Published:Updated:

சச்சின் டெண்டுல்கரை நாம் ஏன் இன்னமும் கொண்டாடுகிறோம்?! #Sachin100

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

அண்ணாசாலை தனது அட்டெண்டென்ஸை இழந்திருக்கும். மெரீனா பீச் மொத்தமும் காலியாகியிருக்கும். மீனம்பாக்கத்தில் விமானங்களின் டேக் ஆஃப் சில நிமிடங்கள் தாமதமாகும். காரணம், கிரிக்கெட் களத்தில் சச்சின் டெண்டுல்கர் 90 ரன்களில் பேட்டைப் பிடித்து நின்றுகொண்டிருப்பார்.

கிரிக்கெட்டில் 100 சதங்கள் என்கிற யாராலும் எட்டமுடியாத உச்சத்தை சச்சின் டெண்டுல்கர் எட்டிப்பிடித்த நாள் இன்று. 2012-ம் ஆண்டு இதேநாளில் வங்கதேசத்துக்கு எதிராகத் தனது 100-வது சதத்தைத்தொட்டார் சச்சின். ஆனால், இந்த 100-வது சதத்தைத் தொடுவதற்கு சச்சின் ஓராண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. மார்ச் 12, 2011-ம் ஆண்டு நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த சச்சினுக்கு 100-வது சதம் என்பது மிகப்பெரிய மன அழுத்தத்தையும், அச்சத்தையும் தந்தது.

சச்சின் டெண்டுல்கரின் 98-வது சதத்தை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே 2011 உலகக்கோப்பையின்போது பெங்களூருவில் அடிக்கப்பட்ட சதம் இது. அடுத்த மாதமே 99-வது சதத்தையும் அடித்துவிட்டார். ஆனால், 100வது சதத்தை அடிக்க 369 நாட்கள், 11 டெஸ்ட், 12 ஒருநாள் போட்டிகள் எனக் கிட்டத்தட்ட 30-க்கும் மேலான இன்னிங்ஸ்கள் அவருக்குத் தேவைப்பட்டன.

காரணம் அவர் மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தம். ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடித்தே ஆகவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு. அவர் முதுகில் ஏற்றிவைக்கப்பட்ட 100 கிலோ சுமை..!

Sachin
Sachin

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு நிமிடம் எந்த வேலையும் செய்யாமல் ஸ்தம்பித்து நின்றிருக்கிறதா, மதங்கள் கடந்து இந்தியா முழுக்க எல்லா ஆலயங்களிலும் ஒற்றை மனிதனுக்காக பிரார்த்தனைகள் நடத்தப்பட்டிருக்கிறதா, பங்கு வர்த்தகம் சில நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறதா, பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் எல்லாம் மாஸ் பங்க் நடந்திருக்கிறதா, கூட்டம் கூட்டமாக மக்கள் தெருக்களில் டிவிக்கள் முன்னால் நின்றதால் டிராஃபிக் ஜாம் ஆகியிருக்கிறதா?

அண்ணாசாலை தனது அட்டெண்டென்ஸை இழந்திருக்கும். மெரீனா பீச் மொத்தமும் காலியாகியிருக்கும். மீனம்பாக்கத்தில் விமானங்களின் டேக் ஆஃப் சில நிமிடங்கள் தாமதமாகும். காரணம், கிரிக்கெட் களத்தில் சச்சின் டெண்டுல்கர் 90 ரன்களில் பேட்டைப் பிடித்து நின்றுகொண்டிருப்பார்.

கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், 'சச்சின் சச்சின்... சச்சின் சச்சின்...' என்கிற கோஷம் இன்னமும் காதுகளில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.

சச்சினுடன் டிராவிட், கங்குலி, ஷேவாக் எனப் பல உன்னத கிரிக்கெட்டர்கள் விளையாடியிருக்கிறார்கள். சதங்கள் அடித்திருக்கிறார்கள். இந்தியாவுக்குப் பல வெற்றிகளைத் தேடித்தந்திருக்கிறார்கள். ஆனால் சச்சின் அடித்தால்தான் இந்தியாவுக்கே கொண்டாட்டம். சச்சின் களத்தில் நிற்பதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நம்பிக்கை. சச்சின் சதம் அடித்தால்தான் அது தலைப்புச்செய்தி என சச்சின் என்பது வெறும் பெயரல்ல... அது பல கோடி இந்தியர்களின் உணர்வு... உற்சாகம்... மிகப்பெரிய உத்வேகம்!

சச்சின்
சச்சின்

பிதாமகன்!

1994-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியின்போது ஓப்பனிங் பேட்ஸ்மேன் சித்துவுக்கு திடீர் காயம். அப்போது டெஸ்ட் அணியில் நிலையான இடம் பிடித்திருந்த சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் சறுக்கிக்கொண்டு இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களம் இறக்கப்பட்டு வந்தவர், அசாருதினிடம் சென்று "நான் ஓப்பனிங் ஆடுகிறேன்" என்று வாய்ப்பைக் கேட்டு வாங்கினார். நியூஸிலாந்து மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவமாடினார் சச்சின். அதற்கு முன் இந்திய ப்ளேயர்கள் நியூஸிலாந்து மைதானங்களில் காட்டாத ஆக்ரோஷம் அது! அன்று முதல் சச்சின்தான் இந்தியாவின் வெற்றிகரமான ஓப்பனிங் பேட்ஸ்மேன்.

1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் கராச்சி டெஸ்ட் போட்டியில் துவங்கிய சச்சினுக்குள் இருந்த ரன் மெஷின், 24 ஆண்டுகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடத்தது. டெஸ்ட், ஒருநாள் போட்டி என இரண்டிலுமே உலகிலேயே அதிக ரன்களைக் குவித்தவர், அதிக சதங்கள் அடித்தவர், அதிகமுறை மேன் ஆஃப் தி மேட்ச், மேன் ஆஃப் தி சீரிஸ் என சச்சினின் சாதனைகள் ஒரு கட்டுரைக்குள் அடங்குபவை அல்ல!

16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார் சச்சின். அந்தப் போட்டிதான் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிசுக்கும் முதல் போட்டி. அதில் சச்சினின் விக்கெட்டைப் பறித்தார் வக்கார். ஆட்டம் முடிந்ததும், "இந்தப் பொடியன் எப்போதும் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது!" என்று பேட்டி கொடுத்தார் வக்கார். ஆனால், அடுத்தப் போட்டியிலேயே வக்கார் யூனிஸின் பந்துகளை மைதானமெங்கும் சிதறடித்து அரை சதம் அடித்தார் சச்சின். அப்போது முதல் எதிராளிகளின் சவால், சவடால்களுக்கு சச்சினின் பேட்தான் பதில் சொல்லும். சச்சின் ரன் மெஷினாக உயர்ந்து நின்றபோது அதே வக்கார், "சச்சின், கிரிக்கெட் உலகின் பிதாமகன்!" என்றார்.

சச்சின், முரளிதரன்
சச்சின், முரளிதரன்

சச்சின் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சந்தோஷத்தில் அதீத உற்சாகமாக இருந்திருக்கிறார். அந்தச் சமயம் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர், "நீ கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து உன் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. உன் கால்களை எப்போதுமே தரையில் வைத்திரு!" என்று சொல்லி இருக்கிறார். அது சச்சினின் மனதை மிகவும் ஆழமாகத் தைத்திருக்கிறது. "நண்பனின் அந்த வார்த்தைகளுக்குப் பிறகு கிரிக்கெட்டில் எவ்வளவு உயரத்தைத்தொட்டாலும், சாதாரண சச்சினாகவே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன் என நம்புகிறேன்!" என்பார் சச்சின்.

சென்ட்டிமென்ட்டுகளை அதிகம் நம்புபவர் சச்சின். கிரிக்கெட் என்றால் 10-ம் நம்பர் ஜெர்சி இல்லாமல் விளையாட மாட்டார். அவரது அனைத்து கார்களின் நம்பரும் 9999. எந்தப் போட்டியும் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே பெவிலியனில் இருந்து பிட்ச் வரை நடந்து திரும்புவார். "ஸ்டேடியம் முழுக்க ரசிகர்கள் இருப்பது போலவும், எதிரணி வீரர்கள் ஃபீல்டிங் செய்வது போலவும் கற்பனை செய்துகொண்டு பிட்ச்சில் நின்று பார்ப்பேன். எந்தத் திசையில் பந்தை அடித்தால், அது விரைவாக பவுண்டரி லைனை எட்டும். சிக்ஸ் அடிக்கச் சுலபமான இடம் எது என்று அப்போதே கணித்துவிடுவேன்!" என்று அதற்குக் காரணமும் சொல்வார் சச்சின்.

"அவர் உடல் ஒத்துழைக்கும் வரை விளையாடட்டும். அவர் ஒழுங்காக விளையாடவில்லை என்றாலும் சச்சினை அணியை விட்டு நீக்கும் தகுதி எங்கள் யாருக்கும் இல்லை!" என்பதுதான் அப்போதைய தேர்வுக் குழுவினரின் ஒருமித்த கருத்து. "ஒருநாள் உலகக் கோப்பையை எட்டிப் பிடித்துவிட்டுத்தான் ஓய்வு பெற வேண்டும் என்பது என் கனவு!" என்றவருக்கு 2011-ல் அது மிகச்சரியான நேரத்தில் நடந்தது.

உலகக்கோப்பை தொடர் தோல்விகள், தோள்பட்டை காயங்கள், முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்கள், கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம் என சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்களும் அடக்கம். ஆனால் ஒருமுறைக்கூட அவர் நிதானம் தவறியதில்லை. ஆட்டத்தில் கடைபிடித்த ஒழுங்குதான் உலகம் முழுக்க அவருக்குப் பல கோடி ரசிகர்களை உருவாக்கியது.

சச்சின்
சச்சின்

எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்... சதம் அடிக்கிறார்கள்... ஆனால் சச்சினின் ஆட்டத்தில் இருந்த பர்ஃபெக்ஷனை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடிந்ததில்லை. சச்சினின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் கிளாஸ் ரகம். அவர் அடிக்கும் பவுண்டரிகள் எல்லாமே மனதை மகிழ்விக்கும்.

‘‘1990-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது எனக்கும் சச்சினுக்கும் ஒரே அறைதான். அப்போது சச்சினை வியப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன். எழுதுவது, சாப்பிடுவது என எல்லாவற்றுக்குமே இடது கைப்பழக்கம் கொண்ட இந்தப் பையன் கிரிக்கெட் பேட்டை மட்டும் வலது கையில் பிடித்து ஆடுகிறானே என வியப்பாக இருக்கும். இரண்டு கைகளிலுமே சக்திகொண்டவன் சச்சின் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். இரண்டு கைகளிலும் சக்திகொண்டவர்களை எளிதில் சமாளிக்க முடியாது’’ என்று சொன்னார் கபில்தேவ்.

ஷார்ஜாவில் மணல் சூறாவாளிக்கு இடையில் அவர் அடித்த சதம், மிக வேக மைதானமான பெர்த் மைதானத்தில் அவர் அடித்த சதம், தென்னாப்ரிக்காவுக்கு எதிராக அடித்த ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் 200 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிரான 100வது சதம் என சச்சினின் ஒவ்வொரு சதமும் பல வித நெருக்கடிகளுக்கிடையே அடிக்கப்பட்டவைதான்.

சரிவில் இருந்து மீண்டவன்!

டென்னிஸ் எல்போ பிரச்னையால் சச்சின் சிக்கித்தவித்தபோது ‘எண்டுல்கர்’ என தலைப்பிட்டு ஆங்கில நாளிதழ் ஒன்று முதல்பக்க செய்தி வெளியிட்டது. ஒட்டுமொத்த மீடியாவும் அவர் ஓய்வுபெறலாம் எனக் கட்டுரைகள் வெளியிட்ட நேரம் அது. ‘‘சிகிச்சை முடிந்ததும் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஆனால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. அந்த நேரம் மனம் உடைந்துவிட்டேன். தூக்கம் வராமல் தவித்தேன். விடியற்காலை 3 மணிக்கெல்லாம் காரை எடுத்துகொண்டு மும்பை வீதிகளில் தனியாகச் சுற்ற ஆரம்பித்தேன். என்னால் ஒரு இடத்தில் இருக்கமுடியவில்லை. ‘கடவுளே என்னை கிரிக்கெட் விளையாட விடு. இல்லையென்றால் கொன்றுவிடு' எனக் கதறி அழுதேன். கிரிக்கெட்டைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது’’ என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் சச்சின்.

சச்சின் -விராட் கோலி
சச்சின் -விராட் கோலி
Cricket.com.au

டென்னிஸ் எல்போ காயத்தில் இருந்து மீள கடுமையாகப் போராடினார் சச்சின். அறுவைசிகிச்சைகள் முடிந்ததும் உடனே விளையாடவும் வந்துவிட்டார். பேட்டின் எடையைக் குறைத்து, ஆட்டத்தின் ஸ்டைலை மாற்றி, புதிய ஸ்ட்ரோக்குகளை விளையாட முயன்று என மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பித்தார் சச்சின். டென்னிஸ் எல்போ காயத்துக்குப் பிறகுதான் கிரிக்கெட்டில் பல உச்சங்களைத் தொட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பிரையன் லாராவின் சாதனையைக் கடந்தபோது சச்சின் இப்படி சொன்னார். ‘‘வெற்றி என்பது ஒரு பயணம். அதன் நடுவில் கற்கள் வீசப்படும். அதை மைல்கற்களாக மாற்றக் கற்றுக்கொண்டால் தொடர்ந்து வெற்றிபெறலாம்’’ என்றார்.

ஒரே அலுவலகத்தில் நீண்ட காலம் வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஒருவிதமான சலிப்பு ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கும் இது நடக்கும். ஆனால், எந்தவித சலிப்பும் இல்லாமல் புதிதாக அறிமுகமாகும் பேட்ஸ்மேனைப் போல் ஆடுவது சச்சினின் சுபாவம்.

கிரிக்கெட் மைதானத்தில் எந்தப் பக்கமாகவும் ஷாட்டுகளை அடிக்கும் திறன் படைத்த சச்சின் ஓய்வுபெறும் நாள்வரை நெட் பிராக்ட்டீஸ்களைத் தவறவிட்டதில்லை.

சச்சின் என்றாலே ஒவ்வொரு இந்தியனுக்கும் அவருடனான ஏதோ ஒரு நினைவு மனதில் பதிந்துபோயிருக்கும். எத்தனை சென்சுரிகள் அடித்தார், எத்தனை மேன் ஆஃப் தி மேட்ச், எத்தனை சிக்ஸர்கள் என்பதால் நிரம்பியதல்ல சச்சின் நினைவுகள்.

Sachin Tendulkar
Sachin Tendulkar
சச்சின் அவுட் ஆனதும் டிவியை அணைத்துவிட்டு ஓர் ஆதரவற்றவனைப்போன்று, அழுகையை அடக்கியவாறு கலங்கியக் கண்களோடு தெருவில் இறங்கி நடந்தவர்கள் ஏராளம்... 90'ஸ் கிட்ஸ்களுக்கு சச்சினின் சதம்தான் டிப்ரஷனைப் போக்குவதற்கான் அருமருந்து.

இன்று கோலி அவுட்டானால், ரோஹித்... ரோஹித் அவுட்டானால் ராகுல், ராகுல் அவுட்டானால் பன்ட், பாண்டியா என இந்திய அணி முழுக்கவே மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஆனால், 90'ஸ் அணியில் இந்திய அணியில் இருந்த ஒரே மேட்ச் வின்னர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. அந்த ஒற்றை மனிதனைப் பார்த்துத்தான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை என எல்லா அணிகளும் அலறின. எல்லா பெளலர்களும் பயம் கொண்டனர். சச்சின் எனும் அந்த மாமனிதனின் புகழை எப்போதும், எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது!

அடுத்த கட்டுரைக்கு