Published:Updated:

அபிமன்யு, அர்சான்... இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக இடம்பெற்றிருக்கும் இந்த இருவர் யார்?!

Abhimanyu Easwaran
Abhimanyu Easwaran

வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்களை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து செல்ல உள்ளது. இதில் பங்கேற்கவுள்ள 20 வீரர்கள் அடங்கிய அணி விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அணியில் நால்வர் மாற்று வீரர்களாக இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களுள் இளம் வீரர்களான அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் அர்சான் நாகஸ்வாலா ஆகியோரும் பயணிக்கப்போகிறார்கள். யார் இந்த இளம் வீரர்கள்?!

கடந்த சில ஆண்டுகளாகவே ரஞ்சி போன்ற உள்நாட்டு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய தேர்வாளர்களை தொடர்ந்து கவனிக்கவைத்தவர் பெங்கால் அணியின் அபிமன்யு ஈஸ்வரன். இந்த 25 வயது பேட்ஸ்மேனுக்கு சென்ற ரஞ்சி தொடர் மிகவும் சுமாராகவே அமைந்தது என்றாலும் (17 இன்னிங்ஸில் 258 ரன்கள் ) அதற்கு முந்தைய சீசனில் (2018-19) அவர் அடித்த 861 ரன்கள் (சராசரி: 95.66) அவருக்கான தேசிய அணியின் கதவை திறந்திருக்கிறது. ஆம், கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரிலேயே ரிசர்வ் அணியில் இடம்பெற்றிருந்த அவருக்கு தற்போது வெளிநாட்டு தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செல்லும் முன், முடிந்தவரை தன் ஆட்டதிறனை மேம்படுத்தும் வகையில் டேராடுனில் உள்ள தனது தந்தையின் கிரிக்கெட் பயிற்சி பள்ளிக்குச் சென்றுள்ளார் ஈஸ்வரன். அங்கு பயிற்சி பெறுவது இங்கிலாந்தின் ஆடுகளங்கள் மற்றும் காலநிலைக்கு ஓரளவு ஒத்துப்போவதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அவர்.

“தேசிய அணியுடன் பயிற்சி பெறுவது என்பது என்றுமே சிறப்பான ஒன்றாகும். நடந்துமுடிந்த இங்கிலாந்து தொடரில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். விராட் கோலி தன் ஆட்டத்தை எதிர்நோக்கும் விதம், ரோஹித் மற்றும் அஷ்வின் ஆகியோர் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு ஸ்வீப் ஷாட் ஆடிய விதம் என நான் கற்றுக்கொண்டவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இங்கிலாந்து பயணத்தை நான் ஏற்கனவே கணித்ததால் அணி தேர்வுக்கு முன்னரே டேராடுன் செல்ல திட்டமிட்டிருந்தேன். சென்ற ரஞ்சி தொடரில் என்னுடைய சுமாரான ஆட்டம் குறித்து நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற தருணங்கள் அனைத்து வீரர்களுக்கும் நேரும் ஒன்றுதான்” என்று சொல்லியிருக்கிறார் அபிமன்யு.

Abhimanyu Easwaran
Abhimanyu Easwaran

“இங்கிலாந்து செல்லும் எனக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகமே. ஆனால் இந்தியா திரும்புகையில் நான் முன்பைவிட நல்ல கிரிக்கெட்டராகியிருக்க வேண்டும். இதுவே எனது குறிக்கோள்” என நம்பிக்கையுடன் சொல்கிறார் ஈஸ்வரன்.

இன்னொருபுறம் இந்திய அணியில் இடம்பிடித்த ஆச்சரியத்தில் இருந்தே மீளாமல் இருக்கிறார் அர்சான் நாகஸ்வாலா. 23 வயதே ஆன அவர், தொடக்கத்தில் இருந்தே ரெட் பாலில் சிறப்பாக பந்துவீசி வந்தார். மிகக் குறுகிய காலகட்டத்தில் முதல் தர போட்டிகளில் 22.53 என்னும் சராசரியில் 62 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் இவர். கொரோனா தொற்றால் ரெட் பால் தொடர்கள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாததால் லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்தார் அர்சான். இதனால் இவ்வருடத்திற்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பௌலராகத் தேர்வானார் நாகஸ்வாலா.

Arzan Nagwaswalla
Arzan Nagwaswalla

“எனது கிரிக்கெட் வாழ்கையில் நான் இவ்வளவு விரைவில் தேசிய அணிக்குத் தேர்வாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. மும்பை அணியின் பௌலிங் பயிற்சியாளர் ஜாகிர் கான் எனது ஆட்டத்திறன் மேம்பட மிகவும் உதவியாக இருந்தார். மேலும் ரோஹித் ஷர்மா, பொல்லார்ட் போன்றவர்களுக்கு பந்துவீசியது சிறந்த அனுபவமாக இருந்தது” என்கிறார் அர்சான்.

நாகஸ்வாலாவின் பந்துவீச்சைவிட அவரின் பார்ஸி அடையாளமே அனைவரின் கவனத்தை பெற்றுள்ள நிலையில்“ இந்திய அணியில் ஒரு பார்ஸி வீரர் விளையாடி சில வருடங்கள் ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். இது எனது குடும்பத்துக்கும் என் சமூகத்துக்கும் மகிழ்ச்சியே!” என்கிறார்.

Arzan Nagwaswalla
Arzan Nagwaswalla

உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது, இந்திய மண்ணில் இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்தது என இரு வேறு நிலைகளில் எதிரணியை சந்திக்கபோகிறது இந்தியா. முன்னர் தோற்ற அணிகள் இப்போது பதிலடி கொடுக்க நிச்சயம் போராடும் என்பதால் வரவிருக்கும் தொடரில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. இதில் மாற்று வீரர்களாக செல்லும் வீரர்களுக்கு அணியில் இடம் பிடிக்க பெரிதாக வாய்ப்பு இருக்காது என்றாலும் அவர்கள் எந்த நிமிடமும் தயாராக இருக்கவேண்டியது அவசியம். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரே இதற்கு சாட்சி.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நமது வழக்கமான டெஸ்ட் லைன் அப்பில் இடம்பெறும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் அனைவருமே இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் இவர்களுக்கு புதியதொரு பரீட்சை காத்திருப்பது நிச்சயம். மேலும் காயத்திலிருந்து மீண்டுள்ள ஜடேஜா, விஹாரி மற்றும் ஷமி அணிக்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பார்கள்.

இந்தப் பிரதான அணியை விடுத்து கூடுதல் அணியின் தேர்வில் மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது தேர்வு குழு. இளம் இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இதுவரையிலான ஐபிஎல் தொடரின் பலனாக டெல்லி கேபிடல்ஸின் ஆவேஷ் கானும் கொல்கத்தா அணியின் பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு