Published:Updated:

ஆடுகள வீரர்களின் வீடுகளம்!

தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
தோனி

கிரிக்கெட் வீரர்கள்.

கிரிக்கெட் வீரர்களுக்கு ஹோம் கிரவுண்டில் ஆடுவதென்றால் டபுள் சந்தோஷம். இந்தக் கொரோனா காலத்தில் ஐபிஎல் உட்பட அத்தனை போட்டிகளும் ரத்தாக, அவரவர் ஹோமே கிரவுண்ட் என மாறிப்போனது.தோனிக்குக் குழந்தை பிறந்தபோது அவர் ஸ்டம்புக்குப் பின்னால் நின்று பாலைத் தேடிக்கொண்டிருந்தார். கோலி தன் அப்பா இறந்தசெய்தி வந்தும் ரஞ்சி ஆடிவிட்டுத்தான் வீட்டுக்குப்போனார். கிரிக்கெட் மைதானமே உயிராக இருந்தவர்கள் இப்போது வீட்டுக்குள்ளேதான் இருந்தாக வேண்டும் என்கிற சூழல். என்ன செய்கிறார்கள் நம் ஃபேவரைட் பேட்ஸ்மேன்களும் பெளலர்களும்?
ரோஹித்
ரோஹித்

ரோஹித்

ரோஹித்தும் இன்ஸ்டாவாசிதான். தோனி, கோலிக்கெல்லாம் சவால் விடும்படி தனது ஒரு நாளின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரு குறும்படமாக்கி ‘அகம் டிவி’ போல இன்ஸ்டா டிவி வழியாக வெளியிட்டிருக்கிறார் ரோஹித். அதில் உடற்பயிற்சியும் குழந்தையுடனான விளையாட்டுமே அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. அவ்வப்போது இந்திய அணி வீரர்களுடன் ஜூம் கால். “என்னப்பா பேசுவீங்க” என்ற கமென்ட்களும் “கிரிக்கெட் தவிர எல்லாம் பேசுற குரூப்பு இது” என்ற பதில்களும் ரோஹித்தின் க்வாரன்ட்டீன் நாள்களை ஜாலி ஆக்கியிருக்கும். வார்னர் போன்ற வெளிநாட்டு வீரர்களுடன் மணிக்கணக்கில் லைவ் சாட்டும் செய்கிறார் ரோஹித். “உங்க டீம்ல ஆல் ரவுண்டர் யாரு, கோச் ஓக்கேவா” என்பதுபோல “அங்க கொரோனா எப்படி” எனக் கேட்டு நேரத்தைக் கழித்தபடியே ரசிகர்களுக்கும் டைம் பாஸ் தருகிறார் ரோஹித்.

தோனி
தோனி

தோனி

டைம் மெஷினில் ஏறி 20 ஆண்டுகள் தாண்டி வந்துவிட்டோமா என நினைக்க வைக்கிறது தோனியின் கெட்டப். ஸிவாவின் டாடிக்கு முகம் முழுவதும் வெள்ளைநிறத் தாடி. வீட்டின் முன்பக்கத்தில் இருக்கும் நீண்ட புல்வெளியில் தோனியும், மகள் ஸிவாவும், உடன் நாய்களும் ஓடி ஓடி நேரத்தைக் கழிக்கிறார்கள். தோனி வீட்டு நாய்களுக்கு ஸிவாதான் கேப்டன். அவர் சொன்னால் சொன்னபடி செய்கின்றன. தோனி பந்தைத் தூக்கியெறிந்து எடுத்து வரச் சொன்னால் யோசிக்கின்றன. ஆனால் வழக்கம் போல தோனியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. “எவ்வளவோ பார்த்துட்டோம். இத பார்க்க மாட்டோமா” என்பது போலவே இருக்கிறார் இந்தியாவின் பெஸ்ட் கேப்டன்.

கோலி
கோலி

கோலி

இன்ஸ்டாவிலே குடிகொண்டிருக்கிறார் கேப்டன் கோலி. மனைவி அனுஷ்காவின் பிறந்த நாளை இன்ஸ்டாவில் கொண்டாடியவரின் இன்னொரு சம்பவம்தான் ரசிகர்களை எமோஷனல் ஆக்கிவிட்டது. அவரும் டிவில்லியர்ஸும் செய்த லைவ் சாட், கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கிடைத்த லாக்டெளன் ஸ்பெஷல். கூடவே, கொரோனாவால் வாடும் மக்களுக்கு உதவ ஒரு ஐடியாவும் செய்தனர். 2016-ம் ஆண்டு ஒரு ஐபிஎல் போட்டியில் டி வில்லியர்ஸும் கோலியும் சதமடித்தனர். டி20 போட்டிகளில் இது எப்போதாவது நடக்கும் அதிசயம். அந்தப் போட்டியில் பயன்படுத்திய பேட், கிளவுஸ் போன்ற பொருள்களை ஏலம் விட்டு அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கொடுத்திருக்கிறார்கள் இந்த ஆர்சிபியன்ஸ். கோலியோட நல்ல மனசுக்குச் சீக்கிரமே ஐபிஎல் கப்பும் கிடைச்சிடும் என உருகுகிறார்கள் அவர் ரசிகர்கள்.

வார்னர்
வார்னர்

வார்னர்

“யாராலயும் நான் ஆடுறதத் தடுக்க முடியாது... ச்சோஸ்கோடா” என பன்ச் பேச முடிந்த ஒரே ஆள் வார்னர்தான். மனைவி மகளுடன் வார்னர் செய்யும் டிக் டொக் ஆட்டங்கள்தான் சோஷியல் மீடியாவில் இந்த சீசன் சிக்ஸர். வார்னர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்துக்காக ஆடுபவர் என்பதால் தெலுங்கு மாஸ் பாடல்களுக்குத்தான் அதிகம் நடனமாடுகிறார். இந்த ஆண்டு தெலுங்கின் சென்சேஷனல் ஹிட் ஆன ‘புட்டபொம்மா’ பாடலுக்கு மிஸ்டர் அண்ட் மிஸஸ் வார்னர் போட்ட ஆட்டத்துக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்தும் குவிந்துகொண்டிருக்கின்றன லைக்ஸ்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

“மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான பெற்றோர்களால்தான் அப்படியான குழந்தைகளை வளர்க்க முடியும். இந்த க்வாரன்டீன் நாள்கள் நம் குடும்ப பந்தத்தை பலப்படுத்தப் பல வழிகளில் உதவுகின்றன. அதையும் மீறி நடக்கும் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை துரதிர்ஷ்டவசமானது. அப்படி ஏதும் நீங்கள் எதிர்கொண்டால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். நாங்கள் உதவுகிறோம்” என மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இன்ஸ்டா வந்து சொல்கிறார் சுரேஷ் ரெய்னா. உடற்பயிற்சி, குடும்பம் தவிர மற்ற கிரிக்கெட்டர்களுடன் ஆன்லைன் சாட்டிங் என ரெய்னாவும் பிஸி பாய்தான்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

தினேஷுக்கு இரண்டு விஷயங்கள் இந்த ஊரடங்கை சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன. ஒன்று அவர் வளர்க்கும் செம நாய். இன்னொன்று பப்ஜி. நாயுடன் தினேஷ் ஆடும் ஆட்டங்கள் இன்ஸ்டாவிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் ஹார்ட்ஸ் அள்ள, பப்ஜியில் எதிரிகளை டேமேஜ் செய்து பேண்டேஜ் போட வைத்து டீம் மேட்களின் அன்பையும் அள்ளுகிறார். கூடவே தினேஷ்- தீபிகா போட்டோஷூட்களும் வைரல் அடிக்கின்றன.