரிய பவர் ஹிட்டிங்கை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. டாப் ஆர்டர் சொதப்பும் சமயங்களில், விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு நல்ல ஆங்கர் இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். கேதார் ஜாதவ் அப்படி சப்போர்ட்டாக நின்றுவிட்டாலே, ப்ரியம் கர்க், அபிஷேக் ஷர்மா போன்றோர் இன்னொரு முனையில் ரன்ரேட்டை உயர்த்திவிடுவார்கள்.

இவரது கடந்த சீசன் பர்ஃபாமென்ஸை மட்டுமே பார்த்திருந்தால் சன்ரைசர்ஸ் நிச்சயம் அவரை எடுத்திருக்கமாட்டார்கள். சமீபத்தில், நடந்து முடிந்த சையது முஷ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரேவில் சில நல்ல பர்ஃபாமென்ஸ்களை கொடுத்திருக்கிறார் கேதார். சையது முஷ்தாக் அலி தொடரில் சட்டீஸ்கருக்கு எதிராக 45 பந்துகளில் 84 ரன்களை அடித்திருந்தார். விஜய் ஹசாரேவில் ராஜஸ்தானுக்கு எதிராக ஒரு சதமும் டெல்லிக்கு எதிராக 86 ரன்களையும் அடித்திருந்தார். இந்த இன்னிங்ஸ்கள்தான் சன்ரைஸுக்கு இவர் மீது நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

ஸ்பின்னுக்கும் ரஷீத்கானை மட்டுமே நம்பியிருக்கிறது சன்ரைசர்ஸ். முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் போன்றோர் இருந்தாலும் அவர்களால் ப்ளேயிங் லெவனில் ஆடவே முடியாது. வார்னர், பேர்ஸ்ட்டோ, வில்லியம்சன், ரஷீத் கான் என வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது. கடந்த சீசனில் அனுபவமே இல்லாத அப்துல் சமத்தை தோனிக்கு எதிராக கடைசி ஓவரை வீச வைத்திருந்தார் வார்னர். ஏனெனில், அவர்களிடம் வேறு ஆப்ஷனே இல்லை. இந்த முறை போட்டி இந்தியாவில் நடப்பதால் ஒரே ஒரு ஸ்பின்னரை நம்பி களமிறங்குவது சாத்தியமில்லாதது. இந்த இடத்தில்தான் கேதார் ஜாதவ்வும் கைகொடுப்பார். ஐபிஎல் தொடரில் இவர் பந்துவீசியதில்லை. கடந்த சீசனில் ஆஃப் ஸ்பின்னுக்கான தேவையிருந்தும் இவரை தோனி பயன்படுத்தவில்லை. ஆனால், இந்த சீசனில் நிச்சயம் கேதார் ஜாதவ்வை ஆறாவது பௌலிங் ஆப்ஷனாக வார்னர் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

Kedar Jadhav
Kedar Jadhav

முதலில், ஒரே ஒரு சீசனை மட்டுமே வைத்து ஒரு வீரரை அதீதமாக விமர்சிக்கும் தன்மை மாறியாக வேண்டும். எல்லா வீரர்களுமே எதோ ஒரு காலகட்டத்தில் மோசமான பாதையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படவே செய்கின்றனர். ரன்மெஷின் கோலியின் ஒரு சதத்துக்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து பார்த்திருப்போமா!? கோலியின் கரியரில் இது மோசமான காலகட்டமாகவே பார்க்கப்படுகிறது. நம்பர் 1 வீரருக்கே இந்த நிலை எனும்போது கேதாருக்கெல்லாம் சொல்லவே வேண்டாம். அவருக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பைப் போன்றது இந்த சீசன். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக, பார்ட் டைம் பௌலராக சன்ரைசர்ஸ் அணியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அவர் மீது விழுந்த அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்!