டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் ஐந்து வருடங்களாக முதலிடம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக புள்ளிகளோடு முதலிடம், ஆஸ்திரேலியாவில் அசாத்திய வெற்றி, நம்பர் 1 அணி என்கிற பெருமை… ஆனால், இவை எதுவும் இந்திய அணிக்கு கைக்கொடுக்கவில்லை. மீண்டும் ஒரு முறை ஐசிசி தொடரில் கடைசி கட்டம் வரை வந்து சொதப்பியிருக்கிறது இந்திய அணி. கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியே ஆக வேண்டும் என இணையத்தில் ஒரு தரப்பு குமுறிக் கொண்டு இருக்கிறது. இந்த தோல்விக்கு யார் காரணம், கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
2014 பார்டர் கவாஸ்கர் டிராஃபியின் இடையே தோனி ஓய்வுபெற, ஆக்ரோஷ புயலான கோலி கேப்டன் ஆனார். டிராவுக்காக ஆடும் பழைய டிஃபன்ஸிவான முறையை எல்லாம் ஒழித்து வெற்றியை மட்டுமே குறியாக வைத்து புதுவிதமான கேப்டன்சியை தொடங்கினார். அடுத்தடுத்து வெற்றிகளாக வந்து குவிந்தது. ஹோம் சீரிஸ்களில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு தொடர் வெற்றி. ஆஸ்திரேலியாவில் வைத்தே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் டிராஃபியை முத்தமிட்டது என இந்தியா இதுவரை பார்த்திராத வெற்றிகளை சாத்தியப்படுத்தினார். இந்திய கேப்டன்களிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியவர் என்கிற பெருமையும் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் என்கிற சாதனையும் கோலியிடமே இருக்கிறது. ஆனால், இத்தனை இருந்தும் ஒரு ஐசிசி தொடரை அவரால் வெல்ல முடியவில்லை.
முக்கியமான நேரத்தில் மிகத் தவறான முடிவை எடுப்பது எப்போதும் கோலியிடம் இருக்கும் ஒரு பிரச்னை. 2019 உலகக்கோப்பையில் தோனிக்கு முன்பாக ஹர்திக் பாண்ட்யாவை அனுப்பி காலி செய்திருப்பார். ஆஸ்திரேலியா சீரிஸில் அடிலெய்டில் அவமானகரமான 36 ஆல் அவுட் போட்டியில் கில்லுக்கு பதில் ஃபார்ம் அவுட்டிலிருந்த பிரித்வி ஷா-வையும் முரட்டு ஃபார்மில் இருந்த பன்ட்ட்டுக்கு பதில் விருத்திமான் சஹாவையும் எடுத்து வரலாற்று தோல்விக்கு வித்திட்டிருந்தார்.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் சொதப்பியிருக்கிறார் கோலி. ஆஸ்திரேலியாவில் அறிமுக சீரிஸிலேயே சிராஜ் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அவரால் நியூ பாலிலும் ஸ்விங் செய்ய முடிந்தது. பொலிவிழந்த பந்திலும் ஸ்விங் செய்ய முடிந்தது. மேலும், இந்தியாவுக்கு எதையாவது சாதித்துக் கொடுக்க வேண்டும் என்கிற துடிப்பு அவரிடம் இருந்தது. இதனால்
ப்ளேயிங் லெவனில் சிராஜ் இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், சிராஜை விட்டுவிட்டு பும்ரா, ஷமி, இஷாந்த் என மூன்றே மூன்று வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கினார் கோலி.
நியூசிலாந்து 5 வேகப்பந்து வீச்சாளர்களை ப்ளேயிங் லெவனில் வைத்திருந்தது. ஒரு ஸ்பின்னர் கூட இல்லை. இன்னொரு பக்கம் கோலி பெரும் நம்பிக்கையோடு ஜடேஜா மற்றும் அஷ்வின் என இரண்டு ஸ்பின்னர்களை அணியில் வைத்திருந்தார். இதை முழுக்க முழுக்க ஒரு தவறான தேர்வு என யாராலும் கூற முடியாது. அஷ்வின், ஜடேஜா இருவரும் மிகச் சிறப்பான வீரர்கள். ஆனால், அவர்களை கோலி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
ஜடேஜா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்தே 15 ஓவர்களை வீசியிருக்கமாட்டார். அஷ்வினை முதல் இன்னிங்ஸில் பல மணி நேரம் வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்துக் கொண்டிருந்தார். டெயில் எண்டர்களுக்கு மட்டுமே அஷ்வின் சரிப்பட்டு வருவார் என நினைத்துவிட்டார். இத்தனைக்கும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தது அஷ்வின்தான். அதெல்லாம் கோலிக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸாக மாறிவிட்டதோ என்கிற சந்தேகமே எழுந்தது.

பேட்டிங்கில் எப்படி ஒரு பார்ட்னர்ஷிப் முக்கியமோ அதேமாதிரியே பௌலிங்கிலும் பார்ட்னர்ஷிப் ரொம்பவே முக்கியமானதுதான். நியூசிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட்டுக்கும்- வேக்னருக்கும் இடையிலும், சவுதிக்கும்-ஜேமிசனுக்கும் இடையிலும் நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்களை செட் செய்து வீழ்த்தினர். நேற்றைக்கு ரிஷப் பன்ட்டின் விக்கெட் இதற்கு ஒரு நல்ல உதாரணம். ஷார்ட் பாலாக டைட்டாக போட்டு வேக்னர் பன்ட்டை செட் செய்ய, அழுத்தம் கூடிய பன்ட் போல்ட்டை க்ரீஸை விட்டு இறங்கி வந்து அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.
இதே மாதிரியான பௌலிங் பார்ட்னர்ஷிப் கள் இந்தியாவுக்கு அமையவே இல்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் தனித்தனியே திட்டத்தோடு வீசிக்கொண்டிருந்தனர். அதில் ஷமி மட்டும்தான் கொஞ்சம் வெறித்தனமாக வீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அவருக்கு இன்னொரு எண்டிலிருந்து சப்போர்ட் கிடைக்கவே இல்லை. பும்ரா பெரிய ஸ்விங் பௌலர் இல்லை. இஷாந்த் இன்ஸ்விங் மட்டுமே வீசுவார். ஷமி மாதிரியே இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக்கூடிய சிராஜ் இருந்திருந்தால் ஒரு பார்ட்னர்ஷிப் உருவாகியிருக்கும். கோலி ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தாததால் ஷமி நீண்ட ஸ்பெல்களை வீசி ரொம்பவே சோர்வானார். ஸ்பின்னர்களை மிக்ஸ் செய்து ஷமியை கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாக வைத்திருந்தால் நிச்சயம் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும். அதை செய்யவும் கோலி தவறிவிட்டார்.
ப்ளேயிங் லெவனில் தடுமாற்றம், பௌலிங் ரொட்டேஷனில் குழப்பம் என கேப்டன் கோலி சறுக்கிய இடங்கள் நியூசிலாந்துக்கு சாதகமாக அமைந்துவிட்டது.இதனாலயே கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரல்களும் இப்போது கேட்க தொடங்கியிருக்கிறது.
கோலியை ஒரு மோசமான கேப்டன் என கூறுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலே குறிப்பிட்டதை போன்ற இந்திய அணி இதுவரை பார்த்திராத பல வெற்றிகளை சாத்தியப்படுத்தியிருக்கிறார். அணிக்கு போர்க்குணத்தை பழக்கியிருக்கிறார். சொல்லிவைத்தாற் போல் முக்கியமான போட்டிகளில் சொதப்புகிறார். இது மட்டுமே அவரிடம் இருக்கும் குறை. 2014-லிருந்து இந்த இறுதிப்போட்டி வரை தனக்கான ஒரு அணியை கட்டமைத்து கேப்டனாக ஒரு முழுச்சுற்றை முடித்துவிட்டதால் கோலியுமே கூட கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுக்கக்கூடும். மேலும், கோலிக்கு 30+ வயது ஆகிவிட்டது. பல வீரர்கள் இந்த சமயத்தில்தான் ஃபார்மை இழந்து வீழ்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்குவர். கோலி இப்போது அந்த கட்டத்துக்குள் நெருங்கியிருக்கிறார். இதனால் அவருடைய ஃபார்மை தக்கவைத்துக் கொள்வதற்காக கேப்டன் பதவி என்கிற அழுத்தத்தை துறக்கவும் நினைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிக்கு பதில் ரஹானேவையோ ரோஹித்தையோ கேப்டனாக்கலாம் என ஒரு கூட்டம் பேசிக்கொண்டிருக்கிறது. ஆம், ரஹானே டெஸ்ட் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய சீரிஸை வென்று கொடுத்திருக்கிறார்தான். ரோஹித் ஒரு ஸ்டார் ப்ளேயர்தான். ஆனால், இவர்களிடம். கேப்டன்சியை கொடுப்பது மோசமான முடிவாகவே இருக்கும்.
ரஹானே பேட்டிங்கில் எத்தனையோ நல்ல வாய்ப்புகளை விரயம் செய்துவிட்டார். போதும் போதும் என்றளவுக்கு அவருக்கு வாய்ப்பு வழங்கியாயிற்று. இன்னமும் அவருடைய ஓவர்சீஸ் ரெக்கார்டை வைத்து மட்டும் வாதாடிக் கொண்டிருக்க முடியாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்களை அடித்திருப்பது அவர்தான். ஆனால், கன்ஸிஸ்டன்சி?!
இந்த இறுதிப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய வீரர்களிலேயே மிகவும் மோசமான முறையில் விக்கெட்டை தூக்கிக் கொடுத்துவிட்டு சென்றவர் ரஹானேதான். ஒயிட்பால் கிரிக்கெட்டில் அவர் ஏற்கெனவே ஓரம் கட்டப்பட்டு விட்டார். ஐபிஎல்-ல் பென்ச்சுக்கு போய்விட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் தனது டெஸ்ட் அறிமுகத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறார். அவர் அறிமுகமாகிவிட்டால் டெஸ்ட்டிலும் மெதுவாக ஓரம்கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். வருகிற இங்கிலாந்து சீரிஸ்தான் ரஹானேவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் கடைசி வாய்ப்பு. தன்னுடைய கரியரையே அந்தரத்தில் பறக்கவிட்டிருக்கும் வீரரிடம் எப்படி கேப்டன்சியை கொடுக்க முடியும்? நிச்சயம் பிசிசிஐ இதையெல்லாம் ஒன்றுக்கு பத்து முறை யோசிக்கும்.

ரோஹித் பற்றி சொல்லவே வேண்டாம். ஒயிட் பால் ஹேங் ஓவரோடு ரெட்பால் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார். அவரை இப்போதே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒதுக்கி லிமிடெட் ஓவர் உலகக்கோப்பைகளுக்கு முழு கவனத்தையும் செலுத்தவைப்பதே சிறப்பான முடிவாக இருக்கும்.
ரோஹித்தை போன்றுதான் பும்ராவும், ஹாட்ரிக் விக்கெட்டெல்லாம் எடுத்திருந்தாலும் நிறைய இன்னிங்ஸ்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் செல்கிறார். எக்கனாமிக்கலாக மட்டும் வீசுவதற்கு இது ஒன்றும் டி20 போட்டி இல்லையே! இந்த இறுதிப் போட்டியில் பும்ரா எக்கனாமிக்கலாக கூட வீசவில்லை என்பது கூடுதல் சோகம். அவர் பாணியிலான பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அவரையும் ஒயிட்பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வைப்பது அடுத்தடுத்து வரும் உலகக்கோப்பைகளுக்கு உதவியாக இருக்கும்.
அடுத்த மூன்று வருடங்களில் இந்திய அணி மூன்று லிமிட்டெட் ஓவர் உலகக்கோப்பைகளை ஆட இருக்கிறது. அதனால் லிமிட்டெட் ஓவர்களுக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் தனித்தனியே பிரத்யேகமான வீரர்களை கொண்ட அணி உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, இப்போதைய இங்கிலாந்து அணியை எடுத்துக் கொள்ளலாம். அப்படி செய்தால்தான் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் அடுத்தடுத்த லிமிடெட் ஓவர் உலகக்கோப்பைகளிலுமாவது ஏமாற்றங்களை தவிர்க்க முடியும். அதற்கு, முழுமனதோடு துணிச்சலாக அணிக்குள் சில களையெடுப்புகளை நிகழ்த்தியாக வேண்டும்!