Election bannerElection banner
Published:Updated:

ரஹானே வென்ற `முல்லாக்' விருது - யார் இந்த முல்லாக்? ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குச் இவர் செய்தது என்ன?

Ajinkya Rahane
Ajinkya Rahane ( Asanka Brendon Ratnayake )

முல்லாக் விருது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் ஆஸ்திரேலியர் ஒருவர்தான் இந்த விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியரான ரஹானே வென்றிருக்கிறார்.

புத்தாண்டுப் பரிசாய், மெல்போர்னில் கிடைத்த வெற்றிக்கு அங்கீகாரமாய் பெருமைக்குரிய விருதான 'ஜானி முல்லாக்' விருதை வென்றிருக்கிறார் கேப்டன் அஜிங்கியா ரஹானே. திறமையான கேப்டன்ஷிப், இக்கட்டில் இருந்து அணியை மீட்க அடித்த சதம், மிடில் ஆர்டரை வலுப்படுத்தி ஆஸ்திரேலியாவை அவர் ஆட்டம் காண வைத்தவிதம் எல்லாம் சேர்த்து ரஹானேவை இந்த விருதுக்கு முழுத்தகுதியானவராக மாற்றியிருக்கிறது. முல்லாக் விருது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, இந்த விருதை வென்றுள்ளார் ரஹானே.

யார் இந்த ஜானி முல்லாக்?!

ஜானி முல்லாக் ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் Unaarrimin. ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடிகளை உள்ளடக்கி 1868-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான ஆல்ரவுண்டர் ஜானி முல்லாக். இந்த அணி, அதே ஆண்டு பிரிட்டனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, லண்டனில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்றது.

ஜானி முல்லாக் | Unaarrimin
ஜானி முல்லாக் | Unaarrimin
visitwimmeramallee.com.au
மிகத் திறமையான ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த முல்லாக், இங்கிலாந்தில் நடைபெற்ற 47 போட்டிகளில், 45 போட்டிகளில் விளையாடினார். அதில் 1698 ரன்களை, 23.65 என்ற சராசரியுடன் எடுத்ததுடன், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1866-ம் ஆண்டு நடைபெற்ற கிளப்புகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் முல்லாக் விளையாடினார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் நிறுவப்பட்டப்பிறகு அங்கு நடைபெற்ற மூன்றாவது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது திறமையான ஆட்டத்தின் மூலமாக ஆஸ்திரேலியாவின் 'ஹால் ஆஃப் ஃபேம்' பெருமைபெற்ற முதல் பூர்வக்குடி இனத்தவர் என்ற பெருமையும் முல்லாக்குக்கே சொந்தம். இவரது சாதனைகள்தான் அடுத்து வந்த பல ஆஸ்திரேலிய பூர்வக்குடிகளை பல்வேறு துறைகளில் சாதிக்கத் தூண்டியது. வேறுபாடுகளும் ஆதிக்க சக்திகளும் மலிந்து நிறைந்திருந்த அன்றைய காலகட்டத்தில், அவர் போராடி தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்திருந்தார். அந்தச் சாதனைகளை நினைவுகூர்ந்து அவரைக் கௌரவப்படுத்தும் விதமாக, பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு, இந்த ஆண்டு முதல் அவரது பெயரில் விருது வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது ஆஸ்திரேலிய கிரிகெட் நிர்வாகம்.

ரஹானே
ரஹானே

விருது வென்ற இந்தியர்!

முதல் முல்லாக் விருதை ஆஸ்திரேலிய வீரர்தான் வெல்வார் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்த நிலையில் முதல் விருதை வென்றிருக்கிறார் இந்தியரான அஜிங்கியா ரஹானே. பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தனது திறன் அத்தனையையும் வெளிப்படுத்தி மிளிர்ந்த ரஹானேவுக்கு முல்லாக் விருது மிக முக்கியமான மகுடம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு