Published:Updated:

மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் ஆடம்... சூப்பர் ஸ்டார்ஸ் இருந்தும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் தோற்றது எதனால்?

பிக் பாஷ்
பிக் பாஷ்

மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து தோல்வியைத் தழுவியிருக்கிறது மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஸாம்பா என சூப்பர் ஸ்டார்கள் அணிக்குள் இருந்தும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் தோற்றது எதனால்?

ஆஸ்திரேலிவின் டி20 லீக் போட்டியான பிக் பாஷ் சீஸன் 9 தொடரை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது சிட்னி சிக்ஸர்ஸ் அணி. மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து தோல்வியைத் தழுவியிருக்கிறது மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஸாம்பா என சூப்பர் ஸ்டார்கள் அணிக்குள் இருந்தும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் தோற்றது எதனால்?

போட்டி தொடங்கும் முன்பு இரண்டு நாள்களாகவே சிட்னியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. பிக் பாஷ் டி20 தொடரில் ஒரு விதிமுறை உள்ளது. இறுதிப் போட்டி நடக்கும் நாளில் மழையின் குறுக்கீடோ, வேறு சில காரணங்களாலோ ஆட்டம் தடைப்பட்டால் எந்த அணி ஹோம் டீமோ அது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். க்வாலிஃபையரில் ஏற்கெனவே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியிருந்ததால் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பு சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு கிடைத்தது. ஆதலால், மழையால் ஆட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்டிருந்தால் சிட்னி சிக்ஸர்ஸ் அணியே கோப்பையைப் பெற்றிருக்கும். ஆனால், மழை சற்று நேரத்தில் விட்டதால் ஆட்டம் 12 ஓவராகக் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

பிக் பாஷ்
பிக் பாஷ்
DEAN LEWINS

பொதுவாக, மழையால் தடைப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கும்போது முதலில் விளையாடும் அணிக்குக் கொஞ்சம் பாதகமாக அமையும். பந்து ஸ்லோவாக வரும். அதுவும் ஆட்டம் 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டதால் சேஸ் செய்வதையே பெரும்பாலான அணிகள் விரும்பும். அதனால் நேற்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்காற்றியது. எதிர்பார்த்தது போலவே டாஸ் ஜெயித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல் பெளலிங்கைத் தேர்வு செய்தார்.

போட்டி 12 ஓவர்கள் என்பதால் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட வேண்டிய கட்டாயம் சிட்னி வீரர்களுக்கு இருந்தது. அதுமட்டுமல்லாமல் இத்தகைய போட்டியில் எவ்வளவு இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதைக் கணிப்பதும் கடினம். அதிரடியாக ஆடுவதே சிறந்த வழி. அதைப் போலவே சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர்களும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் பெளலர்கள் நன்றாகப் பந்துவீசினர். குறிப்பாக ஸ்பின்னர்கள். முதல் ஆறு ஓவர்களில் 60 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து நல்ல நிலையில் இருந்தது சிட்னி சிக்ஸர்ஸ். அதன் பிறகு, ஆடம் ஸாம்பா மற்றும் மேக்ஸ்வெல்லின் சுழல் கூட்டணி சிறப்பாகப் பந்துவீசி ரன்களை கனிசமாகக் கட்டுப்படுத்தினர். மேக்ஸ்வெல் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த, ஸாம்பா சிட்னி சிக்ஸர்ஸ் அணி கேப்டன் மோய்சிஸ் ஹென்ரிக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் பிட்சின் தன்மையைப் புரிந்து ஸ்டம்ப் லைனிலேயே பெரும்பாலான பந்துகளை வீசினர். ஐந்தாவது ஓவரிலிருந்து 9-வது ஓவர் வரை சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

BigBash
BigBash

இதே நிலைமை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கும் வந்தது. இரண்டு அணிகளுக்கும் இருந்த வித்தியாசம் அந்த பவுண்டரிகள் வராத நேரத்தில் ஓடி எடுத்த ரன்கள்தான். சிட்னி சிக்ஸர்ஸ் 25 பந்துகளுக்கு மேல் பவுண்டரி அடிக்காதபோதும் அவர்கள் 32 ரன்களை ஓடி ஓடி எடுத்திருந்தனர். ஆனால், மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர்கள் அதே போல் பவுண்டரி வராத நேரத்தில் அடித்த ரன்கள் வெறும் 22. நிறைய டாட் பால்கள் ஆடினர். அந்த வித்தியாசத்தை ஏற்படுத்தியது சிக்ஸர்ஸ் அணி வீரர் ஜோஸ் ஃபில்ப்பி. ஓப்பனிங் இறங்கி நிறைய பந்துகள் கிடைக்காத போதிலும் பொறுமையைக் கடைப்பிடித்து அணி சரிவில் இருக்கும்போது தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தால் மீட்டெடுத்தார். இறுதிப்போட்டி என்கிற நெருக்கடியிலும் 29 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அணிக்கு நல்ல ஸ்கோர் எடுக்க உதவினார். இறுதியில் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

117 என்கிற சேஸ் செய்யக்கூடிய இலக்கைத் துரத்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ். சிட்னி சிக்ஸர்ஸ் இறுதிப் போட்டி வரை வர முக்கியமான காரணம் அவர்களது பெளலிங்தான். நேற்றும் அவர்கள் தங்களை நிரூபித்தனர். முதல் ஓவரிலேயே நாதன் லயன் ஸ்டார்ஸ் அணியின் `ஸ்டார்' பிளேயரான ஸ்டாய்னிஸைப் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து மேக்ஸ்வெல்லும் அவுட்டாக அடுத்த மூன்று ஓவர்களிலும் ஓவருக்கு ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்களுக்கு நான்கு எனப் பரிதாப நிலையில் இருந்தது. அப்போதே ஸ்டார்ஸ் அணியின் தோல்வி ஏறக்குறைய நிதர்சமானது.

Big bash
Big bash
DEAN LEWINS

இறுதியில் 97 ரன்கள் மட்டுமே எடுத்து கோப்பை வெல்லும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை தவறவிட்டது மெல்போர்ன் ஸ்டார்ஸ். ``இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" ஆட்டம் முடிந்ததும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மேக்ஸ்வேல் இப்படிச் சொன்னார். ஆம். முதல் 11 லீக் போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று டேபிளில் முதல் இடத்தைப் பிடித்து முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி முதலாவதாக ப்ளே ஆஃப் உள்ளே நுழைந்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ். அப்படி தொடர் முழுக்க சிறப்பாகச் செயல்பட்டு முக்கியமான நேரத்தில் சொதப்பினால் அந்தத் தோல்வி நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்காதுதான்.

அடுத்த கட்டுரைக்கு