Published:Updated:

முத்தையா முரளிதரன்... இவரின் கதை ஏன் உலகுக்குச் சொல்லப்படவேண்டும்?! அண்டர் ஆர்ம்ஸ் - 22

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன் ( ஹாசிப்கான் )

முழுக்க முழுக்கத் திறமையால், உழைப்பால் முன்னேறி உலகின் நம்பர் 1 பெளலர் என்கிற சாதனையைப் படைத்திருக்கும் முரளிதரனின் வாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள பல நம்பிக்கைக் கதைகள் இருக்கின்றன.

2010-ல் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அது. இலங்கையில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன. 38 வயதில் இலங்கைக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார் முத்தையா முரளிதரன். எப்போதும்போல பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு எதிராக விக்கெட்டுகள் எடுக்கிறார். இறுதிப்போட்டி இந்தியாவுடன். அப்போது, "இறுதிப்போட்டிக்கான அணியில் நீங்கள் விளையாடமுடியாது. பிட்ச் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கிறது. ஒரு ஸ்பின்னர்தான் அணிக்குள் இருக்கவேண்டும், அதனால் நீங்கள் வேண்டாம்" என இலங்கையின் கேப்டன் குமார சங்ககாரா முரளிதரனிடம் சொல்கிறார்.

"நான் நன்றாகத்தானே பந்துவீசுகிறேன். போன மேட்ச்சில்கூட விக்கெட் எடுத்தேனே" என்கிறார் முரளிதரன். வாக்குவாதம் தொடர்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 792 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்து யாருமே நெருங்கமுடியாத சாதனைகளுடன் இருப்பவர் இழிவைச் சந்திக்கிறார். என்ன நடந்ததோ தெரியாது. சங்ககாரா, இறுதிப்போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் முரளிதரனைச் சேர்க்கிறார். ஆனால், அந்தப் போட்டியில் இலங்கை தோல்வியடைகிறது, முரளிதரனால் 10 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்கூட எடுக்கமுடியவில்லை. இந்த இறுதிப்போட்டியும், போட்டித் தொடங்குவதற்கு முன்பாக நடந்த சம்பவங்களும் முரளிதரனை சிந்திக்கவைக்கின்றன.

முரளிதரன்
முரளிதரன்

இலங்கையின் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவரை போனில் அழைக்கிறார். "நான் இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிராகத் தொடங்கயிருக்கும் மூன்று டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டை என்னுடைய கடைசி டெஸ்டாக வைத்துக்கொள்ளலாம்" என்கிறார் முரளிதரன்.

"மூன்று டெஸ்ட்களிலும் ஆடுங்கள். இதுவரை 792 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறீர்கள். இன்னும் 8 விக்கெட்கள் எடுத்து 800 விக்கெட்டுகளோடு ஓய்வுபெற்றுவிடுங்கள். அதற்காக இந்த மூன்று டெஸ்ட்களிலும் விளையாடுங்கள்" என்கிறார் தேர்வுக்குழுத்தலைவர். ''நான் முடிவெடுத்துவிட்டேன். முதல் டெஸ்ட்டோடு ஓய்வுபெறுகிறேன். அதில் நான் எவ்வளவு விக்கெட்கள் எடுத்தாலும் பரவாயில்லை. 800 பற்றி நான் கவலைப்படவில்லை" என்று சொல்லிவிட்டு ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறார் முத்தையா முரளிதரன்.

ஜூலை 18, 2010... காலேவில் தொடங்குகிறது இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட். முரளிதரன் கடைசிப்போட்டியில் 800 விக்கெட்டுகள் எடுப்பாரா என்கிற பரபரப்பு அவரைச்சுற்றி எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், முரளிதரன் எப்போதும்போல பந்துவீசுகிறார். அவருடைய ஆஃப் ஸ்பின் இந்திய பேட்ஸ்மேன்களைப் பதறவைக்கிறது. முதல் இன்னிங்ஸில் சச்சின், யுவராஜ், தோனி உள்பட ஐந்து விக்கெட்கள் எடுக்கிறார் முரளிதரன். இரண்டாவது இன்னிங்ஸில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் விக்கெட்களை எடுத்துவிட்டார். இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் முரளிதரனுக்கு அது 800-வது விக்கெட். ஆனால், இந்தியா ஆல் அவுட் ஆக இன்னும் ஒரு விக்கெட்தான் இருக்கிறது. ஓஜாவும், இஷாந்த் ஷர்மாவும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன்

ரங்கனா ஹெராத்தும், முரளிதரனும் மாறி மாறிப் பந்துவீசிக்கொண்டிருக்கிறார்கள். ரங்கனா கடைசி விக்கெட்டை எடுத்துவிட்டால் 799 விக்கெட்டுகளோடு முரளிதரன் ஓய்வுபெற்றுவிடுவார் என்பதால் ஒரே பரபரப்பு. ஆனால், தனது 45-வது ஓவரில் கடைசி விக்கெட்டாக பிரக்‌யான் ஓஜாவின் விக்கெட்டை எடுத்து 800 விக்கெட்டுகளோடு உலக சாதனை படைத்தார் முரளிதரன். இதுதான் '800' என்கிற எண்ணுக்குப் பின்னால் இருக்கும் வரலாறு. பொதுவாக உலக சாதனைகளைப் படைத்துவிட்டுத்தான் எல்லோரும் ஓய்வுபெறுவார்கள். சச்சின் 100-வது சதம் அடிக்கும்வரை ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் காத்திருந்தார். ஆனால், முரளிதரனோ, "800 விக்கெட் எடுக்கிறேனோ இல்லையோ இதுதான் என்னுடைய கடைசிப்போட்டி" என்று அறிவித்துவிட்டார். எண்களைப் பற்றியும், தனிப்பட்ட சாதனைகள் பற்றியும் கவலைப்படாமல் விளையாடியவர்தான் முரளிதரன்.

ஒரு பேட்ஸ்மேனாக சச்சின் எப்படி கொண்டாடப்படுகிறோ, அதேபோல் ஒரு பெளலராக உலகம் முழுக்க கொண்டாடப்படவேண்டியவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட்டில் 800 விக்கெட்டுகள் மட்டுமல்ல, ஒருநாள் கிரிக்கெட்டிலும் 534 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். இந்த இரண்டு சாதனைகளையுமே இனி எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் முறியடிக்கமுடியாது. கிரிக்கெட்டின் இறுதிவரை முரளிதரனின் பெயர்தான் டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் நம்பர்-1 ஆக இருக்கப்போகிறது.

சச்சினின் சத சாதனைகளைக்கூட விராட் கோலி கடந்துவிடக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால், முரளிதரனின் சாதனைகளை இனி வரப்போகும் எந்த வீரராலும் முறியடிக்க முடியாது என்பதே உண்மை. காலம் கடந்து கொண்டாடப்படவேண்டிய கிரிக்கெட்டர் முரளிதரன். அடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்டப்பட வேண்டிய கிரிக்கெட் வீரன். இன்றுவரை ஸ்பின்னராக வரத்துடிக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் முரளிதரன்தான் இன்ஸ்பிரேஷன்.

சச்சின், முரளிதரன்
சச்சின், முரளிதரன்
14 வயதுவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக, வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடிக்கொண்டிருந்தவர் முத்தையா முரளிதரன். இலங்கையின் கண்டியில் அந்தோணியார் கல்லூரியில் படித்தபோது, அங்கேயிருந்த கிரிக்கெட் பயிற்சியாளர்தான் முரளிதரனை ஆஃப் ஸ்பின் முயற்சி செய்து பார்க்கச் சொல்கிறார். நம்பிக்கையில்லாமல் பந்துவீச ஆரம்பித்தவருக்கு அதே கண்டியில் பேரதிசயம் நடக்கிறது.

1992-1993-ல் ஆஸ்திரேலிய அணி ஆலன் பார்டர் தலைமையில் இலங்கையில் விளையாட வருகிறது. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சம்பிரதாயத்துக்கு நடத்தப்படும் இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிராகப் பயிற்சிப்போட்டியில் ஆடுகிறது ஆஸ்திரேலியா. பிரசிடென்ட் லெவன் அணியில் ஆஃப் ஸ்பின்னராக இடம்பிடித்திருந்தவர் முரளிதரன். 79 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்தான் எடுக்கிறார் முரளிதரன். ஆனால், அவர் எடுத்த விக்கெட் யாருடையது தெரியுமா? ஆலன் பார்டருடையது. கிட்டத்தட்ட டேவிட் வெர்ஸஸ் கோலியாத் கதைதான். 37 வயது ஆஸ்திரேலிய ஜாம்பவானால் 20 வயது முரளிதரனின் ஆஃப் ஸ்பின்னைக் கணிக்கமுடியவில்லை. கண்டி சிறுவன் ஆலன் பார்டரை வீழ்த்திவிட்டான் என இலங்கை முழுக்க செய்தி பரவுகிறது. மக்கள் கொண்டாடுகிறார்கள். அதுவரை இலங்கை அணிக்குள் இடம்பெறாத முரளிதரன் இந்த ஒரே ஒரு விக்கெட்டால் அணிக்குள் இடம்பிடிக்கிறார்.

கொழும்பு பிரேமதாச ஸ்டேடியத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ப்ளேயிங் லெவனில் இடம்பிடிக்கிறார் முரளிதரன். முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் எடுக்கிறார். இதில் மார்க் வாக், முரளிதரனின் முதல் பந்திலேயே எல்பிடள்யூ ஆகி டக் டவுட் ஆகிறார். முதல் டெஸ்ட்டில் தோல்வியைச் சந்தித்த இலங்கை, இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வியைத் தவிர்த்து டிரா செய்கிறது. முரளிதரனுக்கு இலங்கை அணியில் நிரந்தர இடம் கிடைக்கிறது.

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன்

1993 அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் இலங்கைக்கு வருகிறது. பிரையன் லாராவின் விக்கெட்டோடு சேர்த்து 4 விக்கெட்கள் எடுக்கிறார் முரளிதரன். 1994 ஜனவரியில் இந்தியாவுக்குள் விளையாட வருகிறது இலங்கை. முதல் டெஸ்ட் லக்னோவில் நடக்கிறது. நவ்ஜோத் சிங் சித்து, சஞ்சய் மஞ்ரேக்கர், கபில்தேவ், நயான் மோங்கியா, ராஜேஷ் செளஹான் என இந்தியாவின் 5 விக்கெட்களை முதல் இன்னிங்ஸில் எடுக்கிறார் முரளிதரன். இரண்டாவது டெஸ்ட்டில் மீண்டும் சித்து, மஞ்ரேக்கரோடு சேர்த்து வினோத் காம்ப்ளி, கேப்டன் அசாருதினின் விக்கெட்டையும் எடுக்கிறார் முரளிதரன். மூன்றாவது டெஸ்ட்டிலும் மூன்று விக்கெட்கள். முரளிதரனை ஆச்சர்யத்தோடு பார்க்க ஆரம்பிக்கிறது உலக கிரிக்கெட்.

1997-ல் முதல்முறையாக 100 டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த இலங்கை பெளலர் என்கிற சாதனையைப் படைக்கிறார் முரளிதரன். இங்கிலாந்தில், இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாடு 5 டெஸ்ட்கள் விளையாடினாலே அது மிகப்பெரிய கெளரவம்தான். ஆஸ்திரேலியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளையும் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அழைப்பதில்லை. 90-களில் இலங்கைக்கெல்லாம் 1 டெஸ்ட் போட்டிதான். இத்தனைக்கும் அப்போது ஒருநாள் உலககோப்பையை வென்றிருந்த அணி இலங்கை.

1998-ல் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டிருந்தது இலங்கை. இங்கிலாந்தில் ஒரே ஒரு டெஸ்ட்டில்கூட இலங்கை வெற்றிபெற்றதில்லை என்பதே அதுவரைக்குமான வரலாறு. ஆனால், முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 65 ரன்கள் மட்டுமே கொடுத்து 9 விக்கெட்கள் எடுத்து இலங்கையின் வெற்றிக்குக் காரணமானார் முரளிதரன். அன்று இங்கிலாந்தின் 10 விக்கெட்களையும் முரளிதரனே எடுத்திருப்பார். அலெக் ஸ்டீவர்ட் ரன் அவுட் ஆகிவிட்டதால் 10 விக்கெட் ஹால் மிஸ்ஸானது. ஒரே டெஸ்ட்டில் 16 விக்கெட்கள். இங்கிருந்து தொடங்கியதுதான் முரளிதரனின் விக்கெட் வேட்டை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா என ஸ்பின்னுக்கு ஒத்துழைக்காத பிட்ச்களில் எல்லாம் முரளிதரனின் பந்துகள் சுற்றிச் சுழன்றிருக்கின்றன.

2001-ல் இந்தியாவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 21 இந்திய விக்கெட்களை வீழ்த்தினார் முரளிதரன். அப்போதுதான் முதல்முறையாக தூஸ்ரா வகைப்பந்து முரளிதரனால் பிரபலமானது. 58 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்களை எடுத்தவருக்கு அடுத்த 100 விக்கெட்களை எடுக்க 14 டெஸ்ட் போட்டிகளே தேவைப்பட்டன. முதல் விக்கெட்டாக ஆலன் பார்டரின் விக்கெட்டை எடுத்த அதே கண்டி மைதானத்தில், 2004-ல் அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தனது 500-வது விக்கெட்டை எடுத்தார் முரளிதரன்.

சிங்கள வீரர்களால் நிரம்பிய ஓர் அணிக்குள், பிரிவினைவாதமும், போரும் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழராக இலங்கை அணிக்குள் ஒருவர் இடம்பிடிக்க வேண்டுமானால் அவர் எவ்வளவு பெரிய திறமையாளராக இருந்திருக்க வேண்டும், எவ்வளவு போராடியிருக்க வேண்டும். கிரிக்கெட் குடும்பப்பின்னணியோ, அரசியல், சமூக செல்வாக்கோ எதுவும் இல்லாமல் தன்னுடைய திறமையால் மட்டுமே இலங்கை அணிக்குள் இடம்பிடித்த முரளிதரனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டியது அவசியமில்லையா?!

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன்

1992-ல் இலங்கை அணிக்குள் வந்தவர் தன் கரியர் முழுக்க பல்வேறு நடுவர்களால் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார். அவர் பெளலிங் போடவில்லை... சக்கிங் (எறிகிறார்) செய்கிறார் என குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். 1995-ல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முரளிதரனின் பெளலிங் ஆக்‌ஷன் சரியாக இல்லை என்று நடுவர் டேரல் ஹேர் 7 முறை முரளிதரனின் பந்துகளை 'நோ பால்' என அறிவித்தார். தொடர்ந்து அவரது பெளலிங் ஆக்‌ஷன் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டேயிருந்தன. அவரை சோதித்துக் கொண்டேயிருந்தார்கள். 2004-ல் முரளிதரனின் 'தூஸ்ரா' பந்துகளை நடுவர் கிறிஸ் பிராடு தடை செய்தார். இங்கிலாந்தில் கிரிக்கெட் நிபுணர்கள், கேமராக்கள் முன் நின்று பெளலிங் ஆக்ஷனை செய்துகாட்டி தான் குற்றமற்றவன் என நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டவர் முரளிதரன். சவாலை ஏற்றுக்கொண்டு நிபுணர்கள் முன்னால் பெளலிங் ஆக்‌ஷனில் எந்தக் குற்றமும் இல்லை என நிரூபித்தவர் முரளி.

ஆடம் கில்கிறிஸ்ட்... ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள்! - அண்டர் ஆர்ம்ஸ் - 21

இன்று தமிழகத்தின் நடராஜன் இந்திய அணிக்குள் இடம்பிடித்திருப்பதற்குப் பின்னாலும் முரளிதரன் இருக்கிறார். 2016 டிஎன்பிஎல் பர்ஃபாமென்ஸைப் பார்த்து, நடராஜனை பஞ்சாப் அணிக்குள் கொண்டுவர 3 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்துவிட்டார் வீரேந்திர ஷேவாக். ஆனால், 2017-ம் ஆண்டு முதல் சீசனிலேயே காயம் ஏற்பட நடராஜனால் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடமுடிந்தது. பஞ்சாபில் இருந்து கழற்றிவிடப்பட்டார் நடராஜன். அடுத்தாண்டுக்கான ஏலத்தில் நடராஜனின் மதிப்பு இறங்கியது. எல்லா அணிகளுமே ஏலத்தில் எடுக்கத் தயங்கிய நிலையில் நடராஜனை 40 லட்சம் ரூபாய்க்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் எடுக்கவைத்தார் முரளிதரன். இரண்டு ஆண்டுகள் அணிக்குள் வெறுமனே இருந்தவருக்கு இந்தாண்டு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புக்கு முரளிதரன் மிக முக்கியக் காரணம்.

1990 - 2000கள் வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இலங்கை விளையாடிய டெஸ்ட் போட்டிகளைப் பார்த்தால் கிட்டத்தட்ட 50 சதவிகித ஓவர்களை முரளிதரன்தான் வீசியிருப்பார். உலகின் எந்த மைதானமாக இருந்தாலும் சரி, பேட்ஸ்மேன்களை அவரின் பந்துகள் மிரளவைத்திருக்கின்றன.
முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 67 முறை 5 விக்கெட் ஹால் எடுத்திருக்கிறார் முரளிதரன். டெஸ்ட் விளையாடும் எல்லா நாடுகளுக்கு எதிராகவும் குறைந்ததது 50 விக்கெட்கள் எடுத்திருக்கிறார் முரளி. ஒருநாள் போட்டிகளில் முரளிதரனின் மிகச்சிறந்த பர்ஃபாமென்ஸ் 30 ரன்களுக்கு 7 விக்கெட்கள் எடுத்தது. இந்த சாதனை ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய இந்தியாவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதுதான் பெரும்சாதனை. டெண்டுல்கர், காம்ப்ளி, ராபின் சிங், யுவராஜ் சிங், பதானி, விஜய் தஹியா, சுனில் ஜோஷி என ஓப்பனர்கள் தொடங்கி டெய்ல் எண்டர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் எல்லோரையும் திணறடித்திருந்தார் முரளிதரன்.

முழுக்க முழுக்கத் திறமையால், உழைப்பால் முன்னேறி உலகின் நம்பர் 1 பெளலர் என்கிற சாதனையைப் படைத்திருக்கும் முரளிதரனின் வாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள பல நம்பிக்கைக் கதைகள் இருக்கின்றன. அரசியலால் அவரது சாதனைகளை அசிங்கப்படுத்தவேண்டாம்!
அடுத்த கட்டுரைக்கு