Published:Updated:

ஓய்வு பெற வேண்டிய மித்தாலி ராஜ் தொடர்ந்து விளையாடுவது ஏன்… பெண்கள் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது?!

எக்காலத்திலும், யாராலும், முறியடிக்க முடியாதவைதான் மித்தாலியின் சாதனைகள். அப்படி இருந்தும், கொண்டாடப்பட வேண்டியவர் ஏன் விமர்சிக்கப்படுகிறார், அணியின் ஸ்கோரில், 36 சதவிகிதம் ரன்களை மித்தாலி மட்டுமே எடுத்தபோதும் ஏன் தோல்விக்குக் காரணம் என கைகாட்டப்படுகிறார்?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், கங்குலி, தோனி என இந்திய கிரிக்கெட்டின் முகங்களாக இருந்த இந்த அத்தனை சூப்பர் ஸ்டார்களுமே தானாக ஓய்வை அறிவித்தவர்கள் அல்ல. ஃபார்ம் இழந்து, ரசிகர்கள் தொலைந்து, மீடியாக்கள் திட்டித்தீர்த்து, பிசிசிஐ கட்டாயப்படுத்திய பிறகே ஓய்வை அறிவித்திருக்கிறார்கள். இது ஆண்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, பெண்கள் கிரிக்கெட்டிலும் தொடர்வதுதான் சோகம்!

அட்டாக்கிங் கிரிக்கெட்டின் அட்ரஸே அறியாத மித்தாலி ராஜ் உள்ளிட்ட அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால், தோல்விக் கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறது இந்திய பெண்கள் அணி.

மித்தாலி ராஜ்... இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முடிசூடா மகாராணி மட்டுமல்ல, உலக பெண்கள் கிரிக்கெட்டின் அடையாளமும் கூட. ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் படைத்திருப்பதை போல், இனிமேல் யாராலும், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல சாதனைகளை படைத்திருக்கிறார் மித்தாலி. இங்கிலாந்தின் சிறந்த ஆளுமையான, சார்லோட் எட்வர்ட்ஸுக்கே, கடும் போட்டியை ஏற்படுத்தியவர் மித்தாலி. ஆனால், தான் ஆடத் தொடங்கிய போது பிறந்திராத வீராங்கனைகளோடு இன்றும் ஆடுகிறார், ஆடிக்கொண்டே இருக்கிறார்.

ஷெஃபாலி வர்மாவுக்கு கேப் அணிவிக்கும் மித்தாலி ராஜ்
ஷெஃபாலி வர்மாவுக்கு கேப் அணிவிக்கும் மித்தாலி ராஜ்

இவர் எட்டியுள்ள உயரங்கள், இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள மற்ற கிரிக்கெட் வீராங்கனைகளால்கூட நெருங்க முடியாதவைதான். சமீபத்தில் நடந்து முடிந்த, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கூட, தன்னுடைய, 56-வது அரை சதத்தைப் பதிவு செய்திருந்தார் மித்தாலி. இந்த அரைசத டாப் ஆர்டர் லிஸ்ட்டில் இவருக்கு அடுத்து 46 அரை சதங்களோடு இரண்டாவது இடத்தில் உள்ள சார்லோட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று பல வருடங்கள் ஆகி விட்டன.

எக்காலத்திலும், யாராலும், முறியடிக்க முடியாதவைதான் மித்தாலியின் சாதனைகள். அப்படி இருந்தும், கொண்டாடப்பட வேண்டியவர் ஏன் விமர்சிக்கப்படுகிறார், அணியின் ஸ்கோரில், 36 சதவிகிதம் ரன்களை மித்தாலி மட்டுமே எடுத்தபோதும் ஏன் தோல்விக்குக் காரணம் என கைகாட்டப்படுகிறார்?!

இக்கேள்விக்கான பதில், அவரது ஸ்ட்ரைக் ரேட் எனும் ஒற்றை வார்த்தையில் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (27-06-2021) இங்கிலாந்து அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் மோதியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 201 ரன்கள் அடித்தது. எப்போதும் போல கேப்டன் மித்தாலி ராஜ்தான் டாப் ஸ்கோரர். 108 பந்துகளை சந்தித்து 72 ரன்கள் எடுத்திருந்தார் மித்தாலி. ஸ்ட்ரைக் ரேட் 66.67. இந்தியாவின் 202 ரன் டார்கெட்டை வெறும் 35 ஓவர்களில் முடித்துவிட்டது இங்கிலாந்து. ஸ்ட்ரைக் ரேட்தான் இரு அணிகளுக்கும் இடையே இருந்த வித்தியாசம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் இன்னிங்ஸில் டாட் பால்கள் மட்டும் 181. அதாவது 50 ஓவர் போட்டியில் 30 ஓவர்கள் ரன்னே அடிக்கவில்லை. இதில் கேப்டன் மித்தாலி மட்டும் தான் சந்தித்த 64 பந்துகளை டாட் பால்களாக்கினார். அதாவது கிட்டத்தட்ட 11 ஓவர்கள் விளையாடி ஒரு ரன் கூட அவர் எடுக்கவில்லை.

மித்தாலி ராஜ்
மித்தாலி ராஜ்

டாட் பால்களுக்கும் மித்தாலிக்குமான பந்தம் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கது. 2006-ம் ஆண்டு, மகளிர் கிரிக்கெட், பிசிசிஐயின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததில் இருந்து, டி20 போட்டிகளில், இந்திய மகளிர் அணி பங்கேற்று வருகிறது. அதில், 2016 வரை, எல்லா ஃபார்மேட்டுக்குமான கேப்டனாக மித்தாலிதான் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில், டி20 போட்டிகளுக்கான கேப்டன்ஷிப், இளையவர் என்னும் முறையில், முழுமையாக ஹர்மன்ப்ரீத் கவுரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், டி20 பேட்ஸ்மேனாக மித்தாலி தொடரவே செய்தார். இந்நிலையில்தான், அணியின் பயிற்சியாளராக, ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டார்.

டி20-ல் அணியின் ஓப்பனராக இறங்கும் மித்தாலி, பவர்ப்ளே ஓவர்களில், அதிக டாட் பால்களை ஆடியது பிரச்னையானது. நிறைய போட்டிகளில், இந்தியா தோல்வியைத் தழுவுகிறது என்ற கருத்தை முன்வைத்து, மித்தாலியை மத்திய வரிசையில், களமிறக்க வேண்டும் என்ற முடிவை முன்வைத்தார் பவார். இதில் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்கு முன்னதாக நடைபெற்ற, பத்து டி20 போட்டிகளில், 151 டாட் பால்களை ஆடியிருந்தார் மித்தாலி. அடித்து ரன் ஏற்ற வேண்டிய ஒரு ஃபார்மேட்டில், அதுவும் பவர் ப்ளேயில் ரன் சேர்க்க தவறுவதுதான், வெற்றியை இந்தியா தவற விடுவதற்கான காரணம் என்ற கருத்தை முன்வைத்தார்.

இதனால் 2018 உலகக்கோப்பை போட்டியில், அரையிறுதியில், ப்ளேயிங் லெவனில் கூட வாய்ப்பளிக்கப்படாது ஓரங்கட்டப்பட்டார் மித்தாலி. இதன் தொடர்ச்சியாக, ரமேஷ் பவாருடனான அவரது பனிப்போர் பூதாகரமானது. ரமேஷுக்கு ஆதரவாக, ஹர்மன்ப்ரீத் மற்றும் ஸ்மிரிதி மந்தனா நின்றனர். ஆனால், இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் முகமாக இருந்த ஒரு வீராங்கனையை அவமானப்படுத்தியது தவறு என முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள் என எல்லோரும் பவாரின் செயல்பாட்டை விமர்சிக்க, பயிற்சியாளர் பதவியில் இருந்து பவார் தூக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த டபிள்யு.வி.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

மித்தாலியும், 2019 மார்ச் மாதம், இங்கிலாந்துடனான போட்டியோடு டி20-ல் இருந்து விலகி, ஒருநாள், டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பிறகு, டி20-ல் இரண்டு பெரிய வெற்றியை, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பதிவு செய்த இந்திய அணி, 2020 டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி சாதித்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு டபிள்யு.வி.ராமன் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் ரமேஷ் பவார் பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டு விட்டார். அணியின் நலனைக் கருத்தில் கொண்டு, பழைய கசப்பான அனுபவங்களை மறந்து ரமேஷும் மித்தாலியும், இணைந்தனர். ஆனால், மித்தாலியின் டாட் பால் பிரச்னை மட்டும் இன்னும் தீரவில்லை.

மித்தாலி
மித்தாலி
Nigel French

2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள, 50 ஓவர் உலகக் கோப்பையை மனதில் வைத்துதான் பயிற்சியாளர் மாற்றப்பட்டிருப்பதாகவும், அணியில் பல மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் சொல்கிறது பிசிசிஐ. ஆனால், உலக கோப்பையை மனதில் வைத்து உருவாக்கப்படும் ஒரு அணிக்கு 39 வயது மித்தாலி எப்படி கேப்டனாக நீடிக்க முடியும்?

பந்தே எகிறிவந்து பேட்டில் பட்டு பவுண்டரிகள் தெறித்த பேட்டிங்கிற்குச் சாதகமான ஒரு பிட்ச்சிலேயே 180 டாட் பால்கள் ஆடுகிறார்கள் என்றால் இந்த அணி எப்படி நியூசிலாந்தில் நடக்கப்போகும் உலகக்கோப்பையை வெல்லத் தகுதியான அணியாக உருமாறும்?!

ஓப்பனர்களாகக் களமிறங்கும், ஸ்மிருதி மற்றும் ஷெஃபாலி பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. கங்குலியும், ஷேவாக்கும் ஓப்பனிங் இறங்கி ஆடுவதைப் போல் இருக்கிறது. ஷாட் செலக்ஷன்கள், விளையாடும் நேர்த்தி, அட்டாக்கிங் பாணி என எல்லாவற்றிலும் தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளனர் இருவரும்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் கூட, போட்டி டிரா ஆனதில், மிகப்பெரிய பங்கு இவர்களுடையதுதான். இதற்கு அடுத்து வரும் மிடில் ஆர்டர்தான் இந்திய அணிக்கு பெரிய தலைவலியே!

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

2017-லிருந்து, இந்திய மகளிர் அணியின், 3 - 6 ஆம் நிலையில், களமிறங்கும் வீராங்கனைகளின், பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்களின் சராசரி வெறும் 64.55. அணியின் தோல்விக்கு இதுவே பல சந்தர்ப்பங்களில் காரணமாக இருக்கிறது. இந்த வீராங்கனைகள், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதுமில்லை, பெரிதாக அடித்து ஆடுவதும் இல்லை. ஃபுல் டாஸ் பால் வந்தால் மட்டுமே அடிப்போம் என்பதுபோல, டிஃபென்சிவ் ஆட்டத்தை மட்டும் கையில் எடுக்கின்றனர்.

ஒன் டவுனில் இறங்கும், பூனம் ராட்டைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை, அவரது ஆவரேஜ் பிரச்னையல்ல, ஸ்ட்ரைக் ரேட்தான் பிரச்னை. சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஐந்து போட்டிகளில், இரண்டு சதம் மற்றும், ஒரு அரை சதத்தை அடித்திருந்தார் பூனம். ஆனால், அத்தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட், வெறும் 63.11 மட்டுமே.

ஹர்மன்ப்ரீத், தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் 96.17 ஸ்ட்ரைக் ரேட்டோடு நம்பிக்கை அளித்து, சில சமயங்களில், மினி கேமியோக்களால், அணியை மீட்டெடுத்தார். ஆனாலும், கன்சிஸ்டன்ஸிதான் அவரிடம் உள்ள பெரிய பிரச்னை. தென் ஆப்ரிக்காவுடனான ஒருநாள் தொடரில், நம்பிக்கையளித்தாரெனில், இங்கிலாந்துடனான டெஸ்ட்டில், இரண்டு இன்னிங்ஸ்களிலும், முதல் ஒருநாள் போட்டியிலும், ஒற்றை இலக்கத்தோடு வெளியேறி ஏமாற்றினார். இதன்பிறகு களம் காணும் வீராங்கனைகளில், தீப்தி மட்டுமே ஓரளவு நம்பிக்கை தருகிறார். ஓப்பனர்களை வீழ்த்தி விட்டாலே, இந்தியாவை மொத்தமாகச் சாய்த்து விடலாம் என்ற நிலையே தற்போது நிலவுகிறது.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

விக்கெட்டை விடக் கூடாதென, பந்துகளை வீணாக்குகின்றனர். பெரிய ஷாட்களுக்குப் போகவே தயங்குகின்றனர். ஒருநாள் போட்டியில், சிக்ஸர்களும், பவுண்டரிகளும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சிங்கிள்களும், டபுள்களும் முக்கியம்தான். அதைத்தான் இந்திய அணி, தொடர்ந்து செய்யத் தவறுகிறது. மித்தாலியும் போட்டிக்குப் பின்பு, இதைப்பற்றி பேசி இருந்தார்.

பௌலிங்கைப் பொறுத்தவரை இந்திய வீராங்கனைகள், சிறப்பாகவே செயல்படுகின்றனர். ஆனால், பேட்டிங் குறைபாடுகளும் களையப்பட்டே ஆகவேண்டும். பிசிசிஐ இந்த விஷயத்தில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மிடில் ஆர்டரும், டாட் பால் பிரச்னைகள் மட்டும் சரி செய்யப்பட்டு, இந்திய பேட்டிங் லைன் அப் வலுப்படுத்தப்பட்டால், இந்திய மகளிர் அணிக்கான 2022 உலகக்கோப்பை வாய்ப்பு பிரகாசமாகும். மித்தாலி தன்னுடைய ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டவேண்டும் அல்லது அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு வழிவிட்டு வழிகாட்ட வேண்டும்!

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு டான்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு