Published:Updated:

ஐ.பி.எல் தொடர் இப்போதைக்கு சாத்தியமா? - லாக்டௌன் 4.0 வழிகாட்டுதலும் வாய்ப்புகளும்..!

ஐ.பி.எல் கிரிக்கெட்
ஐ.பி.எல் கிரிக்கெட்

இந்த லாக்டெளனில் என்னென்ன தளர்வுகள் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் முக்கியமான ஒன்று, ரசிகர்கள்/பார்வையாளர்கள் இல்லாமல் மைதானங்களைத் திறக்கலாம் என்பதுதான்.

உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறை, அந்தத் துறை என இல்லாமல், கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருமளவில் பரவத் தொடங்கியது மார்ச் மாதம்தான். அதைத் தொடர்ந்து மார்ச் 25-ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு
vikatan

இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே என சம்மர் விடுமுறைகளில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் களைகட்டும். ஆனால், கொரோனா காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த வருடம் ஐ.பி.எல் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தநிலையில், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தொடரை நடத்த முயல்வோம் என ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்தது.

இந்தநிலையில், 4-வது லாக்டெளன் அமலானது. இந்த லாக்டெளனில் என்னென்ன தளர்வுகள் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் முக்கியமான ஒன்று, ரசிகர்கள்/பார்வையாளர்கள் இல்லாமல் மைதானங்களைத் திறக்கலாம் என்பதுதான்.

மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்

இந்த அறிவிப்பு வந்ததும், கிரிக்கெட் ரசிகர்கள் பலர், ரசிகர்களே இல்லாத மைதானத்தில் ஐ.பி.எல் தொடர்கள் நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர். சில நாடுகளில் பூட்டிய மைதானங்களில் கால்பந்து, பேஸ்பால் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. சரி, ஆளில்லா மைதானங்களில் ஐ.பி.எல் தொடர் நடத்துவது சாத்தியமா என்று ஆராய்ந்தால் தற்போதைக்கு அது சாத்தியம் இல்லை என்றே சொல்ல முடியும்.

உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில், ரசிகர்களின்றி மைதானம் திறக்க அனுமதி அளித்திருந்தாலும், இன்னும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ள முடியாமல் போகும். இதனால் ஐ.பி.எல் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் வரலாம். அதற்கு பிசிசிஐ தயார் என்றே வைத்துக்கொள்வோம்; உள்நாட்டு விமான சேவை இல்லாமல் வீரர்களை அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கடினமாகும்.

விமான சேவை
விமான சேவை

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், ``அரசாங்கத்தின் அறிவிப்புகளை முழுவதுமாக ஆராய்ந்து வருகிறோம். அனைத்து மாநில அரசுகளின் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் இந்த விவகாரம் அடுத்தகட்டத்துக்குச் செல்லும்” என்கிறார்கள்.

இந்தப் புதிய அறிவிப்பு மூலம் அதிகபட்சம், வீரர்கள் தனிப்பட்ட முறையில் மைதானங்களுக்கு வந்து பயிற்சி மேற்கொள்ளலாம். அதுவும் மாநில அரசு அனுமதித்தால் மட்டுமே சாத்தியம். ஒரு அணியாக வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது சிரமம். தற்போது இருக்கும் பொதுப் போக்குவரத்து தடைக்கு மத்தியில் வீரர்களை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பது என்பது முடியாத காரியமே என்கிறார்கள் அதிகாரிகள் சிலர்.

பிசிசிஐ
பிசிசிஐ

வழக்கமாக இந்திய அணியின் ஒப்பந்த வீரர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகளை பிசிசிஐ வழங்கும். ஆனால், ஜூன் மாதம் வரை அதற்கு வாய்ப்பு இல்லை என பிசிசிஐ மறுத்துள்ளது. ``விமானப் போக்குவரத்து இயங்காது என்பதால், திறன் சார்ந்த பயிற்சி முகாம்கள் தற்போது நடக்காது” எனப் பிசிசிஐ அதன் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

பிசிசிஐ அதிகாரிகள் சிலர், `நடப்பு ஆண்டு ஐ.பி.எல் என்பது மிக விரைவில் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. மீண்டும் ஐ.பி.எல் தொடர்பான ஆலோசனைகள் ஆகஸ்ட் மாதம்தான் நடைபெறும்’ என்கின்றனர். அக்டோபர், நவம்பர் மாதம் உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்க உள்ளதால், ஐ.பி.எல் தொடர் அதன் பின்னர் நடத்துவதிலும் சிரமம் இருக்கிறது. ஒருவேளை, கொரோனா காரணமாக உலகக் கோப்பை தொடர் தள்ளிப்போகும் என்றால் ஐ.பி.எல் தொடர் நடக்கலாம். ஆனாலும், ஐ.பி.எல் தொடர் நடத்தும் அளவுக்கு நிலைமை சரியானால், உலகக்கோப்பைத் தொடரையே நடத்தலாம் என்றுதான் ஐ.சி.சி நினைக்கும்.

ஐ.பி.எல் ஏலம்
ஐ.பி.எல் ஏலம்

ரசிகர்கள் இல்லா மைதானத்தில் ஐ.பி.எல் தொடரை நடத்துவதில் அனைத்து ஐ.பி.எல் அணி நிர்வாகமும் ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் ஓகே சொல்லிவிட்டது என்றாலும் வீரர்களை ஒருங்கிணைப்பது இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதால், ஐ.பி.எல் தொடர் தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு