Published:Updated:

ஒவ்வொரு வெஸ்ட் இண்டியனுக்கும் ஒரு கதை இருக்கும்... ஆனால், இந்த பொலார்ட் கதை வேற மாதிரி! #HBDPollard

pollard
pollard

பொல்லார்ட் நிறைய அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். ஆனால், அந்த அதிரடிக்கெல்லாம் விதையாக அமைந்தது இந்த இன்னிங்ஸ்தான்.

அக்டோபர் 16, 2009. ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானம். முதல் சீஸன் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் 15-வது போட்டி அது. சுமார் 10 மணி இருக்கும்... மைதானமே அமைதியில் உரைந்து போயிருந்தது. பந்துகள் பவுண்டரியின் பக்கமே வராததுதான் ரசிகர்களின் அமைதிக்குக் காரணம். நியூ சவுத் வேல்ஸ் அணி, டிரினிடாட் & டொபாக்கோ அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 170 ரன்களைக் குவித்துவிட்டு அதைச் சிறப்பாக டிஃபன்ட் செய்து கொண்டிருந்தது. 13 ஓவர்கள் முடிவில் 91 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது டிரினிடாட் அணி.

இந்தச் சமயத்தில்தான் இந்தக் கட்டுரையின் நாயகன் கெய்ரான் பொல்லார்ட் மைதானத்துக்குள் என்ட்ரி கொடுத்தார். அவர் என்ட்ரியின்போது டிரினிடாட் அணி வெற்றி பெற 42 பந்துகளில் 80 ரன்கள் தேவைப்பட்டன. 7 ஓவர்களில் 80 ரன்கள் அடிப்பதென்பது 2009-ம் ஆண்டில் கடினமான இலக்குதான். அதுவும் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட அணிக்கு மிகவும் கடினம்.

Pollard
Pollard
TKRiders/Twitter

பொல்லார்ட் களத்துக்கு வந்த பின்னர், வீசப்பட்ட முதல் இரண்டு ஓவர்களிலும் அவர் அமைதி காட்ட, தினேஷ் ராம்தின் அதிரடி காட்டினார். ராம்தின் புண்ணியத்தில் டிரினிடாட் அணிக்கு அந்த இரண்டு ஓவர்களையும் சேர்த்து 25 ரன்கள் கிடைத்தன. அமைதியாக இருந்த மைதானத்தில் ஆங்காங்கே கைதட்டல் சத்தம் கேட்கத் தொடங்கியது. அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் ராம்தின் அவுட் ஆகி வெளியேற, அந்த ஓவரில் டிரினிடாட் அணிக்கு வெறும் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியது மைதானம்.

24 பந்துகளில் 51 ரன்கள் தேவை. 2 ஓவர்களில் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்திருந்த மோய்சஸ் ஹென்ரிக்ஸ் அடுத்த ஓவரை வீச வந்தார். இந்த மேட்ச் நியூ சவுத் வேல்ஸ் வசம்தான் என்று அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை, அடுத்த 5 நிமிடங்களுக்குச் சத்தம் குறையாமல் ஆர்ப்பரிக்கச் செய்தார் பொல்லார்ட். 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் என அந்த ஒரு ஓவரில் மட்டும் 27 ரன்கள் டிரினிடாட் அணிக்கு கிடைத்தது. டீப் மிட் விக்கெட், டீப் ஸ்கொயர் லெக், ஃபைன் லெக் என 3 திசைகளுக்கு மேலும் இமாலய சிக்ஸர்களைக் காட்டி ரசிகர்களுக்கு கேட்சிங் ப்ராக்டிஸ் கொடுத்தார் பொல்லார்ட்.

முதல் ஸ்பெல்லில் நன்றாகப் பந்து வீசி விக்கெட் எடுத்த ஒரு பெளலரை, அவரது இரண்டாவது ஸ்பெல்லில் துவைத்தெடுப்பது ஒரு தனி உற்சாகம்தான்!
Pollard
Pollard
Twitter- t10 league

அடுத்து பிரட் லீ வீசிய ஓவரில் 2 பந்துகள் மட்டுமே பொல்லார்டுக்கு கிடைத்ததால் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்களை மட்டும் எடுத்தார் அவர். கடைசி 12 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே தேவை என்றிருந்தது. மீண்டும் பொல்லார்டை எதிர்கொள்ள வந்தார் ஹென்ரிக்ஸ். மூன்றே பந்துகளில் 2 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் மேட்ச்சை முடித்தார் பொல்லார்ட்.

பவுண்டரியின் பக்கமே பந்து வராமல் அமைதியாக இருந்த மைதானத்தில், பவுண்டரிக்கு மட்டுமே பந்துகளை அனுப்பி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார் பொல்லார்ட்!

காட்டடி, பேயடி என்று பேச்சு வாக்கில் சொல்லப்படும் வார்த்தைகளுக்கு அர்த்தம் இதுதான் என்பதாக இருந்தது கெய்ரான் பொல்லார்டின் அன்றைய இன்னிங்ஸ்! அவர் அன்று சந்தித்தது 18 பந்துகளாக இருந்தாலும், ஹென்ரிக்ஸின் உதவியோடு வெறும் பத்தே பந்துகளில் 50 ரன்கள் விளாசியிருந்தார். ஆம், பொல்லார்டின் இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இந்த 10 பந்துகளில் ஹென்ரிக்ஸின் பங்கு 8 பந்துகள்.

Pollard
Pollard
@CPLTwitter

பொல்லார்ட் நிறைய அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். ஆனால், அந்த அதிரடிக்கெல்லாம் விதையாக அமைந்தது இந்த இன்னிங்ஸ்தான். ஹைதராபாத் மைதானத்தில் அன்று இரவு ஆடிய அதிரடி இன்னிங்ஸுக்கு முன்பு வரை பொல்லார்ட் என்ற 22 வயது இளைஞனை மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெளியே யாருக்கும் தெரியாது. அடுத்த நாள் வெளியான இந்தியச் செய்தித் தாள்களின் விளையாட்டுச் செய்திகள் பக்கத்தில் முக்கிய இடம் பிடித்தார் பொல்லார்ட். சில செய்தித் தாள்களில் முக்கிய கேள்வி ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு பொல்லார்டின் இன்னிங்ஸ் பற்றி எழுதப்பட்டிருந்தன.

ஹைதராபாத் மைதானத்தை சிக்ஸர் மழையால் நனைத்த அதிரடி மன்னன் பொல்லார்ட் ஐபிஎல் ஏலத்தில் விலை போகாதது ஏன்?
என்பதுதான் அந்தக் கேள்வி.

செய்தித் தாள்களில் இந்தக் கேள்வி வெளிவருவதற்கு முன்பாகவே ஐபிஎல் அணி நிர்வாகிகள் மனதில் இந்தக் கேள்வி ஓடத் தொடங்கியது. அன்றிரவு தான் ஆடிய இன்னிங்ஸ் மூலம் ஐபிஎல் அணி நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்தார் பொல்லார்ட்.

இந்தக் கவன ஈர்ப்பின் மூலம், 2009-ல் Unsold ப்ளேயராக இருந்த பொல்லார்டுக்கு அடுத்த ஆண்டே `2010 ஐபிஎல் சீஸனின் காஸ்ட்லியஸ்ட் ப்ளேயர்' என்ற பரிசு கிடைத்தது.

2009-ம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்னும் சில அதிரடி இன்னிங்ஸ்களையும் இமாலய சிக்ஸர்களையும் காட்டியிருந்தார் பொல்லார்ட். இதன் காரணமாக 2010 ஐபிஎல் ஏலத்தில் பொல்லார்டின் மவுசு எகிறியது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே பொல்லார்டை வாங்குவதில் மிகப் பெரிய போட்டி நடந்தது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 750,000 அமெரிக்க டாலர்களுக்கு பொல்லார்டை வாங்கியது. இது அன்றைய இந்திய மதிப்பில் சுமார் 3.5 கோடி ரூபாய்!

Pollard
Pollard
Twitter- t10 league

மேற்கிந்தியத் தீவுகளின் சர்வதேச கிரிக்கெட் அணிக்காக பொல்லார்ட் விளையாடியிருந்தாலும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்தாம். இதற்குக் காரணம் என்ன என்பதற்கு முன் இந்த பொலார்ட் யார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

பொல்லார்டின் இளமைப் பருவம்!

மேற்கிந்தியத் தீவுகளின் டிரினிடாட் & டொபாக்கோ தீவுப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் பொல்லார்ட். சிங்கிள் மதரான பொல்லார்டின் தாயார் ஹெசல் அன் பொல்லார்ட், இவரையும் இவரின் இரு தங்கைகளையும் வறுமையில் வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் பொல்லார்டின் குடும்பத்திற்கு 3 வேளை உணவு கிடைப்பதே பெரிய விஷயம். பசி, வறுமை ஆகிய இரண்டிலிருந்தும் மீள்வதற்கு பொல்லார்டுக்கு கை கொடுத்தது கிரிக்கெட் மட்டுமே. பொல்லார்ட் தன் குடும்பத்தின் வறுமை பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில்...

அந்தக் காலகட்டம் மிகவும் கஷ்டமானது. நம்மிடம் மிகச் சொற்ப பணமே உள்ளது என்று நம் அம்மா தினமும் சொல்லும் ஒரு சூழ்நிலையிலிருந்து வளர்ந்து வருவதென்பது மிகவும் கடினமானது.
கெய்ரான் பொல்லார்ட்

சர்வதேச கிரிக்கெட்டில் பொல்லார்ட்!

சிறு வயதிலிருந்து பேட் பாலோடு தெருக்களில் ஆடிய கிரிக்கெட், 2005-ம் ஆண்டில் அவருக்குக் கைகொடுத்தது. டிரினிடாட் & டொபாக்கோ ஜூனியர் அணிக்காக விளையாட அழைக்கப்பட்டார் பொல்லார்ட். சில நல்ல பெர்ஃபாமன்ஸுகளுக்குப் பின் மேற்கிந்தியத் தீவுகளின் ஜூனியர் அணிக்கு ஆட 2006-ம் ஆண்டு வாய்ப்புக் கிடைத்தது. கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக, தான் விளையாடிய முதல் போட்டியில் 17 பந்துகளைச் சந்தித்து 10 ரன்களை மட்டுமே சேர்த்ததால் அதன்பின் எந்தப் போட்டியிலும் பொல்லார்டுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2008-ம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக சில ஒருநாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் ஆடியிருந்தார். ஆனால், அந்தப் போட்டிகளில் எல்லாம் பொல்லார்ட் சுமாராகவே பர்ஃபாம் செய்திருந்தார். அதன்பின் அவருக்கான வாய்ப்புகள் சரியாக வழங்கப்படவில்லை. 2009 சாம்பியன்ஸ் லீக் தொடரில் பொல்லார்ட் அதிரடியாக விளையாடிய பின்புதான் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் போர்டே பொல்லார்டின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் வழங்கத் தொடங்கியது.

ஒருநாள் போட்டிகளில் 2011-ம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 119 ரன்கள் குவித்ததே சர்வதேச போட்டிகளில் பொல்லார்டின் சிறந்த இன்னிங்ஸ். உலகம் முழுக்க உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடியவர், சர்வதேச டி20 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு சாதனையும் செய்துவிடவில்லை. 73 சர்வதேச டி20-களில் ஆடியுள்ள பொல்லார்ட் வெறும் 4 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்வாகத்தோடு அடிக்கடி ஏற்படும் பிரச்னைகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பொல்லார்ட்
பொல்லார்ட்
500 டி20 போட்டிகளில் ஆடிய முதல் ப்ளேயர் பொல்லார்ட்!

மும்பையின் டார்லிங் பொல்லார்ட்?

மேற்கிந்தியத் தீவுகளின் சர்வதேச அணிக்காக விளையாடியிருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால்தான் பொல்லார்ட் அதிகம் கொண்டாடப்படுகிறார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக அவர் விளையாடிய ஒருநாள் போட்டிகளைவிட அதிக போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். ஆனால், மும்பை ரசிகர்களின் டார்லிங் ஆக பொல்லார்ட் விளங்குவதற்கு இதுவல்ல காரணம்.

அதிக போட்டிகளில் விளையாடியவர் என்பதற்காகவெல்லாம் ஒரு வீரரை ரசிகர்கள் கொண்டாடி விடுவார்களா என்ன? தன் அணிக்காக முழு அர்ப்பணிப்போடு விளையாடும் வீரர்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பார்கள். அப்படித்தான் பொல்லார்டும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்.

pollard
pollard
@mipaltan/Twitter
முதல் ரன், முதல் சிக்ஸ், முதல் சதம்... ஐபிஎல்-லில் CSK-வின் பேபி ஸ்டெப்ஸ்! #VikatanInfographics

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் போர்டோடு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாகத் தன்னை ஒரு ஃப்ரீலான்ஸ் டி20 கிரிக்கெட்டராக மாற்றிக்கொண்டார் பொல்லார்ட். உலகம் முழுக்க நடக்கும் டி20 லீக் போட்டிகளில் ஆடியிருக்கிறார் பொல்லார்ட். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷலாக இருந்து வருகிறது.

கெய்ரான் பொல்லார்ட்
கெய்ரான் பொல்லார்ட்
@mipaltan/Twitter

2010-ம் ஆண்டில் தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற கடைசி சீசன் வரை ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸுக்காக மட்டுமே ஆடியிருக்கிறார் பொல்லார்ட். அணி நிர்வாகம் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகத் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவரை வேறெந்த அணிக்கும் விட்டுத் தர முன்வரவில்லை. அதேபோல் பொல்லார்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வேறு அணிக்குச் செல்ல விரும்பவில்லை.

மேற்கிந்தியத் தீவுகளுக்காக பொல்லார்ட் ஆடிய ஒருநாள் போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் ஆகிய இரண்டையும் தனித் தனியாக எடுத்துக் கொண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆடியதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஐபிஎல்லில்தான் அதிக ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார் பொல்லார்ட்.

ஐபிஎல் vs சர்வதேச போட்டிகள் - பொல்லார்ட்
ஐபிஎல் vs சர்வதேச போட்டிகள் - பொல்லார்ட்
Vikatan Infographics

2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 17-வது ஓவர் முடிவில் களமிறங்கினார் பொல்லார்ட். 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 45 ரன்களைச் சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல ஃபினிஷிங் கொடுத்து முதன்முதலாக மும்பை ரசிகர்கள் மனதில் தடம் பதித்தார். அந்தப் போட்டிக்குப் பின்பு பேசிய சச்சின், பொல்லார்ட் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்.

டக் அவுட் முதல் குட்பை வரை... சச்சினின் பேட்டிங் கிராஃப் எப்படி இருந்தது?! #DataStory
Sachin & Pollard
Sachin & Pollard
பேட் ஸ்விங் மற்றும் பவர் ஆகிய இரண்டும் பொல்லார்டிடம் பிரமாதமாக இருக்கிறது. இதன் காரணமாக எவ்வளவு பெரிய மைதானத்திலும் அவர் சிக்ஸர்களை விளாசித் தள்ளுவார் என்பதில் சந்தேகமில்லை. முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆடுவார் என்றில்லாமல், தேவைக்கேற்ப அவர் தனது இன்னிங்ஸை மிக அழகாக வேகப்படுத்துகிறார்.
சச்சின் டெண்டுல்கர்

2010-ம் ஆண்டு ஐபிஎல்லில் பொல்லார்டின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அடுத்த இரண்டு சீஸனிலும் பொல்லார்ட் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. 2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது 420 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார் பொல்லார்ட். 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியபோதும் முறையே 419, 385 ரன்களைக் குவித்து, அணி கோப்பையைத் தட்டிச் செல்ல உறுதுணையாக இருந்தார் பொல்லார்ட்.

Pollard in IPL
Pollard in IPL
Vikatan Infographics

ஐபிஎல்லின் எல்லா சீஸன்களும் பொல்லார்டுக்கு நல்ல சீஸனாக அமைந்துவிடவில்லை. ஆனால், எல்லா சீஸன்களிலும் ஒரு மேட்சிலாவது பொளந்து கட்டிவிடுவார் மனிதர்! கடந்த சீஸனில்கூட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதகளமான இன்னிங்ஸை ஆடியிருந்தார் பொல்லார்ட்.

பொல்லார்ட்
பொல்லார்ட்
IPL/Twitter

மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக அந்தப் போட்டியில் விளையாடவில்லை. எனவே, சீனியர் ப்ளேயர் என்ற அடிப்படையில் கேப்டன் பொறுப்பு பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது. கடைசி 10 ஓவர்களில் 130 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்தார் பொல்லார்ட். எப்போதும் 5,6 டவுன்களில் இறங்கும் பொல்லார்ட் அன்றைக்கு முன்னமே இறங்கினார். 31 பந்துகளைச் சந்தித்தவர் 10 பந்துகளை சிக்ஸருக்கும் 3 பந்துகளை பவுண்டரிக்கும் அனுப்பி கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெளலர்களை டயர்டு ஆக்கினார். அன்று மாஸாக கேப்டன் இன்னிங்ஸ் ஆடி 83 ரன்களைக் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார் பொல்லார்ட்.

பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் சொதப்பினாலும், ஃபீல்டிங்கில் பொல்லார்ட் சொதப்பியதே இல்லை என்று சொல்லலாம். துல்லியமாகப் பந்துகளைப் பிடிப்பதில் வல்லவர் அவர்.

பொல்லார்ட்
பொல்லார்ட்
@mipaltan/Twitter

கடந்த ஆண்டுகூடச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரெய்னா ஆஃப் சைடில் சிக்ஸுக்கு அடித்தப் பந்தைத் தாவிக் குதித்து ஒற்றைக் கையில் பிடித்து சிக்ஸ் லைனுக்குள் விழுந்துவிடாமல் சிறப்பாக பேலன்ஸும் செய்து மிரட்டினார் பொல்லார்ட். ரசிகர்களிடையே அதிக வாக்குகளைப் பெற்று அந்த கேட்ச்க்காக, `ஐபிஎல் 2019-ன் சிறந்த கேட்ச்' என்ற விருதையும் தட்டிச் சென்றார் பொல்லார்ட்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கன்சிஸ்டன்டாக விளையாடவில்லை என்றாலும், பறந்து பாய்ந்து பந்துகளைப் பிடித்து வெறித்தனமாக ஃபீல்டிங் செய்திருக்கிறார். அணிக்குத் தேவைப்படும் நேரங்களில் ஆபத்பாந்தவனாக இருந்து விகெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பும் போது மிகக் குறைந்த பந்துகளில் பெரிய இன்னிங்ஸ்களை ஆடி அணியை மீட்டெடுத்திருக்கிறார். இந்தக் காரணங்களால்தான் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் டார்லிங்காக வலம் வருகிறார் பொல்லார்ட்!

பிறந்தநாள் வாழ்த்துகள் கெய்ரான் பொல்லார்ட்!
அடுத்த கட்டுரைக்கு