Published:Updated:

பவர் ப்ளே-2 : அஷ்வினை ஏன் விலக்குகிறார் விராட் கோலி... தலைசிறந்த ஸ்பின்னருக்கு நிரந்தர இடம் இல்லையா?

அஷ்வின் ( கார்த்திகேயன் மேடி )

பவர் ப்ளே - 2 : தினேஷ் அகிரா எழுதும் பவர் ப்ளே தொடரின் இரண்டாம் பகுதி இந்தியாவின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் கரியரை அலசுகிறது!

Published:Updated:

பவர் ப்ளே-2 : அஷ்வினை ஏன் விலக்குகிறார் விராட் கோலி... தலைசிறந்த ஸ்பின்னருக்கு நிரந்தர இடம் இல்லையா?

பவர் ப்ளே - 2 : தினேஷ் அகிரா எழுதும் பவர் ப்ளே தொடரின் இரண்டாம் பகுதி இந்தியாவின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் கரியரை அலசுகிறது!

அஷ்வின் ( கார்த்திகேயன் மேடி )

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இரண்டாம் இடம், குறைவான போட்டிகளில் 400 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களில் முதலிடம், அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்கள் வரிசையில் மூன்றாம் இடம். ஆனால் இன்று வரையில் டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு என்று ஒரு நிரந்தர இடம் கிடையாது!

கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களும் அஷ்வினுக்கு A to Z அத்துப்படி ; கிரிக்கெட் தொடர்பான ஆழ அகலமான வாசிப்பு கொண்டவர். சந்தேகம் இருந்தால் அவருடைய YouTube சேனலை ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். ஆனால் கேப்டன்சி வாய்ப்பு நியாயமே இல்லாமல் அஷ்வினுக்கு மறுக்கப்பட்டது ; குறைந்தபட்சம் துணைக் கேப்டன் பதவிக்கு கூட அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களும் 11 அரை சதங்களும் அடித்துள்ளார். ஆனால் ஆல்ரவுண்டர் பற்றிய உரையாடல்களில் அஷ்வினுடைய பெயரை கேப்டன் விராட் கோலி கவனமாக தவிர்த்து விடுகிறார். இப்படி ஆனால், ஆனால், ஆனால் என உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உண்மையில் பிரச்னை எங்குள்ளது: அஷ்வினிடமா? கோலி நிர்வாகத்திடமா?

கங்குலி, அஷ்வின், தோனி, கோலி
கங்குலி, அஷ்வின், தோனி, கோலி

அஷ்வினை வெறுக்கிறதா விராட் கோலியின் இந்திய அணி?

இதைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு சிறு ஃபிளாஷ்பேக். சிட்னி டெஸ்ட் போட்டியில் அஷ்வினை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் வம்புக்கு இழுத்ததை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். மறக்கக் கூடிய போட்டியா அது! அந்த காரசாரமான உரையாடலில் அஷ்வினின் பதிலடிகளை தாங்கிக் கொள்ள முடியாத பெய்ன் அவரை நோக்கி இன்னொரு அஸ்திரத்தை வீசுகிறார். "உன்னை விட இந்திய அணியில் உள்ளவர்களுடன் எனக்கு நட்பு அதிகம். உன் சக வீரர்கள் எல்லாம் உன்னை ஒரு வாத்து (Goose) போலத்தான் பார்க்கிறார்கள்!". ‘உன்னை ஒரு முட்டாளாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள்' என்றுதான் அஷ்வினைப் பார்த்து அன்று சொன்னார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.

அஷ்வினை இந்திய வீரர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி பெய்ன் சொன்னது உண்மையா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அஷ்வின் ரொம்பவும் முசுடானவர் ; பிறருடன் நட்பாக இருக்க மாட்டார் என்ற ஒரு பிம்பம் பொதுவெளியில் எப்படி உருவானது என்பதுதான் இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டியது.

அஷ்வின், சச்சின்
அஷ்வின், சச்சின்

சுழற்பந்து வீச்சாளர் யார்?

உண்மையில் அஷ்வின் எப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட்டர்? இதற்கான பதிலை தேடுவதற்கு முன்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கான அடிப்படை குணாதிசயங்களை பார்த்து விடுவது நல்லது. வேகப்பந்து வீச்சாளர்கள் தறிகெட்டு ஓடும் குதிரைகள் என்றால் இவர்கள் புத்திக் கூர்மையுள்ள யானைகள். இவர்களுக்கு வேகம் கிடையாது. ஆனால் அதனை ஈடுகட்ட ஆண்டவன் அவர்களின் கைகளில் ஒரு மந்திரக் கோலை கொடுத்துள்ளான். அதை வைத்து Drift, Dip, Flight என நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்கிறார்கள். பொதுவாக யார் சுழற்பந்து வீச்சை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்?

ருத்திராட்ச மாலை போல எந்நேரமும் பந்தை விரலிடுக்கில் வைத்து சுழற்றிக் கொண்டிருக்க பொறுமை உள்ளவராக இருக்க வேண்டும். பூப்போல நாலு எட்டு எடுத்து வைத்து பந்து வீசுவதிலும் ஒரு சாகசம் உண்டு என நம்புகிறவராக இருக்க வேண்டும். கொஞ்சமாவது கிரியேட்டிவிட்டியும் கற்பனை வளமும் கொண்டவர்கள் தானே இதனை விரும்பி ஏற்றுக் கொள்ள முடியும்! அதனால் தான் சுழற்பந்து வீச்சாளர்களில் பெரும்பான்மையினர் அகாடமிக் பின்புலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நல்ல கதை சொல்லிகள் ; ரிச்சி பெனாட் தொடங்கி ஷேன் வார்ன் வரை வர்ணனையில் ஜொலிக்கும் சுழலர்கள் அதிகம். அவர்களில் சில நல்ல மீடியாக்காரர்களும் உண்டு. ஆஸ்லி மாலெட் போல. அவர்களுடைய உரையாடல்களில் வெளிப்படுவது எல்லாம் cunning, deception, strategy போன்ற வார்த்தைகள் தான். சுழற்பந்து வீச்சாளர்களை கண்டால் ஏன் எல்லாரும் தெறித்து ஓடுகிறார்கள் என்று இப்போது புரிகிறதா?

அஷ்வின்
அஷ்வின்

இந்தியாவின் சுழல் பாரம்பரியம்!

சரி நாம் இப்போது அஷ்வினுக்கு வருவோம். மேற்சொன்ன எல்லா பாக்ஸ்களையும் அஷ்வின் டிக் செய்வதை பார்க்கலாம். சரி இந்திய சுழற்பந்து வீச்சு பாரம்பரியத்தில் அஷ்வினின் பாத்திரம் என்ன? இந்திய சுழலர்களை ஒரு வசதிக்காக இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இது ஒரு வசதிக்கான ஏற்பாடு மட்டும்தான். இந்திய சுழல் ஜாம்பவான்களில் ஒரு தரப்பினர் மிகவும் டாம்பீகம் கொண்டவர்கள். தங்களுடைய திறமை மீது அவர்களுக்கு ஒரு மிதமிஞ்சிய நம்பிக்கை உண்டு. இவர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு என்பது தீட்டுப்பட்டு விடக்கூடாத ஒரு சமாச்சாரம்.

‘’பந்தை ஃபிளாட்டாக வீசி விக்கெட் எடுப்பதை விட பந்தை flight செய்து பவுண்டரிக்கு விட்டுக் கொடுப்பது மேலானது'’ என பிஷன் சிங் பேடி கர்ஜித்தை மறக்க முடியுமா? இவர்கள் எல்லாரும் நிறுவனங்கள் மீதான தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாகப் போட்டு உடைப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் லட்சியவாதிகள். அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஐந்து வருடங்கள் கிரிக்கெட்டை ஒதுக்கிவிட்டு இன்ஜினீயரிங் படிக்க சென்றவர் எரப்பள்ளி பிரசன்னா.

அஷ்வினின் வழி தனி வழி!

இன்னொரு தரப்பினர் மிகவும் கொண்டாட்டம் நிறைந்தவர்கள். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல சாதனைகளை செய்ய முடியாதவர்கள். தங்களுடைய போதாமைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குபவர்கள். அளவுக்கதிகமாக தூஸ்ராவை உபயோகித்து தன்னுடைய ரிதத்தை கெடுத்துக் கொண்ட ஹர்பஜன் சிங் 'கிணத்தைக் காணோம் கிணத்தைக் காணோம்' என இன்றுவரைக்கும் பொருமிக் கொண்டு இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த கதைதான். அஷ்வினின் சிறப்பு என்ன தெரியுமா? அவர் இந்த இரண்டு தரப்பினரிடம் இருந்தும் கொஞ்சம் தள்ளியே நிற்கிறார்.

பேடி, பிரசன்னாவை போல அஷ்வினும் ஒரு கிளாசிக்கல் சுழற்பந்து வீச்சாளர்தான். ஆனால் Flight செய்து தான் விக்கெட் எடுப்பேன் என்றெல்லாம் அவர் அடம் பிடிப்பதில்லை. தூஸ்ரா பந்து வீச்சை அருவருப்பாக கருதும் அளவுக்கு அவர் ஒரு லட்சியவாதி. ஆனால், பேட்ஸ்மேன் எல்லை தாண்டும் போது மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய அவர் தயங்குவதில்லை. ஆரம்ப காலத்தில் தன்னுடைய ரெக்கார்டை காரணம் காட்டி வெளிநாட்டுத் தொடர்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது அஷ்வின் நிலைகுலைந்து போனது உண்மைதான். ஆனால் அதன் காரணமாக அவர் ஹர்பஜன் போல ஒப்பாரி வைக்கவோ நிறுவனங்களின் மீது அதிருப்தியை காட்டவோ செய்யவில்லை. மாறாக தன்னுடைய Analytical thinking மூலம் தன்னுடைய குறைகளை எல்லாம் களைந்து மீண்டு வந்தார்.

இன்றைக்கும் ஒரு கூட்டம் நாதன் லயான்தான் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் என சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்போது அதுபற்றி அஷ்வினிடம் கேட்டால் "ஓ… அப்படியா சரி சரி" என சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவார். சுருக்கமாக சொன்னால் அஷ்வின் ஒரு நடைமுறைவாதி. இதுவரைக்கும் பார்த்த விஷயங்களில் அஷ்வினிடம் ஒரு அழகிய முரண் தென்படுவதை உங்களால் உணர முடிகிறதா?

அஷ்வின்
அஷ்வின்

அஷ்வினின் அழகிய முரண்!


அஷ்வினின் அடிப்படையே இந்த அழகிய முரண்தான். அவர் செய்யும் எல்லா காரியங்களிலும் இதைப் பார்க்க முடியும். அவருடைய பேட்டிங்கை எடுத்துக் கொள்வோம். அஷ்வினின் வசீகரமான பேட்டிங் வி.வி.எஸ்.லக்ஷ்மனை நியாபகப்படுத்துக் கூடியது. அந்தளவுக்கு டைம் கொடுத்து அவர் பந்தை தட்டுவார். ஆனால், அவருடைய பேட்டிங் ஸ்டான்ஸை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். பாரம் சுமக்க முடியாமல் தடுமாறும் ஒரு முதியவர் போல பரிதாபமாக காட்சி தருவார்.

அடுத்த முரண் அவருடைய பந்துவீச்சு பாணி. அஷ்வின் ஒரு கிளாசிக்கல் ஆஃப் ஸ்பின்னர் தான். ஆனால், நாதன் லயானைப் போல சுதி சுத்தமான கிளாசிக்கல் ஆஃப் ஸ்பின்னர் அல்ல. வழக்கமான ஆஃப் ஸ்பின்னர்கள் 90 சதவிகிதம் தங்களுடைய ஸ்டாக் பாலான ஆஃப் ஸ்பின்னரை வீசுவார்கள். மீதம் 10 சதவிகிதம் Arm ball, Under cutter, Flipper, Top spinner போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட சில வஸ்துக்களை முயற்சிப்பார்கள்.

அஷ்வினோ தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தைகளையும் ஒரே சமயத்தில் இறக்கி வைக்கப் பார்ப்பார். இன்னொரு முக்கியமான முரண் அவருடைய பெளலிங் ஆக்ஷன். பொதுவாக கிளாசிக்கல் ஆஃப் ஸ்பின்னர்களின் ஆக்ஷன் side - on ஆகவிருக்கும். flight, drift, dip போன்ற சமாச்சாரங்களை பந்தில் ஏற்றுவதற்கு இந்த ஆக்ஷன் அவசியம். மேலும் அழகியல் ரீதியாகவும் side - on ஆக்ஷன் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். சமீப காலத்தில் நல்ல side - on ஆக்ஷனுக்கு இங்கிலாந்தின் முன்னாள் சுழலர் கிராம் ஸ்வானை உதாரணமாகச் சொல்லலாம். அஷ்வினோ chest - on ஆக்ஷன் கொண்டவர். அதனால் தான் அவருடைய ஆக்ஷன் பார்ப்பதற்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. ஆனால் இங்கு என்ன சுவாரசியம் என்றால் chest - on ஆக்ஷனை வைத்துக் கொண்டே அஷ்வினால் flight, drift, dip போன்றவற்றை சாதிக்க முடிகிறது.

Dip : பேட்ஸ்மேன் எதிர்பார்த்ததை விட குறைவான லென்த்தில் பந்தை விழ வைத்தல். இதன் காரணமாக பேட்ஸ்மேன் பந்தை misjudge செய்ய வாய்ப்புள்ளது.
Drift : பிட்ச் ஆவதற்கு முன்பாக பந்தை பக்கவாட்டில் காற்றில் திருப்புதல். இது பந்தை தவறான லைனில் பேட்ஸ்மேன் கணித்து ஆடும்படி செய்கிறது.
Flight : பந்து ரிலீஸ் ஆவதற்கும் பிட்ச் ஆவதற்கும் இடைப்பட்ட ஒரு பாதை ( curve). இது எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு கணித்து ஆடுவது சிரமம்.

சமீப காலத்தில் அஷ்வின் அளவுக்கு பெளலிங் ஆக்ஷனை தொடர்ந்து மாற்றியமைத்த ஒரு வீரரைப் பார்க்க முடியாது. பூனையைப் பார்த்து புலி சூடு போட்டுக் கொண்டது போல சுனில் நரைனை எல்லாம் கூட நகலெடுத்து பார்த்தார். இந்த லீலைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணம் அவருடைய அகாடமிக் பின்புலம். அடிப்படையில் இன்ஸ்ட்ருமென்டல் இன்ஜினீயர் என்பதால் Bio mechanics, Aerodynamics போன்ற துறைகளில் அவருக்கு ஒரு புரிதல் இருக்கிறது. ஏதாவது தவறாக போனால் உடனடியாக அதில் இருந்து மீண்டு வந்துவிட முடிகிறது. இதையெல்லாம் தாண்டி அஷ்வின் ஒரு connoisseur.

அணியில் இடமிருக்கிறதோ இல்லையோ அதுகுறித்து எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அஷ்வின் ஜாலியாக யூடியூபில் வீடியோ போட்டுக் கொண்டிருப்பதற்கு அவருடைய அறிவுசார் நடவடிக்கைகளும் முக்கிய காரணம். குறிப்பாக கொரோனா ஊரடங்கு அவருடைய ஆளுமையை வெகுவாக மாற்றியிருக்கிறது. கிரிக்கெட்டை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்ற புரிதல் அது. இவை எல்லாம் தெரிந்தோ தெரியாமலோ அஷ்வினுக்கும் சக வீரர்களுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கி இருக்கலாம். இதன் ஒரு பக்கத்தைத் தான் தப்பும் தவறுமாக புரிந்து கொண்டு டிம் பெய்ன் அஷ்வினை சிட்னியில் அவதுறாக பேசினார். அஷ்வினின் பக்குவத்துக்கு இன்னொரு முக்கிய காரணம் அவருடைய வயது. சர்வதேச கிரிக்கெட்டிற்குள் நுழையும்போதே அஷ்வின் 25 வயதை தொட்டிருந்தார் என்பதை மறந்துவிடக் கூடாது.

தன் ரசனைக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் அஷ்வின். எதையும் பூசி மொழுகாமல் வெளிப்படுத்தும் குணம் அவருடையது. கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து அஷ்வின் பாதியில் விலகியதுகூட இந்தப் புரிதலின் அடிப்படையில் தான். கொரோனா உச்சம் தொட்டுக்கொண்டிருந்தபோது மற்ற இந்திய கிரிக்கெட்டர்கள் எல்லாம் மென்று முழுங்கிக்கொண்டிருக்க முதல் இந்திய கிரிக்கெட்டராக பயோபபுளில் இருந்து வெளியேறியவர் அஷ்வின். குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கிரிக்கெட்டா குடும்பமா என்ற கேள்வி எழுந்த போது அஷ்வின்தன் குடும்பத்தின் பக்கம் நின்றார்.

அஷ்வினின் ரசிகர்
அஷ்வினின் ரசிகர்

விராட் கோலி VS அஷ்வின்

சரி விராட் கோலி ஏன் அஷ்வினைப் புறக்கணிக்கிறார்? இதற்கு பல்வேறு காரணங்கள் வதந்திகளாக உலாவுகின்றன. வதந்திகளைப் புறக்கணித்துவிட்டு பார்த்தால் ஒரு கேப்டன் தனக்குத் தோதான வீரர்களை வைத்து ஆட நினைப்பதில் எந்த தவறும் இல்லை. இன்னொரு முக்கியமான அம்சமும் இதில் உள்ளது. விராட் கோலி ஒரு இந்தியத் தன்மை கொண்ட கேப்டன் அல்ல. அவருக்கு லெக் ஸ்பின்னர்கள், இடக்கை சுழலர்கள் மீதிருக்கும் ஆர்வம் ஆஃப் ஸ்பின்னர்கள் மீது கிடையாது. வெளிநாட்டுத் தொடர்களின் போது இதனைத் தெளிவாகப் பார்க்கலாம். காலம் காலமாகவே லெக் ஸ்பின்னர்கள் தான் உசத்தி; ஆஃப் ஸ்பின்னர்கள் என்றாலே தற்காப்பு பந்து வீச்சாளர்கள் என்ற பார்வை கிரிக்கெட் வட்டாரத்தில் உண்டு. அதனால் தான் வார்னேவின் variation-களை இன்றைக்கும் சிலாகிக்கும் நாம் அஷ்வினின் variationகள் மீது பார்வையை திருப்புவதில்லை.

அடுத்த மாதம் (செப்டம்பர் 17) அஷ்வின் தன்னுடைய 35 வயதை தொடப் போகிறார். அவருடைய கிரிக்கெட் அத்தியாயம் முடிவை நெருங்கிக் கொண்டிருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. சுழற்பந்து வீச்சாளர்கள் வைனைப் போன்றவர்கள். அனுபவம் கூடும் போது தான் மதிப்பும் கூடும். உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னரான ஜிம் லேக்கர் தன்னுடைய சாதனை ஸ்பெல்லான 19-90-ஐ நிகழ்த்திய போது அவருடைய வயது 34. இன்னும் செய்ய வேண்டிய சாதனைகள் நிறைய இருக்கிறது. Come on Ash!