Published:Updated:

ரத்தம் தோய்ந்த ஜெர்ஸி... காயங்களை ஆற்றும் முத்தம்... புஜாரா ஏன் இந்தியாவுக்கு அவசியம்?!

புஜாரா ( Tertius Pickard )

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட பேட்ஸ்மேன் புஜாரா. ஐபிஎல் பணம், விளம்பர ஒப்பந்தம் என எதுவும் கிடையாது. வருஷத்தில் 10 முதல் 11 மாதங்கள் சர்வதேச, லீக் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் வெறும் 3-4 மாதம் மட்டுமே ஆடுபவர்.

ரத்தம் தோய்ந்த ஜெர்ஸி... காயங்களை ஆற்றும் முத்தம்... புஜாரா ஏன் இந்தியாவுக்கு அவசியம்?!

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட பேட்ஸ்மேன் புஜாரா. ஐபிஎல் பணம், விளம்பர ஒப்பந்தம் என எதுவும் கிடையாது. வருஷத்தில் 10 முதல் 11 மாதங்கள் சர்வதேச, லீக் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் வெறும் 3-4 மாதம் மட்டுமே ஆடுபவர்.

Published:Updated:
புஜாரா ( Tertius Pickard )
ரத்தம் தோய்ந்த ஜெர்ஸி... பிரிஸ்பேனில், புஜாரா, தொடரின் கடைசிப் போட்டியில் ஆடிய கடைசி நாள் ஆட்டத்தைப் பற்றி, ஒற்றைச் சொற்றொடரில் உரைக்க வேண்டுமென்றால் இப்படித்தான் விவரிக்க வேண்டும்!

எண்ணற்ற தோட்டாக்களை, உடல் முழுவதும் வாங்கியும், சரிந்து வீழாமல், தனது தேசத்தைக் காக்க முனையும் வைராக்கியத்தை யாரிடம் பார்க்க முடியும்? 'ஒரு போர்வீரரிடம்!' சரிதானே?! அதே அர்ப்பணிப்பை, வைராக்கியத்தை துளி கூடக் குறையாமல், புஜாராவிடம், பிரிஸ்பேன் போட்டியில் பார்க்க முடிந்தது.

எல்லா அணியிலும் கொண்டாடத் தவறிய வீரர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களுக்கு கிடைப்பதுபோன்ற புகழ், மீடியா வெளிச்சம், விளம்பர ஒப்பந்தம் எல்லாம் கிடைக்காது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமால் தொடர்ந்து தங்களுக்கு உண்டான பங்களிப்பை அளித்துகொண்டே வருவார்கள். ஒவ்வொரு வெற்றியிலும் அவர்களின் பங்கு இருக்கும். ஆனால், அது வெளிச்சத்துக்கே வராது அல்லது அது பெரிதாகப் பேசப்படாது. அப்படிப்பட்ட சில பேரில் ஒருவர்தான் புஜாரா.

Australia v India
Australia v India
Tertius Pickard

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட பேட்ஸ்மேன் புஜாரா. ஐபிஎல் பணம், விளம்பர ஒப்பந்தம் என எதுவும் கிடையாது. வருஷத்தில 10 முதல் 11 மாதங்கள் சர்வதேச, லீக் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் வெறும் 3-4 மாதம் மட்டுமே ஆடுபவர். மீதி நாட்கள் எல்லாம் ரஞ்சி போட்டிகளிலும், இங்கிலாந்து கவுன்ட்டி போட்டிகளிலும் ஆடிக்கொண்டே இருப்பவர்.

இவரை எதற்கு இன்னமும் இந்தியா கட்டி அழுகிறது, சுற்றி இருக்கும் பவுண்டரி லைன் எல்லாம் இவர் கண்ணுக்குத் தெரியவே தெரியாதா, அரைச்சதத்துக்கே அரைநாள் எடுத்துக் கொள்கிறார், எத்தனை பந்துகளைத்தான் சாப்பிடுவார்? இவை மட்டுமல்ல, இது தவிர்த்தும் இன்னும் பல கேள்விகள், கேலிகள், விமர்சனங்கள் எனும் பேரில் விஷ அம்புகள், இந்தத் தொடர் முழுமைக்கும் அவரைத் தாக்கிக் கொண்டேதான் இருந்தன!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையும் தாண்டி, அவர் ஆட்டமிழக்கும் தவறான ஷாட்களுக்காக தடித்த வார்த்தைகள் அவரை நோக்கிப் பாய்ந்து கொண்டே இருந்தன. அவரது ஷாட் செலக்ஷனில் ஏற்படும் சிறு பிசகால், அவரே தனது விக்கெட்டைப் பறிகொடுத்துச் செல்வது வேண்டுமெனில், அவர் மாற்றம் செய்து கொள்ள வேண்டிய இடமாக இருக்கலாம். ஆனால், அதிகப் பந்துகளை எடுத்துக் கொள்வது, ரன் எடுக்கும் விகிதத்தில் மந்தம் என அவரை மட்டம் தட்டுபவர்களில் பெரும்பாலானோர் ஐபிஎல்லை மட்டுமே அறிந்திருந்து, டெஸ்ட் போட்டிகளின் அரிச்சுவடியைக்கூட அறிந்திடாதவர்களாக இருப்பார்கள்!

#AUSvIND | Cheteshwar Pujara
#AUSvIND | Cheteshwar Pujara

"இந்தியா சார்பில் போனமுறை அதிக ரன்களை எடுத்திருந்தாரே புஜாரா, எங்கே போனார் அந்த பழைய புஜாரா?", எனத் தேடுபவர்களுக்கு, இப்போது ஒரு தகவல். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரிலும், இந்தியா சார்பாக அதிக ரன்களைக் குவித்தவர் பட்டியலில் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பன்ட்டுக்கு அடுத்தபடியாக, புஜாராதான் இருக்கிறார்! இருவருக்கும் உள்ள மொத்த ரன்களின் வேறுபாடு, வெறும் 3 ரன்கள் மட்டுமே! கடந்த சீசனில், 521 ரன்களை 1258 பந்துகளைச் சந்தித்து எடுத்து இருந்தார் புஜாரா. இந்த வருடம், அவர் சந்தித்த பந்துகளின் எண்ணிக்கை 928. அடித்த ரன்களோ 271.

"அவரது சராசரி குறைந்திருக்கிறதா?", என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில், ஆம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. சென்ற தொடரில், 74.42-ல் இருந்ததில் இருந்து, இந்த வருடம், 33.87 ஆக, கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் குறைந்திருக்கிறது. ஆனால், இந்த சீசனும் கடந்து சீசனும் ஒன்றல்ல! இந்த சீசனை இந்தியா கோலி என்னும் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றை ஆளுமையில்லாமல் சந்தித்ததுடன் இன்னும் பல முன்னணி வீரர்களின்றி களம்கண்டது. அப்படி இருக்கும் பட்சத்தில், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் இரட்டை பாரத்தைத் தூக்கிச் சுமந்ததால் அவர் அதிகப் பந்துகளைச் சந்தித்ததாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னமும் சந்தேகம் இருப்பின், அடிலெய்டில் வாங்கிய அடியை சற்றே நினைவூட்டிக் கொண்டாலே போதும், நன்றாகப் புரிய வரும். ஏன் புஜாரா டிஃபென்ஸிவ் மோடில் ஆடுகிறார் என்பது. டெஸ்ட்டில் சமயங்களில் ரன்களைவிட விக்கெட்டுகள்தான் மிக முக்கியமானவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் போட்டி பிங்க் டெஸ்ட் போட்டியாக நடைபெற முதல் இன்னிங்ஸில் மிகவும் கவனமாக 160 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்களை எடுத்து ஒரளவுக்கு மதிப்பான ஸ்கோர் எடுக்க வழிவகை செய்து கொடுத்திருப்பார் புஜாரா. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலோ, 20 ரன்களை மட்டும் எடுத்து ஏமாற்றம் தந்திருந்தார்! எனினும், மூன்றாவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும், முறையே 50 மற்றும் 77 ரன்களைச் சேர்த்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில், ஒருபக்கம் தான் நின்று கொண்டு 77 ரன்களை தன் கணக்கில் எழுதிக் கொண்டதுடன், விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதால்தான், பன்ட் மறுபக்கம் சுழன்று மாயம் காட்ட முடிந்தது! உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய இன்னிங்ஸில் ஒன்று இது! ஆனால், விஹாரி மற்றும் அஷ்வின் அன்று நிகழ்த்திக் காட்டிய அற்புதத்தாலும், பன்ட் ஆஸ்திரேலியாவை பயமுறுத்தியதிலும், புஜாராவின் அருமையான ஆட்டம் இருட்டடிப்பு செய்யப்பட, தலைப்புச் செய்தியாக இல்லாமல், அவரைப் பற்றிய செய்தி, பத்திச் செய்தியாக மாறிப் போனது!

"கையின் ஐந்து விரல்களும் ஒரே போல் இருப்பதில்லை. ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனிச்சிறப்புண்டு. அதேபோலத்தான் புஜாரா மற்றும் பன்ட், இருவர் ஆட்டமுமே கொண்டாடப்பட வேண்டியதுதான்'' எனக் கூறிய சச்சினின் வார்த்தைகள் சொல்லும் புஜாராவின் பெருமையை. ஆனால், சிட்னியைவிடவும் ஆகச்சிறந்த ஒரு செயலை பிரிஸ்பேனில் நிகழ்த்திக் காட்டினார் புஜாரா!

புஜாரா
புஜாரா
Tertius Pickard

பொதுவாக அட்டாக் செய்து விக்கெட் எடுக்கும் பெளலர்களும் உண்டு! இன்னும் ஒருவகை பௌலர்கள், ரன்களைக் குறைவாகக் கொடுப்பதன் மூலமாக, பேட்ஸ்மேனது, தலையில் அழுத்தத்தை அழுத்தி உட்கார வைத்து, அதன்பின் அவர்களைத் தவறான ஷாட் ஆட வைப்பதன் மூலமாக ஆட்டமிழக்கச் செய்வார்கள். அந்த விக்கெட் இவருக்கு விழாவிட்டாலும், அந்த பேட்ஸ்மேன் மற்றவர்களைக் குறிவைக்க முயற்சித்து ஆடும் போது, தானாகவே விக்கெட்டைப் பறி கொடுப்பார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் நடந்ததும் இதுதான்! ஸ்டார்க், ஹேசில்வுட் என ஒவ்வொரையும் இவர் தனக்குப் பந்து போட்டே களைப்படையச் செய்ததனால், கடைசி ஸ்பெல்களில் கட்டுக்கோப்பான ஓவர்களை வீச அவர்களால் முடியாது போக, வெற்றி இந்தியாவின் பக்கம் வந்தது.

ஷாட் பால்களால் இவரைக் காலி செய்ய முடியாதென முடிவு செய்த ஆஸ்திரேலியா, அடுத்ததாக இவரை காயப்படுத்த கையிலெடுத்த அஸ்திரம், பவுன்சர்கள்! 5-வது நாள் மைதானம் பல இடங்களில் விரிசல் ஏற்பட அதை பயன்படுத்தி பவுன்சர்கள் வீசி விக்கெட்டை எப்படியாவது எடுத்து விட வேண்டுமென்ற நோக்கில், அவரைக் குறிவைக்கத் தொடங்கினர்! பாய்ந்து வரும் பவுன்சர்கள், அவரது கை, முழங்கை, விலா எலும்புகள் என இடைவெளி இல்லாமல், அடுத்தடுத்துத் தாக்கத் தொடங்கியது! கசையடிகளாகத் தாக்கிய பந்துகளுக்கு, "என்னை வேண்டுமென்றால் உங்களது பந்துகள் தாக்கலாம், துளையிடத் துடிக்கலாம், ஆனால் நான் இருக்கும் வரை, எங்களது கோட்டையை உங்களால் தகர்க்க முடியாது!" என்று சொல்லாமல் சொன்னார், போர்ப்படைத் தளபதி போல!

அவரது விரலை உடைக்க முடிந்த ஆஸ்திரேலியாவால் அவருக்குள் ததும்பி வழிந்த மனோ பலத்தை உடைக்கவே முடியவில்லை. 140 கிமீ வேகத்தில் வரும் பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்புவது ஒருவகை சாதனையெனில், அதனை எதிர்கொண்டு உடலில் வாங்கிக் கொள்வது முன்பு சொன்னதை விடவும், சுலபமான காரியமில்லை. விக்கெட் எடுக்க முடியவில்லை என்ற வெறியில், ஏதோ குத்துச்சண்டையில் கொடுப்பதைப் போல, பன்ச்களை மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருந்தனர் பௌலர்கள்! 26 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸின் பந்து அவரது விரலைக் கிட்டத்தட்ட உடைத்து விட்டது. ஆனாலும் அதன் பின்பும் அவரது ஆட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது, இடைவெளியின்றி!

Pujara
Pujara
Tertius Pickard

இறந்தாலும் என் கொடியின் பிடி தளராது என தேசக் கொடியைத் தாங்கிப் பிடித்த கொடிகாத்த குமரன்போல, வலிகளைத் தாங்கி இந்தியாவின் பக்கம் வெற்றியைச் சேர்த்திருக்கிறார் புஜாரா!

மேட்ச் வின்னர்களாக, ஆட்டநாயகர்களாக ரிஷப் பன்ட், கில் போன்றோர் கொண்டாடப்பட்டாலும், உண்மையில் போட்டியின் போக்கை மாற்றும் தவஞானியாகவே இருந்தார் புஜாரா! எனினும், பன்ட், சுந்தர் உள்ளிட்ட மற்ற அதிரடிப்படை வீரர்கள் கொண்டாடப்பட்ட அளவுக்கு, அஹிம்சையால் புஜாரா தொடுத்த போர் பேசப்படவில்லை!

பிரிஸ்பேன் போட்டி முடிந்ததும், "'அப்பா நீ வீட்டுக்கு வந்ததும் உனக்கு உடலில் எங்கெல்லாம் அடிபட்டதோ அங்கே முத்தம் கொடுக்கிறேன்' என்று என் மகள் சொல்லியிருக்கிறாள். முத்தம் காயங்களை ஆற்றும், வலியைப் போக்கும் என என் மகளுக்குத் தெரிந்திருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார் புஜாரா.

அன்பு மகளின் முத்தத்தைத் தவிர வேறென்ன மருந்து வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism