Published:Updated:

ரோஹித் Vs கோலி... ரோஹித் ஏன் இந்தியாவின் கேப்டனாக வேண்டும்?! #KohliVsRohit

#KohliVsRohit
#KohliVsRohit

ரோஹித் கேப்டனாக இருக்கும் மும்பை அணி ஐபிஎல்-ல் 5 வது முறையாக கோப்பையை வென்றிருந்தது. கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூரு அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் சொதப்பியிருந்தது. இதுதான் இப்போது இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்த விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது.

கொரோனாவுக்கு நடுவே புத்தியல்பு நடைமுறைகளுடன் ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டன. எப்போதும் ஐபிஎல் நடக்கும்போது மட்டுமே கோலி, ரோஹித், தோனி என ஒவ்வொரு ஸ்டார் ப்ளேயர்களின் ரசிகர்களும் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டிருப்பர். மற்ற நேரங்களில் ஜனகனமண என இந்தியாவுக்கு சப்போர்ட் செய்ய 'ப்ளீட் ப்ளூ' என நீல ஜெர்சியோடு ஒன்றாகிவிடுவார்கள். ஆனால், இந்த முறை இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் முடித்துவிட்டு ஆஸ்திரேலிய மண்ணில் காலடி எடுத்த வைத்துவிட்ட பிறகும் ஒரு முக்கியமான சண்டை ஓடிக்கொண்டிருக்கிறது. 'கோலி VS ரோஹித்... யார் சிறந்த கேப்டன்? ஒயிட் பால் ஃபார்மேட்டுக்கு கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக்கலாமே?' இவைதான் இந்த சண்டையின் அடிப்படை சாராம்சம்.

ரசிகர்கள் அடிக்கடி இப்படி சண்டையிட்டு கொள்வது வழக்கம்தான் என்றாலும் இந்த முறை ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கு ஆதரவாகப் பல முன்னாள் வீரர்களும் குரல் கொடுத்திருக்கின்றனர்.

''ரோஹித்தை ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக்காவிடில் அவருக்கு ஒரு இழப்பும் இல்லை. அது இந்திய அணிக்குதான் பெரிய இழப்பாக இருக்கும்''
கவுதம் கம்பீர்

''ரோஹித் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கிறார். டி20-க்கு மட்டுமாவது ரோஹித்தை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கலாம்'' என மைக்கேல் வாஹன் கூறியுள்ளார். இதே கருத்தை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாஸுர் ஹுசைனும் கூறியுள்ளார். ஆனால், இதில் கோலிக்கும், கெளதம் கம்பீருருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் கேப்டனாக இருக்கும் மும்பை அணி ஐபிஎல்-ல் 5 வது முறையாக கோப்பையை வென்றிருந்தது. கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூரு அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் சொதப்பியிருந்தது. இதுதான் இப்போது இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்த விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது.

ஐபிஎல்-ல் இரண்டு வீரர்களின் கேப்டன்சியும் எப்படி இருந்தது என்பதை முதலில் பார்ப்போம். மும்பை அணி அளவுக்கு பலமான வீரர்களை கொண்டிருந்த அணியாக பெங்களூரு இல்லாவிடிலும் கடந்த சில சீசன்களை விட இந்த சீசனில் சில நல்ல வீரர்களை உள்ளே கொண்டு வந்து ஓரளவுக்கு நல்ல அணியாகத்தான் பெங்களூரு இருந்தது.

#KohliVsRohit
#KohliVsRohit

கோலி மீது எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர் ப்ளேயிங் லெவனில் ஒரு நிலைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என்பதுதான். அதனால்தான் நல்ல வீரர்களாக இருந்தும் சரியான வாய்ப்பை பெறாமல் வேறு அணிகளுக்கு சென்று ஜொலிக்கின்றனர் என்பது குற்றச்சாட்டு. அதனால் இந்த முறை இந்த விஷயத்தில் கோலி கொஞ்சம் உஷாராகவே இருந்தார். ப்ளேயிங் லெவனில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் ஒரு செட்டிலான அணியாக பெங்களூருவை உருவாக்கினார். இதன் பலனாகத்தான் சீசனின் முதல் பாதியில் தொடர் வெற்றிகள் அவருக்கு கிடைத்தது. ஆனால், இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தோல்விகள் மீண்டும் பழைய கோலியை வெளியே வர வைத்தது. சில போட்டிகளில் தேவையே இல்லாமல் 4 ஸ்பின்னர்களை இறக்கினார். திடீரென ஜோஷ் ஃபிலிப் ஓப்பனிங் இறங்க ஃபின்ச் பென்ச்சுக்குப் போனார். எல்லாவற்றையும் விட உச்சமாக ப்ளே ஆஃபில் எலிமினேட்டர் சுற்றில் வந்து ப்ளேயிங் லெவனில் 4 மாற்றங்களை திடுதிடுப்பென செய்தார்.

தோல்வி தரும் பதற்றத்தை கோலியால் சமாளிக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் ரோஹித் கில்லாடி. முதலிலேயே இதுதான் ப்ளேயிங் லெவன் என்பதில் ரோஹித் உறுதியாக இருந்தார். கல்யாண வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை ஒதுக்கிவிடுவது போல ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரோலை பிரித்துக் கொடுத்து பதற்றமின்றி வேலை வாங்கினார். ரோஹித்தும் ப்ளேயிங் லெவனில் திடீரென மாற்றங்களை செய்தார். ஆனால், அது அவர் குழம்பிப் போய் எடுத்த முடிவாக இருக்காது. எதிரணியை குழப்புவதற்கு எடுத்த முடிவாகத்தான் இருந்தது. இறுதிப்போட்டியில் பலமிக்க டெல்லிக்கு எதிராக, 15 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அணியின் மெயின் ஸ்பின்னரான ராகுல் சஹாரை நீக்கிவிட்டு அதுவரை ஒன்றிரண்டு போட்டியில் மட்டுமே ஆடியிருந்த ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவை இறக்கினார். ''டெல்லியில் அதிகமாக இடக்கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த முடிவு'' என விளக்கமும் அளித்திருந்தார். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இந்த போட்டிக்கு முன்பு விளையாடிய தகுதிச்சுற்றில் இதே டெல்லி அணிக்கு எதிராக ஜெயந்த் யாதவை இறக்கவில்லை. அதேமாதிரி இந்த சீசனில் எங்கேயும் டெல்லிக்கு எதிராக ஜெயந்த்தை இறக்கவில்லை. நேராக இறுதிப்போட்டியில் ஜெயந்த்தை இறக்கி ஃபார்மில் இருந்த தவானின் விக்கெட்டை பவர்ப்ளேக்குள் காலி செய்திருப்பார். இதுதான் சர்ப்ரைஸ். இதற்கு பெயர்தான் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் திறன்.

இப்படி கோலி எதாவது சரியான காரணத்தோடு சர்ப்ரைஸ் மூவ் செய்திருக்கிறாரா என தேடிப்பார்த்தால், இரண்டு லெக் ஸ்பின்னர்கள் வீசுகிறார்கள் எனச் சொல்லி ஏபிடியை நம்பர் 6-ல் இறக்கிவிட்டு ஆட்டத்தை தோற்றதும், மும்பைக்கு எதிராக பொல்லார்டுக்கு ஆடம் ஸம்பா-வையும் சஹாலையும் தொடர்ந்து இரண்டு ஓவர்கள் வீச வைத்து 50 ரன்கள் கொடுத்ததும்தான் நியாபகம் வருகிறது. இந்த சீசனில் அதிகபட்சமாக அவர் எடுத்த நல்ல முடிவு தீடிரென சிராஜை உள்ளே கொண்டு வந்து பவர்ப்ளேயில் பயன்படுத்தியது மட்டுமே. அதற்கும் பலிகடாவாக பவர்ப்ளேயில் சிறப்பாக வீசிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தரை கீழே இறக்கி பந்து வீச வைத்தார். வாஷிங்டன் சுந்தர் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் அவரை பவர்ப்ளேயில் பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் கோலிக்கு உதயமாக இரண்டு முழு சீசன்கள் விரயமாகியிருக்கிறது என்பது வேறு கதை.

#KohliVsRohit
#KohliVsRohit

ஜெய்ந்த் யாதவை ரோஹித் பயன்படுத்திய விதத்திற்கும், வாஷியை தாக்கம் செலுத்தும் வகையில் பயன்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட கால விரயத்திற்கும் இடைப்பட்ட வித்தியாசம்தான் இரண்டு பேரின் கேப்டன்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு.

யாரை எங்கே எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் என்பதில் தான் கெட்டிக்காரன் என்பதை நிதாஸ் ட்ராபியில் தினேஷ் கார்த்திக்கை வைத்து ரோஹித் எப்போதோ நிரூபித்துவிட்டார். இங்கே கோலி மோசமான கேப்டன் என நிரூபிக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. அப்படி நிரூபிக்க நினைத்தாலும் அது முடியாது. ஏனெனில் முன்னாள் கேப்டன்கள் செய்யாத பல வெற்றி சாதனைகளை இந்திய அணி இப்போது செய்து கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் விராட் கோலி. ஆனால், இங்கே நாம் விவாதிக்க வேண்டியது நெருக்கடியான நேரத்தில் சரியான முடிவுகளை நிதானமாக விவேகத்துடன் யார் எடுக்கிறார் என்பதுதான். இந்திய அணி 2013-க்குப் பிறகு எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. 2007-க்குப் பிறகு டி20 கோப்பையை தொட்டுப்பார்க்கவில்லை. இந்திய அணி அவ்வளவு மோசமாகவா விளையாடியது? நிச்சயமாக இல்லை. 2013-க்கும் 2020-க்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற எந்த அணியை விடவும் நிலையாகவும் சீராகவும் இந்திய அணி முன்னேறிக்கொண்டே இருந்தது. நேராக நாக் அவுட் சுற்றுகளில் சொதப்பியது மட்டுமே இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு காரணம். அந்த தோல்விகள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக இருந்தது. உதாரணம், 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் தோனிக்கு முன்பாக ஹர்திக்கை இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தது.

டெஸ்ட் போட்டிகளில் கோலி இப்போதும் மிரட்டிக்கொண்டே இருக்கிறார். இங்கே அவர் பதற்றமடைந்தாலும் அந்த பதற்றத்திலிருந்து மீண்டு வந்து ஆசுவாசமடைந்து நல்ல முடிவுகளை எடுக்க, அதிக நேரமும் கையில் இரண்டாவது வாய்ப்பும் இருக்கிறது. அது கோலிக்கு மிகப்பெரிய உறுதுணை. ஆனால், டி20 போட்டிகளில் ஒரு நொடியில் எடுக்கும் ஒரு சிறிய தவறான முடிவும் கோப்பை கனவை மொத்தமாக காலி செய்துவிடும். இந்த விஷயத்தில்தான் கோலி தடுமாறுகிறார். இங்கேதான் ரோஹித் முக்கியத்துவம் பெறுகிறார். ஐபிஎல் இறுதிப்போட்டியில் மட்டும் இரண்டு முறை 1 ரன் வித்தியாசத்தில் தனது அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இப்படி நெருக்கடியான சூழ்நிலைகளிலும் பதற்றமடையாமல் தான் எடுக்கப்போகும் முடிவில் தெளிவாக இருக்கும் கேப்டன் தான் இந்திய அணியின் ஷார்ட்டர் ஃபார்மட்டுக்கு தேவைப்படுகிறார்.

#Kohli
#Kohli

இரண்டு கேப்டன்கள் என்கிற விஷயத்தை இந்திய அணி மீண்டும் முயன்று பார்ப்பதில் தவறில்லை. இதற்கு முன்பே கோலி டெஸ்ட் போட்டிகளுக்கும், தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த முன் உதாரணம் இருக்கிறது. இப்போது இங்கிலாந்து மோர்கன்-ரூட், ஆஸி பெய்ன்-ஃபின்ச், விண்டீஸ் ஹோல்டர்-பொல்லார்ட் என ஒவ்வொரு ஃபார்மேட்டுக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் கேப்டன்களை வைத்து சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கோலி-ரோஹித் இருவருமே 30+ ஆகிவிட்டனர். அடுத்த தலைமுறை கேப்டன் ஷ்ரேயாஸ் பின்னால் துண்டை போட்டு உட்காந்திருக்கிறார். கோலியும் ரோஹித்தும் தங்கள் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கப்போகும் இந்த 4 வருடத்தில் இந்த முறையை முயன்று பார்க்காமல் வேறு எப்போது முயன்று பார்க்க முடியும்?!

"ரோஹித்தை இந்திய அணிக்கு கேப்டனாக மாற்றலாமா?" என ஒரு கேள்வியை விகடன் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். வாசகர்களின் பதில் என்ன தெரியுமா?

5 முறை ஐபிஎல் கோப்பை... ரோஹித்தை இந்திய அணிக்கும் கேப்டனாக மாற்றலாமா? #VikatanPollResults
ரோஹித் | Vikatan Poll
ரோஹித் | Vikatan Poll
அடுத்த கட்டுரைக்கு