Published:Updated:

அடுத்த ஆஃப் ஸ்பின்னர்களே இந்தியாவில் இல்லை... ஏன் தெரியுமா?

அஷ்வின்
அஷ்வின்

ஸ்பின்தான் இந்திய கிரிக்கெட்டின் ஆயுதம் என்பது கடந்தகாலமாகிவிட்டது. இந்த 20-20 யுகத்தில் ஸ்பின்னர்கள் காணாமல் போய் அந்த இடத்தை வேகப்பந்து வீச்சாளர்கள் பிடித்துவிட்டார்கள்.

இந்திய கிரிக்கெட் அணி என்றும் ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் நிறைந்தது. சுபாஷ் குப்தே, சந்திரசேகர், ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி, எரபள்ளி பிரசன்னா, நரேந்திர ஹிர்வானி, லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், அனில் கும்ப்ளே, வெங்கடபதி ராஜு, சுனில் ஜோஷி, ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக், அஷ்வின், ஜடேஜா என பல தலைமுறைகளாக ஸ்பின்னர்களின் கோட்டையாக இருந்தது.

இந்தியாவின் வெற்றி மந்திரமே, `ஸ்பின் டு வின்' அணுகுமுறைதான்! அதைப் பின்பற்றித்தான் பல போட்டிகளை வெற்றி கண்டார்கள். டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் என அனைத்து வகையான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்களை, சில ஓவர்கள் வீசவைத்து, பந்து சிறிது தேய்ந்தவுடன், அவர்கள் பணி முடிவடைந்துவிடும். அதற்குப் பிறகு ஸ்பின்னர்கள் கைகளில், பந்தைக் கொடுத்துவிடுவார்கள். அவர்கள்தான், நாள் முழுவதும் வீசி, பல விக்கெட்டுகளைச் சாய்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு நாள் போட்டிகளில், உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி... இரண்டு ஸ்பின்னர்கள் கட்டாயம் இடம்பிடித்திருப்பார்கள். ஏன், பல போட்டிகளில், மூன்று ஸ்பின்னர்கள் விளையாடிய காலகட்டங்கள் கூட உண்டு.

இந்திய அணியிலும் சரி, உள்ளூர் போட்டியான ரஞ்சி தொடரிலும் சரி! ஸ்பின்னர்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கும். ஒவ்வொரு மாநில அணியிலும், இரண்டு ஸ்பின்னர்கள் கட்டாயம் இருப்பார்கள். மேலும் மேலும் ஸ்பின்னர்கள் கிளம்பி வந்து கொண்டே இருப்பார்கள். இப்படிச் செல்வச் செழிப்பாக இருந்த ஸ்பின் துறைதான் இன்று குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. அதுவும் `ஃபிங்கர் ஸ்பின்னர்ஸ்' என்று அழைக்கப்படும் `ஆஃப் ஸ்பின்' அழிந்துகொண்டிருக்கிறது.

ஆம்! இந்தியாவில் அடுத்தக்கட்ட ஆஃப் ஸ்பின்னர்கள் உருவாகவில்லை அல்லது உருவாக்கப்படவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல. கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும், இப்போது இதே நிலைமைதான். `ஸ்பின்னர்ஸ் பேரடைஸ்' என்றழைக்கப்படும் ஆசியாவில் ஆஃப் ஸ்பின்னர்கள், மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

Ashwin Ravi
Ashwin Ravi

அப்துல் காதிர், சக்லைன் முஷ்தாக், முஷ்தாக் அஹமது, சயித் அஜ்மல் போன்ற தலைசிறந்த ஸ்பின்னர்களை உருவாக்கிய பாகிஸ்தானும், உலக சாதனையாளர் முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத், குமார தர்மசேனா, உபுல் சந்தனா போன்ற ஸ்பின்னர்களை உருவாக்கிய இலங்கையும், இன்று அடுத்தக்கட்ட ஸ்பின்னர்களை உருவாக்க முடியாமல் தவித்து வருகிறது அல்லது தவிர்த்து வருகிறது.

ஏன் இந்த நிலைமை, எதனால் இந்த கலை மறைந்து வருகிறது அல்லது மறுக்கப்பட்டு வருகிறது என்று அலசி ஆராய்ந்தால், `T20 கிரிக்கெட்' கண் முன் வந்து நிற்கும்.

ஒவ்வொரு தலைமுறையிலும் முக்கிய வீரர்கள், ஓய்வு பெறும்போதும், அவர்களுக்கு பதில் இளம் வீரர்கள் அவர்கள் இடத்துக்குக் கொண்டு வரப்படுவார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து, தங்களை அணியில் நிலைநிறுத்திக் கொள்வார்கள். இது பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டு துறைக்கும் பொருந்தும். அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜனுக்குப் பிறகு அஷ்வின் மற்றும் ஜடேஜா வந்தார்கள். வார்னேவிற்குப் பிறகு ஸ்டூவர்ட் மேக்கில், நாதன் லயான் வந்தார்கள்! முரளிதரனுக்குப் பிறகு ஹெராத், சக்லைன் முஷ்தாக்கிற்குப் பிறகு சயித் அஜ்மல் என சீரான இடைவெளியில் மாற்று ஸ்பின்னர்கள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள் .

கும்ப்ளே, வார்னே, முரளிதரன், சக்லைன் முஷ்தாக்கிற்குப் பிறகு அடுத்த தலைமுறை ஸ்பின்னர்கள் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க பல சாய்ஸ்கள் இருந்தன. ஆனால் இன்று அஷ்வின், நாதன் லயனுக்குப் பிறகு, `யார் அடுத்த தலைமுறை ஆஃப் ஸ்பின்னர்கள்?' என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.

இந்தியாவில் அடுத்தகட்ட ஆஃப் ஸ்பின்னர்கள் என்று கருதப்படும் அக்‌ஷய் வாகாரேவுக்கு வயது 34 மற்றும் ஜலஜ் சக்சேனாவிற்கு வயது 33. `செகண்ட் லைன் ஸ்பின்னர்கள்' என்று கருதப்படுவர்களின் வயதே கிட்டத்தட்ட அஷ்வினின் வயதை நெருங்குகிறது. அடுத்த தலைமுறை ஆஃப் ஸ்பின்னர்கள் என்று யாரும் 2015-க்குப் பிறகு உருவாகவில்லை.

ஆஃப் ஸ்பின் கலை என்பதே பேட்ஸ்மேனை அடிக்கத் தூண்டி தன் வலையில் விழவைத்து விக்கெட்டைத் தூக்குவதாகும். அதில் சில பந்துகள் சிக்ஸர்களுக்குப் பறக்கத்தான் செய்யும். அதைப் பெரிதுபடுத்தாமல் தைரியமாக, அதே மாதிரி அடுத்தப் பந்தை வீசி விக்கெட்டை வீழ்த்துவதே ஆஃப் ஸ்பினின் அழகு. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, இதே மாதிரி சிக்ஸர்கள் போனாலும், கவலைப்படாமல் ஹர்பஜனை தைரியமாகப் பந்து வீச வைப்பார். அப்படிச் செய்ததன் பலனாகத்தான் இந்தியாவிற்கு ஒரு `டர்பனேட்டர்' கிடைத்தார்.

Akshay Wakhare
Akshay Wakhare

ஆனால், இப்போதுள்ள கேப்டன்களோ ஓவரில் ஒரு சிக்ஸ் போய்விட்டாலே பெளலரைக் கடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் பெளலர் ரஷித் கான் போல ஸ்டம்ப் டு ஸ்டம்ப் லைனில் வேகமாக போட்டு ரன் எடுக்கவிடாமல் தடுத்தாலே போதும் என நினைக்கிறார்கள். இதன் விளைவு, ஆஃப் ஸ்பின்னர்கள் அனைவரும் மித வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பல ஆண்டுகளாக கவனித்து வந்த அடுத்த தலைமுறை வீரர்களும், இதே அணுகுமுறையையே கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். சிறந்த உதாரணம் கர்நாடகாவைச் சேர்ந்த கிருஷ்ணப்பா கெளதம் . T20 ஓவர் கிரிக்கெட் மூலம் ஸ்பின்னர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்களாகவும் , வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதிக் கட்டத்தில் `ஸ்லோ கட்டர்கள்' போட்டு ஸ்பின்னர்களாகவும் தங்களை அறியாமலே மாறிக் கொண்டிருக்கிறார்கள். அஷ்வினே ஐபிஎல் போட்டிகளில் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், ஸ்லோ கட்டர்ஸ் என என்னவெல்லாமோ முயற்சிக்கிறார்.

டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில்தான் இந்த அணுகுமுறையைக் கையாள்கிறார்கள், இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பான ரஞ்சி போட்டியிலாவது தைரியமாக ஃபிளைட் என்று கூறப்படும் டாப் ஸ்பின் பந்துவீச்சு முறையை வீச ஊக்குவிக்கப்படுகிறார்களா என்றால், அங்கேயும் இல்லைதான் பதில். ``ஆஃப் ஸ்பின்னர் ஓவரில், ஒரு சில பந்துகள் அடித்துவிட்டால், உடனே அவர்களின் ஓவரை நிறுத்தி விடுகிறார்கள். இப்படிச் செய்தால் அந்த பெளலருக்கு, எப்படித் தன்னம்பிக்கை கிடைக்கும். எப்படி தைரியமாக அடுத்த மேட்சில் பந்து வீசுவார்கள். சமீபகாலமாக சிறந்த ஆஃப் ஸ்பின்னரை, இந்தியாவில், எந்த மாநிலத்திலும் நான் பார்க்கவில்லை'' என்று சொல்லியிருக்கிறார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

பல பயிற்சி முகாம்கள் நடத்தி ஆஃப் ஸ்பின்னர்களை ஊக்கப்படுத்தி, அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கவில்லையென்றால் இந்தியா ஆஃப் ஸ்பின்னர்களை மறந்துவிட வேண்டியதுதான் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆஃப் ஸ்பின்னைப் பொறுத்தவரை டாப் ஸ்பின், தூஸ்ரா, கேரம் பால் இந்த 3 வகைகள்தான் பிரதானம். இந்த முன்று பந்துவீச்சுகளையும் 20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன்கள் அடிக்கிறார்கள் என்று கருதி ஆஃப் ஸ்பின்னர்களை உருவாக்காமல்விட்டால், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அடுத்த ஹர்பஜன்கள், அஷ்வின்கள் கிடைக்கமாட்டார்கள்!

பும்ராக்களையும், ஷமிக்களையும் நம்பியே டெஸ்ட் கிரிக்கெட்டை காலத்துக்கும் கடந்துவிடமுடியாது என்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உணரவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு