Published:Updated:

பென் ஸ்டோக்ஸ் எடுத்த திடீர் முடிவு... விவாதத்துக்கு உள்ளாகும் கிரிக்கெட் வீரர்களின் மனநலம்!

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வே இல்லாமல் விளையாடி வருவதுதான் பிரச்னைகளுக்கான ஆரம்பம். சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல், பிக்பேஷ், தி ஹண்ட்ரட், கவுன்ட்டி கிரிக்கெட் என கிளப் கிரிக்கெட்டுகளும் தொடர்ந்து நடைபெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவோமி ஒசாகா, சிமோன் பைல்ஸ் இப்போது பென் ஸ்டோக்ஸ்… ‘’மனநலனில் கவனம் செலுத்த விரும்புகிறோம்'’ என தங்களின் விளையாட்டுகளில் இருந்து விலகியிருக்கும் சமீபத்திய வீரர்கள் இவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லும், இங்கிலாந்தின் சாரா டெய்லரும் இதே காரணங்களால் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார்கள். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட்டின் தூண், உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர், 2019 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடரின் நாயகன் பென் ஸ்டோக்ஸ் எல்லாவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக விலகுவதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அத்தோடு இந்தாண்டு இறுதியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பெருமைமிகுந்த ஆஷஸ் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் பென் ஸ்டோக்ஸ் விலகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

விவாதமாகும் மனநலம்!

கிரிக்கெட் வீரர்கள் ஓய்வே இல்லாமல் விளையாடி வருவதுதான் பிரச்னைகளுக்கான ஆரம்பம். சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல், பிக்பேஷ், தி ஹண்ட்ரட், கவுன்ட்டி கிரிக்கெட் என கிளப் கிரிக்கெட்டுகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கிடையே கடந்தாண்டு முதல் கொரோனா வைரஸ் பிரச்னை உருவாக பயோபபுள் செட்அப்புக்குள் வீரர்கள் அடைக்கப்பட்டனர்.

வெளியே போகமுடியாதது, குடும்பத்தினரை சந்திக்கமுடியாதது எனப் பல விஷயங்களும் அவர்களைப் போட்டு அழுத்த, ஆட்டத்தில் கவனம் செலுத்தமுடியாமல் தடுமாறுகிறார்கள். இதனால் ஒரு ஆட்டத்தில் சொதப்பினாலும் அது மிகப்பெரிய விவாதமாகவும், விமர்சனமாகவும் மாறுவதால் அதை எதிர்கொள்ளவே மிகவும் போராடுகிறார்கள். இதுதான் வீரர்களின் மனசோர்வுக்கு காரணமாக இருக்கிறது. அந்தவகையில் பாதிக்கப்பட்டிருப்பவர்தான் பென் ஸ்டோக்ஸ். கடந்த ஐபிஎல், பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டிகள், தி ஹண்ட்ரட் என சமீபமாக விளையாடிய எந்த போட்டியிலும் பென் ஸ்டோக்ஸ் பெரிதாக பெர்ஃபார்ம் செய்ய முடியாமல் திணறினார்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

"பென் தனது உணர்வுகளை வெளிப்படையாக எடுத்து சொன்னார். எப்போதுமே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் மன நலனுக்கு அதிக கவனம் கொடுக்கும். எங்களால் முயன்றவரை வீரர்களை ரொட்டேஷன் அடிப்படையில் பயன்படுத்தி அவர்களுக்கான சுமையைக் குறைத்தோம். ஆனாலும், கொரோனா சூழல் வீரர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. பென் அவருக்குத் தேவைப்படும் வரை ஓய்வெடுக்கலாம். இங்கிலாந்து கிரிக்கெட்டின் கதவுகள் எப்போதும் அவருக்குத் திறந்தே இருக்கும்'’ என்று சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே கில்ஸ்.

தனிப்பட்ட முறையில் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் இழப்பையும் சந்தித்திருந்தார். அவரது தந்தை ஜெரார்டு ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். பென் ஸ்டோக்ஸின் தயான டெமிக்கு இவர் இரண்டாவது கணவர். டெமியின் முதல் கணவர் பென் ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்பாக அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் சுட்டுக்கொன்றதோடு தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்ற அந்த வாரம் ஒரு இங்கிலாந்து பத்திரிகை செய்தியாக வெளியிட்டது.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்

‘’மிகவும் தனிப்பட்ட செய்தியான இதை வெளியிடவேண்டிய அவசியம் என்ன'’ என கேள்வியெழுப்பி அப்போது கண்டனம் தெரிவித்திருந்தார் பென் ஸ்டோக்ஸ். மேலும் பென் ஸ்டோக்ஸின் குடும்பத்தினர் நியூசிலாந்தில் வாழ்ந்துவந்ததால் அடிக்கடி அங்கே போய் வந்துகொண்டிருந்தார் பென் ஸ்டோக்ஸ். இதுவும் விமர்சிக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையிலுமே சவால்களை சந்தித்துக்கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸுக்கு கிரிக்கெட்டும் மிகுந்த அழுத்தம் ஏற்படுத்தவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

பென் ஸ்டோக்ஸின் விலகல் கிரிக்கெட் வீரர்களின் பணிச்சுமையை விவாதத்துக்குள்ளாக்கியிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களைவிடவும் இந்திய வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் ரொம்பவே அதிகம். விரைவில் பிசிசிஐ, வீரர்கள் நலன் காக்க பல நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு