Published:Updated:

ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேண்டும்... கோலி பதவி விலக வேண்டும்... ஏன்?

சமீபகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஷ்வின் அளவுக்கு இழிவைச் சந்தித்தவர் யாரும் இருக்கமுடியாது. நன்றாகப் பெர்ஃபார்ம் செய்தபோதும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து மகேந்திர சிங் தோனியால் ஓரங்கட்டப்பட்டவர், பின்னர் விராட் கோலியால் ஓரங்கட்டப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மீண்டும் ஒரு ஐசிசி தொடரில் கோலி தலைமையில் இந்தியா தோல்வியடைய கேப்டன்ஷிப் மாற்றங்கள் குறித்த விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. ஏற்கெனவே ஒருநாள், டி20 போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்கிற குரல்கள் கேட்க ஆரம்பித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது டெஸ்ட்டிலும் கேப்டன்ஷிப் மாற்றம் என்பது கட்டாயத் தேவையாக மாறியிருக்கிறது.

2019-ல் இருந்து 2021 வரை நடைபெற்ற ஐசிசி வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப்தான் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இப்போது 2021- 2023 சீசனுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன.

2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை ஒரு நிலையான அணியை உருவாக்காமல் தொடர்ந்து வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்ததுதான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம். அதேப்போல் ஓப்பனர்களை இறுதிவரை இந்திய அணி உறுதி செய்யவேயில்லை. இங்கிலாந்தில் விளையாடி அனுபவமே இல்லாத, வெறும் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியிருந்த ஷுப்மன் கில்லை இறுதிப்போட்டிக்கான அணியின் ஓப்பனராக தேர்வு செய்தது அதீத தன்னம்பிக்கை மட்டுமல்ல, நியூசிலாந்தின் பெளலர்களை குறைத்து மதிப்பிட்டதற்கான சான்று. இந்திய ஏ அணிக்காக மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிவந்தவர் ஷுப்மான் கில். ஆனால், அவரைத் தொடர்ந்து ஓப்பனிங்கில் இறக்கி வேடிக்கைப் பார்த்தது கோலி - சாஸ்திரி கூட்டணி.

கோலி - அஷ்வின்
கோலி - அஷ்வின்

இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு மைதானங்களில் விளையாடுவதற்கு ஸ்பின் ஆல்ரவுண்டரைவிட வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்தான் தேவை. ஆனால், ஹர்திக் பாண்டியாவை தவிர அப்படி ஒரு பெளலரை இந்திய அணி வளர்த்தெடுக்கவேயில்லை. ஹர்திக் பாண்டியாவும் காயங்கள் காரணமாக இப்போது பந்துவீசுவதில்லை, பேட்ஸ்மேனாக மாறிவிட்டார்.

இந்த இரண்டு பிரச்னைகளைவிட மிக முக்கியமான பிரச்னை இந்தியாவின் மிடில் ஆர்டர். புஜாரா தன்னால் நீண்டநேரம் தாக்குப்பிடித்து விளையாட முடியும் என நிரூபித்திருக்கிறாரே தவிர, அவர் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிறது. 18 போட்டிகளாக அவர் சதமே அடிக்கவில்லை. அதேப்போல் ரஹானேவும் ஃபார்முக்கு வருவதும், போவதுமாக இருக்கிறார். குறிப்பாக இந்திய மைதானங்களில் சமீபகாலமாக அவர் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடவேயில்லை.

ரன்மெஷின் கேப்டன் கோலியின் ஃபார்முமே கவலைக்குரியதாகவே இருக்கிறது. 2019 நவம்பரில் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் சதமே அடிக்கவில்லை. நடந்து முடிந்த வேர்ல்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 15 டெஸ்ட், 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 934 ரன்களே அடித்திருக்கும் கோலி டாப் டென் பேட்ஸ்மேன்களில் இல்லை. லாபுஷேன், ரூட், ஸ்மித் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப்பிடித்திருக்கும் இந்த லிஸ்ட்டில் கோலியின் இடம் 11.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெளலிங்தான் இந்தியாவின் பலம் என்று சொல்லப்பட்ட நிலையில் பும்ரா ஃபார்ம் அவுட் ஆனது, முக்கியமான ஸ்விங் பெளலரான புவனேஷ்வர் குமாரை ஃபிட்டாக வைத்திருக்க முடியாதது, சிராஜை ப்ளேயிங் லெவனில் சேர்க்காதது எனப் பல பிரச்னைகள் பெளலிங் ஏரியாவிலும் இருந்தது.

இந்த 2019-2021 சீசனில் இந்தியா கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம். நடந்த தவறுகளை எல்லாம் சரிசெய்து 2021-23 சீசனுக்கான புதிய அணியை கட்டமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பிசிசிஐ அதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கிரிக்கெட் ரசிகனின் எதிர்பார்ப்பும்.

கோலி - ஷமி
கோலி - ஷமி

யார் கேப்டன்?!

இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி இனி பேட்டிங்கில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தலாம். ரஹானே, கோலி இல்லாத அணிக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரேலியாவில் இந்தியாவை வெற்றிபெறவைத்தாலும், அவர் ஒரு பேட்ஸ்மேனாக அதிகமாகவே சொதப்புகிறார். ஒரு நிலைத்தன்மை அவரிடம் இல்லை. நம்பகத்தன்மையும், துணிவும் இல்லாத ஒருவரிடம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தோடு கேப்டன்ஷிப்பை கொடுக்கமுடியாது. அதனால் அவரையும் கேப்டன்ஷிப் போட்டியில் இருந்து நீக்கிவிட்டால் ரவிச்சந்திரன் அஷ்வின்தான் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனுக்கான சரியானத் தலைவனாக இருக்க முடியும்.

அஷ்வினின் இடம் என்ன?!

சமீபகால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஷ்வின் அளவுக்கு இழிவைச் சந்தித்தவர் யாரும் இருக்கமுடியாது. நன்றாகப் பெர்ஃபார்ம் செய்தபோதும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து மகேந்திர சிங் தோனியால் ஓரங்கட்டப்பட்டவர், பின்னர் விராட் கோலியால் அதே பாணியில் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2017-ல் இருந்து இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் அஷ்வின் சேர்க்கப்படவேயில்லை. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் இல்லையென்றால் அந்த வெற்றிடம் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது. அதனால் டெஸ்ட் அணியில் மட்டும் வேண்டாவெறுப்பாக சேர்த்துக்கொள்ளப்பட்டார் அஷ்வின்.

அஷ்வினின் ஆரம்பம்!

ரவிச்சந்திரன் அஷ்வின் தமிழ்நாடு அணிக்காக விளையாட ஆரம்பித்து 2006, 2007 ரஞ்சி சீசன்களில் அதிக விக்கெட்கள் எடுத்ததன் மூலம் பிரபலமாக ஆரம்பித்தார். ரஞ்சி பெர்ஃபாமென்ஸ் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மூலம் 2009 ஐபிஎல் தொடருக்குள் கொண்டுவந்தது. 2010 சீசனில் அஷ்வின் 13 விக்கெட்டுகளை எடுக்க, அந்த சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்று முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்த பெர்ஃபாமென்ஸ் அஷ்வினை அப்படியே இந்திய அணிக்குள்ளும் கொண்டுவந்தது. முதன்முதலாக இந்தியாவுக்காக 2010 ஜூனில் ஜிம்பாப்வேவில் நடந்த முத்தரப்புத் தொடரில்தான் ஆடினார் அஷ்வின்.

இந்தத்தொடரின் கேப்டன் தோனி அல்ல, சுரேஷ் ரெய்னா. முதல் சில போட்டிகளில் அஷ்வின் ப்ளேயிங் லெவனில் இல்லை. ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கு கிட்டத்தட்ட முன்னேற முடியாத நிலை உருவானது. இதனால் கடைசி லீக் போட்டியான இலங்கைக்கு எதிரானப் போட்டியில் சேர்க்கப்பட்டார் அஷ்வின். இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. கேப்டன் சுரேஷ் ரெய்னா அவுட் ஆனதும், ஸ்லாக் ஓவர்களில் 8-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய அஷ்வின் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 38 ரன்கள் அடித்தார். விராட் கோலி, யூசுப் பதானுக்கு அடுத்தபடியாக அன்று அதிகபட்ச ரன் ஸ்கோரர் அஷ்வின்தான். அதேப்போல் பெளலிங்கிலும் உபுல் தரங்கா, தினேஷ் சந்திமால் என இரண்டு விக்கெட்களை எடுத்தார்.

அஷ்வின் - ரஹானே
அஷ்வின் - ரஹானே

இந்ததொடர் முடிந்ததும் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அஷ்வின். கேப்டன் தோனி தலைமையேற்று வழிநடத்திய இத்தொடரில் அஷ்வின் அணியில் இருந்தாரே தவிர ஒரு போட்டியிலும் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. ஆனால், 2011 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார் அஷ்வின். இந்த சீசனில் 20 விக்கெட்டுகளை அஷ்வின் எடுக்க, அந்த சீசனையும் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றது. இங்கிருந்து இந்திய அணிக்குள் நிரந்தரமாக இடம் பிடிக்க ஆரம்பித்தார் அஷ்வின்.

2015-ல் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் நம்பர் 1 பெளலராக முதலிடம் பிடித்தார். பிஷன் சிங் பேடிக்குப்பிறகு முதலிடம் பிடித்த இந்திய ஸ்பின்னர் அஷ்வின்தான். அப்போதில் இருந்தே தொடர்ந்து டாப் 10 பெளலர்களில் ஒருவராகவே அஷ்வின் இருந்தார். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50, 100, 150 விக்கெட்ட்கள் எடுத்தவர் அஷ்வின்தான். ஆனால், 2016, 2017 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தடை விதிக்கப்பட, 2018 சீசனில் சிஎஸ்கே மீண்டும் ஐபிஎல்-க்குள் ரீ-என்ட்ரி கொடுத்தபோது கழற்றிவிடப்பட்டார் அஷ்வின். தமிழ் அடையாளத்தை வைத்து சிஎஸ்கே கேப்டன்ஷிப்பை நெருங்கப்பார்க்கிறார் என்கிற விமர்சனம் அப்போது அஷ்வின்மேல் வைக்கப்பட்டது.

தோனி, கோலி என இரண்டு கேப்டன்களோடுமே அஷ்வினுக்கு நல்ல நட்பு இருந்ததில்லை. தோனிக்குப்பிறகு கோலியுமே அஷ்வினை வேண்டா வெறுப்போடுதான் அணியில் வைத்திருக்கிறார் என்பது கிரிக்கெட்டை நெருங்கிப் பார்க்கும் பலருக்கும் தெரியும். வேர்ல்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் கூட அஷ்வின் விக்கெட்களை எடுக்கும்போது கேப்டன் கோலி அஷ்வினை நெருங்கி ஒரு சின்ன முதுக்குத்தட்டல் அல்லது கைத்தட்டலோடு முடித்துக் கொள்வார். கோலிக்கும் அஷ்வினுக்குமான உறவு என்பது ஒரு அடி தூரத்தில்தான் எப்போதும் இருக்கும்.

அஷ்வின் - கோலி
அஷ்வின் - கோலி

வேர்ல்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கும் நம்பர் 1 பெளலர் அஷ்வின்தான். 14 டெஸ்ட்களில், 26 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 71 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். ஆனால், மேற்கு இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அஷ்வினுக்குப் பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இப்போது இறுதிப்போட்டியில் விளையாடிய அஷ்வினையும் கோலி சரியாகப் பயன்படுத்தவில்லை.

அஷ்வினின் பலமே இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசுவதுதான். அதுவும் ஸ்பின்னுக்கு கொஞ்சமும் ஒத்துழைக்காத சவுத்தாம்ப்டன் பிட்ச்சில் தொடர்ந்து ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார் அஷ்வின்.

நியூசிலாந்தின் இரண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுமே இடது கை பேட்ஸ்மேன்கள். அஷ்வினை அணியில் வைத்துக்கொண்டு ஆரம்பத்திலேயே அட்டாக் செய்யாமல் 14 ஓவர்கள் வரை வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே பெளலிங்கை ரொட்டேட் செய்தார் கோலி. 15-வது ஓவரில்தான் அஷ்வின் கைக்கு பந்து வந்தது. மிகச்சிறப்பாக பந்துவீசி முதல் இரண்டு ஓவர்கள் மெய்டன் வீசினார். அடுத்த ஓவரில் மூன்றே ரன்கள்தான் கொடுத்தார்.

பேட்ஸ்மேன்களுக்கு ப்ரஷரை கூட்டிக்கொண்டேயிருந்தார் அஷ்வின். ஆனால், தொடர்ந்து அஷ்வினைப் பந்து வீச வைக்காமல் அடுத்து பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சாளர்களிடம் பந்தைக் கொடுத்தார் கோலி. விக்கெட் எதுவும் விழவில்லை. மீண்டும் அஷ்வினிடம் பந்தைக்கொடுக்க, தொடர்ந்து இரண்டு ஓவர்கள் மெய்டன் ஓவராக வீசினார் அஷ்வின். ஆனால், அடுத்த மூன்றாவது ஓவரை அஷ்வினுக்குத் தரவில்லை கோலி.

விக்கெட்டே விழாமல் நியூசிலாந்தின் ஓப்பனர்கள் மிரட்டத் தொடங்கியபோதுதான் மீண்டும் 29-வது ஓவரில் அஷ்வின் கைக்கு பந்து வந்தது. இந்தமுறைதான் கோலி அஷ்வினை மூன்று ஓவர்களுக்கு மேல் ஒரே எண்டில் தொடர்ந்து பந்துவீசவைத்தார். அஷ்வின் வீசிய நான்காவது ஓவரில் லாத்தம் விக்கெட் விழுந்தது. அதுவரை 8 ஓவர்கள் வீசி, அதில் 5 ஓவர்கள் மெய்டனாக வீசி வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் அஷ்வின். முதல் இன்னிங்ஸில் மொத்தம் 15 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரது இரண்டாவது விக்கெட்டும் வாக்னர் எனும் இடது கை பேட்ஸ்மேன்தான்.

ஆனால், இவ்வளவு நடந்தும், நியூசிலாந்து வெற்றுபெறுவதற்கான டார்கெட் வெறும் 139 ரன்களே எனும்போதும் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வினிடம் கோலி பந்தை முதலில் கொடுக்கவில்லை. 10-வது ஓவர்தான் அஷ்வின் கைக்கு பந்து வந்தது. தான் வீசிய மூன்றாவது ஓவரில் லாதமின் விக்கெட்டை எடுத்து இந்தியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தவர், அடுத்த இடது கை பேட்ஸ்மேனான டெவன் கான்வேயின் விக்கெட்டையும் எடுத்தார்.

அஷ்வின்
அஷ்வின்

ஒரு கேப்டனுக்கான முக்கியமானத் தகுதி தன்னுடைய பெளலர்களின் பலம் அறிந்து பயன்படுத்துவது. ஆனால், கோலி தொடர்ந்து இந்த பெளலிங் ரொட்டேஷனில் சொதப்பிக்கொண்டேயிருந்தார். இறுதிப்போட்டியிலும் சொதப்பினார். இனி கோலி தன்னுடைய கேப்டன்ஸியைத் துறக்க, அஷ்வினை பிசிசிஐ கேப்டனாக நியமிக்கவேண்டும்.

தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் இருக்கும் முழுமையான வீரர் அஷ்வின் மட்டுமே. பெளலிங், பேட்டிங் என இரண்டிலுமே அஷ்வினின் பர்ஃபாமென்ஸ் மிகச்சிறப்பாக இருப்பதோடு அஷ்வினிடம் இருக்கும் தன்னம்பிக்கை, எந்த சூழலையும் எதிர்கொள்ளும் மன உறுதி, துணிச்சல் நிச்சயம் இந்திய அணிக்குப் பெரும் பலமாக இருக்கும்.

2023 டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான அணியை இப்போதிருந்தே பிசிசிஐ உருவாக்கவேண்டும். 35 வயதான அஷ்வினால் நிச்சயம் இன்னும் இரண்டு ஆண்டுகள் சிறப்பாக விளையாடமுடியும், மிக முக்கியமான சீனியர் வீரர் எனும்போது அந்த வாய்ப்பை தாராளமாக அவருக்கு வழங்கலாம். ஏற்கெனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அணில் கும்ப்ளே எனும் ஸ்பின்னர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

வெளிநாட்டு மைதானங்களில் அஷ்வினின் பெளலிங் எடுபடவில்லை என்பது உண்மைதான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மைதானங்களில் அவரது செயல்பாடு எதிர்பார்க்கும் அளவு இல்லைதான். ஆனால், வெறும் பெளலிங்கில் இருந்து மட்டுமே பங்களிக்கக்கூடியவராக அஷ்வின் இப்போது இல்லை. சரியான வியூகங்கள் அமைப்பது, பெளலிங் ரொட்டேஷன் செய்வது, பேட்டிங்கில் கைகொடுப்பது என ஒரு தலைவனுக்கான தகுதிகளோடு அவர் இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் கொண்டிருக்கும் அஷ்வினால் கேப்டனாக நிச்சயம் புதுப்புது வியூகங்கள் அமைத்து செயல்படமுடியும். அதனால் இப்போதே அஷ்வினை இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக்கி, அவர் தலைமையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிலையான ஒரு டெஸ்ட் அணியை பிசிசிஐ உருவாக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு