Published:Updated:

இறுதிச்சுற்று - 6: நம்பர் 1 டி20 பௌலரை டெஸ்ட் கிரிக்கெட் ஆட வைத்த கோலி! | SAvIND 2017-18

SAvIND 2017-18
SAvIND 2017-18 ( BCCI )

தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்றிருந்தாலும் இந்திய அணியினரிடம் இருந்த தொடர் போராட்ட குணம் அடுத்து வரும் அந்நியத் தொடர்களுக்கு புதிய நம்பிக்கையை பாய்ச்சியது.

துணைக்கண்ட ஆடுகளங்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத புதிய ஆடுகளங்கள், அப்பேர்பட்ட ஆடுகளங்களுகென்றே உருவாக்கப்பட்ட பலம் பொருந்திய வேகபந்துவீச்சாளர்கள், பவுன்சர்களை இயல்பிலேயே நன்றாக ஆடும் பேட்ஸ்மேன்கள் என அசுர பலத்தோடு தங்களின் சொந்த ஏரியாவில் இந்தியாவை சந்திக்க வரவேற்றது தென்னாப்பிரிக்கா அணி.
இப்படியொரு அணியை அதன் குகைக்குள் சந்திக்க வேண்டுமென்றால் ஸ்பின்னர்கள் நிறைந்த அணியில் ஏதேனும் சில மாற்றங்கள் செய்தே ஆக வேண்டி நிலை இருந்தது. அதற்கேற்ற மாற்றங்களையும் கொண்டு வந்தார் கேப்டன் கோலி. ஆனால் அவை யாருமே எதிர்பார்க்காத ஒன்று.

லிமிடெட் ஓவர் ஃபார்மேட்கள், அதுவும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டின் ஸ்பெஷலிஸ்ட்களான இரண்டு வீரர்களை டெஸ்ட் அணியில் சேர்த்தார் அவர். ஃபுட் வொர்க்கே இல்லாமல் நின்ற இடத்திலிருந்து ஓர் அங்குலம் நகராமல் பந்தை அப்படியே சிக்ஸருக்கு வாரிவிடும் ஹர்திக் பாண்டியா மற்றும் துல்லியமான யார்கர்களுடன் பல வேரியேஷன்களை வீசி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஜஸ்ப்ரீத் பும்ரா. இவர்கள் இருவரையும் டெஸ்ட் கிரிக்கெட் ஆட அழைத்தார் விராட் கோலி.

SAvIND 2017-18
SAvIND 2017-18
BCCI

தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக இலங்கையுடன் இரு டெஸ்ட் தொடர்கள் ஆடி இரண்டிலும் வென்றிருந்தது இந்திய அணி. இந்தியாவில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு இரட்டை சதம் மற்றுமொரு சதம் விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார் கேப்டன் கோலி. இலங்கையில் நடந்த மற்றொரு தொடரில் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தார்.

அத்தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் புஷ்பகுமாராவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட 26 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தையும் விளாசி அசத்தியிருந்தார் அவர். இதுவரை இந்திய பிட்ச்களில் ஆப்-ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர்களே வெற்றிக்கு அதிகம் பங்காற்றியிருந்த நிலையில் தென்னாப்பிரிக்க பிட்ச்களில் அவர்களின் தேவை அவ்வளவாக இருக்காது என்பதால் மீடியம் ஃபாஸ்ட் பௌலரான ஹர்திக் பாண்டியா கோலியின் முதல் சாய்ஸாக இருந்தார்.

மறுபுறம் ஜஸ்ப்ரீத் பும்ரா. வித்தியாசமான ரன்-அப், அதை விட வித்தியாசமான ரிலீஸ் என ஆக்ஷனில் மட்டுமல்லாமல் தனது லைன் அண்ட் லென்திலும் அபாரமான துல்லியம் காட்டி லிமிடெட் ஓவர் ஃபார்மேட்டுகளில் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்திருந்தார் அவர். ஆனால் இவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்வதற்கு ஏனோ தேர்வாளர்களும் சரி, கிரிக்கெட் விமர்சகர்ளும் சரி மிகவும் தயங்கினர். 20 மற்றும் 5௦ ஓவர் போட்டிகளில் ஒரு பௌலரின் ஸ்பெல் என்பது குறிப்பிட்ட ஓவர்களோடு முடிந்துவிடும், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பௌலர் நீண்ட ஸ்பெல்களை வீச வேண்டியதிருக்கும். பும்ராவின் அன்-ஆர்த்தோடக்ஸ் பௌலிங் ஆக்ஷனைக் கொண்டு அப்படி பல ஓவர்கள் தொடர்ந்து வீச முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க அப்படி அவரை டெஸ்ட் ஃபார்மேட்டில் பொருத்தினாலும் எதிர்பாராத காயம் ஏதேனும் ஏற்பட்டு அவரின் கரியருக்கு அபாயம் ஏற்படும் நிலைமையும் இருந்தது.

SAvIND 2017-18
SAvIND 2017-18
BCCI

ஆனால், இவை அனைத்தையும் புறந்தள்ளி பும்ராவின் மேல் நம்பிக்கை வைத்தார் கோலி. மறுபுறம் கோலி தன்மேல் வைத்த நம்பிக்கையை முழுவதுமாக நம்பினார் பும்ரா. கேப்டவுனில் தொடங்கிய முதல் டெஸ்டில் 1 சுழற்பந்துவீச்சாளர் மற்றும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது இந்திய அணி. பௌலிங்கில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை நன்றாகவே கட்டுப்படுத்தினாலும் இந்திய அணி பேட்டிங்கில் ரொம்பவே தடுமாறியது. 208 என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி தென்னாப்பிரிக்க பந்துவீச்சின் வேகம் மற்றும் பவுன்சர்களை தாக்குபிடிக்க முடியாமல் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியிலும் பாண்டியாவின் 93 ரன்கள் (95 பந்துகள்) இன்னிங்ஸ், வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் என ஆறுதல்கள் இல்லாமல் இல்லை. பும்ராவும் தனது அறிமுகப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

இறுதிச்சுற்று - 5: ஆஸ்திரேலியாவின் பழைய கணக்குகளை மொத்தமாகத் தீர்த்த கோலி! | INDvAUS 2016-17

இரண்டாவது போட்டி செஞ்சுரியானில், சீறி வந்த பவுன்சர்களை நேர்த்தியாகச் சமாளித்து, கோலி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களை குவித்து அசத்தியிருந்தாலும் அந்த ஒற்றை வீரனை தவிர வேறு ஒருவர் கூட பேட்டிங்கில் சோபிக்காததால் அப்போட்டியிலும் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி.

ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெற்ற கடைசி போட்டியில் ஒரு ஸ்பின்னர்கூட இல்லாமல் ஐந்து வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது இந்தியா. ஆனால் பேட்டிங்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை. புஜாரா, கோலி மற்றும் புதிதாக அணிக்குள் வந்த புவனேஷ்வர் குமார் ஆகியே மூவர் மட்டுமே இரட்டை இலக்கை தொட, முதல் இன்னிங்ஸில் வெறும் 187 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி. ஆனால், பெளலிங்கில் வேகப்பந்துவீச்சை மட்டுமே நம்பிய கோலியின் திட்டம் பலனளித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 241 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை 177 ரன்களுக்கு சுருட்டினர் இந்திய பௌலர்கள். பும்ரா ஒரு 5 விக்கெட் ஸ்பெல் உட்பட மொத்தம் 7 விக்கெட்டுகளை சாய்திருந்தார். முதல் இரண்டு போட்டிகளை விட மிக மிக கடினமான ஆடுகளத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றி மிக முக்கியமானது.

SAvIND 2017-18
SAvIND 2017-18
BCCI

தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்றிருந்தாலும் இந்திய அணியினரிடம் இருந்த தொடர் போராட்ட குணம் அடுத்து வரும் அந்நியத் தொடர்களுக்கு புதிய நம்பிக்கையை பாய்ச்சியது. இதில் மிக முக்கியமானது, பும்ராவினுள் ஒரு டெஸ்ட் பௌலர் ஒளிந்து இருக்கிறார் என்று கண்டுபிடித்த கோலியின் மாஸ்டர் ஸ்ட்ரோக். விளைவு ஒரு வருடத்தில் அந்நிய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் இன்றைய இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கியமான அட்டாகிங் பௌலரான உயர்ந்து நிற்கிறார் ஜஸ்பிரிட் பும்ரா.

- களம் காண்போம்.

அடுத்த கட்டுரைக்கு