Published:Updated:

ஸ்மிருதி மந்தனாவின் மிரட்டல் பேட்டிங்... ஆனாலும், இங்கிலாந்திடம் தொடர் தோல்வி ஏன்?!

ஸ்மிருதி மந்தனா - ஷெஃபாலி வர்மா
ஸ்மிருதி மந்தனா - ஷெஃபாலி வர்மா

42 பந்துகளில், 52 ரன்களைச் சேர்ந்திருந்த மந்தனா, அதற்கடுத்த 9 பந்துகளில், 18 ரன்களை அதிரடியாகச் எடுத்து மொத்தம் 70 ரன்களை எடுத்தார்.

பேட்டிங் ஆர்டர் குழப்பங்கள், நோக்கமின்றி ஆடுவது என அடுக்கடுக்கான தவறுகளால், அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது இந்திய மகளிர் அணி. சுற்றுப்பயணத்தை ஒரு கோப்பையோடாவது முடிக்கும் ஆர்வத்தோடு இந்தியாவும், 'விட்டுத்தரவே மாட்டோம்' எனும் வீம்போடு இங்கிலாந்தும் களமிறங்கினர். டாஸை வென்ற இந்தியா, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இரு அணிகளுக்குமே முக்கியப் போட்டி என்பதால், எந்த மாற்றமுமின்றி களமிறங்கின.

முதல் ஓவரில் பிரன்ட்டை எதிர்கொண்டனர் மந்தனாவும், ஷஃபாலி வர்மாவும். முதல் ஓவரிலேயே, இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மந்தனா சிங்கிளோடு, ஸ்ட்ரைக்கை ஷஃபாலியுடன் கொடுக்க, சந்தித்த முதல் பந்திலேயே, ஷஃபாலி, பந்தை 'ஸ்டம்புக்கு அனுப்பி வையுங்கள்' என்னும் வகையில், இடைவெளி ஏற்படுத்தித் தர ஸ்டம்பைத் தகர்த்தார் பிரன்ட். முதல் டி20-யில், டக் அவுட் ஆக்கி, பிரென்ட் தன்னை வெளியே அனுப்பியதற்கு, இரண்டாவது டி20-யில் அவரது ஒரே ஓவரில், ஐந்து பவுண்டரிகளை விளாசி பதிலடி தந்தார் ஷஃபாலி. அதற்கு, மூன்றாவது போட்டியில், மறுபடியும் பழி தீர்த்துள்ளார் பிரன்ட்.

சில பந்துகள் காத்திருந்து, கணித்து ஆடாமல், முதல் பந்திலிருந்தே, அடித்து ஆட வேண்டுமென்ற அவரது அணுகுமுறைதான், ஷஃபாலியின் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறது. முதல் ஓவரில் 1/1 என, விரும்பத்தகாத தொடக்கத்தைச் சந்தித்தது இந்தியா. இது இங்கிலாந்தின் வெற்றிக்கான முன்கூட்டிய அறிவிப்போ என்ற அச்சம் இந்திய ரசிகர்கள் மனதைக் கவ்வியது.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

அந்த பயத்துக்கு வலு சேர்த்தது, அடுத்து வந்த ஓவர்கள். போன போட்டியில், பின்வரிசையில் இறக்கப்பட்ட டியோல், இப்போட்டியில், அடித்து ரன்சேர்ப்பார் என்னும் நினைப்போடு ஒன்டவுனில் இறக்கப்பட்டார். பவர்பிளே ஓவர்களைச் சந்திக்க, அணியின் பேட்டிங் வரிசையில், மாற்றம் செய்ய விரும்பும் பட்சத்தில், அணி நிர்வாகம் இறக்கியிருக்க வேண்டியவர் ரிச்சா கோஷ். ஆனால், டி20-ல் 82 ஸ்ட்ரைக்ரேட்டோடு உள்ள டியோல் இறக்கப்பட்டார். இரண்டாவது ஓவரில், ரிவ்யூவுக்குத் தப்பிப் பிழைத்த டியோல், ஒரே ஒரு பவுண்டரியை மிட் ஆனில், அடித்த உற்சாகத்தில், அடுத்த பந்தை மிட் விக்கெட்டில் அடிக்க, ஸ்விர் பாய்ந்து பிடித்த கேட்சால், வெறும், 6 ரன்களில் வெளியேறினார் டியோல். பவர்பிளேயின் முடிவில், 28/2 என பரிதாபமாக இருந்த இந்தியாவை மீட்கப் போராடினர், மந்தனாவும் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும். அனுபவம் கைகொடுக்க, இந்தக் கூட்டணி, சிறப்பாகவே ஆடியது.

நல்ல லைன் அண்ட் லென்த்தில் முன்னேறி வரும் பந்துகளுக்கு, சிங்கிள்கள், தவறான பந்துகளுக்கு பவுண்டரி லைனுக்கு கிரீன் சிக்னல் என சரியான அணுகுமுறையைப் பின்பற்றினர் இருவரும். பல போட்டிகளாய் காணாமல் போயிருந்த, தனது அற்புத ஆட்டத்தை, இப்போட்டியில் எட்டிப் பார்க்க வைத்தார், ஹர்மன்ப்ரீத். ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்துவீசி, வில்லியர்ஸ் நெருக்கடி தந்தாலும் அஞ்சவில்லை. ஷாரா கிளென்னின் ஓவரில், அடுத்தடுத்த நான்கு பந்துகளில், மூன்று பவுண்டரிகளை விளாசி, வேகமேற்றத் தொடங்கியது அவரது ஆட்டம். அதற்கு, முட்டுக்கட்டை போட்டு ஸிவர், ஹர்மன்ப்ரீத்தை எல்பிடபிள்வூவால் வெளியேற்றினார். 13-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது இந்தியா.

ஸ்நே ராணா வந்த நிலையில், எஞ்சியிருக்கும் ஓவர்கள் ஏழு மட்டுமே என்பதால், அடித்து ஆடத் தொடங்கினார் மந்தனா. புல் ஷாட்டோடு வந்து சேர்ந்த, அவரது 13-வது டி20 அரைசதம், இந்தியாவின் ஸ்கோரையும் சதம் போட வைத்தது. அதே உற்சாகத்தோடு, மந்தனா அடித்த இன்னொரு பவுண்டரி, இங்கிலாந்தின் அழுத்தத்தை அதிகரிக்க, சுலபமான ரன் அவுட் வாய்ப்பைக் கூட, டேவிஸ் தவறவிட, இரண்டாவது வாய்ப்புக் கிடைத்தது ஸநே ராணாவுக்கு. ஆனால் அவர், அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், எக்கல்ஸ்டனின் பந்தில் வெளியேறினார்.

மறுபுறமோ, அரைசதத்துக்குப் பின், இன்னமும் மெருகேறியது, மந்தனாவின் ஆட்டம். பிரன்ட்டின் கடைசி ஓவரை பவுண்டரியுடன் அவர் ஆரம்பிக்க, அதற்கடுத்த பந்தை குறைந்த வேகத்தில், லோ ஃபுல் டாஸாக, அனுப்பினார் பிரன்ட். அதையும், பவுண்டரி ஆக்கும் முனைப்பில் மந்தனா டீப் மிட் விக்கெட்டில் தூக்கி அடிக்க, ஸிவர் பிடித்த இன்னொரு அற்புதமான கேட்சால், இங்கிலாந்தை இக்கட்டில் தள்ளிக் கொண்டிருந்த, மந்தனா வெளியேறினார். 42 பந்துகளில், 52 ரன்களைச் சேர்ந்திருந்த மந்தனா, அதற்கடுத்த 9 பந்துகளில், 18 ரன்களை அதிரடியாகச் எடுத்து மொத்தம் 70 ரன்களை எடுத்தார்.

ஸ்மிருதி மந்தனாவின் மிரட்டல் பேட்டிங்... ஆனாலும், இங்கிலாந்திடம் தொடர் தோல்வி ஏன்?!
Steven Paston

கடைசி நான்கு ஓவர்களை கவனிக்க, தீப்தியும் ரிச்சா கோஷும் களத்தில் இறங்க, இரண்டு பேக் டு பேக் பவுண்டரியோடு கணக்கைத் தொடங்கினார் ரிச்சா. சற்றுநேரம் இங்கிலாந்தை அலறவிட்டு, தனது கேமியோவால், 13 பந்துகளில், 20 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் 153 ரன்களோடு முடித்தது இந்தியா.

மந்தனாவின் அதிரடி, ஹர்மன்ப்ரீத் ஃபார்முக்கு வந்தது, ரிச்சாவின் கடைசி நேர கலக்கல் ஆட்டம், கடைசி 7 ஓவர்களில் 72 ரன்களைச் சேர்த்தது என நேர்மறை விஷயங்கள் இருந்தாலும், இந்த ஸ்கோர், இங்கிலாந்தை டிஃபெண்ட் செய்யப் போதுமா என்ற எண்ணம் எழாமல் இல்லை. எனினும், போன போட்டியில், 148 ரன்களையே டிஃபெண்ட் செய்த இந்திய அணி, மீண்டுமொரு முறை, அதே மாயத்தை நிகழ்த்தும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு மூளையின் ஏதோ ஒரு மூலையில் இழையோடியது.

154 ரன்கள் மேல் கண்வைத்த இறங்கியது இங்கிலாந்து. பவர்பிளேயின் முதல் ஐந்து ஓவர்களில், மிகச் சிறப்பாகவே இருந்தது இந்தியப் பந்துவீச்சு. ஷஃபாலி கோட்டை விட்ட ஒரு கேட்ச் தவிர, தீப்தி எடுத்த பியூமன்ட்டின் விக்கெட்டோடு நல்லவிதமாகவே நகர்ந்தது இந்தியா. ஆனால், ஸ்நே வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில், மூன்று பவுண்டரிகளை விளாசி, விட்டதைப் பிடித்தார் டேனியல்லா வியாட். 42/1 என்றிருந்தது, ஸ்கோர் போர்டு.

மந்தனா
மந்தனா
Steven Paston

இதன்பிறகு போட்டியை மெல்ல மெல்ல, தன் பக்கம் திருப்பத் தொடங்கியது இங்கிலாந்து. சென்ற போட்டியில் விட்டதைப் பிடிக்க வேண்டுமென்பது போல் ஆடினார் வியாட். கிரீஸை விட்டு இறங்கி வந்து ஆடியவர், பந்துகளை கேப்பில் அடித்து விட்டு, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார். விக்கெட் விழ வேண்டும் என பூனமைக் கொண்டு வந்தால், அவரது ஓவரை மிகச்சிறப்பாகவே அவர் கவனித்து அனுப்பினார்.

பத்து ஓவர்கள் முடிந்த நிலையில், அடிக்க வேண்டிய ரன்களில், பாதிக்கும் அதிகமாகவே இங்கிலாந்து சேர்த்து விட்டது. கேட்ச், ரன் அவுட்கள் என அவர்கள் அளித்த மிகமிகச் சிறிய அளவிலான வாய்ப்புகளையும் இந்தியா தவறவிட்டது. இங்கிலாந்தின் வெற்றிக்கான முன்னுரை, அவர்களது இன்னிங்ஸில் பிடித்த கேட்ச்களால் எழுதப்பட்டது என்றால், இந்தியாவின் முடிவுரை, அவர்கள் விட்ட கேட்சுகளால் எழுதப்பட்டது.

அருந்ததி ஒரு ஓவர் வீசியதுடன் காயத்தால் வெளியேறியதும் இந்தியாவுக்குப் பின்னடைவானது. எனினும், மிரட்டும் பௌலிங், அட்டாக்கிங் ஃபீல்டிங் என்பதற்கெல்லாம், அர்த்தமே தெரியாததைப் போல் தொடர்ந்தது இந்தியா. விக்கெட்டை வீழ்த்த, வியூகங்கள் எதுவும் வகுக்காமல், கையைத் தூக்கி சரண்டர் ஆகினர்.

உடைக்கவே முடியாத வியாட் - ஸிவர் கூட்டணி, இந்தியாவுக்கும், வெற்றிக்கும் நடுவில் சுவராக நிற்க, தோல்வி தள்ளிப் போடப்பட்டதே தவிர, தவிர்க்கப்பட முடியவில்லை. 33 பந்துகளில், அரைசதம் கடந்தார் வியாட். இது அவரது 8 அரைசதம். அதன்பிறகு இந்தக் கூட்டணி, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தது.

17-வது ஓவரில், ஸிவரின் விக்கெட் விழுந்தாலும், அது எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டவில்லை. 56 பந்துகளில், 89 ரன்களைச் சேர்த்த வியாட்டின் இன்னிங்ஸால், எட்டு பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே, வெற்றிக் கோட்டைத் தொட்டது இங்கிலாந்து. எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போன போட்டியில், தொடரை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளக் காட்டிய முனைப்பில், பாதியைக் கூடத் தொடரை வெல்ல வேண்டிய, இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனைகளிடம் பார்க்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களையும் இழந்த இந்தியா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில், டெஸ்ட் போட்டியை மட்டும் சமன் செய்ததோடு, மற்ற இரண்டு தொடர்களையுமே இழந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு