Published:Updated:

HBD Sachin: இன்றும் சதங்கள் அடிக்கப்படுகின்றன, சாதனைகள் படைக்கப்படுகின்றன... ஆனால்?!

Sachin Birthday ( Vikatan )

சச்சின் அத்தனைக்கும் ஈடு கொடுத்தார். அக்தரின் வேகத்துக்கும், அக்ரமின் ஸ்விங்கிற்கும் ஈடு கொடுத்தது மட்டுமல்ல சச்சினின் சாதனை. இத்தனை கோடி மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புக்கும் அவர் ஈடு கொடுத்தார்.

HBD Sachin: இன்றும் சதங்கள் அடிக்கப்படுகின்றன, சாதனைகள் படைக்கப்படுகின்றன... ஆனால்?!

சச்சின் அத்தனைக்கும் ஈடு கொடுத்தார். அக்தரின் வேகத்துக்கும், அக்ரமின் ஸ்விங்கிற்கும் ஈடு கொடுத்தது மட்டுமல்ல சச்சினின் சாதனை. இத்தனை கோடி மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புக்கும் அவர் ஈடு கொடுத்தார்.

Published:Updated:
Sachin Birthday ( Vikatan )
லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் இன்று. அவர் செய்த சாதனைகள் ஏராளம். அதில் பல சாதனைகள் யாராலும் முறியடிக்க முடியாதவை. போட்டிகள், ரன்கள், சதங்கள் என்று பல சாதனைகள் இன்று வரை எட்ட முடியாத உயரத்தில் உள்ளன. இனியும் இருக்கப் போகிறது. ஆனால் இவ்வளவுதான் சச்சினா? சச்சினை மதிப்பிடு செய்ய வெறும் எண்கள்தான் மூலதனமா?

இல்லை. சச்சினை அளவீடு செய்ய இன்னமும் அளவுகோல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அவர் அடித்த ரன்களை அளந்து விடலாம். ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுமார் 24 ஆண்டுகளாக அவர் கொடுத்த சந்தோஷமான தருணங்களை எந்தத் தராசில் எடை போட முடியும்?

Happy birthday Sachin
Happy birthday Sachin

சச்சின் வாழ்க்கையில் கலந்தவர். கட்டிலில் படுத்துக் கொண்டு கவிதைத் தொகுப்பை புரட்ட நேரமில்லாத எத்தனையோ ஆட்களுக்கு சச்சினின் straight drive-தான் கவிதை. சிறு வயதில் ரோட்டோரம் கிரிக்கெட் ஆடுவதற்கே MRF ஸ்டிக்கர் ஒட்டிய பேட்தான் வேண்டும் என்று அடம்பிடித்தோமே... அப்போதிருந்து சச்சின் நமக்குள் கலந்தவர். LBW என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்னமே சச்சினை நமக்கு தெரியும்தானே! கிரிக்கெட் நமக்குள் புகும் முன்னமே சச்சின் நமக்குள் இருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு இசை நிகழ்ச்சியில் அரங்கிலிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து இளையராஜாவின் கண்ணே கலைமானே பாடலை ஒருசேரப் பாடுவார்கள். அந்த அரங்கிலிருந்த ஆட்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னை இருக்கும். அரங்கிலிருந்து வெளியே போன பின்னர் மறுபடியும் அதே அழுத்தம் நிறைந்த வாழ்வியலுக்குத்தான் திரும்பப் போகிறார்கள். ஆனால் அந்த கணம், அவர்கள் ஒருமித்த சிந்தனையில் இருந்தார்கள். அவர்களுக்கு இருக்கும் எல்லா பிரச்னையையும் கடந்து இளையராஜா என்ற ஒற்றை இசைஞானியை சுற்றியே அவர்களது சிந்தனை இருந்தது. அது போலதான் சச்சினும்!

அவர் ஆடிய காலம் முழுதும் `சச்சின்... சச்சின்...' என்ற ராகம் அனைத்து மக்களாலும் இசைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. கிரிக்கெட் விரும்பிகள் அனைவரின் பார்வையும் சச்சின் எனும் ஒற்றை ஆளுமையை நோக்கி இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல... கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம்.
Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கர்
Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கர்

சச்சின் அத்தனைக்கும் ஈடு கொடுத்தார். அக்தரின் வேகத்துக்கும், அக்ரமின் ஸ்விங்கிற்கும் ஈடு கொடுத்தது மட்டுமல்ல சச்சினின் சாதனை. இத்தனை கோடி மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புக்கும் அவர் ஈடு கொடுத்தார். ஒரு மேட்ச் அவர் வேகமாக அவுட் ஆகிவிட்டால், அடுத்த மேட்ச் அவர் மேல் இருக்கும் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமாகுமே தவிர குறைந்தது கிடையாது. ஐந்து உலகக்கோப்பைகளை அவர் தவறவிட்ட போதும் அவர் ஆடிய ஆறாவது உலகக்கோப்பையை உலகமே காத்திருந்து ரசித்தது. 2000களுக்கு முன்பு ஒற்றை ஆளாக இந்தியாவை தூக்கி சுமந்த சச்சினை ரசிகர்கள் எப்படி அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுப்பார்கள்? யாருமே அசைக்க முடியாத ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனி ஆளாகச் சண்டையிட்ட போர்த் தளபதி சச்சினை எப்படி ரசிகர்கள் மறக்க முடியும்?

"சச்சின் இருக்கான்... எப்படியும் ஜெயிக்க வச்சிருவான்" - பல கோடி பேரின் நம்பிக்கையல்லவா, இந்த வார்த்தைகள்?!

இத்தனை அழுத்தத்தையும் கடந்து சச்சின் சாதித்தார். எல்லா தடுப்புகளையும் தாண்டி ஓடும் குதிரை போல ஓடிக்கொண்டே இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி, நிச்சயம் சச்சினின் சாதனையை முறியடித்து விடுவார் என்று அனைவரும் நம்பினோம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று விராட் கோலியே தற்போது நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார். ஆறு மாதங்கள் முன்பு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்ற வருண் சக்ரவர்த்தி தற்போது இந்திய அணியில் இல்லை. கண் இமைக்கும் நேரத்தில் இந்தியாவில் ஒரு வீரரின் இடத்துக்கு மற்றொரு வீரரைக் கொண்டுவர முடியும். அப்படியிருந்தும் சச்சின் 24 ஆண்டு காலம் தொடர்ந்து விளையாடினார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.

Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கர்
Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கர்

ரேஷன் அட்டையில்தான் பெயர் இல்லையே தவிர நம் எல்லோரது வீட்டிலும் ஒரு நபர்தான் சச்சின். சாப்பிட்டு முடித்தவுடன் படிக்கச் செல்ல வேண்டும் என்று வீட்டில் அப்போது விதிமுறைகள் இருந்ததால், இரண்டு இட்லியை ஒரு மணி நேரமாகச் சாப்பிட வைத்தார் சச்சின். அப்பாவுடன், மாமாவுடன், நண்பர்களுடன் எனப் பலருடன் இணைந்து ஒன்றாக ரசித்த சச்சினின் ஆட்டங்கள் எத்தனையோ இருக்கின்றன. செய்தித்தாளை பின்பக்கத்தில் இருந்து புரட்டும் ஒரு சந்ததியே சச்சினால் உருவானதுதான். அவரது ஒவ்வொரு ஆட்டமும் திருவிழா. சாதி, மதம் எல்லாம் மறந்து ஒரு கணிசமான மக்கள் தொகையை சிறிய டிவி பெட்டிக்கு முன்பாக ஒட்டி உரசிக் கொண்டு நிற்க வைத்தது சச்சினின் ஆதிக்கம்.

சச்சின் ஒருவேளை தோல்வி அடைந்திருந்தால் 11, 12 வயதில் பேட்டை எடுக்க எந்தப் பெற்றோரும் சம்மதித்திருக்க மாட்டார்கள். கபில் தேவின் வெற்றி எப்படி மக்களை கிரிக்கெட் பார்க்க வைத்ததோ அது போல சச்சினின் வெற்றி பலரை கிரிக்கெட் ஆட வைத்தது. வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற எத்தனையோ பேர் வெளிநாடுகளில் இருந்தாலும் சச்சினை பார்த்துதான் பேட்டைத் தூக்கி இருக்கிறார்கள். ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு தலைமுறையையே கட்டமைத்த மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் சச்சின் மட்டும்தான்.

கபில் தேவ், சச்சின், அசாருதீன்
கபில் தேவ், சச்சின், அசாருதீன்

சச்சினுடன் சேர்ந்து நாமும் வளரந்து விட்டோம். தொலைக்காட்சியின் மதிப்பு குறைந்துவிட்டது. செய்தித்தாள், ரேடியோ எல்லாம் கடந்த தலைமுறையின் எச்சங்களாக மாறிவிட்டன. இந்தியாவில் கிரிக்கெட் மோகம் ஒன்றும் குறைந்து விடவில்லை. இப்போதும் சதங்கள் அடிக்கப்படுகின்றன. ரன்கள் குவிக்கப்படுகின்றன. ஆனாலும் கிரிக்கெட் மீது அப்போது இருந்த ஆர்வம் பலருக்கு இப்போது இல்லை.

`நாம் வளர்ந்து விட்டோம், அதற்கெல்லாம் நேரமில்லை' என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்... இப்போது சச்சின் இல்லை என்பதுதான் அதன் முதன்மை காரணமாக இருக்கும். ஃபேஸ்புக்கில் சச்சின் என்றோ ஆடிய அசத்தல் இன்னிங்ஸின் சில நிமிட வீடியோ க்ளிப் ஒன்று நம் நியூஸ்ஃபீடில் வந்தால், அதை முழுவதுமாகப் பார்க்காமல், அந்த ஆட்டத்தைப் பிரமிக்காமல், பழைய நினைவுகளை யோசிக்காமல், நம்மால் கடந்துபோய்விட முடியுமா? அதுதான் சச்சின்!