Published:Updated:

நியூஸிலாந்தில் இன்னொரு ஒயிட்வாஷ்... கோலி அணியின் பிரச்னைதான் என்ன?! #Kohli

INDvNZ
INDvNZ ( Photo: AP / Mark Baker )

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி என்ற பெருமையோடு கம்பீரமாக டெஸ்ட் தொடரில் களமிறங்கிய இந்திய அணி சொதப்பியதற்கான காரணங்கள் என்ன?

இந்திய அணியும் கோலியும் கெட்ட கனவாக நினைத்து மறக்கும் அளவுக்கு ஒரு தரமான செய்கையை இந்தியாவுக்கு பரிசாக அளித்துள்ளனர் ப்ளாக் கேப்ஸ். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வியடைந்ததன் மூலம் ஒருநாள் தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் நியூசிக்கு எதிராக இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

கடைசியாக இந்திய அணி 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியிருந்தது. அதன்பிறகு, கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு, நியூசிலாந்து மண்ணில் மீண்டும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. ஒருநாள் தொடரோடு சேர்த்தால் டபுள் `ஒயிட்வாஷ்.' டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி என்ற பெருமையோடு கம்பீரமாக டெஸ்ட் தொடரில் களமிறங்கிய இந்திய அணி சொதப்பியதற்கான காரணங்கள் என்ன?

INDvNZ
INDvNZ
Photo: AP / Mark Baker

* டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முதலில் பேட் செய்யும் அணி பந்து கொஞ்சம் வழுவழுப்பை இழக்கும் வரை பொறுத்திருந்து ஆடி பெரிய இன்னிங்ஸாக முதல் இன்னிங்க்ஸை முடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒன்றரை நாளாவது தாக்குப்பிடித்து விளையாடினால்தான் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஆனால் நடந்து முடிந்துள்ள தொடரில் இந்திய அணி பேட் செய்துள்ள 4 இன்னிங்ஸ்களில் ஒன்றில் கூட 90 ஓவருக்கு மேல் பேட்டிங் செய்யவில்லை. அப்படியெனில் இந்திய பேட்ஸ்மேன்கள் முழுதாக ஒரு நாளை பிட்சில் செலவிடவே இல்லை. அதிகபட்சமாக முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே 81 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடினர்.

* ஒருநாள் தொடரிலேயே பெரிதாக சோபிக்காத இளம் கூட்டணியான ப்ரித்வி ஷா - மயாங்க் அகர்வால் கூட்டணியை டெஸ்ட் தொடரிலும் பெரிதாக நம்பி களமிறக்கியதுதான் இந்திய அணியின் முதல் கோணல். இருவரும் தனித்தனியாக அடித்த அரைசதம் ஒரு செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பாக இவர்களிடமிருந்து வெளிப்பட்டிருந்தால் இரண்டில் ஒரு டெஸ்ட்டின் முடிவை மாற்றியிருக்கலாம்.

* 2010 - 20 இந்த டிகேடில் இந்திய அணியின் இரண்டு சூப்பர் ஹீரோக்கள் தோனியும் கோலியும்தான். இவர்கள் இருவரின் பர்ஃபாமன்ஸும் தனிப்பட்ட முறையில் அவர்களைத்தாண்டி அணிக்கே ஒரு ஊக்கத்தைக் கொடுக்கவல்லது. தோனி மிடில், லோயர் மிடில் ஆர்டர்களில் இறங்கியதால் கடைசி ஓவர்களில் அவர் சொதப்பினால் அது போட்டி முடிவில் மட்டும்தான் மாற்றத்தை உண்டாக்கும். ஆனால், கோலி டாப் ஆர்டர் ப்ளேயர் என்பதால் அவர் சொதப்பும் பட்சத்தில் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களுமே ஒருவித கலக்கமடைந்துவிடுகின்றனர். கடந்த 20 இன்னிங்ஸ்களுக்கும் மேலாகக் கோலி சதமடிக்கவில்லை என்பது அவருக்கு மட்டுமான அழுத்தமாக இல்லை. ஒட்டுமொத்த அணிக்குமான அழுத்தமாக மாறுகிறது.

INDvNZ
INDvNZ
Photo: AP / Mark Baker

* சதம், இரட்டை சதம், முச்சதம் என விளாசுவதற்கு வசதியான டெஸ்ட் ஃபார்மேட்டில் இந்திய அணி வீரர்கள் ஒருவர்கூட மூன்று இலக்கத்தில் ரன் அடிக்கவில்லை. சொல்லப்போனால் நியூசி வீரர்களும் மூன்று டிஜிட்டை தொடவில்லை. இரண்டு அணி வீரர்களும் தலா 4 அரைசதங்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர். இருப்பினும் நியூசி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஸ்கோரிங்கில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். குறிப்பாக, இரண்டு டெஸ்ட்டிலுமே நியூசியின் டெயில் எண்டர்கள் அணிக்கு தேவையான ரன்களை அடித்துக் கொடுத்தனர். நியூசியின் இந்த சீரான ரன் ஸ்கோரிங் இந்தியாவிடம் மிஸ்ஸிங்.

* புஜாரா ஒப்பீட்டளவில் இந்த டெஸ்ட் தொடரில் மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேன்களைவிடவும் சிறப்பாகவே செயல்பட்டார். 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 351 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார் புஜாரா. முதல் டெஸ்ட் முடிந்தவுடன் பிரஸ்மீட்டில் புஜாராவின் பெயரைக் குறிப்பிடாமல் பேட்ஸ்மேன்கள் இன்னும் வேகமாக ரன் அடிக்க வேண்டும் எனச் சாடியிருப்பார் கோலி. ஆனால், கோலி கூறியதைப் போன்று புஜாரா அவசரப்பட்டு வேகமெடுத்திருந்தால் இந்தியா இன்னும் பப்பி ஷேமாகத் தோற்றிருக்கும். எல்லா இந்திய பேட்ஸ்மேனும் தங்களது வழக்கமான ஆட்டத்தை ஆடத் தடுமாறும்போது புஜாரா மட்டுமே தடுமாற்றத்தைச் சமாளித்து அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எந்த நாடு எந்த பிட்ச்சாக இருந்தாலும் புஜாராவின் ஒரிஜினல் ஆட்டம் இதுதான். ஆனால், இங்கே பிரச்னை என்னவெனில் வேறெந்த பிளேயரும் சோபிக்காததால் புஜாராவை மையமாக வைத்து பெரிய பார்ட்னர்ஷிப் அமையாமல் போய்விட்டது. மேலும், புஜாராவும் தனக்குக் கிடைத்த நல்ல அடித்தளங்களை சதமாக மாற்றாமல் விட்டுவிட்டார். அதுவும் இந்திய அணியின் சொதப்பலுக்கு முக்கியக் காரணமாகிவிட்டது.

*நியூசியின் பௌலர்கள் இந்திய பேட்ஸ்மேன் ஒவ்வொருவரையும் வீழ்த்துவதற்கான பக்காவான பிளானோடு களத்துக்குள் வந்தனர். குறிப்பாக ஜாமிசன், போல்ட் இருவரும் எல்லா பேட்ஸ்மேன்களையும் விக்கெட்டுக்கு வாய்ப்புள்ள ஷாட்டுகளை வம்படியாக ஆட வைத்தனர். குறிப்பாக, ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்சர்களை அதிகம் வீசி ஹூக் ஷாட்டெல்லாம் ஆட வைத்து விக்கெட் எடுத்தனர். இடது, வலது, ஆஃப் தி விக்கெட், ஓவர் தி விக்கெட், ஷார்ட் பால், பவுன்சர், இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என மாறி மாறி வேரியேஷன்களில் மிரட்டினர். இந்திய பௌலர்கள் சிறப்பான பந்துகளையே வீசியிருந்தாலும் நியூசியிடம் இருந்த ஹோம் வொர்க்கும் வேரியேஷன்களும் இந்திய பௌலர்களிடம் மிஸ்ஸிங்.

*காலங்காலமாக இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டு இடக்கை வேகப்பந்து வீச்சாளரிடம் சொதப்பியே வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் நடைபெற்ற க்ரைஸ்ட்சர்ச்- ன் ஹல்க் போன்ற பச்சை பிட்ச்சில் இந்தியா சார்பில் ஒரு இடக்கை பந்துவீச்சாளர் களமிறங்கியிருந்தால் நியூசி பேட்ஸ்மேன்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியிருக்கலாம். கலீல் அகமது போன்ற இளம் இடக்கை பந்துவீச்சாளர்களுக்கு தொடர் வாய்ப்பை கொடுத்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக மாற்ற வேண்டியதன் கட்டாயத்தை நியூசி தொடர் ஏற்படுத்தியிருக்கிறது.

INDvNZ
INDvNZ
Photo: AP / Mark Baker

*`இந்திய அணி இன்னும் 50 ரன் எடுத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்' என பிரஸ்மீட்டில் வில்லியம்சனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இந்தியா இன்னும் 50 ரன் எடுத்திருக்க வேண்டாம்; நியூசியின் டெய்ல் எண்டர்களின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியிருந்தாலே இந்தியாவின் ஸ்கோரில் 50 ரன்கள் கூடியிருக்கும். இரண்டாவது போட்டியிலெல்லாம் ஒரு ஈசியான கேட்ச் ட்ராப்பை பயன்படுத்தி 50 ரன்களைக் கூடுதலாக அடித்துவிட்டனர் நியூசியின் பௌலர்கள். இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து பௌலர்கள் அடித்த ரன்கள்தான் வெற்றி தோல்வியை மாற்றிய கீ மொமன்ட்ஸ். இந்த இடத்தை மட்டும் இந்திய அணி கூடுதல் கவனத்துடன் கையாண்டிருந்தால் தொடரின் முடிவே மாறியிருக்கலாம்.

* வெற்றி பெறும்வரை இயல்பாக இருக்கும் கோலி தோல்வி என்றவுடன் ஓவர் பதற்றப்படுவதும், குறிப்பிட்ட வீரர்களை பிரஸ்மீட்டில் குறிவைப்பதும், ஒயிட்வாஷ் உறுதி என்று தெரிந்த பிறகும் வில்லியம்சனின் விக்கெட்டுக்கு நரம்பு புடைக்க ஆக்ரோஷப்படுவதும், பிரஸ்மீட்டில் கோபமடைந்து தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குவதும் இந்திய அணியின் பர்ஃபாமன்ஸையும் வீரர்களுக்கிடையேயான பிணைப்பையும்தான் பாதிக்கும் என்பதை கோலி உணர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

*இந்தியா, நியூசிலாந்து இரு அணிகளுக்கும் இடையே இந்தத் தொடரில் காணப்பட்ட முக்கியமான வித்தியாசம் திட்டமிடுதல். இந்திய அணியின் ஒவ்வொரு வீரரையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கியதுதான் ப்ளாக் கேப்ஸின் வெற்றிக்கான ரகசியம். இந்தத் திட்டமிடுதலில் இந்திய அணி சொதப்பியதுதான் உலகின் சிறந்த வீரர்களை வைத்துக்கொண்டும் இந்தியா `ஒயிட்வாஷ்' ஆனதற்கு முக்கியக்காரணம்.

டி20 தொடரில் 5 போட்டிகளை இழந்து ஒயிட்வாஷ் ஆனதற்குப் பிறகு, மீண்டு வந்து டபுள் `ஒயிட்வாஷ்' செய்ததெல்லாம் மிரட்டலான வரலாற்றுச் சம்பவம்.

INDvNZ
INDvNZ
Photo: AP / Mark Baker

வாழ்த்துகள் ப்ளாக் கேப்ஸ் !

மீண்டு வாங்க மென் இன் ப்ளூ !

அடுத்த கட்டுரைக்கு