Published:Updated:

கோலியின் பொற்காலம் முடிந்துவிட்டதா... 50 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது ஏன்?

விராட் கோலி ( Jon Super )

அவுட் ஸ்விங்கர்களை சமாளிக்க கோலிக்கு சச்சின் கற்றுத்தந்த டிப்ஸ்தான் 'ஃபார்வர்ட் பிரஸ்' முறை. ஸ்பின்னர்களை முன்வந்து சந்திப்பதைப் போல், வேகப்பந்து வீச்சாளர்களையும் சந்திக்கும் முறை!

கோலியின் பொற்காலம் முடிந்துவிட்டதா... 50 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது ஏன்?

அவுட் ஸ்விங்கர்களை சமாளிக்க கோலிக்கு சச்சின் கற்றுத்தந்த டிப்ஸ்தான் 'ஃபார்வர்ட் பிரஸ்' முறை. ஸ்பின்னர்களை முன்வந்து சந்திப்பதைப் போல், வேகப்பந்து வீச்சாளர்களையும் சந்திக்கும் முறை!

Published:Updated:
விராட் கோலி ( Jon Super )

மூன்றிலக்க எண்ணுக்கான காத்திருப்பு, மாதங்களைத் தாண்டி வருடக்கணக்கில் நீண்டு கொண்டிருக்க, 50-வது இன்னிங்ஸ் முடிந்தும், சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார் ரன்மெஷின் விராட் கோலி. எந்த ஆண்டர்சனுக்கு, 2018-ல் ஆட்டம் காட்டினோரோ, அதே ஆண்டர்சனிடமே, அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகிறார் கோலி.

ஒரு காலத்தில் கோலியின் சதங்கள் கிரிக்கெட்டில் நியூ நார்மல்' எனச் சொல்லப்படுமளவு, 'பொழுதொரு அரைசதம், நாளொரு சதம்' என்று தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருந்தது கோலியின் கிரிக்கெட் பயணம். நூறாவது சதத்தை சுலபமாக எட்டுவார், சச்சினின் சாதனையைத் தாண்டுவதுடன், இனி எவரும் நெருங்க முடியாத சாதனைகளை, சுலபமாகப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலியின் கரியரில், மிகப்பெரிய இடைவெளியாக, அவருடைய சென்சுரி செலிபரேஷனுக்காக, 50 இன்னிங்ஸ்களாய் தவமிருக்கின்றனர் ரசிகர்கள்.

கடைசியாக, கோலி சதமடித்தது 2019 நவம்பரில் நடைபெற்ற, வங்கதேசத்துக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில். அப்போட்டியில் அடித்த 136 ரன்கள் மூலமாக, தனது 70-வது சதத்தை பூர்த்தி செய்திருந்தார். ஆனால், அந்தத் தொடருக்குப்பின், பத்து டெஸ்ட் போட்டிகள் (18 இன்னிங்ஸ்கள்), 15 ஒருநாள் போட்டிகள், 17 டி20 போட்டிகளில் ஆடிவிட்டார் விராட் கோலி. அதில் 17 அரைசதங்களும் வந்து சேர்ந்து விட்டன. எனினும், அந்த அரை சதங்கள், சதங்களாக மாற்றப்படவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விமர்சனங்களுக்கு, இதுமட்டுமே காரணமல்ல. காயத்துக்கு உப்பிடுவதைப் போல், நவம்பர் 2019-க்குப் பிறகு டெஸ்ட்டில் கோலியின் சராசரி வெறும் 23 ஆக மட்டுமே இருக்கிறது. இதுதான், அவரது பொற்காலம் முடிவுக்கு வந்து விட்டதோ என்ற தோற்றப் பிழையையும் ஏற்படுத்துகின்றது. இவ்வளவுக்கும், இதே காலகட்டத்தில், கோலியின் ஒருநாள் மற்றும் டி20 சராசரிகள், முறையே 43.26 மற்றும் 64.45 என இன்னமும் அசாத்தியமானதாகத்தான் இருக்கின்றன.

விராட் கோலி
விராட் கோலி
Jon Super

எனினும், டெஸ்ட்டைப் பொறுத்தவரை, சதமற்ற இந்த 21 மாதங்களில், கோலியின் ஆட்டம் கொஞ்சம் தடுமாறும் விதமாகவே இருந்து வருகிறது. வங்கதேசத்துடனான போட்டிக்குப்பின் வந்த நியூசிலாந்து தொடரில், நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்திருந்தார். கொரோனாவால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பின், கடந்த டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 74 ரன்களைச் சேர்த்திருந்தார் கோலி. அன்றைய தினம் அவரது ஆட்டம் மிகச் சிறப்பானதாக, நேர்த்தியாக நகர்ந்தது. எனினும் 'சதத்துக்காகக் காத்திருங்கள்' என்பது போல், ரஹானேவினால், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸோ, இந்தியா மறக்க நினைப்பதாய் முடிந்து போனது. 2015-ஐ தொடர்ந்து, 2020, சதமில்லாத வருடமாக, கோலிக்கு அமைந்தது.

இதைத் தொடர்ந்து வந்த, இங்கிலாந்து தொடரிலாவது சதம் வரும் என நினைக்க அப்போதும் அது நடக்கவில்லை. சரி, காத்திருந்தது காத்திருந்தாயிற்று, உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எனும் பெரிய மேடையில், முக்கிய தருணத்தில் கோலி அதை நிறைவேற்றிக் காட்டப் போகிறார், காலத்திற்கும் கொண்டாடப்படும் சதமாக அது இருக்கப் போகிறது என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதோ இங்கிலாந்து தொடரிலும், அதேதான் நிலைமை.

இன்னமும் வெகுகாலம், கோலியின் சதத்துக்காகக் காத்திருக்க வேண்டுமோ என்ற சந்தேகத்தை கிரிக்கெட் வல்லுனர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது நிகழ்காலம். அதற்குக் காரணம், கோலி ஆட்டமிழக்கும் முறைதான். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும், நடந்துவரும் இங்கிலாந்து தொடரிலும், கோலி ஆட்டமிழந்து வரும் விதமே, பழைய பூதங்களை வெளியே கிளப்பி விட்டுள்ளது. ஸ்விங் பந்துகளைச் சந்திக்கத் திணறி, அவர் ஆட்டமிழந்து வரும் விதம், 2014-ம் ஆண்டு நினைவலைகளை மேலெழும்பச் செய்துள்ளது.

அந்த ஆண்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, பத்து இன்னிங்ஸில், வெறும் 134 ரன்களைச் சேர்த்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கோலி‌. அத்தொடரில், ஆன்டர்சன், கோலியின் விக்கெட்டை நான்கு முறை வீழ்த்தி இருந்தார். அதுவும் அவுட் ஸ்விங்கர்கள் மூலமாக. அந்தத் தோல்வியிலிருந்து அவரை மீட்டெடுத்தது, சச்சினின் அறிவுரை. இன்ஸ்விங்கர்களை அதிகம் எதிர்பார்த்து, அதற்கேற்றாற் போல், ஸ்டான்ஸ் பாயின்ட் திசையை நோக்கி இல்லாமல், கவர் திசையை நோக்கி இருக்கும்படி கால்களை வைத்துக் கொண்டிருந்தார் கோலி. இதனால்தான் அவுட் ஸ்விங்கர்கள் வீசப்படும் போது தான் திணறுவதையும் புரிந்து வைத்திருந்தார். அதைச் சமாளிக்க சச்சின் கற்றுத்தந்த டிப்ஸ்தான், 'ஃபார்வர்ட் பிரஸ்' முறை.

விராட் கோலி
விராட் கோலி
Jon Super
ஸ்பின்னர்களை முன்வந்து சந்திப்பதைப் போல், வேகப்பந்து வீச்சாளர்களையும் சந்திக்கும் முறை. அதோடு, ஸ்டம்ப்பிலிருந்து 1.87 மீட்டர் தொலைவில் நின்றதை மாற்றி அதனை 2.2 மீட்டராக மாற்றினார். இது, கோலியின் ஆட்டத்திறனில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்து, சாதிக்க வைத்தது.

ஆனால், நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், நடப்புத் தொடரிலும், அதே ஸ்விங்கர் பலவீனத்தை வைத்தேதான், கோலிக்குக் குறி வைக்கப்படுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், முதல் இன்னிங்சில், ஜேமிசனைக் கொண்டு, இன்ஸ்விங்கரால் கோலியைச் சுருட்டினார் வில்லியம்சன். அதனால், இரண்டாவது இன்னிங்ஸில், கோலி, இன்ஸ்விங்கர்தான் மறுபடியும் தனக்கான பொறியாக இருக்குமென்று அதிலேயே கவனமாய் இருக்க, அந்த முறை அவுட் ஸ்விங்கரால், அதிர்ச்சி தந்தது நியூசிலாந்து. இதுதான், கோலியின் ஸ்விங் வீக்னெஸை மறுபடியும் உயிர்பெறச் செய்து விட்டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டது. காரணம், ஆட்டமிழந்த அந்த பந்தில், அவரது கால் கவரை நோக்கி இருந்ததுதான். எப்போதோ சரி செய்த தவறை, கோலி மறுபடியும் செய்திருந்ததுதான் அப்போது விவாதப் பொருளாய் இருந்தது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலும், கோலியின் அதே பலவீனம்தான், அவரைத் திணறடிக்கிறது.

ஃபார்வேர்டு பிரஸால், தனது அவுட் ஸ்விங் பிரச்னையை அவர் சமாளித்த போதும், அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்ட பந்துகளில் அதிகமாக ஆட்டமிழந்தார் கோலி. இதற்குக் காரணம், ஸ்விங்கர்கள் பிரச்னையை சமாளிக்க, சற்று முன்வந்து ஆடும்போது, லைனைக் கணிக்க முடியாததால், சில தவறான பந்துகளைத் தொட்டு ஆட்டமிழந்தார். இதை பௌலர்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்ற, இதையும் சமாளித்தார் கோலி. வைடு லைனில் வரும் பந்துகளை, ரன்களாக மாற்றி, ஆஃப் சைடில் ரன் வேட்டையில் ஈடுபடத் தொடங்கி, பௌலர்களைப் பின்வாங்க வைத்தார்.

விராட் கோலி
விராட் கோலி
Jon Super

ஒரு காலகட்டத்தில், புல் ஷாட்டும் கோலியின் இன்னொரு வீக்னஸாக இருந்தது. அந்த ஷாட்டை சரியாக ஆடாமல் ஆட்டமிழந்து கொண்டிருந்தார். பின், பேட்டோடு சேர்த்து உடலையே முழுமையாகச் சுழற்றி அதனைச் சரியாக ஆடத் தொடங்கினார்.

கோலியின் கரியரில் போல்டான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. காரணம், பேட்டுக்கும் பேடுக்கும் இடையில், அதிக இடைவெளியில்லாமல் அவர் பார்த்துக் கொண்டதுதான். ஸ்ட்ரெய்ட் டெலிவரியில் கவர் டிரைவுக்குப் போகாமல், மிட் ஆனிலோ, மிட் ஆஃபிலோ அனுப்பி விடுவார். ஆனால், ஒரு காலகட்டத்தில், ஸ்டம்பைக் குறி வைக்கும் பந்துகளை வீசியும், கோலிக்குக் குறிவைக்கப்பட்டது. இதையும் அவர் சமாளித்து ஆட பின், லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக விக்கெட்டை வாரிக் கொடுத்து வெளியேறும், பலவீனம் அவருக்கெதிராக கையிலெடுக்கப்பட்டது.

இப்படி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஏதோ ஒருமுறையில் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான புதிய உத்திகளுடன் பௌலர்கள் புறப்பட்டு வருவதும், அது ஒரு சில சமயம் அவர்களுக்குக் கை கொடுக்க, அதன்பின், அதைச் சமாளிக்கும் எதிர் உத்தியோடு கோலி கிளம்பி வந்து, அவர்களை ஒரு கை பார்ப்பதும் நடந்துகொண்டிருந்தது. ஆனால், இப்போது அந்த டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டை விளையாடமுடியாமல் தவிக்கிறார் கிங் கோலி.

முதல் டெஸ்ட்டில் ஆண்டர்சன் வீசி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே 4-வது ஸ்டெம்ப் லைனில் வந்த பந்தை ஆட முயன்று கீப்பர் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார் கோலி. இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 42 மற்றும் 20 என ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தாலும் அதன்பின் 4-வது ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை ஆட முயன்று, ஆட்டமிழந்து சென்றார்.

விராட் கோலி அவுட்
விராட் கோலி அவுட்
Jon Super

மூன்றாவது டெஸ்ட்டிலாவது பெரிய இன்னிங்ஸ் ஆடுவார், சதம் கைகூடும் என நினைத்தவர்களுக்கு மற்றும் ஒருமுறை, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எந்த ஆண்டர்சனால் ஆட்டமிழந்து விடக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ, அவர்கள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, மீண்டும் 4-வது ஸ்டம்ப் லைனில் வந்த ஃபுல்லர் பந்தை, கவர் டிரைவ் ஆடியே தீருவேன் என்று வலுக்கட்டாயமாக ஷாட் ஆட முயல, பந்து மற்றும் ஒருமுறை பட்லரிடம் தஞ்சம் புகுந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இங்கிலாந்து மைதானங்களில் பேட்டிங் ஆடும்போது, உங்கள் ஈகோவை ஒதுக்கிவைத்துவிட்டு விளையாட வேண்டும் என பத்திரிக்கையாளர்களிடம் கூறியவர், அதே ஈகோவினால் மற்றும் ஒருமுறை ஆட்டமிழந்து இருக்கிறார். மொத்தத்தில் கோலிக்கு எதிரி, கோலியாகவே இருக்கிறார். அவரின் கவர் டிரைவ் ஈகோ, அவரைத் தொடர்ந்து, அந்த ஷாட்டுக்குச் செல்லுமாறு தூண்டுகிறது. ஆனால் அந்த ஷாட் ஆடுவதற்கு ஏற்றாற்போல், தனது கால்களை Long stride ஆக வைக்காமலும், பேக் ஃபுட் பாயின்ட்டை நோக்கி இல்லாமல் கவர் திசையை நோக்கி இருக்குமாறும் ஆடி வருவதால், அவரது ஆட்டம், தொடர்ந்து ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

ஆஃப் ஸ்டம்ப் லைனில் வரும் பந்துகளுக்கு 2014-ம் ஆண்டு, 6.50 என மோசமான சராசரியை வைத்திருந்தவர், 2018-ம் ஆண்டு, யாரும் எதிர்பாராத வண்ணம் ஆடி, தனது சராசரியை, 159 எனக் கொண்டு வந்து வீழ்ந்த இடத்திலேயே வெகுண்டு எழுந்தார். ஆனால், 2021-ம் ஆண்டு, மீண்டும் அவரது ஆஃப் ஸ்டம்ப் சராசரி 9.50 என வந்து நின்று கோலி கரியரின் ஃபார்மையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

டெக்னிக்கல் தவறோடு, சதத்தை நெருங்க வேண்டுமென்ற மனதளவிலான பதற்றமும், 71-வது சதத்துக்கும் அவருக்கும் நடுவே நிற்கிறது. உண்மையில், 'ஆல் டைம் கிரேட்' பிளேயர்கள் எல்லோருக்குமே பலவீனங்கள் இருக்கும். அதைச் சரிசெய்துதான், ஒவ்வொரு சரிவிலிருந்தும் மீண்டு வருவார்கள். இதையே பலமுறை கோலியும் சந்தித்துள்ளார்.

சரித்திரம் திரும்பும் என்பதைப் போல், அதை மறுபடியும் கோலி நிகழ்த்தி, இன்னொரு ரவுண்ட் வந்தால், பல ரெக்கார்டுகள் உடைக்கப்படலாம். கோலியின் இன்னொரு அப்டேட்டட் வெர்ஷனைக் காணலாம். ஆனால் அது எப்போது உடைக்கப்படும், பழைய கோலியாக அவர் எப்போது திரும்பி வருவார் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

https://www.vikatan.com/foundersday-web#