Published:Updated:

Mithali Raj: மூன்று தலைமுறைக்கான ரோல்மாடல்; பெண்கள் கிரிக்கெட்டின் தலைமகள் - ஓய்வுபெறும் சகாப்தம்!

Mithali Raj

மூன்று தலைமுறைகளாக ஆண்கள் கிரிக்கெட்டை ஆட்சி செய்தவர்கள் என ஒரு லிஸ்ட்டை உருவாக்கினால் அதில் கங்குலி, தோனி, விராட் கோலி எனச் சில பெயர்களைச் சேர்க்க முடியும். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் மட்டுமே இருப்பார்.

Mithali Raj: மூன்று தலைமுறைக்கான ரோல்மாடல்; பெண்கள் கிரிக்கெட்டின் தலைமகள் - ஓய்வுபெறும் சகாப்தம்!

மூன்று தலைமுறைகளாக ஆண்கள் கிரிக்கெட்டை ஆட்சி செய்தவர்கள் என ஒரு லிஸ்ட்டை உருவாக்கினால் அதில் கங்குலி, தோனி, விராட் கோலி எனச் சில பெயர்களைச் சேர்க்க முடியும். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் மட்டுமே இருப்பார்.

Published:Updated:
Mithali Raj
1999. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் அது. கபில்தேவிற்குப் பிறகு இந்தியாவிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகம்கூட ஆகியிருக்கவில்லை. அந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகனான யுவராஜ் சிங்கை யாரென்றே தெரியாது. அப்படியொரு காலகட்டத்திலேயே பெண்கள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர் மிதாலி ராஜ். தோனி 2019 லேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஃபார்ம் அவுட் ஆகி யுவராஜ் எப்போதோ ஓரங்கட்டப்பட்டுவிட்டார். ஆனால், மிதாலி ராஜ் இதோ இப்போதுவரை ஓடிக்கொண்டுதான் இருந்தார். சில மணி நேரங்களுக்கு முன்புதான் தனது 23 ஆண்டுக் கால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.
மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

90களில் கிரிக்கெட்டை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக விளையாட்டுத்துறை என்று எடுத்துக்கொண்டால் கூட, விரல்விட்டு எண்ணும் வகையிலான இந்தியப் பெண்கள் மட்டுமே சாதித்திருந்த காலகட்டம் அது. டக்கென்று யோசித்தால் பி.டி.உஷா மட்டுமே நமக்கு ஞாபகம் வருவார். அவருமே இந்திய பெற்றோர்கள் விரும்பும் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வென்றிருக்கவில்லை. 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்ஸில் கர்ணம் மல்லேஸ்வரியே இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் பெண்ணாகச் சாதனை படைத்திருந்தார்.

அதன்பிறகே, விளையாட்டுத்துறையில் பெண்களுக்கான முக்கியத்துவம் உருவாகத் தொடங்கியது. பல பதின்வயது பெண்களும் விளையாட்டுத் துறையில் சாதிப்பதை தங்களின் வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொள்ளத் தொடங்கினார்கள். அந்த 2000-ம் ஆண்டுக்கு முன்பாகவே இந்திய அணிக்கு மிதாலி ராஜ் அறிமுகமாகியிருந்தார். அதாவது, முன்னோடிகளேயற்ற தடங்களே இல்லாத ஓர் இருள் சூழ்ந்த பாதையில் திடமான மனதோடும் தீர்க்கமான எண்ணத்தோடும் பயணத்தைத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

அந்த ஆரம்பக்கால பயணம் அவ்வளவு எளிதானதாக அமைந்திருக்கவில்லை. பிசிசிஐ ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே கவனித்து வந்தது. பெண்கள் கிரிக்கெட்டுக்கென்று தனி அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. உலகின் பணக்கார போர்டாக இருந்து கொண்டு, இடைவிடாது ஆண்களுக்கான தொடரை நடத்தி வருமானத்தில் கொழிக்கும் இந்தக் காலத்திலேயே, பெண்களுக்கான ஐ.பி.எல்-ஐ நடத்தாமல் பிசிசிஐ சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. 2006க்கு முன்பாக இந்தப் பணக்கார பிசிசிஐயும் கிடையாது என்றால் பெண்கள் கிரிக்கெட் என்ன நிலையிலிருந்திருக்கும் என நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முறையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படாது. சர்வைவ் செய்வதற்கான ஊதியம் கிடையாது. சரியாகத் திட்டமிடப்பட்ட தொடர்கள் இருக்காது. இப்படியான சமயத்தில் இந்திய அணிக்கு அறிமுகமானது மட்டுமில்லை, இந்திய அணிக்கு கேப்டனாகவும் மிதாலி ராஜ் பொறுப்பேற்றிருந்தார். மிதாலியின் பெற்றோர் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து அவருக்கான செலவுகளைச் செய்து அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடுவதை உறுதி செய்தனர். இத்தனை சிரமப்பட்டாலும் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் ஒரு துளிகூட மிதாலியின் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

Mithali Raj
Mithali Raj
அறிமுக போட்டியிலேயே சதம், பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதம், 2005 உலகக்கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது என ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் தனது பெர்ஃபார்மென்ஸில் துளி கூட சமரசம் இல்லாமல் சமர் செய்தார். ஏனெனில், மிதாலி ராஜ் அவருக்காக அவர் கரியருக்காக அவரது எதிர்காலத்திற்காக மட்டும் ஆடியிருக்கவில்லை. இந்தியாவிற்காக இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக ஆடினார்.

எத்தனையோ இடர்கள் சூழ்ந்தன. ஆரம்பக்கட்டத்தில் மட்டுமில்லை. ஒரு சூப்பர் ஸ்டாராக, இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் முகமாக மாறிய பிறகும் கூட! உலகக்கோப்பை போட்டியில் முக்கியமான கட்டத்தில் மிதாலியை டிராப் செய்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சக வீராங்கனைகள், பயிற்சியாளர் என அத்தனை பேரையும் எதிர்கொண்டு தனி ஆளாக நின்ற காலகட்டங்களையும் கடந்திருக்கிறார். மிதாலி தனக்காக மட்டுமே ஆட வேண்டும் என நினைத்திருந்தால் அத்தனை பிரச்னைகளை அவர் சந்தித்திருக்கவே மாட்டார்.

Team India
Team India
BCCI

மிதாலி ராஜ் தனது 200வது ஒருநாள் போட்டியில் ஆடிய போது இந்திய அணியே ஒட்டுமொத்தமாக 263 ஒருநாள் போட்டிகளில்தான் ஆடியிருந்தது. பெண்கள் கிரிக்கெட்டில் பிசிசிஐ விட சீனியர் அவர். இன்றைக்கு ஜொலித்துக் கொண்டிருக்கும் ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா போன்றவர்கள் மிதாலியைப் பார்த்து வளர்ந்தவர்கள். இந்த இந்திய அணி அவர் பார்த்து அவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட அணி. அந்த அணிக்காக முன் வரிசையில் நின்று போராடும் சுத்த வீரங்கானையாகவே எப்போதும் இருக்க வேண்டும் என விரும்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எக்கச்சக்க சாதனைகள் மிதாலியின் பெயரை அலங்கரிக்கத் தொடங்கின. நீண்ட காலம் கிரிக்கெட் ஆடிய வீராங்கனை, அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என இனிமேல் எவராலும் முறியடிக்க முடியாத சாதனைகள் பலவற்றையும் தனது பெயரில் வைத்திருக்கிறார்.
Sneh Rana - Mithali Raj
Sneh Rana - Mithali Raj

இதில் வெல்ல முடியுமா? வருமானம் கிடைக்குமா? நீடித்த எதிர்காலம் இருக்குமா? தங்கள் குழந்தைக்கு எதோ ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தும் முன் இந்திய பெற்றோர்களின் மனதில் முதலில் ஓடும் கேள்விகள் இவைதான். அந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைந்தவர் மிதாலி ராஜ். விளையாட்டுத்துறையில் ஒரு பெண்ணால் நீண்ட நாள் ஆட முடியும். அதன் மூலம் பிரபலமாக முடியும். சம்பாதிக்க முடியும் என நிரூபித்தவர். ஆனால், மிதாலி ராஜிடமிருந்து இந்திய பெற்றோர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது இவற்றை மட்டும் அல்ல. விளையாட்டுத் துறையில் ஒரு பெண்ணுக்கு முறையான ஊதியம், எதிர்காலம், பிரபலியம் எதுவும் கிடைக்காத இக்கட்டான சூழலில் சிக்க நேர்ந்தாலும், தொடர்ந்து போராடும் வலுவும் திடமும் அவர்களுக்கு இருக்கின்றன. அந்தப் போராட்டத்தின் மூலம் தனக்கான தனித்துவமான பாதையை உருவாக்கிக் கொண்டு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி வீறு நடை போடும் சாமர்த்தியமும் பெண்களுக்கு இருக்கிறது. இந்த செய்தியைத்தான் மிதாலி ராஜ் தனது 23 வருடக் கரியர் மூலம் இந்திய பெற்றோர்களுக்குக் கடத்த விரும்புகிறார்.

Mithali Raj
Mithali Raj
மூன்று தலைமுறைகளாக ஆண்கள் கிரிக்கெட்டை ஆட்சி செய்தவர்கள் என ஒரு லிஸ்ட்டை உருவாக்கினால் அதில் கங்குலி, தோனி, விராட் கோலி எனச் சில பெயர்களைச் சேர்க்க முடியும். ஆனால், இவர்களுக்கு இணையாகப் பெண்கள் கிரிக்கெட்டிலிருந்து கடந்த மூன்று தலைமுறைகளுக்குமான வீராங்கனைகளைக் குறிப்பிட வேண்டுமெனில், உங்களுக்கு வாய்ப்பே கிடையாது. மிதாலி ராஜை மட்டுமேதான் குறிப்பிட்டாக முடியும்.

இந்திய பெற்றோர்களே கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஆண் கிரிக்கெட்டர்களை அறிமுகப்படுத்துவதை விட மிதாலி ராஜை அறிமுகப்படுத்துங்கள். அவரின் வெற்றியைத் தோல்வியை அதைவிட அவரின் 23 ஆண்டுக்கால போராட்டத்தைப் பாடமாக்குங்கள். அவர்களும் மிதாலியாய் காலத்தைத் தாண்டியும் வெல்வார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism