Published:Updated:

தொடர் வெற்றிதான்... ஆனால், இதை ஏன் உலகக்கோப்பைபோல் கொண்டாடுகிறோம் தெரியுமா?! #AUSvIND

#AUSvIND ( Tertius Pickard )

ஒரு தொடர் வெற்றிதானே... இது ஏன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகிறது என்று சிலருக்குத் தோன்றலாம். இதோ அதற்கான 12 காரணங்கள்!

தொடர் வெற்றிதான்... ஆனால், இதை ஏன் உலகக்கோப்பைபோல் கொண்டாடுகிறோம் தெரியுமா?! #AUSvIND

ஒரு தொடர் வெற்றிதானே... இது ஏன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகிறது என்று சிலருக்குத் தோன்றலாம். இதோ அதற்கான 12 காரணங்கள்!

Published:Updated:
#AUSvIND ( Tertius Pickard )

கரீபியன் தீவுகள்... 2007-ம் ஆண்டு 50 ஒவர் உலககோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ``இந்திய கிரிக்கெட்டின் கதை முடிந்தது... இனிமேல் எழுந்திருக்கவே முடியாது'' எனத் தீர்ப்புகள் எழுதப்பட்டன.

ஆனால், அதே 2007 முடிவதற்குள் யாரும் எதிர்பாராத வண்ணம் சச்சின், ஷேவாக், டிராவிட் என சீனியர்கள் யாரும் இல்லாத, புத்தம் புது கேப்டனோடு, இளம்படையைக்கொண்டு டி-20 உலககோப்பையை இந்தியா வென்றுகாட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது\. அதேபோன்று ஒரு சரித்திர நிகழ்வுதான் இப்போதே ஆஸ்திரலியாவில் நிகழ்ந்துள்ளது.

எதிரில் நிற்கும் எதிரி யாராய் இருந்தால் என்ன, அவன் ஏந்தும் ஆயுதம் எதுவாய் இருந்தால் என்ன, உன்னுள் இருக்கும் உத்வேகம், உன்னை உந்தித் தள்ளும் வரை, எட்ட முடியாத இலக்கு என்பது எதுவுமேயில்லை என்பதை நிரூபித்திருக்கிறது இந்தியா. இது வெறும் ஒரு தொடர் வெற்றிதானே... ஏன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகிறது என்று சிலருக்குத் தோன்றலாம். இதோ அதற்கான 12 காரணங்கள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
#AUSvIND Rishab pant
#AUSvIND Rishab pant
Tertius Pickard

1. விஷ வார்த்தைகளால் வீசப்பட்ட வலைகள்!

தொடரின் தொடக்கத்திற்கு முன்பே ஆஸ்திரேலிய கிரிக்கெட் 'வல்லுநர்கள்', முன்னாள் வீரர்கள் என அத்தனை பேரும் வரிசைகட்டி, இந்தியாவை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தனர்! அதுவும் அடிலெய்டு டெஸ்டில் தோற்றதற்குப்பின், இந்த விஷம் தோய்த்த வார்த்தைகளின் வீரியம் இன்னும் அதிகமானது! இந்திய வீரர்களை மனதளவில் தளரச் செய்வது போன்ற வார்த்தை ஜாலங்களால் ஆன வலை தொடர்ந்து வீசப்பட்டும் எதிலும் சிக்கவில்லை, இந்தியச் சிங்கங்கள்!

2. தோற்றது டாஸில் மட்டுமே!

டாஸ் என்பது, ஒரு போட்டியின் முடிவை ஓரளவு முடிவு செய்யும் விஷயம். அதை வெல்வது பகைவனுக்கு எதிரான ஆயுதத்தை, நாமே தேர்ந்தெடுப்பது போலத்தான். ஆனால், துரதிஷ்டவசமாக, தான் தலைமையேற்ற, மூன்று டெஸ்டிலும் டாஸைத் தோற்றார் ரஹானே! வெற்றியின் நிழலைத் தீண்டும் வாய்ப்பை, டாஸை இழந்து இந்தியா பறிகொடுத்தாலும், போட்டியின் போக்கை அது முற்றிலுமாய் மாற்றியமைத்து விட, அவர்கள் அனுமதிக்கவில்லை. டாஸ் தோற்ற மூன்று போட்டிகளில், இரண்டில் வென்ற இந்தியா, ஒன்றை டிரா செய்தது. நானாய் விட்டுத் தராத வரை, என்னிடமிருந்து போட்டியின் பிடியின் விளிம்பைக்கூட, உங்களால் எட்டித் தொட முடியாது என அடித்துச் சொல்வதைப் போலத்தான் இருந்தது அது!

3. கொரோனா அரக்கனின் அச்சுறுத்தல்!

கொரோனாவால், பல மாதங்களாக சர்வதேசப் போட்டிகளில் ஆடாத இந்திய அணிக்கு, அதிலிருந்து மீண்டு வந்து, உடலளவிலும் மனதளவிலும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள போதிய அவகாசம் இல்லை‌. போதாக்குறைக்கு பயோபபிள் தந்த மன உளைச்சலும் அவர்களை ரொம்பவே பாதித்தது! பிரிஸ்பேனுக்குப் பயணிக்கவே தயங்குகிற அளவுக்கு, நிறைய இன்னல்களை எதிர்கொண்டது இந்திய அணி! பிரிஸ்பேனில் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளால் கட்டிப் போடப்பட்டது. எனினும் அவர்களது பலம் ஒரு சிறு அளவுகூடக் குறையவில்லை.

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

4. சாம்பலிலிருந்து உயிர்த்தெழுதல்!

அடிலெய்டின் அவமானத்தைத் துடைக்கவே அரை நூற்றாண்டாகும் என ஆருடம் கணித்தவர்கள் வாய்பிளக்க, அடுத்த 30 நாட்களில் விண்ணை முட்டும் வெற்றியைத் தனதாக்கியுள்ளது இந்தியா! கேலிகளுக்குக் காது கொடுக்காமல், எதிராளியின் கோட்டையில் ஓட்டையிடுவதே கடினமெனில், அதற்குள் புகுந்து, தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே, அதுவும் எஞ்சி இருக்கும் சாம்பலிலிருந்து எழுப்பிக் கொள்வதற்கு, எத்தனை பெரிய வைராக்கியமும் மன உறுதியும் தேவைப்படும். அதை நெஞ்சுரத்துடன் நிகழ்த்திக் காட்டியதற்காகவே, எத்தனை பாராட்டுப் பத்திரங்களை வேண்டுமென்றாலும் பதிவு செய்யலாம், இந்த வைர நெஞ்சங்களுக்காக! கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய கம்பேக் இது என்றால் மிகையாகாது!

5. இனவெறித் தாக்குதல்!

சிட்னியில் நடைபெற்ற போட்டியில், களத்திற்குள், ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தைப் பறிமாற்றங்களால் கவனத்தைச் சிதற வைக்க முயற்சிக்க, கேலரியில் இருந்தும் இனவெறித் தாக்குதலைச் சந்தித்தனர், பும்ரா மற்றும் சிராஜ்! அந்த நிகழ்வு நடைபெற்ற போது, இதற்காகவாவது இந்தியா வெல்ல வேண்டும் என ஆதங்கப்பட்ட இந்திய இதயங்கள் எத்தனையோ! தன்னை இழிவுபடுத்த நினைத்தவர்களுக்கு பிரிஸ்பேனில் பதிலடி கொடுத்தார் சிராஜ். இரண்டாவது இன்னிங்ஸில், தனது ஐந்து விக்கெட்டுகளால் சில நேரங்களில், வடுக்கள் கூட வலியைக் கொடுக்கும், அதுவே நம்மை வெறியுடன் முன்னோக்கியும் நகர்த்தும்! இக்கூற்று இப்போது உண்மையாகி இருக்கிறது!

6. வலிமையான சொல் - செயல்!

தங்கள் மீதான விமர்சனங்களை நமது வீரர்கள் கையாண்ட விதத்தில் பக்குவம் நிரம்பி வழிந்தது! வார்த்தைக்கு வார்த்தை என மல்லுக்கட்டவில்லை. ஆனால், திரும்பிக் கொடுத்தனர், ஒவ்வொரு முறையும், தங்கள் திறமைகளால்! கேட்ச் டிராப்புகளுக்காக வசவு வார்த்தைகளை பரிசாய்ப் பெற்ற பன்ட், ரன் அவுட்டுக்காக விமர்சிக்கப்பட்ட விஹாரி, மெதுவாக ரன் சேர்க்கிறார் என குற்றச்சாட்டப்பட்ட புஜாரா என யாருமே, தங்களது நிலைப்பாட்டை வார்த்தைகளால் விவரிக்கவில்லை, அதற்குச் சமாதானம் சொல்லி, தப்பிக்கவும் முயற்சிக்கவில்லை! தவறிலிருந்து பாடம்கற்று மீண்டு வந்து, கொட்டிய கைகளையே தமக்காய் தட்டவும் வைத்தனர்!

7. காயங்கள்!

கிரிக்கெட் தொடர் வரலாற்றில், ஒரு டெஸ்ட் தொடரில், இத்தனை வீரர்கள் காயத்தைச் சந்தித்தது இதுவே முதல்முறை எனச் சொல்லலாம்! அந்தளவுக்கு கொரோனாவை விடக் கொடுமைக்காரனாய், காயங்கள்தான் இந்தியாவுக்கு பெரிய சவாலாக இருந்தன. இதனாலும் சோர்ந்து விடவில்லை, இந்த லட்சிய நாயகர்கள்! காயத்தோடும் வலியோடும் ஆடி நமது விழிகளைக் கசிய வைத்த விஹாரியும், அஷ்வினும் ஒருபுறமெனில், எத்தனை முறை தாக்கினாலும், என் அணியைக் கோட்டைச் சுவராய்த் தாங்குவேன் என சற்றும் அசையாமல், நிமிர்ந்து நின்ற புஜாரா என உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்தளித்தனர். கடைசிப் போட்டியின் கடைசி நாளில், எத்தனை பந்துகள் அவரது உடலில் துளையிடத் துடித்ததென்பதற்குக் கணக்கே இல்லை. சிரம் தாழ்த்தி வணங்கினாலும் தவறில்லை, இவர்கள் ஒவ்வொருவரையும்!

8. இந்திய ஜெர்ஸியில் இள ரத்தம்!

2007-ம் ஆண்டு அவமானகரமான உலகக்கோப்பை தோல்வியால் தொங்கிப் போன இந்தியர்களின் தலைகளை நிமிரச் செய்து, அவர்களது தலையில் மகுடம் சூட்டி அழகு பார்த்தது, தோனி தலைமையிலான இளம்படை! சரித்திரம் திரும்பி இருக்கிறது மறுபடியும் ஒருமுறை! 36 ஆல்அவுட்டால் விம்மித் தவித்து களைய முடியாக் களங்கம் சுமந்த இந்தியக் கிரிக்கெட்டுக்கு, வெற்றித் திலகமிட்டு அழுகு பார்த்துள்ளது ரஹானேவின் இளம்புயல்கள்! நெட் பவுலர்களாக, இரண்டாம் மூன்றாம் நிலை வீரர்களாக, தண்ணீர்கேனைத் தூக்கவும் தெரியும், வாய்ப்புக் கிடைத்தால், அக்னிக் குஞ்சுகளாய், ஆர்ப்பரிக்கவும் தெரியுமென நிரூபணம் செய்து விட்டனர். பும்ரா, ஷமி இவர்களிடம் அடிபட்டிருந்தால் கூட, ஆஸ்திரேலியாவின் காயம் சில நாளில் ஆறி இருக்கும்! ஆனால், "என்ன பெயர், எப்படி பெளலிங் போடுவார், வேரியஷன்கள் தெரியுமா?!" என ஏளனப் பார்வையோடு எதிர்கொண்டவர்களை ஏறி மிதித்ததால்தான், "இந்தியாவை ஒருபோதும் குறைத்து எடை போடக் கூடாது" என்ற வார்த்தை அவர்களிடமிருந்து வெளிவந்தது! ஒருவர் இல்லையெனில் மற்றொருவர் அவருமில்லையெனில் மேலும் ஒருவர் என புற்றீசல் போல புறப்பட்டு வந்து கொண்டே இருந்தார்கள்! இந்திய ஏ அணியோடு விளையாடுகிறோமா என நகைத்தவர்களை, "எங்களை முதலில் வெல்ல முடிகிறதா பார்!" என வார்த்தைகளால் அல்ல வெற்றியால் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

9. அச்சமா, அரைக்கிலோ என்ன விலை?!

அனுபவம் தரும் பரிசுதான், தைரியமும் தன்னம்பிக்கையும்! கோலி மற்றும் ஜடேஜாவிடம், "எங்கே முடிந்தால் மோதிப் பார்" என்ற அசாத்திய துணிச்சல் இருக்கும்! அதே அணுகுமுறையை சுந்தர், தாக்கூர், சிராஜ், பன்ட் என ஒவ்வொருவரிடமும் இருந்தது. அரக்கர்களாய் அரற்றும் ஆஸ்திரேலியர்களைப் பார்த்து, பதற்றம், தயக்கம், அச்சம் என எதற்குரிய தடமுமின்றி நிமிர்ந்து நின்ற அந்த கம்பீரத்தை கண் கொண்டு பார்த்துக் கொண்டேயிருக்கலாம்! கடைசிப் போட்டியில் தோற்றது ஒருபக்க வலியென்றால், மூன்றாவது போட்டியில் இந்தியா தந்த மரணத்தோல்வி பயமெல்லாம் கனவில்கூட அவர்களுக்கு வந்து போகும்! இனி ஓருமுறை இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் டிக்ளேர் செய்யும் முன் ஆயிரம் முறை ஆஸ்திரேலியா யோசிக்கும் என்பதற்கே இவர்களைக் கொண்டாடித் தீர்க்கலாம்!

10. கூட்டணி பலம்!

இவரால் ஜெயித்தோம், வெற்றி வசப்பட்டதே இவரால் மட்டும்தான் என அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்தது! அதனால்தானோ என்னவோ அதிக விக்கெட் எடுத்தவர் வரிசையிலும், அதிக ரன்களை எடுத்தவர் வரிசையிலும், இந்திய வீரர்கள் முதலிடம் பெறவில்லை. ஏனெனில் இது கூட்டு முயற்சி! இதற்கும் மேல் வீரர்கள் ஒருவருடன் ஒருவர், இணக்கமாய் இருந்ததுதான் கூடுதல் அழகு! சிராஜின் வெற்றியை பும்ரா கொண்டாடினார். சுந்தரின் சாதனைக்கு அஷ்வின் ஆனந்தப்பட்டார் என அழகான ஒரு நட்பினை நம் வீரர்கள் அத்தனை பேரிடமும் பார்க்கப்பட்டது!

11. உள்ளூர் போட்டிகள்... ஐபிஎல் தந்த தன்னம்பிக்கை!

ராகுல் டிராவிட் இந்தியா ஏ அணியுடன் பயிற்சியாளராக இணைந்தப்பிறகு, வீரர்கள் வெளிநாட்டு கண்டிஷன்களில் ஆடிப் பழக வேண்டுமெனக் கூறி, நிறைய தொடர்களை ஏற்பாடு செய்தார். அது எல்லாவற்றிற்கும் நியாயம் கற்பித்திருக்கின்றனர் நம் வீரர்கள்! அடுத்த பத்தாண்டுக்கு உண்டான வீரர்களை உருவாக்கி விட்டோம் என மார்தட்டிக் கொள்ளுமளவிற்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறது இந்த டெஸ்ட் தொடர்! இது எல்லாவற்றிற்கும் முக்கிய காரணமாக இருப்பது உள்ளூர்ப் போட்டிகளும், ஐபிஎல்லும்தான். ஐபிஎல்லில் சர்வதேச வீரர்களுடன் பயணிக்கும் வாய்ப்புப் பெற்றதால், எதனையும் எளிதாகக் கையாளும் மனப்பாங்கு நமது இளம்வீரர்களிடம் இயல்பாகவே ஒட்டிக் கொண்டுள்ளது!

12. டிராவா... அப்படின்னா!?

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன், டிரா செய்து விடுவதே பெரிய சாதனை போலத்தான் பார்க்கப்படும்! ஆனால் நமது வீரர்களுக்கோ கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது! தாக்குப்பிடிப்பார்களா என்ற பயத்தை மாற்றி தாக்கியது மட்டுமின்றி வெற்றியை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு விளையாடியதால்தான் வெற்றி வசப்பட்டது!

இவை மட்டுமல்லாது ரஹானேவின் மேலான கேப்டன்ஷிப், பயிற்சியாளர்களின் வழிகாட்டல், பொறுப்பேற்க முன் வருதல், விட்டுக் கொடுக்காத மன உறுதி, பொறுமை, நம்பிக்கை இவை எல்லாமும் சேர்ந்துதான் 32 வருடங்களாக, பிரிஸ்பேனில் வீழ்ச்சியையே சந்திக்காத ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது! இதே உத்வேகத்தோடு முன்னேறிச் சென்றால், டெஸ்ட் உலகக் கோப்பையில் இந்தியா தன் பெயரெழுதலாம்!