இந்த நடப்பு 2023 ஐபிஎல் சீசனின், பிளே ஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கின. இந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குச் சென்றது சி.எஸ்.கே அணி.
இதில் தோனியின் வியூகங்கள் அசாத்தியமானது என்றாலும், 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார் ருத்துராஜ். இதுதவிர தீபக் சாஹர், பதிரனா சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியிருந்தனர். இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஊடவியலாளர்களிடம் பேசிய ருத்துராஜ், CSK அணியின் வெற்றிக்கான காரணம் குறித்தும் CSK நிர்வாகத்தின் வியூகங்கள் குறித்தும் பேசியிருந்தார்.

இதுபற்றி பேசிய அவர், "இந்த வெற்றிகளுக்குப் பின்னால் பல்வேறு முயற்சிகள் இருக்கின்றன. கடந்த ஐபிஎல் சீசனில் நாங்கள் ப்ளே-ஆஃப்க்குத் தகுதி பெறாத சமயத்தில் தவறுகளை சரி செய்வது குறித்தும் எதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், யாரை புதிதாக சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகத்தின் தரப்பிலிருந்து கலந்தாலோசிக்கப்பட்டது.
அதனால், இந்த சீசனின் முதல் போட்டியிலேயே யாருக்கு என்ன ரோல் கொடுக்க வேண்டும், யாரை எந்த இடத்தில் களமிறக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக இருந்தோம். முதல் ஆட்டத்திலேயே எல்லோரும் அவரவர்களின் ரோல் என்னவென்பதை புரிந்துகொண்டு சரியாக விளையாடத் தயாராகிவிட்டோம். தாமதமாக வந்த இலங்கை வீரர்களான தீக்ஷனா மற்றும் மதீஷ பத்திரனா அவர்களும் தங்கள் ஆட்டத்தை புரிந்து சிறப்பாக விளையாடத் தொடங்கினர்.
எல்லோரும் ஒர் அணியாக இருந்து விளையாடினோம். அதுவே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.