Published:Updated:

மீண்டும் இந்திய டெஸ்ட் டீமில் பிரித்வி ஷா… யாருக்கு செக் வைக்கப்போகிறது கோலி - சாஸ்திரி கூட்டணி?

ஷுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலக பிரித்வி ஷாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது கோலி-சாஸ்திரி கூட்டணி.

ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மிக மோசமான வரலாறு படைத்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடியவர் ப்ரித்வி ஷா. முதல் இன்னிங்ஸில் 0, இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன் என இந்தியாவின் சரிவின் தொடக்கமாக இருந்தவர் என்பதால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ப்ரித்வி ஷா.

ஃபார்ம் அவுட், டெக்னிக்கல் கோளாறு என பல பிரச்னைகளால் அணியிலிருந்து டிராப் செய்யப்பட்ட பிரித்வி ஷா-வை மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்த்திருக்கிறது கோலி- ரவி சாஸ்திரி கூட்டணி! இங்கிலாந்தில் விளையாட வேறு திறமையான ஓப்பனிங் பேட்ஸ்மேன்களே இந்தியாவில் இல்லையா, ஏன் இந்த திடீர் முடிவு!

இந்திய அணியில் ப்ரித்வி ஷா!

2018-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு அதிரடியாக அறிமுகமாகி இருந்தார் பிரித்வி ஷா. ஆடிய முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்திருந்தார். சச்சின்+ஷேவாக்+அசாருதின் சேர்ந்து செய்த கலவை என ஏகத்துக்கும் புகழப்பட்டார். இனிமேல் இவர்தான் இந்திய அணியின் நிரந்தரமான ஓப்பனர் என நினைத்துக் கொண்டிருக்க, ஃபார்ம் அவுட் ஆகி சொதப்பினார்.

பிரித்வி ஷா
பிரித்வி ஷா

ஃபார்ம் அவுட் என்பதை தாண்டி பிரித்வியின் டெக்னிக்கில் ஏகப்பட்ட குறைகள் இருந்தது. ஷாட் ஆடும் போது பின்னங்காலை சரியான பொசிஷனில் வைக்க முடியாமல் தடுமாறினார். பேட்டுக்கும் பேடுக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகமாக இருந்தது. இதனால், மிக எளிதாக இன்கம்மிங் டெலிவரிக்களில் ஒரே மாதிரியாக பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் பந்தை வாங்கி அவுட் ஆனார். மேலும், பந்துகளை லீவ் செய்வதிலும் தடுமாறினார். லிமிட்டெட் ஓவர் போட்டிகள் போன்று எல்லா பந்தையும் பேட்டால் தொட்டு ரிஸ்க் எடுத்தார்.

இதெல்லாம் இந்தியாவில் அவர் ஆடிய சில போட்டிகளில் பெரிய பிரச்னையாக தெரியவில்லை. ஆனால், பந்து நன்கு மூவ் ஆகும் வெளிநாட்டு பிட்ச்களில் பிரித்வியின் டெக்னிக்கல் கோளாறுகள் அப்பட்டமாக தெரிந்தது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓப்பனராக இறங்கி சொதப்பி இருந்தார். 2020 கொரோனா பரவல் மற்றும் லாக்டெளனுக்கு முன்பு கடைசியாக நடந்த தொடர் இதுதான்.

லாக்டெளனுக்குப் பிறகு, நேராக ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. இதிலும், கடுமையாகவே சொதப்பி இருந்தார். இந்த 2020 ஐபிஎல் சீசனில் ரொம்ப சுமாராக ஆடி 228 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் கவாஸ்கர் சீரிஸுக்கு இந்திய அணி சென்றது. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடி இருந்தது இந்திய அணி. இதிலும், பிரித்வி ஷாவின் ஆட்டம் எடுபடவில்லை.

நியூசிலாந்து சீரிஸில் ஏமாற்றம், ஐபிஎல்-ல் சொதப்பல், பயிற்சி போட்டியில் திணறல் என முழுமையாக ஃபார்ம் அவுட் ஆகியிருந்தார் பிரித்வி. ஃபார்ம் அவுட் என்பதை தாண்டி, அவருடைய டெக்னிக்கில் அடிப்படையான சில விஷயங்களே மாற்றப்பட வேண்டியிருந்தது. இப்படி ஒரு நிலையில் இருக்கும் வீரர் மீது கோலி இயல்பாக எந்த நம்பிக்கையும் வைக்கமாட்டார். ஒரு போட்டி, ஒரு சீரிஸில் சொதப்பினாலே ஓரங்கட்டிவிடும் கோலி, பிரித்வி ஷா மீது மட்டும் ரிஸ்க் எடுத்து நம்பிக்கை வைத்தார். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் பிரித்வி ஷாவையே ஓப்பனராக இறக்கிவிட்டார்.

#AUSvIND | Prithvi Shaw
#AUSvIND | Prithvi Shaw

ஆனால், கோலி நம்பிக்கையை மொத்தமாக காலி செய்திருந்தார் பிரித்வி ஷா. "இப்படித்தான் அவுட் ஆவார் பாருங்கள்" என கமென்ட்ரி பாக்ஸில் ரிக்கி பான்ட்டிங் பேசிக்கொண்டிருக்க, அவர் பேசியதை போன்றே ஃபுட் ஒர்க் இல்லாமல் பேட்டுக்கும் பேடுக்கும் இடையேயான இடைவெளியில் பந்தை வாங்கி போல்டானார். இரண்டு இன்னிங்சிலும் அப்படியே அச்சு பிசகாமல் ஒரே மாதிரியே அவுட் ஆகியிருந்தார் பிரித்வி. இந்த போட்டியில் தான் இந்திய அணி 36 ரன்களுக்கு மோசமான முறையில் ஆல் அவுட் ஆனது.

கோலி இந்தியாவுக்கு கிளம்பிவிட, ரஹானே கைக்கு கேப்டன்சி போக அவர் ப்ரித்வி ஷாவை பென்ச்சில் வைத்தார். ரவி சாஸ்திரியையும் பிரித்வி ஷாவையும் வைத்து கேலியும் கிண்டலுமாக ட்ரோல்கள் பறந்தன. இங்கிலாந்துக்கு எதிரான ஹோம் சீரிஸில் டிராப் செய்யப்பட்டார் பிரித்வி.

அணியிலிருந்து விலக்கம், ஃபார்ம் அவுட், கிண்டல் கேலிகள் எல்லாம் சேர்ந்து பிரித்வி ஷா-வை பயங்கர மன உளைச்சலுக்குள் தள்ளியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இரண்டே மாதங்களில் மீண்டு வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிப்ரவரி-மார்ச்சில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தன் மீதான விமர்சனங்கள் அத்தனைக்கும் பதிலடி கொடுத்தார். இந்த தொடரில் மட்டும் 4 சதங்கள், ஒரு இரட்டை சதம் உட்பட 827 ரன்கள் சேர்த்து மீண்டும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் 2021- சீசனிலும் 7 போட்டிகளில் 300+ ரன்களை அடித்து தன்னுடைய திறனை நிரூபித்துக் காண்பித்தார்.

இந்நிலையில்தான், ஷுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலக பிரித்வி ஷாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது கோலி-சாஸ்திரி கூட்டணி. இப்போது இலங்கையில் இருக்கும் பிரித்வி ஷா சீக்கிரம் இங்கிலாந்துக்கு பறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் ஏற்கனவே ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், ரிசர்வ் வீரரான அபிமன்யு ஈஸ்வரன் என நான்கு ஓப்பனர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பிசிசிஐ ஏன் பிரித்வி ஷா-வையும் அழைக்க வேண்டும் என சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. முக்கியமாக கபில்தேவ் ‘’அணியில் ஏற்கெனவே தேவையான வீரர்கள் இருக்கும்போது வேறொரு வீரரை அழைப்பது மற்ற வீரர்களை அவமானப்படுத்துவதாகும். தேர்வுக்குழுவினருக்கும் கொஞ்சம் மரியாதை கொடுங்கள். எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்வீர்கள் என்றால் தேர்வுக்குழு எதற்கு?'’ என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ரவி சாஸ்திரி, கோலி
ரவி சாஸ்திரி, கோலி
Twitter

ஏற்கெனவே நான்கு ஓப்பனர்கள் இருக்கும் போது பிரித்வி ஷா எதற்கு என்கிற கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. இது கோலி-சாஸ்திரி கூட்டணிக்குமே தெரியும். அப்படியெனில் பிரித்வி ஷாவுக்கான அவர்களின் திட்டம் என்ன?

வெளிநாட்டு மைதானங்களில் ரோஹித் ஷர்மாவின் ஆவரேஜ் 27 என்ற அளவிலேயே இருக்கிறது. ஒயிட் பால் ஹேங் ஓவரோடு டெஸ்ட் கிரிக்கெட் ஆடி தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரை வைத்து 5 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் சமாளித்துவிட முடியுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கலாம். முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சொதப்பும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அவரைப்போன்றே அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடும் பிரித்வி ஷாவை இறக்கலாம் என்பது ஒரு திட்டமாக இருக்கலாம்.

புஜாராவின் கேம்பிளான் அணிக்கு உதவாத அணுகுமுறையா? துணிச்சல் வேண்டும் என யாரைக் குறிப்பிடுகிறார் கோலி?

ஒருவேளை ரோஹித் சிறப்பாக ஆடினால், இன்னொரு எண்ட்டில் மயங்க் அகர்வால் அல்லது கே.எல்.ராகுலுக்கு பேக் அப்பாக பிரித்வி ஷாவை பயன்படுத்தலாம் என்கிற திட்டமும் இருக்கலாம். கே.எல்.ராகுல் கொஞ்ச காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டே ஆடவில்லை. மயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய சீரிஸில் ஃபார்ம் அவுட் ஆனவர். இதனால் இவர்கள் இருவர் மீதுமே கோலிக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை.

பிரித்வி ஷா
பிரித்வி ஷா
AP

"புஜாராவின் இடத்தில் பிரித்வி ஷா ஆடினால் நன்றாக இருக்கும்" என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பையும் புறந்தள்ளிவிட முடியாது. நியூசிலாந்துடனான தோல்விக்குப் பிறகு நடந்த பிரஸ்மீட்டில் "பயமின்றி துணிச்சலாக பாசிட்டிவ் கிரிக்கெட் ஆடும் வீரர்களே தேவை" என புஜாராவை சீண்டி இருந்தார் கோலி. அதனால், பிரித்வி ஷாவை ஒன் டவுனில் இறக்கும் திட்டமும் கூட இருக்கலாம்.

பிரித்வி ஷா தன்னுடைய டெக்னிக்கல் குறைபாடுகளில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டாரா என்பது அவர் ரெட்பால் கிரிக்கெட் ஆடும்போதுதான் முழுமையாக தெரியும். ஆனாலும், கோலி அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அணிக்கு அழைத்திருக்கிறார். இந்த முறையாவது கோலியின் நம்பிக்கையை பிரித்வி ஷா காப்பாற்றுவாரா எனப் பார்க்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு