Election bannerElection banner
Published:Updated:

தமிழர்களை முன்னிலைப்படுத்திய ஜாஃப்னா அணி கோப்பையை வென்றது எப்படி!? #LPL2020

LPL 2020
LPL 2020 ( twitter.com/LPLT20 )

தமிழர்கள் வாழும் பகுதிகளில் எத்தனையோ திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தும் அவர்கள் யாரும் பெரும்பாலும் வெளியுலகுக்கு அடையாளப்பட்டிருக்கவே மாட்டார்கள். அதை மாற்றி எழுதும் பொருட்டு, ஒரு ஈழத்தமிழ் வீரர் இந்த LPL-ல் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்தார்.

நவம்பர் 26-ம் தேதி இலங்கையில் தொடங்கிய லங்கா ப்ரீமியர் லீகின் இறுதிப்போட்டியில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

கிரிக்கெட் விளையாடப்படும் எல்லா நாடுகளுமே தங்களுக்கென ஒரு ப்ரீமியர் லீக் போட்டிகளை ஆரம்பித்துவிட்டனர். ஐபிஎல், பிபிஎல் வரிசையில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்களுக்கென ஒரு ப்ரீமியர் லீகை தொடங்கிவிட வேண்டும் என நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தது. 2012 ஆம் ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக் என ஐபிஎல் போன்றே தொடங்கப்பட்டது. ஆனால், இது அவ்வளவு வெற்றிகரமாக அமையவில்லை. பொருளாதார காரணங்களால் SPL ஒரே சீசனோடு கைவிடப்பட்டது. இதன்பிறகு, ஆசியாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் கூட ப்ரீமியர் லீக் போட்டிகளை தொடங்கிவிட்டன. ஆனால், இலங்கையால் தங்களுக்கென ப்ரீமியர் லீகைத் தொடங்க முடியாமலேயே இருந்தது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ப்ரீமியர் லீகைத் தொடங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு, இந்த ஆண்டு லங்கா ப்ரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையேதான் கொரோனா தொற்று வேகமெடுத்து எல்லாமும் முடங்க, லங்கா ப்ரீமியர் லீகுக்கும் ஏகப்பட்ட தடங்கல்கள் உண்டானது. ஏற்கெனவே குறிப்பிட்ட தேதிகள் தள்ளிவைக்கப்பட்டது, முக்கிய வீரர்களின் விலகல், க்வாரன்டீனிலிருந்த வீரர்களுக்கு கொரோனா என LPL-ஐ தொடங்குவதற்கு முன்பாகவே ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் எழுந்தன. எல்லாவற்றையும் தாண்டி ஒரு வழியாக LPL-லும் தொடங்கிவிட்டது.

LPL 2020
LPL 2020
twitter.com/LPLT20
காலே, கண்டி, கொழும்பு, தம்புலா ஆகிய நகரங்களை மையப்படுத்திய அணிகளோடு தமிழர்கள் வாழும் வடகிழக்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி உருவாக்கப்பட்டது. இதுவே மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்பட்டது.

இலங்கை தேசிய அணியில் தமிழர்களுக்கு முறையாக இடம் அளிக்கப்படாத நிலையில் ஐபிஎல் போன்று தொடங்கப்படும் ஒரு ப்ரீமியர் லீகில் தமிழர்கள் வாழும் பகுதியை மையப்படுத்தி ஒரு அணி இருந்தது, உலகெங்கும் வாழும் இலங்கை தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த அணியில் வடகிழக்கு பகுதியிலிருந்து மூன்று தமிழ் வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் ஹேமங் பதானியும் ஜாஃப்னா அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார். கேப்டனாக திசாரா பெராரா நியமிக்கப்பட்டிருந்தார்.

ஒவ்வொரு அணியும் மற்ற நான்கு அணிகளோடும் தலா 2 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் கடைசி இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்பட்டு முதல் 4 அணிகள் அரையிறுதுக்கு தகுதிப்பெறும் வகையில் போட்டி முறை வடிவமைக்கப்பட்டிருந்தது.

கொழும்பு கிங்ஸுக்கும் கண்டி டஸ்கர்ஸுக்கும் நடைபெற்ற முதல் லீக் போட்டியே சூப்பர் ஓவர் வரை சென்றதால் லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருத்த கவனத்தை பெற்றது.

லீக் போட்டிகள் முடிவில் 4 போட்டிகளை வென்றிருந்த ஜாஃப்னா அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம் வகித்தது. அரையிறுதியில் தம்புலாவை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திவிட காலே க்ளாடியேட்டர்ஸுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆட ஜாஃப்னா தகுதிப்பெற்றது. இறுதிப்போட்டியில் சோயிப் மாலிக், டி சில்வா, பெராரா ஆகியோர் பொறுப்பாக ஆட அணியின் ஸ்கோர் 188 ஆனது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் காலே க்ளாடியேட்டர்ஸால் 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லங்கா ப்ரீமியர் லீகின் அறிமுக சீசனின் சாம்பியன் பட்டத்தை ஜாஃப்னா அணி கைப்பற்றியது. தொடர்நாயகன் விருது 17 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாஃப்னா அணியின் வீரர் ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.

LPL 2020
LPL 2020
twitter.com/jaffnalpl

ஜாஃப்னா அணியை பொறுத்தவரை தொடக்கமே பட்டாசாகத்தான் இருந்தது. முதல் 4 போட்டிகளில் நான்கையும் வென்று கெத்துக்காட்டியது ஜாஃப்னா. அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சோயிப் மாலிக், டி சில்வா, சார்லஸ், பெராரா என அணியின் எல்லா பேட்ஸ்மேன்களுமே நல்ல ஃபார்மில் இருந்தனர். குறிப்பாக, கேப்டன் திசாரா பெராராவை நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே அதிரடி சூறாவளியாக பார்க்க முடிந்தது. காலே அணிக்கு எதிராக 44 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 97 ரன்கள் எடுத்து மிரட்டியிருப்பார்.

அதேபோட்டியில் பௌலிங்கில் 2 விக்கெட்டுகளையும் எடுத்து அட்டகாசப்படுத்தியிருப்பார். இந்தத் தொடர் முழுவதுமே இறுதிப்போட்டி உட்பட பல போட்டிகளில் திசாரா பெராரா தனது அதிரடியால் அணிக்கு பெரும் பக்கப்பலமாக இருந்தார். இறுதிப்போட்டியில் காலே க்ளாடியேட்டர்ஸுக்கு எதிராக கடைசிக்கட்டத்தில் இவர் 14 பந்துகளில் அடித்த 39 ரன்கள்தான் அணியின் ஸ்கோரை 188 ஆக உயர்த்துவதற்கு காரணமாக அமைந்தது. அதேமாதிரி, பௌலிங்கில் லெக் ஸ்பின்னர் வனிது ஹசரங்கா பெரிய துருப்புச்சீட்டாக இருந்தார். ஜாஃப்னா அணி ஆடிய 10 போட்டிகளிலும் ஹசரங்கா விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். குறிப்பாக, அரையிறுதியில் தம்புலா வைக்கிங்குக்கு எதிராக 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியது மேட்ச் வின்னிங் ஸ்பெல்லாக அமைந்தது. மேலும், இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தொடரிலேயே ஹசரங்காவின் எக்கானமி மட்டும்தான் 6-க்கு கீழே இருந்தது.

விஜாஸ்காந்த் விஜய்காந்த் | LPL 2020
விஜாஸ்காந்த் விஜய்காந்த் | LPL 2020
twitter.com/jaffnalpl

ஜாஃப்னா அணியின் வீரர்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டது, சாம்பியன் பட்டத்தை வென்றது என எல்லாவற்றையும் கடந்து இந்த லங்கா ப்ரீமியர் லீகும் ஜாஃப்னா அணியும் வேறு சில அற்புதங்களையும் செய்துள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் எத்தனையோ திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தும் அவர்கள் யாரும் பெரும்பாலும் வெளியுலகுக்கு அடையாளப்பட்டிருக்கவே மாட்டார்கள். ஏனெனில், இலங்கையின் தேசிய அணிகளில் இவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. அதை மாற்றி எழுதும் பொருட்டு, ஒரு ஈழத்தமிழ் வீரர் இந்த LPL-ல் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஜாஃப்னா அணியின் கேப்டன் திசாரா பெராரா, 'ஒரு சில போட்டிகளை வென்ற பிறகு, பெஞ்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்' சீசன் தொடக்கத்திலேயே பேசியிருந்தார். அதேபோல முதல் 4 போட்டிகளையும் ஜாஃப்னா அணி வெல்ல பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பை கொடுத்தார் பெராரா. இப்படித்தான் அணிக்குள் வந்தார் ஈழத்தமிழரான விஜாஸ்காந்த் விஜய்காந்த். ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தொலைக்காட்சியில் தோன்றிய முதல் யாழ்ப்பாணத் தமிழர் இவர்தான்.

LPL 2020
LPL 2020
twitter.com/LPLT20

கொழும்பு அணிக்கு எதிராக இவர் ஆடிய போட்டியில் 4 ஓவர்களை வீசி 29 ரன்களை கொடுத்து கொழும்பு அணியின் கேப்டன் மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தினார். லெக்ஸ்பின்னரான இவர் ரஸலுக்கு எதிராக வீசிய 4 பந்துகளில் ஒரு சிங்கிள் மட்டுமே கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். விஜாஸை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே அரவணைத்து பாராட்டியது. விக்கெட் பறிகொடுத்த மேத்யூஸே விஜாஸை வாழ்த்தி ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். விஜாஸ் பந்து வீசும் போது இலங்கை அணி வீரரும் சக ஜாஃப்னா வீரருமான ஹசரங்கா விஜாஸுக்கு அவ்வளவு அக்கறையாக அறிவுரைகளை கொடுத்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இதுதான் லங்கா ப்ரீமியர் லீக் செய்த மிகப்பெரும் அற்புதம்.

ஜாஃப்னா அணி கோப்பையை வென்றதும், "ஜாஃப்னாவின் இந்த வெற்றி கிரிக்கெட்டில் மட்டுமல்ல, நம்முடைய தேசத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என மஹேலா ஜெயவர்த்தனே டீவிட் செய்திருந்தார். உண்மைதான், போரில் துன்புற்று புறக்கணிக்கப்பட்ட மக்களிலிருந்து எழுந்து வரும் வீரரை கைதூக்கி விட்டு அரவணைத்திருக்கிறது லங்கா ப்ரீமியர் லீக். தமிழர்கள் வாழும் பகுதியை மையப்படுத்திய ஒரு அணி இறுதிப்போட்டியில் வெல்ல வேண்டும் என இலங்கையின் பல பகுதிகளிலிருந்து சிங்கள ரசிகர்களும் கூட ஆர்வமாக போட்டியை காணும்படி செய்திருக்கிறது. இத்தனை ஆண்டு கால அரசியலாலும் அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்த முடியாத சிங்கள-தமிழர் ஒற்றுமையுணர்வை இந்த LPL-லும் ஜாஃப்னா அணியும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் ஸ்போர்ட்ஸின் சக்தி..!

LPL 2020
LPL 2020
twitter.com/LPLT20
ஜாஃப்னா அணி கோப்பையை வென்றதை அடுத்து அந்த அணியின் உரிமையாளர்கள் தமிழர்கள் வாழும் வடகிழக்கு பகுதிகளில் கிரிக்கெட்டை வளர்க்கும் விதத்தில் பயிற்சி மையங்களையும் மைதானங்களையும் உருவாக்கப்போவதாக அறிவித்திருக்கின்றனர். மேலும், அடுத்த சீசனில் இதே வடகிழக்கு பகுதியிலிருந்து இன்னொரு அணியும் உருவாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அப்படி, நடந்தால் இன்னும் அதிகமான ஈழத்தமிழ் வீரர்கள் வெளிச்சம் பெறுவார்கள்.

வாழ்த்துக்கள் ஜாஃப்னா!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு