Published:Updated:

அடுத்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் யார்? - கேள்வியெழுப்பும் கம்பீர்

ராம் பிரசாத்

ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் சில விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கம்பீர் பேசியுள்ளார்.

கம்பீர்
கம்பீர்

தோனி... இந்த உலக் கோப்பைத் தொடரில் அதிகமாக விமர்சனத்துக்குள்ளான பெயர். ஸ்லோ இன்னிங்ஸ் என அவரது பேட்டிங்கை வசைபாடினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனி ஆடியவிதம் ரசிகர்களை கடுப்பேற்றியது. ஆனால் மற்ற போட்டிகளில் தோனி ஆடியது அணிக்கு தேவையான ஒரு இன்னிங்ஸ்தான். இதை சச்சினும் பாராட்டினார். அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இதுதான் தோனியின் கடைசி உலகக் கோப்பை என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். இந்நிலையில்தான் தோனியின் ஓய்வு முடிவு குறித்த பேச்சு எழுந்துள்ளது.

தோனி
தோனி

தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக் குழுவினர் அவரிடம் பேச வேண்டும் என சேவாக் கூறியுள்ளார். அதேபோல் கம்பீரும் தோனி இளம்வீரர்களுக்கு வழிவிட வேண்டும். அடுத்த உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டும் எனத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கம்பீர் பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பேசிய கம்பீர், “ஆஸ்திரேலியா தொடரின் போது சேவாக், சச்சின், கம்பீர் மூவரும் ஒன்றாகக் களமிறங்கமாட்டார்கள் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பதால்தான் இந்த முடிவு என தோனி அப்போது பேசினார்.

இந்திய அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரில் இளம்வீரர்களை கொண்டு வரவேண்டும் என்பதை மனதில் வைத்துதான் தோனி இந்த முடிவு எடுத்தார். இதுஅவசியம் செய்ய வேண்டிய பணிதான். உணர்ச்சிவசப்படுவதை விட நடைமுறை முடிவுகளை எடுப்பது முக்கியமானதுதான். இப்போது அதுபோன்ற ஒரு முடிவைத்தான் தற்போது தோனி எடுக்க வேண்டும். ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் சில விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஒரு வருடங்கள் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். ஒருவர் சரியாக ஆடவில்லை என்றால் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது அடுத்த உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பரை நாம் தேர்வு செய்ய முடியும்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

தோனியின் புள்ளிவிவரங்களை எடுத்துப்பார்த்தால் அவர் ஒரு சிறந்த கேப்டன்தான். அதனால் மற்ற கேப்டன்கள் சரியாகச் செயல்படவில்லை எனக் கூற முடியாது. கங்குலி இந்திய அணிக்காக சிறப்பான பங்காற்றியவர். அவரது தலைமையில் இந்திய அணி அந்நிய மண்ணில் பல வெற்றிகளை கைப்பற்றியுள்ளது. விராட் கோலியின் தலைமையின் கீழ் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரையும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளோம்.

எம்.எஸ்.தோனி இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பைகளை (டி-20, ஒரு நாள்) வாங்கித்தந்துள்ளார். அதற்காக எல்லாப்புகழையும் அவருக்கே கொடுப்பதும் நியாயமில்லை. உங்கள் விருப்பப்படி அவர் செல்லாத போது வசைப்பாடுவதிலும் அர்த்தமில்லை. தோனி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்துள்ளார். ஆனால் மற்ற கேப்டன்களும் இந்திய அணியை முன்னோக்கி கொண்டு சென்றுள்ளனர். அனில் கும்ப்ளே நீண்ட நாள்கள் கேப்டனாக செயல்படாவிட்டாலும் சிறப்பாக பங்காற்றினார். ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தில் கோப்பையை கைப்பற்றியது” எனப் பேசியுள்ளார்.

தோனி
தோனி

சில தினங்களுக்கு முன்புபேசிய சேவாக், “ தோனியிடம் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பேசவேண்டும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வருங்காலங்களில் இந்திய அணியில் அவர் தொடரமுடியாது என்பதை அவருக்கு தெரிவிப்பது தேர்வுக்குழுவின் கடமை. இதனை தேர்வுக்குழு கண்டிப்பாக எடுத்துக்கூற வேண்டும். ஓய்வு குறித்து தோனியே முடிவு எடுத்துக்கொள்வார்'' என்றார்.