Published:Updated:

Ravichandran Ashwin: ஆளுமை, அனுபவம், திறமை! எல்லாம் இருந்தும் ஓரங்கட்டப்படுகிறாரா அஷ்வின்?

Ravi Ashwin

இங்கே விவாதிக்கப்பட வேண்டியது ராகுலோ அவருடைய ஃபார்மோ அல்ல. இந்த இந்திய அணிக்கு துணை கேப்டனை ஏன் அறிவிக்கவில்லை என்பதைத்தான் முக்கியமாக கேட்க வேண்டியிருக்கிறது. ராகுலைத் தவிர்த்து அணியில் வேறு யாருக்குமே அந்தத் துணை கேப்டன் பதவியை ஏற்கத் தகுதியே இல்லையா?

Published:Updated:

Ravichandran Ashwin: ஆளுமை, அனுபவம், திறமை! எல்லாம் இருந்தும் ஓரங்கட்டப்படுகிறாரா அஷ்வின்?

இங்கே விவாதிக்கப்பட வேண்டியது ராகுலோ அவருடைய ஃபார்மோ அல்ல. இந்த இந்திய அணிக்கு துணை கேப்டனை ஏன் அறிவிக்கவில்லை என்பதைத்தான் முக்கியமாக கேட்க வேண்டியிருக்கிறது. ராகுலைத் தவிர்த்து அணியில் வேறு யாருக்குமே அந்தத் துணை கேப்டன் பதவியை ஏற்கத் தகுதியே இல்லையா?

Ravi Ashwin
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி பெரும் உத்வேகத்தோடு ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியால் இம்மியளவு கூட ஆதிக்கத்தை வெளிக்காட்ட முடியவில்லை. இப்படி ஒரு சமயத்தில் விமர்சனங்கள், கேள்விகள் என அத்தனையுமே ஆஸ்திரேலிய அணியை நோக்கியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், நடைபெறும் நிகழ்வுகள் அதற்கு நேர்மாறாக இந்திய அணியை நோக்கியே கேள்விகளை வீச வைத்திருக்கின்றன.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே முதலில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் கேப்டன், ராகுல் துணை கேப்டன். இவர்கள் தலைமையில் ஓர் அணி. இப்போது இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துவிட்ட நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் ரோஹித்தான் கேப்டன். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இங்கே இந்த அணிக்கு துணை கேப்டனே கிடையாது. ஆம், ராகுலின் துணை கேப்டன் பதவியைப் பறித்திருக்கிறார்கள். அதற்கு அவரின் மோசமான ஃபார்ம் ஒரு முக்கிய காரணம். துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் மூலம் லெவனில் ராகுலின் இடமும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

ரவி அஷ்வின்
ரவி அஷ்வின்

ஆனால், இங்கே விவாதிக்கப்பட வேண்டியது ராகுலோ அவருடைய ஃபார்மோ அல்ல. இந்த இந்திய அணிக்கு துணை கேப்டனை ஏன் அறிவிக்கவில்லை என்பதைத்தான் முக்கியமாக கேட்க வேண்டியிருக்கிறது. ராகுலைத் தவிர்த்து அணியில் வேறு யாருக்குமே அந்தத் துணை கேப்டன் பதவியை ஏற்கத் தகுதியே இல்லையா? கில், ஸ்ரேயாஸ், சிராஜ், சூர்யகுமார் யாதவ் இதுபோன்ற வீரர்களெல்லாம் அனுபவமில்லாதவர்கள் என அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமென நினைத்திருக்கலாம். 

ஆனால், இவர்களைத் தாண்டி அஷ்வின், ஜடேஜா, புஜாரா என சீனியர்களும் குறிப்பிடத்தகுந்த வகையில் இருக்கிறார்களே, இவர்களில் ஒருவருக்கு அந்த துணை கேப்டன் பதவியை வழங்கியிருக்கலாமே? இந்த மூவரிலும் குறிப்பாக நம்முடைய தமிழக வீரரான அஷ்வின் அந்த துணை கேப்டன் பதவிக்கு முழுக்க முழுக்க தகுதியானவரே!

ரவிச்சந்திரன் அஷ்வின் வழக்கமான வீரர்களை போல அல்லாமல் ஒரு 'Think Tank' என்ற வகையறாக்குள் அவரை நம்மால் எளிதில் கொண்டு வர முடியும். இதை அவருடைய பந்து வீசும் பாணியிலிருந்தே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். யாருடைய வழிக்காட்டலும் இன்றி பேட்டரை அவுட்டாக்கும் வித்தை அவருக்குத் தெரியும். தானாகவே பல வழிகளையும் யோசித்து முயன்று பார்த்து, தோற்று, மீண்டும் மீண்டும் முயன்று இறுதியில் வெல்வார். அவருக்கு பிட்ச்சுடைய உதவி பெரிதாக தேவையில்லை. வானிலை ஒரு பொருட்டல்ல. உடன் ஒத்துழைத்து விக்கெட்டுக்காக செட் செய்ய ஸ்பெல் போடும் பௌலர்கள் தேவையில்லை. இப்படி எதுவுமே இல்லாமலே கூட அவரால் சிறப்பாகச் செயல்பட முடியும்.

அஷ்வின்
அஷ்வின்
நடப்புத் தொடரிலுமே கூட லபுஷேனுக்கும் ஸ்மித்துக்கும் சீம் பொசிஷனில் அவர் காட்டிய வேரியேஷனையும் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவில் கொள்ளுங்கள். அஷ்வினை ஏன் Think Tank என சொல்கிறேன் என்பதற்கான பதில் அதில்தான் இருக்கிறது.

பௌலிங் திறமையைத் தாண்டி ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாகவும் இந்தியாவுக்குத் திறம்பட பங்காற்றியிருக்கிறார். எத்தனை தோல்விகளிலிருந்து அவரின் பொறுமையான டிபென்சிவ் இன்னிங்ஸ் அணியைக் காப்பாற்றியிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒருநாள், டி20 போட்டிகளில் எப்படியோ, ஆனால் டெஸ்ட் என்று வந்துவிட்டால் அஷ்வின் நிச்சயமாக ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் என்பதைத் தரவுகளே சொல்லும்.

ஒரு ஆளுமையாகவுமே அணிக்காக முன் நின்று சமரசமில்லாமல் போராடும் குணம் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேல் அவருக்கு அசாத்தியங்களின் மீது எப்போதுமே பெரும் நம்பிக்கை உண்டு. எந்தச் சவாலையும் மலைப்பாக பார்க்கும் எண்ணம் அவரிடம் அரவே இருக்காது. இதையெல்லாம் பல சமயங்களில் நாமே கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். திறமை மட்டுமில்லை 10 ஆண்டுகளைக் கடந்தும் இந்திய அணிக்காக இன்றும் வீரியமாக ஆடி வருகிறார். இந்த அனுபவத்திற்கே தனி மதிப்பைக் கொடுக்கலாம்.

ஆனாலும், அஷ்வின் அவர் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை எட்டியிருக்கிறாரா எனில் இல்லவே இல்லை என்பதுதான் பதில். தலைமைப் பொறுப்பில் ஓர் இடம் காலியாக இருக்கிறதெனில் சந்தேகமே இல்லாமல் அஷ்வினை அந்த இடத்திற்குப் பரிசீலனை செய்யலாம். ஆனால், இந்திய அணி நிர்வாகம் இதுவரை அப்படிச் செய்ததே இல்லை. இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் அஷ்வின் அறிமுகமானார். அந்தச் சமயத்திலேயே கோலிதான் அடுத்த கேப்டன் என்பது உறுதியாகியிருந்ததால் அஷ்வின் தலைமைப் பொறுப்பை நோக்கி நகர்த்தப்படாதது பெரிய குறையாகவே இல்லை. அதற்கடுத்து கோலி கேப்டன் ஆனார். கோலிக்கு ரஹானே துணை கேப்டன். இதுவும் பெரிதாக விமர்சனமில்லாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணிதான்.

Ajinkya Rahane, Rohit Sharma and Virat Kohli
Ajinkya Rahane, Rohit Sharma and Virat Kohli
ஆனால், இந்தக் கூட்டணியின் காலம் முடிந்த பிறகுமே கூட அஷ்வினைத் தலைமைப் பொறுப்பை நோக்கி நிர்வாகம் நகர்த்தாததுதான் விமர்சனத்தை முன் வைக்க தூண்டுகிறது.

ரஹானேவின் தொடர்ச்சியான மோசமான ஃபார்ம் காரணமாக அவரின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்ட போது, அவருக்கு மாற்றாக அந்த துணை கேப்டன் பதவியில் ரோஹித் சர்மாதான் அமர வைக்கப்பட்டார். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் போட்டியோடு கோலி இந்தியாவிற்குத் திரும்பி, அடுத்தடுத்த போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாகியிருந்தாரே... அப்போதுமே கூட ரோஹித்தைதான் அணியின் துணை கேப்டன் ஆக்கினார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், அந்த பார்டர் - கவாஸ்கர் தொடர் சமயத்திலெல்லாம் ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர தேர்வாகவே இருந்திருக்கவில்லை. அதுவரை வெளிநாடுகளில் தன்னைப் பெரிதாக நிரூபிக்காத வீரராகவே இருந்தார். ஒயிட்பால் ஹேங் ஓவரோடு டெஸ்ட் ஆடும் அரைகுறை வீரராகவே பார்க்கப்பட்டார். அப்படியிருந்த நிலையில் கூட எந்தத் தயக்கமுமே இல்லாமல் ரோஹித்தை தலைமைப் பொறுப்பை நோக்கி நகர்த்தினார்கள். சரி, கோலியின் தலைமைக் காலம் முடிந்த பிறகாவது அஷ்வின் பக்கம் பார்வையைத் திருப்புவார்களா எனப் பார்த்தால், அதுவும் இல்லை. அப்போதும் ரோஹித்தை கேப்டனாக்கிவிட்டு ராகுலைத்தான் துணை கேப்டனாக்கினார்கள்.

இப்போது ராகுலைப் பதவியை விட்டு நீக்கியிருக்கிறார்கள். இப்போதாவது வேறு வழியில்லாமல் அஷ்வினிடம் வருவார்கள் என எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இந்தத் தொடருக்காக அணியின் துணை கேப்டனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொறுப்பை ரோஹித்திடமே நிர்வாகம் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ரோஹித்துமே அஷ்வினை டிக் அடிப்பாரா என்பது சந்தேகமே.
அஷ்வின்
அஷ்வின்

ஒரு பந்துவீச்சாளரை அணியின் தலைமையை நோக்கி நகர்த்துவதில் எதுவும் மனத்தடை இருக்கக்கூடும் எனத் தோன்றலாம். ஆனால், ஒரு பௌலர் அணியின் தலைமைப் பொறுப்பில் இருப்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதில்லையே. சமீபத்திய தேர்வுக்குழுவும் நிர்வாகமுமே கூட பும்ராவை கேப்டனாக்கி அழகு பார்த்திருந்ததே. கேப்டன் பதவிக்கு பும்ராவைவிட அஷ்வின் தகுதியானவர் என்பதை யாரேனும் மறுத்துவிட முடியுமா? எனில், அஷ்வினை அந்தத் தலைமைப் பொறுப்பை நோக்கி நகர்த்துவதில் என்ன தயக்கம்?

இதையெல்லாம் பார்க்கையில் ஆளுமை, திறமை, அனுபவம் என அத்தனையும் இருந்தும் அஷ்வின் ஓரங்கட்டப்படுகிறாரோ எனும் எண்ணம் மேலெழுவதை தவிர்க்க முடியவில்லை.