Published:Updated:

ஐபிஎல்-காக ஐந்தாவது டெஸ்ட்டை பலி கொடுத்த இந்தியா... வெளியே போன ரவி சாஸ்திரி, உள்ளே நுழைந்த ஜார்வோ!

கோலி - ரவி சாஸ்திரி
News
கோலி - ரவி சாஸ்திரி

தொடர்ந்து பிசிசிஐ ஐந்தாவது டெஸ்ட் போட்டியை மறுக்க, நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் 300 கோடி கொடுக்கவேண்டும், ஐந்தாவது டெஸ்ட்டை விட்டுக்கொடுக்க (Forfeit) சம்மதித்து தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்றது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஐபிஎல் அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானதுமே ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வதில் இருந்து பிசிசிஐ பின்வாங்க ஆரம்பிக்க, கங்குலியுடன் கடுமையாக விவாதத்தில் இறங்கியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்(ECB). இறுதியில் வென்றது கங்குலி தலைமையிலான பிசிசிஐ-தான்.

நடந்தது என்ன?

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் துபாயில் தொடங்கயிருக்கிறது. இதற்காக 8 அணிகளும், தங்கள் வீரர்களுடன் ஐக்கிய அரபு நாட்டில் முகாமிட்டுள்ளன. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் இன்று தொடங்கயிருந்த மான்செஸ்டர் போட்டி முடிந்ததும் நேரடியாக துபாய் சென்று தங்கள் அணிகளில் இணைவது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் கடந்த வாரம் முதலில் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவ, நேற்று மாலை பிசியோதெரபிஸ்ட்டுக்கும் கொரோனா என்பது உறுதியானது.

கோலி தலைமையில் இந்திய அணி ENGvIND
கோலி தலைமையில் இந்திய அணி ENGvIND
Kirsty Wigglesworth

''இந்திய முகாமுக்குள் மேலும் கொரோனா பரவினால் அது ஐபிஎல் போட்டிகளை மொத்தமாக பாதிக்கும், அதனால் ஐந்தாவது டெஸ்ட்டை நிறுத்தவேண்டும்'' என்கிற கோரிக்கை ஐபிஎல் அணிகளிடம் இருந்தும் பிசிசிஐ-க்குப் பறந்தது. இதனால் இந்த ஐந்து நாட்கள் இந்திய வீரர்களை தனிமைப்படுத்தி எந்த சிக்கலும் இல்லாமல் துபாய்க்கு கொண்டுவருவது என்கிற முடிவை எடுத்தது பிசிசிஐ.

இங்கிலாந்தின் எதிர்ப்பு!

பிசிசிஐ மற்றும் அதன் தலைவரான கங்குலி முன்மொழிந்த இந்த திட்டத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மான்செஸ்டர் போட்டிக்கு கிட்டத்தட்ட 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டதாகவும், போட்டியை நிறுத்தினால் டிவி உரிமம் மூலம் கிடைக்கவேண்டிய பணமும் வராது, பெருத்த நஷ்டமும் ஏற்படும் என்றது. தொடர்ந்து பிசிசிஐ ஐந்தாவது போட்டிக்கு ஒத்துழைக்க மறுக்க, நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் 300 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும், ஐந்தாவது டெஸ்ட்டை விட்டுக்கொடுக்க (Forfeit) சம்மதித்து தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்றது ECB. இதற்கு இந்திய கேப்டன் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்கிடையே இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்திய வீரர்களின் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்தது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் அணிகள் பிசிசிஐ நிர்வாகத்தை நெருக்க ஆரம்பித்தன. ‘’இங்கிலாந்து தொடரில் இருந்து வரும் ஒரு வீரர் மூலம் கொரோனா பரவினாலும் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ரத்தாகும்... பல கோடிகளை இழக்க நாங்கள் தயாராகயில்லை’’ என அணிகள் எச்சரிக்க, போட்டியை ரத்து செய்வது என்கிற திட்டவட்டமான முடிவை எடுத்தது பிசிசிஐ. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், வருமான ரீதியாக இந்திய கிரிக்கெட் வாரியம் சூப்பர் பவராக இருப்பதால் இறுதியாக ஒப்புக்கொண்டது.

ஜார்வோ 69 (டேனியல் ஜார்விஸ்)
ஜார்வோ 69 (டேனியல் ஜார்விஸ்)

இதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ளபடி 2-1 என்கிற நிலையில் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குள்ளாகும் ரவி சாஸ்திரி - ஜார்வோ பிரச்னை!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி இல்லாமல், பயோபபுள் விதிகளை மீறி ரவி சாஸ்திரி தனது புத்தக வெளியீட்டை லண்டனில் நடத்தியதோடு கோலி உள்பட பலரையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துப்போனதுதான் கொரோனா பரவலுக்கு காரணம் என்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதற்கு பதிலாக, ''இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முறையான பயோபபுள் அமைப்பை உருவாக்கவில்லை, பார்வையாளர்கள் வீரர்களுடன் நெருங்கும் அளவுக்கு பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் இருந்தன'' எனக் குற்றம்சாட்டியிருக்கிறது பிசிசிஐ. அதற்கு ஆதாரமாக பிராங்க் ஸ்பெஷலிஸ்ட்டான ஜார்வோ மூன்று டெஸ்ட்டுகளிலும் கட்டுப்பாடுகளை மீறி பிட்ச் வரை வந்ததை குறிப்பிட்டிருக்கிறது.

கடைசி டெஸ்ட் ரத்தானதற்கு இருதரப்பிலுமே நடந்த விதிமுறை மீறல்களும், ஐபிஎல் நெருக்கடியும் காரணம் என்பதே உண்மை!