Published:Updated:

உட்றாதீங்க கோலி… இந்தியா ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றே ஆக வேண்டும்?! #WTCFinal

கோலி
கோலி

ரஷீத்கானுக்கு மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்படுகிறது. ‘'உலகக்கோப்பை வென்றதில் பெரும் மகிழ்ச்சி. எங்களுடைய இந்த வெற்றிக்கு இந்திய அணியும், கேப்டன் தோனியுமே மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்'’ என்கிறார் ரஷீத்.

டைம் மெஷினில் ட்ராவல் செய்து 2028-க்கு பயணிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். 2028-க்கு வந்துவிட்டோம். இங்கே இப்போது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாக் அவுட் போட்டிகளெல்லாம் முடிந்து இறுதிப்போட்டி தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. பரபரப்பான இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்கிறது.

ரஷீத்கானுக்கு மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்படுகிறது. விருதை பெற்றுவிட்டு பேசிய ரஷீத்கான் ‘'உலகக்கோப்பை வென்றதில் பெரும் மகிழ்ச்சி. எங்களுடைய இந்த வெற்றிக்கு இந்திய அணியும் அதன் முன்னாள் கேப்டன் தோனியுமே மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்'’ என்கிறார்.

ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையை வெல்லும் என்பதையே நம்பமுடியவில்லை. இதில் அவர்கள் இந்தியாவுக்கு வேறு நன்றி சொல்கிறார்களா?! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாம் பாருங்க என தோன்றலாம். இந்த ஆப்கானிஸ்தான் விஷயத்தை ஒரு பக்கம் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கான பதிலை பின்னால் சொல்கிறேன்.

ஜுன் 21… கிரிக்கெட் வரலாற்றில் இந்த நாளை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது. 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் அணி வெற்றி பெற்று சாதனை படைத்த நாள். வெறுமென வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையை வென்றுவிட்டார்கள் என்பதற்காக மட்டும் இந்த நாள் வரலாற்றில் இடம்பிடித்துவிடவில்லை. இது ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டெழுந்து திருப்பியடித்த நாள். '’நாங்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை. எல்லோருக்கும் இணையானவர்கள் என்று நம்பினோம். அதை இந்த உலகுக்கு நிரூபிக்கும் வாய்ப்பாக கிரிக்கெட்டைப் பார்த்தோம்' என விவியன் ரிச்சர்ட்ஸ் இந்த உலகக்கோப்பை குறித்து பேசியிருப்பார். விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டுமில்லை க்ளைவ் லாயிட் தலைமையில் சென்ற மொத்த கரீபிய வீரர்களின் எண்ணமும் இதுதான். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திமிறி எழ கிரிக்கெட்டை ஒரு கருவியாக பயன்படுத்தினர்.

கோலி - ஷமி
கோலி - ஷமி

கிரிக்கெட்டின் ஒரு உச்சபட்ச கோப்பையை வெல்வதன் மூலம் தங்களின் 'உரிமைக்குரலை' உலக அரங்கில் ஒலிக்கச் செய்யமுடியும் என நம்பினர். நம்பிக்கையின்படியே, லார்ட்ஸ் மைதானத்தின் கேலரியில் உலகக்கோப்பையோடு கரீபிய வீரர்கள் போஸ் கொடுத்தனர். அவர்களை பொறுத்தவரைக்கும் அது வெறும் கோப்பையல்ல, ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்ட நபர்கள் கொடுத்த பதிலடிக்கான குறியீடு. ஆம், கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் எந்த ஒரு கோப்பையும் சாதாரணமானவை கிடையாது. அவை ஏற்படுத்தும் தாக்கமும், சொல்லும் செய்தியும் மிகப்பெரியது.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மேட்டுக்குடியினருக்கான விளையாட்டாகவும் சமூகத்தின் உயர்மட்டங்களில் இருப்பவர்களின் விளையாட்டாகவும் மட்டுமே பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதை உடைத்தது இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வெற்றி. கபில்தேவின் படை நிகழ்த்தி காட்டிய அந்த சாதனை இந்தியாவின் இண்டு இடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. பணக்காரர்களுக்கு ஏதுவான விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டை தென்னை மட்டையுடன் சைக்கிள் ட்யூப்பையும் வைத்தே ஆட வைத்து ஜனநாயகப்படுத்தியது அந்த 1983 உலகக்கோப்பை வெற்றிதான். இன்றைக்கு சேலத்தில் ஒரு மூலையில் இருக்கும் சின்னப்பம்பட்டி கிராமத்திலிருந்து நடராஜன் இந்திய அணிக்கு புறப்பட்டு வருகிறார் என்றால் அதற்கு விதையாக இருந்தது இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வெற்றிதான்.

ஆப்கானிஸ்தான் எப்படி உலகக்கோப்பையை வெல்லும்? அப்படியே வென்றாலும் இந்தியாவுக்கும் தோனிக்கும் ஏன் நன்றி சொல்ல வேண்டும்?

ஆப்கானிஸ்தான் டி20 உலகக்கோப்பையை ஏன் வெல்ல முடியாது? இன்று உலகம் முழுவதும் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடக்கிறது. அங்கேயெல்லாம் ஸ்டார் பெர்ஃபார்மர்களாக ஆப்கானிஸ்தான் வீரர்களே இருக்கிறார்கள். ரஷீத்கான் இல்லாத ஒரு லீடிங் விக்கெட் டேக்கர் பட்டியல் எந்த பிரீமியர் லீகிலும் இருக்காது. முகமது நபி பேட்டிங், பௌலிங் இரண்டிலும் மிரட்டுகிறார். முஜிபுர் ரஹ்மான் கலக்குகிறார். இன்னும் எத்தனையோ ஆப்கன் வீரர்கள் கரீபியன் ப்ரீமியர் லீகிலும், பாகிஸ்தான் சூப்பர் லீகிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுக்க அத்தனை மைதானங்களிலும் ஆடிய அனுபவம் ஆப்கன் வீரர்களுக்கே இருக்கிறது. ஒரு டி20 தொடரை வெல்வதற்கான தரமான அணியாக ஆப்கானிஸ்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த ப்ராசஸுக்கு சில ஆண்டுகள் பிடிக்கும். அதற்காகவே 2028 என கொஞ்சம் தள்ளி சொன்னேன். 2028-ல் ஆப்கானிஸ்தான் டி20 உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் அதற்கு அவர்கள் ஆடிய பிரீமியர் லீக் போட்டிகளே மிக முக்கிய காரணமாக இருக்கும்.

கோலி
கோலி

அந்த பிரீமியர் லீக் போட்டிகளின் தொடக்கப்புள்ளி இந்தியாவில் இருக்கிறது. ஐபிஎல் போட்டிதான் 'Mother of all premier league'. இன்று கிரிக்கெட் ஆடும் அத்தனை நாடுகளும் ஒரு பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துகின்றன என்றால் அதற்கு காரணம் இந்தியன் பிரீமியர் லீக். இந்த ஐபிஎல் எப்படி சாத்தியப்பட்டது என்கிற வரலாற்றை தேடிப்பார்த்தால் அதற்கும் ஒரு உலகக்கோப்பையே காரணம். 2007 அறிமுக டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றதே இதற்கு முக்கிய காரணம்.

ஒருவேளை அந்த டி20 தொடரை இந்தியா வெல்லாமல் வேறு ஏதோ ஒரு அணி வென்றிருந்தால் இன்று டி20 போட்டிகளுக்கு இப்படி ஒரு க்ரேஸும், வணிகமும் உண்டாகியிருக்குமா என்பதே சந்தேகம்தான். கிரிக்கெட்டின் நவயுக பரிணாமம் இந்தியாவின் 2007 உலகக்கோப்பை வெற்றியாலேயே இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையை வென்று இந்தியாவுக்கும் தோனிக்கும் நன்றி சொல்லவேண்டியதற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும். கேட்பதற்கு பட்டர்ஃப்ளை எஃபெக்ட் போல இருந்தாலும் இதுதான் நிதர்சனம். இந்தியா வென்ற அந்த 2007 உலகக்கோப்பை, ஸ்திரமற்ற அமைதியற்ற போர்ச்சூழலில் சிக்கியிருக்கும் ஒரு நாட்டு மக்களின் கிரிக்கெட் கனவை நனவுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்திய அணி ஒரு உலகக்கோப்பையை வென்றால் அது உலகம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலக கோப்பை டி20 இறுதிப் போட்டி வரை இந்திய அணி தகுதி பெற்றிருந்தது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட மெல்போர்ன் மைதானம் முழுவதும் நிரம்பியிருந்தது. தொலைக்காட்சியில் வரலாறு காணாத எண்ணிக்கையில் ரசிகர்கள் அந்த போட்டியை பார்த்திருந்தனர். கிரிக்கெட் என்றில்லை ஒட்டுமொத்தமாக பெண்களின் அனைத்து விளையாட்டு போட்டிகளையுமே சேர்த்தும் கூட, இந்த போட்டிதான் மக்கள் அதிகமாக ஆர்வம் செலுத்திய போட்டி என்ற பெருமையை பெற்றது. அதற்கு காரணம் இந்தியா.

பெண்கள் போட்டிகளுக்கான வரவேற்பை பார்த்த பிசிசிஐ 7 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான டெஸ்ட் போட்டியை தொடங்கியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை அசாத்தியமாக டிரா செய்தது. ஸ்நே ராணா எனும் வீராங்கனை ஐந்து வருடம் கழித்து கம்பேக் கொடுத்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடி தனக்கான இடத்தை அணியில் உறுதி செய்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம், 2020 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.

கோலி - இந்திய அணி
கோலி - இந்திய அணி

இந்தியா ஒரு தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதன் மூலமும் உலகக்கோப்பையை வெல்வதன் மூலமும் இவ்வளவு விஷயங்கள் எப்படி சாத்தியப்படுகிறது? இந்தியாவின் மக்கள் தொகையும் அதை சுற்றியிருக்கும் வணிகமும்தான் இதற்கு காரணம். இந்திய மக்கள் ஒரு தொடரை விரும்பி பார்த்தாலே போதும் அந்த தொடர் ஹிட்தான். அதற்கு, இந்திய அணி அந்த தொடரில் சிறப்பாக ஆட வேண்டும். அதனால்தான் சொல்கிறேன் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியே வென்றே ஆக வேண்டும்.

கிரிக்கெட்டின் ஆன்மாவே டெஸ்ட் கிரிக்கெட்தான் என்பது போன்று கவித்துவமாக டெஸ்ட் போட்டிகளை வர்ணித்தாலும், இன்றைய தேதிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியிலும் சரி வீரர்கள் மத்தியிலும் சரி பெரிய வரவேற்பு இல்லை என்றே சொல்லலாம். பகலிரவு போட்டிகள் என பல விஷயங்களை ஐசிசி முயன்றாலும் இந்த நிலை மட்டும் மாறவில்லை. முரட்டுத்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்றனர். ஐபிஎல் போட்டிகளை மட்டுமே பார்க்கும் ஒரு பெருங்கூட்டம் இங்கு இருக்கிறது.

கோலி
கோலி

வீரர்களுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பணம் கொழிக்கும் டி20 போட்டிகளையே விரும்புகின்றனர். சராசரியாக மூன்றே நாளில் முடிந்துபோகும் டெஸ்ட் போட்டிகள்தான் இதற்கு உதாரணம். இந்த நிலை மாற வேண்டுமெனில் இந்திய மக்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென ஒரு தனி ஆர்வம் உண்டாக வேண்டும். அதற்கு இந்தியா 1983, 2007 போன்று ஒரு உலகக்கோப்பை வெற்றியை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் சாத்தியப்படுத்தியாக வேண்டும்.

இந்தியா இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும்பட்சத்தில் அது உலகம் முழுக்கவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை கொடுக்கும். எப்படி இந்தியாவின் டி20 உலகக்கோப்பை வெற்றி ஆப்கானிஸ்தான் மாதிரியான ஒரு நாட்டை கிரிக்கெட் உலகுக்கு வெளிச்சம் காட்டியதோ அதேபோன்று இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியும் அடையாளம் பெறாமல் இருக்கும் ஏதோ ஒரு நாட்டை ஏதோ ஒரு வீரரை வெளியே கொண்டு வரும். மழையின் காரணமாக போட்டி டிராவை நோக்கி செல்வது போல இருக்கிறது. ஆனால், இந்திய அணி அசாத்தியங்களை நிகழ்த்த வேண்டும். வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும். ஏனெனில், இந்தியா இந்தியாவுக்காக மட்டும் ஆடவில்லை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகுக்காகவும் ஆடுகிறது. உட்றாதீங்க கோலி!

அடுத்த கட்டுரைக்கு