Published:Updated:

ஃபவாத் ஆலம் எனும் ஆச்சர்யம்... 10 வருட நிராகரிப்பு ஒரே சதத்தில் கரைந்தது எப்படி?! #FawadAlam

ஃபவாத் ஆலம்
ஃபவாத் ஆலம் ( Andrew Cornaga )

ரசிகர்கள் இந்த ஒரு சதத்திற்காக மட்டுமே ஃபவாத் ஆலமை கொண்டாடவில்லை. அந்த சதத்திற்கு ஒரு நீண்ட பிண்ணனி இருக்கிறது. அந்த பிண்ணனிதான் ஃபவாத் ஆலம் கொண்டாடப்படுவதற்கு காரணம். அது என்ன?

வில்லியம்சனின் மிரட்டலான சதம் மற்றும் எலும்புமுறிவோடு நீல் வாக்னர் வீசியப்பந்துகள் ஆகியவற்றால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து வென்றுள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்து அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இந்த விஷயத்துக்காக இணையத்தில் நியூசிலாந்து அணி ட்ரெண்டிங்கில் இருக்கும் போதே இன்னொரு பக்கம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் வீரர் ஒருவரும் கூடவே ட்ரெண்ட் ஆனார். தோல்வியடைந்த அணியின் ஒரு பெயர் தெரியாத வீரரை ரசிகர்கள் ஏன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்?
ஃபவாத் ஆலம்
ஃபவாத் ஆலம்
Andrew Cornaga

ரசிகர்கள் கொண்டாடும் அந்த வீரர் ஃபவாத் ஆலம். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வில்லியம்சனின் சதத்தால் 431 ரன்கள் எடுக்க, பதிலுக்கு பாகிஸ்தான் 239 ரன்களை மட்டுமே எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 180 ரன்கள் அடித்து டிக்ளேர் கொடுக்க, பாகிஸ்தான் வெல்வதற்கு 373 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முழுதாக நான்கு செஷன்கள் மீதமிருந்ததால் பாகிஸ்தானை நியூசிலாந்து எப்படியும் சுலபாக காலி செய்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதேமாதிரியே, பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்கள் ஷான் மசூத், ஆபித் அலி இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஹாரிஸ் சோஹைல், அசார் அலி இருவரும் கொஞ்சம் நேரம் மட்டும் நின்றுவிட்டு அவுட் ஆகிவிட்டனர். 75 ரன்னுக்குள் முதல் 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறத் தொடங்கியது. நியூசிலாந்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலை உண்டானது. இந்நிலையில்தான் கேப்டன் ரிஸ்வானுடன் கூட்டணி போட்டார் ஃபவாத் ஆலம். இருவரும் நின்று நிதானமாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை எப்படி கட்டமைக்க வேண்டும் என பாடமெடுக்கத் தொடங்கினர்.

வாக்னர், பவுல்ட், சவுத்தி என வேகத்தில் மிரட்டும் கிவிக்களை இருவரும் மிகச்சிறப்பாக கையாண்டனர். தோல்வி உறுதி என்றிருந்த ஆட்டத்தை டிராவை நோக்கி இருவரும் மாற்றத் தொடங்கினர். ஃபவாத் ஆலம் 269 பந்துகளில் 102 ரன்களை எடுக்க, ரிஸ்வான் 191 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் இருவரின் விக்கெட்டும் விழ நான்கு ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் போட்டியை டிரா ஆக்க முடியாமல் பாகிஸ்தான் தோற்றது. பாகிஸ்தான் இந்த அளவுக்கு சண்டை செய்து நியூசிலாந்தை பதற வைத்ததற்கு மிக முக்கிய காரணம் ஃபவாத் ஆலமின் ஆட்டம். ஆலம் இல்லையென்றால் பாகிஸ்தான் பொட்டிப்பாம்பாக அடங்கியிருக்கும். ஆனால், ரசிகர்கள் இந்த ஒரு சதத்திற்காக மட்டுமே ஃபவாத் ஆலமை கொண்டாடவில்லை. அந்த சதத்திற்கு ஒரு நீண்ட பிண்ணனி இருக்கிறது. அந்த பிண்ணனிதான் ஃபவாத் ஆலம் கொண்டாடப்படுவதற்கு காரணம்.

ஃபவாத் ஆலம் - தன்னுடைய ஆரம்பக் காலத்தில்...
ஃபவாத் ஆலம் - தன்னுடைய ஆரம்பக் காலத்தில்...

கிரிக்கெட்டில் ஒரு வீரர் சின்ன பிரேக்குக்குப் பிறகு கம்பேக் கொடுப்பது என்பது மிகப்பெரிய விஷயம். ஒரு சில வீரர்கள் மட்டுமே நீண்ட இடைவெளிக்குப் பிறகென்றாலும் அணிக்கு திரும்பி அதே பழைய ஃபார்மோடு ஆடி புகழைப் பெறுவர். பாகிஸ்தானின் ஃபவாத் ஆலமும் அந்த ஒரு சில வீரர்களின் பட்டியலில் இப்போது இடம்பிடித்திருக்கிறார். ஆனால், அவர் இன்னுமே கொஞ்சம் கூட ஸ்பெஷலானவர். ஏனெனில், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு அணிக்கு கம்பேக் கொடுத்து, 12 வருடங்களுக்கு பிறகு சதமடித்திருக்கிறார். கடந்த கால் நூற்றாண்டு கிரிக்கெட்டில் இவ்வளவு நீண்ட காலத்துக்குப் பிறகு தேசிய அணிக்கு கம்பேக் கொடுத்த வீரர் என்று ஃபவாத் ஆலமை தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.

ஃபவாத் ஆலம் ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால், அவரின் அறிமுகப் போட்டியிலேயே அவருக்கு அந்த இடம் கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆலமினால் 16 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அடுத்த இன்னிங்ஸில் அவர் பேட்டிங்குக்கு செல்வதற்கு முன்பாக அப்போதைய கேப்டன் யுனிஸ் கான் 'ஆலமின் முதல் சதத்திற்கு வாழ்த்துக்கள்' என ஒரு பந்தில் எழுதி அவரிடம் கொடுத்து நம்பிக்கையளிக்கும் வகையில் பேசிவிட்டு செல்ல, ஆலம் அந்த இன்னிங்ஸில் யுனிஸ் கான் வாழ்த்தியைதை போலவே தனது முதல் சதத்தையும் அடித்துவிட்டார். ஆடும் முதல் போட்டியிலேயே சதம் என்பதே ஒரு சாதனைதான். ஆனால், பாகிஸ்தான் அரசியலை போன்றே பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் எப்போதுமே கணித்துவிட முடியாது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை ஓப்பனராக இறக்கிவிட்டார்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு முதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரரை அடுத்தடுத்த போட்டிகளில் நம்பர் 3-ல் இறக்கினார்கள். நம்பர் 3-ல் இறங்கி ஃபவாத் ஆலம் சொதப்பவே, அவருக்கு அதன்பிறகு அணிக்குள் வாய்ப்புகள் வழங்கப்படவே இல்லை. அவரின் வித்தியாசமான ஸ்டாண்ட் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள சரிபட்டு வராது போன்ற சப்பை காரணங்களை கூறி அவரை ஒதுக்கியே வைத்திருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

ஃபவாத் ஆலம்
ஃபவாத் ஆலம்
Andrew Cornaga

ஆனால், ஆலன் ஒரு போதும் தன்னம்பிக்கையை இழக்கவே இல்லை. தேசிய அணிக்காக மீண்டும் ஆடுவதுதான் ஒரே இலக்கு என்பதை மனதில் வைத்துக்கொண்டே உழைத்தார். உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய சாதனைகளையெல்லாம் படைத்தார். உள்ளூர் போட்டிகளில் மட்டும் 12,000 ரன்களை அடித்து தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். ஆனாலும் ஒரு சில முறை அணிக்குள் இடம் கிடைத்ததே தவிர ப்ளேயிங் லெவனுக்குள் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான், கொரானாவுக்கு பிறகு, இங்கிலாந்துக்குப் பறந்த பாகிஸ்தான் அணியில் ஆலமுக்கும் இடம் கிடைத்தது. பல வீரர்கள் இந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் ஆட விரும்பாததால் கூட ஆலம் போன்ற வாய்ப்புக்கு ஏங்கிக்கொண்டிருந்த வீரருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக 10 வருடம் கழித்து பாகிஸ்தான் அணிக்கு திரும்பியவர் ஆடிய முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட். மேலும், இந்த மொத்த இங்கிலாந்து தொடரும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்தத் தொடரில் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஒரு அரைசதம் கூட அவருக்கு கிடைக்கவில்லை.

ஃபவாத் ஆலம்
ஃபவாத் ஆலம்
Andrew Cornaga

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் சொதப்பியவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக செகண்ட் இன்னிங்ஸ் இருப்பது போல, பாபர் அசாம் இல்லாததால் நியூசிலாந்து தொடருக்கு ஆலமே எதிர்பார்க்காத வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட இதுதான் ஆலமுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு எனச் சொல்லலாம். இதிலும், சோபிக்காவிடில் வரலாற்றில் தோற்றவர்களின் பட்டியலில் மட்டுமே ஆலமுக்கு இடம் கிடைத்திருக்கும். ஆனால், ஆலம் தோற்கவில்லை. ''Result is a by-product of process'' என்று தோனி அடிக்கடி சொல்வார். 12 வருடங்களாக ப்ராசஸில் ஊறித்திளைத்தவருக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா என்ன!?

அணிக்குத் தேவையான சரியான நேரத்தில் தனது அனுபவத்தை பயன்படுத்தி, ஒட்டுமொத்த பாகிஸ்தானின் கௌரவத்தையுமே அந்த சதத்தின் மூலம் காப்பாற்றியிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாது என அணித்தேர்வர்களால் ஓரம் கட்டப்பட்டவர், இன்று சவுதி,போல்ட், வாக்னர் என வெறித்தனமான வேகப்பந்து கூட்டணியை முறியடித்து சதமடித்திருக்கிறார்.

வர்ணனையாளர் நாஸர் ஹுசைன், "நல்ல திறமையாளர்களை நீங்கள் எல்லா பொழுதும் எல்லா நேரமும் அடக்கி வைத்துவிட முடியாது'" எனக் கூறுவார். ஃபவாத் ஆலம், அடக்குதலை உடைத்தெறிந்த நம்பிக்கையின் குறியீடு!
அடுத்த கட்டுரைக்கு