Published:Updated:

ரவிச்சந்திரன் அஷ்வின் - நவீன கிரிக்கெட்டுக்கு இந்த தனி ஒருவன் ஏன் முக்கியம்?! #HappyBirthdayAshwin

R.Ashwin

விளையாட்டு, 'நீ நீயாக இரு' என்பதைக் கற்றுக்கொடுக்கவேண்டும். ஆனால், இன்றைய கிரிக்கெட்டோ எல்லோரையும் மாற்ற நினைக்கிறது. Fairplay, Spirit Of Cricket, Gentleman's Game போன்ற வார்த்தைகள் புழங்கும் காலகட்டத்தில், கிரிகெட்டுக்கு அஷ்வின் போன்ற ஒருவரின் தேவை அவசியமாகிறது! ஏன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அஷ்வின் மீண்டும் இந்திய ஷார்ட் ஃபார்மட் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகப் போகிறது.

இந்த இரு அறிவிப்புகளும் கடந்த வாரம், சில மணி நேர இடைவெளியில் வெளிவந்தன. ஆனால், துளியும் சம்பந்தமே இல்லாத இந்த இரு அறிவிப்புகளும் ஒரு நேர்கோட்டில் நின்று எனக்கு மட்டும் முரணாய் நிற்கிறது!

முதலாவது அறிவிப்பு சந்தோஷத்தையும் இரண்டாவது, வருத்தத்தையும் ஏற்படுத்தியது. 27 வருட வாழ்க்கையில் 18 வருடங்கள் நான் கொண்டாடிய கங்குலி வெளியிட்ட அந்த அறிவுப்பு வருத்தமளிக்க காரணம் இருக்கிறது. அந்தக் காரணம்தான், முதல் அறிவிப்பால் அளவுகடந்த சந்தோஷம் ஏற்படவும் காரணம்! கங்குலி மீதான ஏமாற்றமே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அஷ்வின் மீது ஏற்பட்ட அபிமானத்துக்குக் காரணம்.

குழப்பமாக இருக்கிறதா! கொஞ்சம் குழப்பத்தான் போகிறேன். அஷ்வின் பற்றிய இந்தக் கட்டுரையில் அஷ்வினைத் தவிர்த்து நிறைய விஷயங்கள் பேசப் போகிறேன். கங்குலி பற்றி, கங்குலி கொடுத்த ஏமாற்றம் பற்றி, ஃபேர்பிளே, ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிக்கொண்டிருக்கும் விஷயங்கள் பற்றி, இவற்றின் மூலம் கிரிக்கெட் எப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி, இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அஷ்வின் எங்கே தனித்து நிற்கிறார் என்பதைப் பற்றிப் பேசப்போகிறேன். குழப்பவும் போகிறேன்.

இது ஒரு பத்திரிகையாளனின் பார்வையாகவும் தெரியலாம். இல்லை, ஒரு கிரிக்கெட் ரசிகனின் பிதற்றலாகவும் தெரியலாம். அதை முடிவு செய்யப்போவதும்கூட நானோ, என் எழுத்தோ அல்ல. கிரிக்கெட் மீதான உங்கள் பார்வை தான். ஏனெனில், அதுதான் நான் கவலை கொண்டிருக்கும் விஷயம். அதுதான் என் பேசுபொருள்!

முன்குறிப்பு 1 : இந்தக் கட்டுரை படிப்பதற்கு, ஜடேஜா ஆறேழு ஓவர்கள் பந்துவீச எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகலாம்!
முன்குறிப்பு 2 : இது அஷ்வின் பற்றிய கட்டுரைதான். ஆனால், அஷ்வின் பற்றிப் படிக்க கிளைமாக்ஸ் வரை காத்திருக்க நேரிடும்.
முன்குறிப்பு 3 : இங்கு நாம் அஷ்வின் சிறந்த ஸ்பின்னரா இல்லையா என்பது பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை. நாம் ஏன் மஞ்ரேக்கர் ஆகவேண்டும்!
முன்குறிப்பு 4: இந்தியாவில் கிரிக்கெட் என்பது IPL என்பதாகப் பார்க்கப்படுவதால், IPL பற்றி நிறைய விவாதிக்கவேண்டியிருக்கிறது.

கங்குலி ஏன் ஏமாற்றினார்?!

நமக்கு ஒருவரை ஏன் பிடிக்கிறது, எப்படிப் பிடிக்கிறது? அதற்கு அந்த குறிப்பிட்ட நபரின் குணங்கள் மட்டும் காரணமாக இருக்கப்போவதில்லை. நம் குணங்கள், நாம் வளர்ந்த சூழ்நிலை என எல்லாமே காரணமாகிறது. வெயிலின் கரம் பிடித்து நடந்தாலும் காரமாய்ச் சாப்பிடும் ஆந்திர மக்கள் ரசிக்கும் டோலிவுட் சினிமாக்களில் ரத்தம் தெறிப்பதும், மலையின் ஊடே பொழிந்துகொண்டே இருக்கும் மழையை ரசிக்கும் கடவுளின் தேச மக்கள் மல்லுவுட்டின் கலைப் படைப்பை ரசிப்பதும் சூழ்நிலை சார்ந்ததே.

கங்குலி மீதான என் நேசமும் அப்படித்தான். அவரது ஆஃப் சைட் ஷாட்களையோ, டவுன் தி கிரவுண்ட் சிக்ஸர்களையோ பார்த்து வந்ததல்ல அவர்மீதான காதல்.

தன் தந்தை எப்படி 15 வயதிலிருந்து உழைத்து குடும்பத்தின் சூழ்நிலையை மாற்றினார், எப்படி இன்று நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார் என்ற கதையை 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தன் அம்மாவின் வாயிலாகக் கேட்டு, அப்பாவின் மீது மலையென மரியாதை கொண்டிருக்கும் ஒரு 8 வயது சிறுவனுக்குக் கங்குலியைப் பிடிக்காமல் யாரைப் பிடிக்கும்!

Sourav Ganguly at the Lord's
Sourav Ganguly at the Lord's

உலகம் சொன்ன கங்குலியின் கதைகளும், உலகக் கோப்பை செயல்பாடும், லார்ட்ஸ் பால்கனியில் நடந்த வரலாற்றுச் சம்பவம், அதற்குப் பின்னால் இருந்த ஃபிளின்டாஃபின் கதையும் கங்குலி எனும் பிம்பத்தை என்னுள் மலையளவு வளர்த்தெடுத்தது. முழுக்க முழுக்க கங்குலி எனும் ஆளுமையின்மீது, அவர் தலைமையின்மீது, அவர் திமிர் மீது, அந்தத் திமிர் கொடுத்த நம்பிக்கையின்மீது வந்த காதல் அது! பத்திரிகையாளனாகி, அவரிடம் பேட்டி கண்ட போதும்கூட ரசிகனாகவே நின்றிருந்தேன். அந்த 3 நிமிடங்களை என்னால் இன்று மீண்டும் ரீவைண்ட் செய்ய முடியாது. அப்போதுதான் மெய்மறத்தல் என்பது யாதென்று புரிந்தது!

இவையெல்லாம் சில மாதங்கள் முன்பு வரைதான். எப்போது கங்குலி பிசிசிஐ தலைவர் ஆனாரோ, அப்போதே அந்த பிம்பம் உடையத் தொடங்கிவிட்டது. இவர்தான் தலைவர். ஆனால், ஒரு உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதிலிருந்து, சலுகைகள் அறிவிப்பதுவரை அனைத்தையும் செய்வது ‘கௌரவ’ செயலாளர் ஜெய் ஷா. அனைத்திலும் அவர் கையெழுத்து.

ஆளும் கட்சித் தலைவரின் மகன் என்பதாலோ என்னவோ எங்கும் ஜெய் ஷா ராஜ்ஜியம்தான். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் CEC மீட்டிங்கில் இந்தியாவின் பிரதிநிதியும் ஜெய் ஷா தான். இப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் அவர்தான். அவர் பட்டத்தில் இருக்கும் கௌரவத்தை மறந்துவிட்டு, எல்லாப் பொறுப்புகளையும் அவரிடமே கொடுத்திருக்கிறார்கள்.

2002 சாம்பியன்ஸ் டிராபியை ஜெயசூர்யாவோடு சேர்ந்து கங்குலி தூக்கியபோது அவ்வளவு பெருமையாக இருந்தது. ஆனால், ஐபிஎல் கோப்பையை ஜெய் ஷா உடன் சேர்ந்து கொடுத்தபோது, சௌரவ் என்ற பிம்பம் சுக்குநூறாக உடைபட்டது. இதில் என்ன கொடுமையெனில், அவர் கோப்பையில் மட்டும் அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. இந்திய கிரிக்கெட்டில் நேரடியாக அரசியல் நுழையவும் இடம் கொடுத்திருக்கிறார்.

இதற்கு முன், BCCI தலைவர்கள் மட்டும்தான் IPL கோப்பையை வழங்குவார்கள்
இதற்கு முன், BCCI தலைவர்கள் மட்டும்தான் IPL கோப்பையை வழங்குவார்கள்

கங்குலி பிசிசிஐ தலைவர் ஆவதற்கு முன்பே ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்துக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லியின் பெயர் வைக்கப்பட்டு, அது விமர்சனம் ஆனது. அதன் பின்விளைவுகளை யோசிக்காமல், கங்குலி தலைவராக இருக்கும்போதே அஹமதாபாத்தின் மொடேரா மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயரும் வைக்கப்படுகிறது. மைதானத்தின் இருக்கைகளுக்கு காவி நிறமும் பூசப்படுகிறது. Literally காவி நிறம்தான் பூசப்படுகிறது.

இதெல்லாம் மாநில கிரிக்கெட் சங்கங்களின் விஷயம் என்று வைத்துக்கொண்டாலும், அங்கும் கங்குலி மீது அதிருப்தி இல்லாமல் இல்லை. 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஈடன் கார்டன் மைதானத்தில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் படத்தை அகற்றவேண்டும் என்று மைதானத்துக்கு வெளியே போராட்டம் நடத்துகின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர். அதைப் பற்றிய அன்றைய பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலியிடம் கேட்டால், “விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்கிறார். IPL வரலாற்றில் அதிக பாகிஸ்தான் வீரர்களைக் கொண்டிருந்த அணியின் கேப்டன், ஒரு பாகிஸ்தானியரைப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகக் கொண்டிருந்த அணியின் ஐகான் வீரர், ‘கிரிக்கெட்டுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை’ என்றுதானே சொல்லியிருக்கவேண்டும்!

சரி, கிரிக்கெட்டிலாவது ஏதும் புரட்சி நடக்குமா என்று பார்த்தால், ரஞ்சி கோப்பையை டீலில் விட்டிருக்கிறார்கள். 38 அணிகள் ஆடும் முதல்தர தொடரை கொரோனா காலத்தில் நடத்துவது கடினம்தான். ஆனால், பெண்கள் IPL?

2020 பெண்கள் IPL தொடரை கடனுக்கென்று (மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தும்கூட வெறும் நான்கே போட்டிகள்தான்) நடத்தி முடித்திருக்கிறார்கள். இது நான் பார்த்த கங்குலி அல்லவே. கொரோனா கட்டத்தில் இவ்வளவே முடியுமென்று சொல்வதற்கு, கேப்டனாக புரட்சிகள் புகுத்திய கங்குலி எதற்கு? அப்போதே திறம்பட செயல்பட்டவரிடம் இப்போது எதிர்பார்ப்புகள் அதிகமாகத்தானே இருக்கும். அங்குதான் நான் பார்த்த வங்க சிங்கம் காணாமல் போகிறது.

Sourav Ganguly with Jay Shah
Sourav Ganguly with Jay Shah

அந்த பிம்பம் எதனால் கட்டி எழுப்பப்பட்டதோ அந்தக் காரணங்களெல்லாம் இப்போது பொய்த்துக்கொண்டிருக்கும்போது உடையத்தானே செய்யும். அரசியல்வாதிகளை மீறி எதுவும் செய்ய முடியாது என்று சொல்லலாம். உண்மைதான். அப்படியெனில், அவர் ஏன் அங்கு அமர்ந்திருக்கவேண்டும். டிராவிட் போல் பயிற்சியாளராகியிருக்கலாம், வர்ணனையாளர் ஆகியிருக்கலாம், இல்லை ஒதுங்கியிருக்கலாம்.

எனக்குத் தெரிந்ததெல்லாம், எனக்குப் பிடித்ததெல்லாம் எதற்கும் அஞ்சாத, திமிர் கொண்ட வேங்கையான கங்குலிதான். எனக்கு அவர் பிடிக்கக் காரணம் அதுதான். வேங்கை ஒன்று குகையை விட்டு காட்டில் திரிகிறதென்றால், அது வேட்டையாடும் என்றுதானே எதிர்பார்ப்போம். மாறாக, இந்த வேங்கை வேடிக்கையல்லவா பார்க்கிறது!

தன் இரண்டாவது இன்னிங்ஸில், டவுன் தி கிரவுண்ட் இறங்கி வந்து, நான் முதல் இன்னிங்ஸில் கட்டிவைத்த பிம்பத்தை உடைத்துவிட்டார் தாதா!

நான் ஏன் நீயாக வேண்டும்?

உண்மையில் மேலே சொன்ன விஷயம் தவிர்க்க முடியாத ஒன்றுதான். இந்திய கிரிக்கெட்டும் அரசியிலும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்ததுதான். ஆனால், அதில் என் நாயகனும் மாட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார் என்பதால்தான், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த இடத்தில் கங்குலிக்குப் பதில் வேறு யாரேனும் இருந்திருந்தால்கூட எனக்கு இவ்வளவு ஆதங்கம் இருந்திருக்காது.

ஆனால், இதைவிடவெல்லாம் பெரிய ஏமாற்றம், சமீப காலமாக கிரிக்கெட் சென்றுகொண்டிருக்கும் போக்குதான். இங்கே ஃபேர் பிளே, ஸ்பிரிட் ஆஃப் தி கேம் போன்ற விஷயங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், வீரர்கள் ஜென்டில்மேன்களாக தங்களைக் காட்டிக்கொள்ள நினைப்பதும், இந்த அற்புதமான விளையாட்டில் நெகட்டிவான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு விளையாட்டு, இளம் தலைமுறைக்கு என்னவெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டுமோ, அதை விட்டுவிட்டு ஒரு போலித்தன்மையைக் காட்டிக்கொண்டிருக்கிறது இன்றைய கிரிக்கெட்!

கொண்டாட்டங்களுக்கு அளவீடு வைப்பது எவ்வளவு கொடுமை!
கொண்டாட்டங்களுக்கு அளவீடு வைப்பது எவ்வளவு கொடுமை!

ஆடுகளம் - வீட்டிலேயோ, வகுப்பறையிலேயோ கற்றுக்கொடுக்கப்படாத விஷயங்களையும் கற்றுக்கொடுக்கும். போராடச் சொல்லிக்கொடுக்கும். தோல்விகள் சகஜம் என்று சொல்லிக்கொடுக்கும். தோற்பவரும் போராளி என்று தட்டிக்கொடுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ‘நீ நீயாக இருக்கவேண்டும்’ என்பதைப் பதியவைக்கும். ஆனால், இன்று உலகம் எதிர்பார்ப்பதோ ஜென்டில்மேன்களை! ஆர்ப்பரிப்பு இல்லாத, அமைதியான, வெற்றியைக் கொண்டாடாத, தோல்விக்கு உடைந்திடாத, ரௌத்திரம் பழகிடாத ஒருவரையே ஆடுகளத்திலும் எதிர்பார்க்கிறது. அப்படி இருப்பவர்களைத்தான் கொண்டாடுகிறது. அப்படித்தான் எல்லோரும் இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறது இவ்வுலகம். அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம்.

''வில்லியம்சனை ஏன் பிடிக்கும்?''

''அவரு நல்லவருங்க.''

''கோலியை ஏன் பிடிக்கவில்லை?''

''அவரு தோனி மாதிரி இல்லைங்க.''

முன்பெல்லாம் கிரிக்கெட் கார்டுகளில் ரன், சராசரி, விக்கெட் அடிப்படையில்தான் விளையாடிக்கொண்டிப்போம். இப்போது அதில் கேரக்டர் சர்டிஃபிகேட் சேர்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Conduct
கேன் வில்லியம்சன் = A+, விராட் கோலி = C-

உன் ஆசைகளை வெளிப்படுத்தாமல் உலகம் எதிர்பார்ப்பது போல் வாழவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுக்க நம் வகுப்பறைகளும் சொந்தங்களும் போதாதா என்ன!

இன்று தோனியையும் வில்லியம்சனையும் ஜென்டில்மேன்கள் ஆக்கியிருக்கும் இந்த உலகம், அவர்களைப் போலவே மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறது. அடுத்த தலைமுறை கோலியைப் பார்த்து கெட்டுப் போகலாம் என்று பயப்படுகிறது. உண்மையில் தோனியிடமிருந்து உலகம் கற்றுக்கொள்ளவேண்டியது அவருடைய கூலான அணுகுமுறையையும், ஆர்ப்பட்டமில்லாத குணாதிசியத்தையும் மட்டும்தானா. அதைவிட முக்கியமான விஷயத்தை நாம் ஆராய மறந்தது ஏன்? தோனி, தோனியாகவே இருந்ததை நாம் ஏன் உணர்ந்துகொள்ளவில்லை!!

இவர்கள் சிறந்த ரோல் மாடல்கள். ஆனால், இவர்களைப் போலவே எல்லோரும் இருந்திட முடியாது!
இவர்கள் சிறந்த ரோல் மாடல்கள். ஆனால், இவர்களைப் போலவே எல்லோரும் இருந்திட முடியாது!

21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முகமே மாறத் தொடங்கியது. கங்குலி அந்த முகத்தை மாற்றினார். இந்திய அணி திருப்பி அடிக்க, திருப்பிப் பேச, பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சச்சின், டிராவிட் போன்ற சீனியர்கள் தவிர்த்து எல்லோரும் எதிராளிகள் முன் கர்ஜிக்கத் தொடங்கினார்கள். கங்குலி போன பிறகும்கூட அது தொடர்ந்தது. இன்னும் தொடர்கிறது. ஆனால், தோனி கடைசி வரை தோனியாகவே இருந்தார்.

கங்குலி, யுவராஜ், கம்பீர் என எக்ஸ்பிரஸிவான வீரர்களுக்கு மத்தியில் தோனி அவர்களைப் போல் இருக்க நினைக்கவில்லை. தோனியாக மட்டுமே தான் இருந்தார். கொண்டாடவேண்டிய தோனியின் குணங்களில் முதன்மையானதாக நான் கருதுவது அதைத்தான். ஆனால், இன்று அவரை முன்னிலைப்படுத்தி மற்ற வீரர்களின் குணங்களை மாற்ற முயற்சிக்கிறோம் நாம். மாற்றவும் செய்திருக்கிறோம் என்பதுதான் சோகம்!

25/3/2019 - ரவிச்சந்திரன் அஷ்வின், ‘மன்கடிங்’ மூலம் ஜாஸ் பட்லரை அவுட்டாக்கியது, அதனால் சர்ச்சைகள் கிளம்பியது எல்லாம் நாம் அறிந்ததே. அதை விட்டுவிடுவோம். இரண்டு வாரம் கழித்து… அதாவது ஏப்ரல் 10, 2019. மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆடிய போட்டி. மும்பையின் வெற்றிக்குக் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை. பௌலர் அன்கித் ராஜ்புத்திடம் சென்று அஷ்வின் சொல்கிறார், “எப்படியும் நான்-ஸ்டிரைக்கர் பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே கிரீஸிலிருந்து வெளியேறுவார். அதனால், பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன், நின்று பேட்ஸ்மேனை திரும்பவும் உள்ளே அனுப்பு” என்கிறார்.

அதற்கு அன்கித் ராஜ்புத் கூறிய பதில்: “இல்லை... இது தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பும். நான் வில்லனாக்கப்படுவேன்”. அஷ்வின் அவரை மன்கட் செய்யச் சொல்லவில்லை. நின்று திருப்பி அனுப்பத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கே இப்படி பதிலளித்திருக்கிறார் அந்த இளம் பௌலர். எதனால் வந்தது அந்த பயம்?

அஷ்வின் இதன்பிறகும் மன்கட் செய்யவேண்டும்!
அஷ்வின் இதன்பிறகும் மன்கட் செய்யவேண்டும்!

அதைக்கூட விடுங்கள்... ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நீங்கள் பார்த்த ரிசப் பன்ட்டை இங்கிலாந்தில் பார்க்க முடிந்ததா? அவர் கொண்டாட்டங்களை, ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று ஜாலியாக அவர் அடிக்கும் அரட்டைகளைக் கேட்டீர்களா? இனி அவற்றைப் பார்க்கவோ கேட்கவோ முடியும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் வாய்ப்பே இல்லை. எட்டே IPL போட்டிகள் அவரை காணாமல் செய்துவிட்டது.

2021 IPL தொடரின் முதல் பாதியில், ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாகிறார் ரிஷப் பன்ட். தோனியைப் போல் பொறுப்பாக நடந்துகொள்ள நினைக்கிறார். நடந்தும் கொள்கிறார். தொலைந்தும் போகிறார். அந்த 8 போட்டிகளில் பன்ட் பெரிதாகக் கொண்டாடவேயில்லை. ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது பெரிதாகக் கத்தவும் இல்லை.

என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமை, இஷன் கிஷனின் விக்கெட்டுக்கு ரிஷப் பன்ட் கொடுத்த ரியாக்‌ஷன் (கொடுக்காத ரியாக்‌ஷன்)!

ஏப்ரல் 20, 2021 : மும்பை இந்தியன்ஸ் அணியோடு டெல்லி கேபிடல்ஸ் மோதிய போட்டி. அமித் மிஷ்ரா வீசிய ஃபுல் டாஸ் பந்தை வெட்டுவது போல் அடிக்கிறார் கிஷன். பந்து பேட்டில் பட்டு தரையில் பட்டு எழும்புகிறது. எழும்பிய பந்து கீழிறங்கி பெயில்ஸ் மேல் பட்டுக் குதிக்கிறது. பெயில்ஸ் விழுந்து ஸ்டம்ப்பில் சிவப்பு லைட் எறிகிறது. பழைய ரிஷப் பன்ட் இப்படி ஒரு விக்கெட்டுக்கு எப்படிக் கத்தியிருப்பார். எப்படியெல்லாம் கொண்டாடியிருப்பார். மிஷ்ராவின் பெயரை எப்படியெல்லாம் சொல்லியிருப்பார். ஆனால், கேப்டன் ரிஷப் பன்ட் எதுவும் செய்யவில்லை. அமைதியாகச் சென்று மிஷ்ராவுக்குக் கைகொடுப்பார்.

ஒரு பெரிய விக்கெட், எதிர்பாராத விதத்தில் வீழ்கிறது. அதற்கு ரிசப் பன்ட் செய்த செலிபிரேஷன் இதுவே!
ஒரு பெரிய விக்கெட், எதிர்பாராத விதத்தில் வீழ்கிறது. அதற்கு ரிசப் பன்ட் செய்த செலிபிரேஷன் இதுவே!
Screenshot from Hotstar

டெஸ்ட் போட்டிகளில் அவர் அதிரடியாக ஆடி கலக்கும்போதெல்லாம், 'அவருடைய ஸ்டைலில் ஆடுவதுதான் அவருக்கு பிளஸ். அதனால்தான் ரன் குவிக்க முடிகிறது' என்று மெச்சுகிறோம். பயமறியாத இளங்கன்று என்போம். ஆனால், அது ஏன் கேப்டன்சியில் வெளிப்படக்கூடாது!

யாரும் அவரை அப்படி இருக்கச் சொல்லியிருக்கமாட்டார்கள். ‘தோனி போல் இருக்கவேண்டும், வில்லியம்சன் போல் இருக்கவேண்டும்’ என்ற வாதங்களும், கோலி மீதான விமர்சனமும் அவர் ஆழ்மனதில் பதிந்து அவராகவே மாறியிருப்பார். இப்படியே போனால், நாளை சீனியர் பேட்ஸ்மேன் ஆன பிறகு அவர் பேட்டிங்கும் பாதிக்கும்தானே! பன்ட் ஏன் பன்ட்டாகவே இருக்கக்கூடாது?

அதற்காக வீரர்கள் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. எல்லோருக்கும் ஒருகட்டத்தில் மெச்சுருட்டி வரும். அவர்கள் அவர்களாகவே மாறட்டும். 19 வயது ரியான் பராகின் செலிபிரேஷனைக் கூட நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் விமர்சிக்கிறோம். அதை ஏன் விமர்சிக்கவேண்டும் என்பதுதான் என் கேள்வி. அவருக்கு வெறும் 19 வயது தானே!

காலேஜ் டைம்ல எனக்கு கங்குலிய பிடிக்கும். அவரோட ஆக்ரோஷம் பிடிக்கும். வெறித்தன ரசிகை நான். கல்யாணம் ஆயிடுச்சு. இப்போ, தோனியோட பொறுமை பிடிக்குது. நாம பக்குவப்படும்போது நம்ம விருப்பமும் மாறிடுது
CSK ரசிகை ஒருவர் என்னிடம் சொன்னது

இதுதான் நான் சொல்லவரும் விஷயம். அந்தப் பக்குவம் வீரர்களுக்கும் வரும். பராகுக்கு வரும். பன்ட்டிற்கும் அவருக்காக வந்திருந்தால் நான் கவலைகொண்டிருக்க மாட்டேன். நான்கைந்து ஆண்டுகள் கழித்து அவர் மாறியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், இரண்டே மாதங்களில் அப்படியொரு மாற்றம்... அந்த வீரருக்கும் சரி, கிரிக்கெட்டுக்கும் சரி, இது நல்லதல்ல!

கிரிக்கெட் இங்கேதான் ஏமாற்றுகிறது!

இந்த மாற்றங்களை, ரசிகர்களும் விமர்சகர்களும் மட்டும்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றால்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கிரிக்கெட்டே எதிர்பார்க்கிறது என்பதுதான் பெரும் சோகம். FAIRPLAY, SPIRIT OF CRICKET என்ற கருவிகள் கொண்டு, வீரர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற தவறான கருத்தியலை இந்த உலகில் நிறுவியிருக்கிறது கிரிக்கெட்!

IPL தொடங்கியதிலிருந்து, அந்தத் தொடரை கார்ப்பரேட் கம்பெனிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன. அவர்கள் விளம்பரத்துக்காக, டைம் அவுட் தொடங்கி பல புதிய விருதுகள் வரை பல விஷயங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சிறந்த கேட்ச், அதிக சிக்ஸர்கள், கேம் சேஞ்சர், டாப் ஸ்டிரைக் ரேட், valuable asset, பவர்பிளேவின் சிறந்த வீரர், MVP, எமர்ஜிங் பிளேயர், ஆட்ட நாயகன், தொடர் நாயகன், ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் என ஒரு போட்டியில் விழும் விக்கெட்டுகளைவிட கொடுக்கப்படும் விருதுகள் அதிகம். அதில் மிகமுக்கியமானது இந்த Fairplay விருது.

This is the most important thing for people right now
This is the most important thing for people right now

இந்த விருதுப் பட்டியலில், தொடரின் தொடக்கத்திலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னிலை பெற்றுவிடும். தோனியின் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு அதுவும் ஒரு காரணம் ஆகிவிடும். அதனால், மற்ற விருதுகளை விடவும் இது அதிகம் பேசப்படத் தொடங்கியது. இந்த 10 ஆண்டுகளில் ஃபேர்பிளே, ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்று ரசிகர்கள் அதிகம் பேசத் தொடங்கியதற்கு மூல காரணம் அதுதான். அவர்களுக்காக ICC-யும் கூட தன்னை மாற்றிக்கொண்டது.

நேயர் விருப்பத்துக்காக பல விஷயங்களை செய்யத் தொடங்கியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். அதன் தொடக்கம், 2010 வரை தேசிய அணிகளுக்குக் கொடுக்கப்பட்டுவந்த ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ விருதை 2011-ம் ஆண்டு தோனிக்குக் கொடுத்து புதிய கலாசாரத்தைத் தொடங்கிவைத்தது. உலகின் மிகப்பெரிய சந்தையில் கிரிக்கெட்டை நிலைக்கவைக்க, அதன் ஹீரோவை கொண்டாடவேண்டுமே!

அன்று முதல் தோனியின் வழியே கிரிக்கெட்டின் வழியானது. இன்று வில்லியம்சனின் வழியே கிரிக்கெட்டின் வழியாகி நிற்கிறது. ஜென்டில்மேன் என்பதே அவர்களின் அடையாளமாகியிருக்கிறது. அதுவே அனைவரின் முகவரியாகவும் இருக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. அதனால்தான், கங்குலியைக் கொண்டாடிய தேசம் கோலியை விமர்சிக்கிறது.

அன்கித் ராஜ்புத் பயந்ததற்கும், ரிஷப் பன்ட் தன் அணுகுமுறையை மாற்றியதற்கும் இதுவே காரணம். ஜென்டில்மேன்களாக நடந்துகொள்ளவேண்டும் என்று இவர்கள் ஆழ்மனதில் பதிந்திருக்கிறது!

யார் ஜென்டில்மேன்?

இந்தக் கேள்வியைக் கேட்பது மிகவும் முக்கியம். குறைந்தபட்சம் கிரிக்கெட்டிற்குள்ளாவது இதன் அர்த்தம் என்ன என்பதை அலசிவிடுவது அவசியம்.

Oxford அகராதியில்
A man who is polite and well educated, who has excellent manners & always behaves well
Cambridge அகராதியில்
A man who is polite and behaves well towards other people, especially woman

உலகின் பிரசித்தி பெற்ற இரு அகராதிகள் இப்படிச் சொல்கின்றன. இரண்டும் பொதுவாகச் சொல்லும் விஷயம் - A man who behaves well.

IPL தொடரில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து இந்த விஷயத்தை விரிவாக அலசுவோம். அதற்கு முன்பு, இந்த ஃபேர்பிளே விருதுக்கு எதன் அடிப்படையில் புள்ளிகள் கொடுக்கிறார்கள் என்பதையும் பார்த்துவிடுவோம். ஜென்டில்மேன் யார் என்று கண்டுபிடிக்க அதுவும் முக்கியம்.

மொத்தம் நான்கு விஷயங்களின் அடிப்படையில் IPL தொடரில் ஃபேர்பிளே புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டை’ அந்த அணி எந்த அளவுக்குக் கடைபிடிக்கிறது
எதிரணிக்குக் கொடுக்கும் மரியாதை
கிரிக்கெட்டின் விதிகளுக்குக் கொடுக்கும் மரியாதை
நடுவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை
மன்னிப்பு கோறுவது ஒரு ஜென்டில்மேனின் முக்கிய குணம் அல்லவா!
மன்னிப்பு கோறுவது ஒரு ஜென்டில்மேனின் முக்கிய குணம் அல்லவா!

இப்போது ஒரு வருடம் முன்னோக்கி நகரலாம். 5/10/2020. டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 15-வது ஓவரின் ஐந்தாவது பந்து. நவ்தீப் சைனி வீசிய பீமர் பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டாய்னிஸின் கையில் அடிக்கிறது. முந்தைய போட்டியில் ராகுல் தெவேதியாவுக்கும் சைனி பீமர் வீசியதை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள் வர்ணனையாளர்கள். ஓரிரு நிமிடங்கள் கழித்து திடீர் சலசலப்பு. ஸ்டாய்னிஸ் முறைத்துக்கொண்டு நிற்கிறார். அங்கிருந்து அவர் கத்த, சைனியிடம் ஏதோ சொல்கிறார் நான் ஸ்டிரைக்கர் ரிசப் பன்ட். பிரச்னை என்னவெனில், சைனி தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று ஸ்டாய்னிஸுக்குக் கோபம்! ஸ்டாய்னிஸின் வாக்குவாதம் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அந்தப் போட்டிக்கான ஃபேர்பிளே புள்ளிகள் குறைக்கப்பட்டன.

இங்குதான் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது. இங்கு யார் ஜென்டில்மேன் இல்லை? வாக்குவாதம் செய்த ஸ்டாய்னிஸா இல்லை, தான் காயப்படுத்திய ஒருவரிடம் மன்னிப்பு கேட்காமல் போன சைனியா! தெரியாமல் செய்த தவறுக்கும்கூட மன்னிப்பு கேட்பவர்தானே ஜென்டில்மேன்?!

ஆனால், இந்த இடத்தில் கிரிக்கெட் நிறுவியிருப்பது எதை? மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதையா இல்லை ஆடுகளத்தில் உங்கள் உணர்வுகளைக் கொட்டக்கூடாது என்பதையா? அடுத்த தலைமுறைக்கு எதைச் சொல்லிக்கொடுப்பது அவசியம்? ஐபிஎல் தொடரும் அதன் விதிகளும் எதைச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றன?

R.Ashwin
R.Ashwin
AP

இதை விடுங்கள். அஷ்வின் - பட்லர் விஷயத்துக்கு வருவோம். MCC விதி 41.16 படி பட்லர் அவுட். கிரிக்கெட்டின் விதிகள் அதைத்தான் சொல்கின்றன. ஜென்டில்மேன்கள் விதிகளை மதிப்பவர்கள் என்பார்கள். ஆனால், அஷ்வின் ஜென்டில்மேனாக நடந்துகொள்ளவில்லை என்று தூற்றியது உலகம். அவர் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டைக் கெடுத்துவிட்டார் என்றார்கள். அதற்காக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஃபேர்பிளே புள்ளிகள் குறைக்கப்பட்டன.

சரி, இப்போது ஃபேர்பிளே புள்ளிகளுக்கு அடிப்படையான அந்த நான்கு விஷயங்களைப் பாருங்கள் - முதல் அளவுகோலுக்கும் மூன்றாவது அளவுகோலுக்குமான முரணைப் பாருங்கள்! அஷ்வின் மூன்றாவது அளவுகோலின்படிதான் செயல்பட்டிருக்கிறார். ஆனால், முதல் அளவுகோலை அது மதிக்கவில்லை. ஆக, கிரிக்கெட்டின் விதிகளும், ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்று கருதப்படும் விஷயங்களுமே நேர்கோட்டில் இல்லாதபோது, அதை வைத்து ஒரு வீரரை விமர்சிப்பது எவ்வளவு தவறான விஷயம்.

நூற்றாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டுவரும் அந்த விதி நிச்சயம் தவறாக இருக்கப்போவதில்லை. அப்படியெனில், இந்த 10 ஆண்டுகளாக நாம் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் கேம் ஸ்பிரிட், ஃபேர்பிளே போன்ற விஷயங்களில்தானே சிக்கல்?!

Spirit of Cricket or Spirit of Convenience?!

விளையாட்டை பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்பது மிகவும் ஆபத்து. இந்த சமூக வலைதள உலகில், அதன் முக்கியத்துவம் சீக்கிரம் குறைந்துவிடும். கால்பந்து அரங்கில் ‘Black Lives Matter’ என்பதை வலியுறுத்த இன்னும் கால்பந்து அரங்கில் வீரர்கள் மண்டியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த பிரச்னை நடந்த 2020 காலகட்டத்திலேயே ஐபிஎல் தொடரில் இதுகுறித்த எந்த விழிப்புணர்வும் நடக்கவில்லை. அவ்வளவு பெரிய அரங்கில் தோனியும் கோலியும் மண்டியிட்டி கைகளை உயர்த்தியிருந்தால், இளம் தலைமுறைக்கு எப்படியான ஒரு விஷயத்தை அது கடத்தியிருக்கும்! இதுபற்றி, அப்போதே வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இவர்கள், இதையெல்லாம் கற்றுக்கொடுக்காமல், மற்றவர்கள் எதிர்பார்ப்பதைப் போல் ஜென்டில்மேனாக இரு, அமைதியாக இரு என்ற விஷயங்களையே ஐபிஎல் மூலம் நிறுவிக்கொண்டிருக்கிறார்கள். அதை ஐசிசி ஆமோதித்துக்கொண்டிருக்கிறது.

இன்று தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு நடுவே, ஒருவர் மட்டும் தன்னிலை வழுவாது நிற்கும்போது நிச்சயம் அவரைப் பிடிக்கத்தானே செய்யும். அதுவும், கங்குலியின் பிம்பம் ஒவ்வொரு நாளும் சுக்கு நூறாய் உடைந்துகொண்டிருக்கும்போது, ‘நான் இப்படித்தான் இருப்பேன். எனக்குச் சரியெனப்படும் விஷயத்துக்காக தனி ஆளாகவும் போராடுவேன்’ என்று சொல்லும் அஷ்வினை பிடிக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யம்.

பட்லரை மன்கட் செய்து கிரிக்கெட் உலகின் ஒரு பாதி பெரும் விமர்சனம் செய்தபோது, கடைசி வரை தான் செய்தது சரிதான் என்று கூறினார் அஷ்வின். அதோடு மட்டும் நின்றிருந்தால்கூட அவர் மீதான அந்த மரியாதை உருவாகியிருக்குமா தெரியவில்லை. அடுத்த சில நாள்களில் ஒரு இளம் வீரரையும் அப்படி செய்யச் சொல்கிறார். ‘பேட்ஸ்மேன்கள் தவறு செய்யும்போது, நாம் செய்வது சரியே’ என்று விதியை முன்னிறுத்துகிறார். அதைப் பற்றிய விவாதங்கள் வரும்போது ஒவ்வொரு முறையும், பேட்ஸ்மேன்கள் செய்யும் தவறை ஏன் விதிகள் தண்டிப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்.

R.Ashwin
R.Ashwin
AP

மன்கட் செய்வது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டைக் கெடுக்கிறது, செய்பவர்கள் ஜென்டில்மேன்கள் இல்லை என்று உலகம் சொல்லிக்கொண்டே இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் அஷ்வின் வருத்தப்படுவதில்லை. ‘மீண்டும் அப்படி ரன் அவுட் செய்வேன்’ என்கிறார். விளையாடிய காலத்தில் வற்றாத விமர்சனங்களை சம்பாதித்துக்கொண்டிருந்த பான்டிங்கே, இன்று பயிற்சியாளர் ஆன பின், ‘எங்கள் அணி கேம் ஸ்பிரிட்டைப் பாதுகாக்கும்’ என்று சொல்கிறார். ஆனால், அஷ்வின் வளைந்துகொடுக்கவில்லை. சொல்லப்போனால், அதை Spirit of Convenience என்றும் சொல்கிறார். சரிதானே!

கிரீஸிலிருந்து முன்னரே வெளியேறி ‘அட்வான்டேஜ்’ எடுத்துக்கொள்ளும் நான் ஸ்டிரைக்கர்கள் குற்றவாளிக்கூண்டில் நிற்கவைக்கப்படுவதில்லை. பந்து பேட்டில் பட்டு கீப்பர் கேட்ச் பிடித்திருந்தாலும், அம்பயர் அவுட் கொடுக்காததால் களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன்கள் மீது எந்த விமர்சனமும் வைக்கப்படுவதில்லை. ஏன்? எப்போதும், குறை சொல்பவரின் விரல்கள் பௌலர்கள் பக்கம் தானே நீள்கிறது. காரணம், கிரிக்கெட் பேட்ஸ்மேன்களைச் சுற்றியள்ளவா நகர்கிறது!

பௌலர் கிரீஸைத் தாண்டி கால் வைக்கிறாரா என்பதை மூன்றாம் நடுவர் பார்த்து நோ பால் கொடுக்கலாம் என்று புதிய விதியை இப்போது அமல்படுத்தியிருக்கிறார்கள். நான் ஸ்டிரைக்கருக்கும் அதே கிரீஸ்தான். ஒரே கேமரா பௌலரையும் படம் பிடிக்கும், நான் ஸ்டிரைக்கரையும் படம் பிடிக்கும். அப்படியிருக்கையில், நான் ஸ்டிரைக்கர் பந்து ரிலீஸாகும் முன்பே வெளியே போகிறாரா என்பதையும் மூன்றாம் நடுவர் பார்த்துச் சொல்லலாம்தானே! இந்த இடத்தில் கூடுதலாக எந்த வேலையும் இல்லையே. ஆனால், செய்ய மாட்டார்கள். கிரிக்கெட்டின் கிடுக்குப்பிடி விதிகளால் பாதிக்கப்படுவது பௌலர்கள்தான். அந்த விதியைப் பின்பற்றியபின், அதனால் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்குக் கேடு என்று விமர்சிக்கப்படுவதும் பௌலர்கள்தான். இது Spirit of Convenience தானே?!

பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான விதிகளுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார் அஷ்வின். அதற்காக, தான் ஜென்டில்மேன் (கிரிக்கெட் உலகின் வரையறைப்படி) என்று மற்றவர்கள் ஏற்காதது பற்றியும் அவருக்குப் பிரச்னை இல்லை. இவற்றையெல்லாம் விட முக்கியமான விஷயம், அஷ்வின் பட்லரை மன்கட் செய்தபோது அவர்தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன்! இன்று கேப்டன்களுக்கு வகுக்கப்படும் இலக்கணம் பற்றி அவருக்குக் கொஞ்சமும் கவலை இருந்திருக்கவில்லை. தோனி, வில்லியம்சன் வழியில் பயணிக்க நினைக்கவில்லை. பன்ட் போல் மாறிவிடவில்லை. அஷ்வினாக மட்டுமே இருந்தார். அஷ்வினாக மட்டுமே இருக்கிறார்!

R.Ashwin
R.Ashwin
TNPL

மீண்டும் அந்த அஷ்வினைப் பார்க்கவேண்டும்!

அஷ்வின் டி20 அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற விஷயம் எனக்கு ஏன் அவ்வளவு இன்பமாக இருந்தது என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால், டெஸ்ட் தொடர் முழுதும் அமரவைக்கப்பட்டவர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 அணியில் சேர்க்கப்பட்டுவிட்டார் என்பதால் மட்டும் வந்த சந்தோஷமல்ல. அது, கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பயத்தைப் போக்கியதால் எழுந்த சந்தோஷம்.

மிகப்பெரிய அரங்கில் அவர் மீண்டும் ஒருமுறை நான் ஸ்டிரைக்கரை ரன் அவுட் செய்யவேண்டும். அதனால், விவாதங்கள் எழவேண்டும். பௌலர்கள் கேள்வி கேட்கவேண்டும். விதிகள் மாற்றப்படவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேன். அப்படியாவது விதிகள் மாறினால், Spirit of Cricket என்ற ஒன்றின்மீது சந்தேகம் ஏற்படும். அது நொறுங்கத் தொடங்கும். இந்த ஜென்டில்மேன் விவாதங்கள் குறையும் என்றெல்லாம் கனவு கண்டிருந்தேன். ஆனால், அதற்கு மிகப்பெரிய் அரங்கில் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டுமே!

இன்று 35 வயதை நிறைவு செய்திருக்கும் அஷ்வினுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். அதில் ஒன்றிலாவது, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராகப் பார்த்த அந்த அஷ்வினை நான் பார்த்திடவேண்டும்.

என் அப்பா விவியன் ரிச்சர்ட்ஸ் பற்றிப் பேசும்போதெல்லாம், அவர் கண்ணில் ஒரு கர்வம் தெரியும். ''எந்த பௌலர் எதிரில் நின்றாலும், கொஞ்சம்கூட சலனம் இல்லாம, சூயிங் கம் மென்னுக்கிட்டு அசால்ட்டா ஆடுவாரு'' என்று சொல்லும்போது நமக்குள்ளும் ஒரு ஆச்சர்யம் ஒட்டிக்கொள்ளும். பின்னொரு நாளில் என் மகனிடமோ மகளிடமோ கங்குலியைப் பற்றி நான் சொல்லும்போது என் கண்ணில் கர்வமும், அவர்கள் கண்ணில் ஆச்சர்யத்தையும் பார்ப்பேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இன்று எல்லாம் உடைந்துவிட்டது.

R.Ashwin
R.Ashwin
AP

வரப்போகும் கங்குலியின் பயோபிக் படத்தைப் பார்க்கும்போது, இன்றைய அவரது நிலைப்பாடும் செயல்பாடும் ஒருபக்கம் என் மனதில் ஓடத்தொடங்கும். சிறு வயதில் கட்டிய மணல் கோட்டையை, பொங்கி வரும் பேரலை கரைத்துச் செல்வதுபோல் இருக்கும். ரிச்சர்ட்ஸ் மீதான ஆச்சர்யம் தொடங்கி, கங்குலி மீதான ஆர்வம் வரை, அந்த வீரரின் ஆளுமையே என்னை ஆட்கொண்டது. அதுதான் அவர்களை நேசிக்கவைத்தது. இப்போது அஷ்வின் மீதும் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று யோசித்துப்பார்த்தால், நம் அடுத்த சந்ததிக்கு சொல்லிக்காட்டக்கூடிய, தன்னிலை வழுவாத ஒரு வீரன் உண்டென்றால், அது அஷ்வின் மட்டுமே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு