Published:Updated:

யார் இந்த ஹசீப் ஹமீத்… இங்கிலாந்தின் மாடர்ன் ஜெஃப்ரி பாய்காட் இவர்தானா?!

எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த சமயத்தில், மூன்றாவது போட்டியில், ஹசீப் ஹமீத்துக்கு, விரலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல், அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் பின்வரிசையில் இறங்கி ஆடி, 59 ரன்களையும் சேர்த்து இறுதி வரை, ஆட்டமிழக்காமல் இருந்தார் ஹமீத்

இங்கிலாந்தின் ஓப்பனிங் குறைபாடுகளைச் செப்பனிட, ஐந்தாண்டுகளுக்குப் பின் அவதாரம் எடுத்து வந்துள்ளார் ஹசீப் ஹமீத். இங்கிலாந்தின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 50 ரன்களைத் தாண்டமாட்டார்கள் என்பதை மாற்றிக்காட்டி ரோரி பர்ன்ஸோடு இணைந்து இங்கிலாந்துக்கு வலுவான அடித்தளம் போட்டுக்குக்கொடுத்திருக்கும் இந்த ஹசீப் ஹமீத் யார்? 'பேபி பாய்காட்' என ஜெஃப்ரி பாய்காட்டோடு இவர் ஒப்பிட்டு கொண்டாடப்பட்டதற்கான காரணம் என்ன?

இந்த கேள்விகளுக்கான விடைகளுக்காக நாம், 2016-க்குப் பயணிக்க வேண்டும்! அங்கிருந்துதான் தொடங்கித் தொடர்கிறது, ஹமீத்தின் அறிமுகமும், அதனைத் தொடர்ந்து, தன்னை மீட்டெடுப்பதற்கான, அவரது போராட்டமும், தற்போது, அணிக்குள் அவரது மறுவரவும்.

2016-ம் ஆண்டு ஆண்ட்ரு ஸ்டிராஸுக்கான ஒரு மாற்று வீரரைத் தேடிக் கொண்டிருந்த இங்கிலாந்து, பத்தொன்பது வயதே நிரம்பிய, ஹமீத்துக்கு, இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கான வாய்ப்பை வழங்கியது. 20 வயதுக்குக் குறைவான ஒரு வீரரை, அறிமுகப்படுத்துவது, இங்கிலாந்துக்கு அதற்கு முன்னதாக, மூன்று சந்தர்ப்பங்களில் மட்டுமே நடந்திருந்தது. எனவே, இந்த இளைஞரின் மீதான எதிர்பார்ப்பு, சற்றே அதிகமாகவே இருந்தது.

ஹசீப் ஹமீத்
ஹசீப் ஹமீத்
Jon Super

ஹமீத்திடமும், அதே பரபரப்பு கூடியிருக்க, இன்னொரு காரணம், அவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், அவரது வேர்கள் இந்திய மண்ணில் இழையோடி இருந்ததுதான். அவரது பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். குஜராத்திலேயே அவரது அறிமுகப் போட்டி அமைந்திருந்தது.

அறிமுகப் போட்டியிலேயே, ஓப்பனராக களமிறங்கி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே, 31 மற்றும் 82 ரன்களை ஹமீத் சேர்த்திருந்தார். இந்தத் தொடரில், அவரது ஃபுட் வொர்க்கும், பந்துகளைக் கணித்து ஆடும் அவரது திறனும், இங்கிலாந்துக்கான சிறந்த ஓப்பனர் கிடைத்து விட்டார், அவர்களது நீண்ட காலத் தேடல் முடிவுக்கு வந்தது என்று கணிக்க வைத்தது. குறிப்பாக, ஸ்பின்னர்களை அவர் எதிர்கொண்ட விதம் கூடுதல் கவனம் பெற்றது. கோலிதான் அவரது அபிமான கிரிக்கெட்டர் என்ற செய்தி வெளியாக, அவரை கோலியே தனியாகச் சந்தித்துப் பேசினார். எல்லோராலும் பாராட்டப்பட்டு விரும்பப்பட்டார் ஹமீத்.

அத்தொடரில், பந்தை அவர் டிஃபெண்ட் செய்த நேர்த்திக்காக, அவர் முன்னாள் இங்கிலாந்து வீரர், ஜெஃப்ரி பாய்காட்டோடு ஒப்பிடப்பட்டார். அவரது ஆட்டத்திறன், துடிப்பு, சிரிப்பு என எல்லாமும், அவர் மீது அதிக ஈர்ப்பைக் கொண்டு வந்தது. எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த சமயத்தில், மூன்றாவது போட்டியில், ஹமீத்துக்கு, விரலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல், அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் பின்வரிசையில் இறங்கி ஆடி, 59 ரன்களையும் சேர்த்து இறுதி வரை, ஆட்டமிழக்காமல் இருந்தார் ஹமீத். 19 வயது இளைஞனின் அந்த மன உறுதி, அப்போதே, பேசு பொருளானது. ஆனால், அந்த காயம், மீதப் போட்டிகளிலிருந்து, அவரை விலக்கி வைத்தது.

இதற்கு முந்தைய சீசனில், லங்காஷயர் அணிக்காக ஆடி, 1000 ரன்களை, ஒரே சீசனில் சேர்த்து, தனது இருப்பை, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தார் ஹமீத். அந்தத் தாக்கம்தான், இந்தியாவுக்கு எதிரான தொடரில், அவருக்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்திருந்தது. ஆனால், காயத்தால் வாய்ப்புப் பறிபோனதோடு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான காலகட்டமும், அணியில் அவருக்கான வாய்ப்பை விலக்கி வைத்து விட்டது. இந்தியத் தொடரில், 43.80 ஆவரேஜோடு ரன்களைக் குவித்திருந்தது கூட அவருக்கு உதவிடவில்லை. ஆளெடுக்கும் ஆடிஷன் போல, கவுன்ட்டி போட்டிகளில், திறமைகளை வாரிக் குவித்துக் கொள்ளும் இங்கிலாந்து அணியில், அவருக்கான இடத்தை ரிசர்வ் செய்யவா முடியும்?! பேக் டு த ஸ்கொயரில் இருந்து, மறுபடியும், தன்னை முதலில் இருந்து நிரூபிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் ஹமீத்.

ஹசீப் ஹமீத்
ஹசீப் ஹமீத்
Jon Super

காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், 2017 சீசனில், அவரது சராசரி 26.1-க்குக் குறைந்து, 2018-ம் ஆண்டிலோ வெறும், 9.44 என மொத்தமாகச் சரிந்து அவர் மீதான அவரது நம்பிக்கையையே உருக்குலைய செய்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு வர, ஹமீத் அதிகமாகப் போராடினார். நிறைய பயிற்சியும், முயற்சியும், பள்ளத்தில் கிடந்த அவரது சராசரியை, 2019 சீசனில், 28.41 என உயர்த்திக் கொண்டு வந்தது. ஆனாலும், அவரது லங்காஷயர் அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அந்த அணி, அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பாமல் போக, இதுவும் அவரது மனதை சோர்வடையவைத்தது. ஆனாலும், ஹமீதின் போராட்டம் தடைபடாமல், நாட்டிங்ஹாம்ஷையர் அணியில் தொடர்ந்தது. 2020 சீசன், அவருக்கு மிக வெற்றிகரமானதாக அமைய, 38.85 ஆவரேஜோடு அவர் ரன்களைச் சேர்க்க, திரும்பவும், இங்கிலாந்தின் கிரிக்கெட் வாரியத்தின் பார்வை, அவர் மேல் விழுந்தது.

சில தொடர்களாக சோபிக்க திணறும் இங்கிலாந்தின் டாப் ஆர்டர், பல ஆண்டுகளாக, இங்கிலாந்து அணிக்குள் திரும்பி வர போராடிக் கொண்டிருந்த ஹசீப் ஹமீத், சில முக்கிய இங்கிலாந்து வீரர்களின் காயம், எல்லாமே ஒரே புள்ளியில் சந்திக்க, அது ஹசீப் ஹமீதுக்கான மறுவாய்ப்பாக அமைந்தது.

ஓப்பனிங் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, இந்தியா - இங்கிலாந்து தொடரில், அணியில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான கவுன்ட்டி செலக்ட் லெவனுக்காக ஆட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் முதல் இன்னிங்சிலேயே, 246 பந்துகளை நிதானமாகச் சந்தித்து, 112 ரன்களைக் குவித்தார். இது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அவரை, இறுதி பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

ஹசீப் ஹமீத்
ஹசீப் ஹமீத்
Jon Super

பிரமிப்பூட்டும் லார்ட்ஸ் மைதானம், நீண்ட இடைவெளிக்குப் பின்னதாக கிடைத்த ஒரு வாய்ப்பு என அவர் மீது அழுத்தத்தை ஏற்ற, ஐந்தாண்டு காத்திருப்பும், சந்தித்த முதல் பந்திலேயே, எல்பிடபிள்யூவில் கோல்டன் டக் ஆவதில் முடிந்து ஏமாற்றத்தைத் தந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும், வெறும் 9 ரன்களோடு, அவர் சோபிக்க தவறினார்.

இந்த நிலையில்தான், ஹெட்டிங்லேயில், ஹமீத் களம் கண்டார். 78 ரன்களில் இந்தியாவைச் சுருட்டி, இங்கிலாந்து பௌலர்கள் தங்களது பணியை, சிறப்பாகச் செய்து முடிக்க, ஓப்பனர்களாக, பர்ன்ஸ் மற்றும் ஹமீத் ஜோடி களமிறங்கியது. இந்தத் தொடர், அவருக்கான கடைசி வாய்ப்புதான். ஆஷஸ் தொடருக்கு முன்னதாக, தனது தலைசிறந்த பிளேயிங் லெவனை உருவாக்க முனைந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து, இத்தொடரில் சோபிக்கத் தவறினால், ஹமீத்தை தூக்கிக் கடாசக் கூடத் தயங்காது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

சிப்லி, மலான், லாரன்ஸ் ஆகியோரின் ஃபர்ஸ்ட் கிளாஸ் சராசரி, ஹமீத்தை விட மிகவும் அதிகம். அவர்களது ஆவரேஜ் 38-க்கும் அதிகமாக இருக்க, ஹமீதுடையதோ, 33.23 ஆகவே இருந்து வருகிறது. உண்மையில், ஜேம்ஸ் வின்ஸியின் சராசரி, 39. இருந்தாலும், ஹமீத்தின் டெக்னிக்களுக்காகவும், சமீப கால கவுன்ட்டி செயல்பாடுகளுக்காகவும் மட்டுமே, இந்த ஒரு வாய்ப்பை, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, ஹமீத்துக்கு வழங்கியிருந்தது. இந்த நிலையில்தான், இந்தப் போட்டியில், களத்தில் கால் பதித்தார் ஹமீத்.

ஹசீப் ஹமீத்
ஹசீப் ஹமீத்
Jon Super

தொடக்கத்தில் இருந்தே, அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவுட் ஸ்விங், இன்ஸ்விங்குகளை பகுத்தறிந்து மிக கவனமாக, தனது இன்னிங்ஸை கட்டமைத்தார் ஹமீத். பந்தை அவர் டிஃபெண்ட் செய்த விதமும், தாமதமாக அதனைச் சந்தித்து ஆடியதும், அவரது ஃபுட் வொர்க்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஸ்லிப்பில் ரோஹித் தந்த கேட்ச் டிராப் வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது அரை சதத்தை கடந்தார் ஹமீத்.

1731 நாட்களுக்கு முன், தனது சர்வதேச கரியரில் ஒரு அரை சதத்தை பதிவேற்றி இருக்கிறார் ஹமீத். இந்தியாவுக்கு எதிரான அவரது 9 இன்னிங்ஸ்களில், இது மூன்றாவது அரை சதம் என்பதும், அவர் ஆடிய அத்தனை போட்டியும், இந்தியாவுக்கு எதிரானது மட்டுமே என்பதும் கூடுதல் சிறப்பு. இதையும் தாண்டி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு, அதில் ஒரு அரைசதம், அதுவும், தனது மண்ணில் அடித்த முதல் அரைசதம் என எல்லாமே, ஹமீத்துக்கு, இந்தச் சந்தர்ப்பத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறது.

ஹெட்டிங்லேயில், பர்ன்ஸ் - ஹமீத்தின் கூட்டணி ஆட்டம், இங்கிலாந்தின் சிறந்த ஓப்பனர்களுக்கான தட்டுப்பாட்டையும் சரி செய்து, 'ஓப்பனர்களுக்கான தேடல் இங்கே முடிவடைந்தது' என்பதைச் சொல்லாமல் சொல்ல வைத்துள்ளது.

ஃபவாத் ஆலம், பத்தாண்டுகளுக்குப் பிறகு, சதங்களோடு, தனது கிரிக்கெட் கரியரின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி வருவது போல், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், ஒரு அரைசதத்தின் வாயிலாக, தனது கரியரை ரீ ஸ்டார்ட் செய்துள்ளார் ஹமீத்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஃபார்மை இழந்த ஒரு வீரர், அதை மீட்டெடுப்பது என்பதே மிகக் கடினம். முதலில் ஒதுக்கப்பட்டு, பின் மறுக்கப்பட்டு இறுதியாக மறக்கப்பட்டு விடுவார்கள். அப்படியிருக்க, ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின் ஒரு கம்பேக் என்பது, மகா கனவுதான். ஆனால், அதை, தனது விடா முயற்சியால், ஹமீத் நிகழ்த்திக் காட்டி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன்
விகடன்

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு