புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகள் போக ஏற்கெனவே உள்ள பழைய அணிகளும் மெகா ஏலத்திற்கு பிறகு புதிதாக காட்சியளிப்பதால் ப்ளே-ஆப்ஸிற்கான போட்டி இம்முறை மிக கடுமையாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஐ.பி.எல் 2022 தொடர் தொடங்க இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியின் ஸ்டார்டிங்-11 எவ்வாறு இருக்க போகிறது என்பதை இத்தொடரில் வரிசையாக பார்த்துவிடுவோம்.
முதல் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த அணியின் ஸ்டார்டிங் 11-ஐ பார்ப்பதற்கு முன்னதாக அவர்கள் மெகா ஏலத்தில் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை பார்த்துவிடுவோம். சஹால், படிக்கல் போன்ற கோர் வீரர்களை விட்டுவிட்டு ஹசரங்காவை 10.75 கோடிக்கு எடுத்தது அந்த அணி நிர்வாகம். மேலும் மற்ற அணிகளில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை தங்கள் அணிக்கு எடுப்பது என்பது ஆர்.சி.பி-யின் எப்போதுமான வழக்கம். அதேபோல இம்முறையும் சென்னை அணியிலிருந்து டுப்ளெஸ்ஸி மற்றும் ஹேசில்வுட் ஆகியோரை எடுத்துள்ளனர். அதிலும் டுப்ளெஸ்ஸி அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு பிளேயிங் 11-யில் சொதப்புவதையே பெங்களூரு அணி வழக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால் இம்முறை ஏலத்திலேயே அந்த அணி சற்று கூடுதலாகச் சொதப்பியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
ஓப்பனிங்கில் ஒரு ஸ்லாட்டிற்கு டுப்ளெஸ்ஸியை எந்த யோசனையும் இல்லாமல் டிக் அடித்து விடலாம். மற்றொரு இடத்தில் பெரும்பாலும் விராட் கோலியே இறங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் கோலி இறங்கக்கூடாது, சர்வதேச போட்டிகளை போல No.3 பொஷிஷனில்தான் இறங்க வேண்டும் என்று பலருக்கும் மாற்று கருத்து இருக்கலாம். ஆனால் ஐ.பி.எல்-ஐ பொறுத்தவரை கோலி ஒன்-டவுனில் ஆடுவதை விட ஓப்பனிங்கிலேயே நல்ல ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார் கோலி. அதற்கான ஸ்டாட்ஸை கீழே காணலாம். கோலியின் ஆகச்சிறந்த ஐ.பி.எல் சீஸன் என்று சொல்லப்படக்கூடிய 2016 சீஸனிலும் அவர் ஓப்பனிங் பொஷிஷனிலேயே ஆடியிருந்தார்.
மேலும் இந்த எண்களையெல்லாம் தாண்டி கோலியின் சமீபத்திய ஃபார்மும் அவர் ஓப்பனிங்கில்தான் இறங்க வேண்டும் என்பதை உறுதிசெய்கிறது. ஸ்பின்னுக்கு எதிரான தடுமாற்றம், மிடில் ஓவர்களில் போதிய அளவு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது சற்று குறைந்திருப்பது ஆகிவையே இதற்கான காரணங்கள். எனவே கோலி, டூ ப்ளஸி ஆகிய இருவரும் அணியின் ஒப்பனர்களாக இறங்கலாம்.
இதற்கு பிறகு மிடில் ஆர்டரில் யார் ஆடவேண்டும் என்ற ஆர்.சி.பி-யின் எப்போதுமான குழப்பங்கள் தொடங்குகின்றன. மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்டர்களை தவிர்த்து ஹசரங்காவையும் ஆல்-ரவுண்டராகவே வாங்கியுள்ளது அந்த அணி. அவரும் இலங்கை அணிக்காக பேட்டிங் ஆர்டரில் சற்று மேலே ஆடி நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் தவிர அணியில் ஃபின் ஆலன் ஆடினால்தான் பேலன்ஸ் ஏற்படும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஆனால் அவருக்கான இடம் என்பது அணியில் இல்லை.
இம்முறை 5-வது இடத்தில் ஆடும் டிவில்லியர்ஸும் இல்லாததால் மேக்ஸ்வெல்லின் இடம் சற்று கூடுதல் கவனம் பெறுகிறது. சென்ற தொடரில் No.4-யில் ஆடினார் மேக்ஸ்வெல். ஆனால் இந்த சீசனில் அவருக்கு அடுத்து வரும் வீரர்களை பொறுத்துதான் அவரின் இடம் தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது.
தினேஷ் கார்த்திக்கை எடுத்துக்கொண்டால் கொல்கத்தா அணியில் அவரிடம் பெரிய இன்னின்ஸ் ஒன்றை நாம் சமீபத்தில் பார்த்திருக்கவில்லை. ஹசரங்கா பேட் செய்வார் என்றாலும் அவரால் ஆட்டங்களை முடித்துத்தர இயலுமா என்பது சந்தேகமே. அதனால் ஹசரங்காவை 4-வது இடத்தில் இறக்கிவிட்டு பார்ட்னர்ஷிப் கட்டமைப்பதற்கு வைத்துக்கொண்டு மேக்ஸ்வெலை 5-வது இடத்தில் ஃபினிஷ் செய்வதற்கு வைத்துக்கொள்ளலாம்.
இப்போது 3-வது இடத்திற்கு வருவோம். கடந்த சீசனில் ஆர்.சி.பி இந்த பொஷிஷனில் உள்ளூர் வீரர்களுக்கே வாய்ப்பளித்தது. முதலில் ரஜத் பட்டிதார் ஆடினார். தொடரின் கடைசி கட்டத்தில் கே.எஸ்.பரத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இடையில் வாஷிங்டன் சுந்தர் கூட ஆடியிருந்தார். இம்முறை மஹிபால் லம்ரோருடன் இந்த இடத்திற்காக போட்டி போடும் மற்றொரு வீரர் ஷுயாஷ் பிரபுதேசாய். அவரின் சமீபத்திய டி20 பெர்பார்மன்ஸ் மிக சிறப்பாக உள்ளது. 148-இற்கு மேல் ஸ்ட்ரைக் ரேட், 31 என்னும் சராசரி, கூடுதலாக மீடியம் பாஸ்டில் பந்துவீச்சவும் செய்வார் இந்த கோவா வீரர். ஆனால் வலதுகை பேட்டர்களாலேயே நிரம்பியிருக்கும் பெங்களூரு அணியின் லைன் -அப்பில் இடது கை பேட்டர் என்ற காரணத்திற்காக லம்ரோருக்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாது அவர் இயல்பிலேயே மூன்றாவது பொஷிஷனில்தான் ஆடுவார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முன்பே ஐ.பி.எல்-யில் ஆடிய அனுபவமும் அவருக்கு உள்ளது.

சரி, இப்போது லோயர் மிடில் ஆர்டருக்கு வருவோம். டாப் ஆர்டரில் மேக்ஸ்வெல் மற்றும் ஹசரங்கா இருவருமே பந்துவீசுவார்கள் என்பதால் 6 மற்றும் 7 ஆகிய பொஷிஷன்களிலும் பேட்டர்களை மட்டுமே கூட ஆடவைக்கலாம். மேக்ஸ்வெல்க்கு பிறகு No.6 தினேஷ் கார்த்திக் வந்துவிடுவார். அவருக்கு அடுத்ததாக மற்றொரு உள்ளூர் வீரர் அனுஜ் ராவத். டெல்லி அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் ஓப்பனிங்கில் ஆடிவந்தாலும் விஜய் ஹசாரே தொடரில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் இறங்கி நல்ல ஸ்கோர்களை அடித்துள்ளார். இதனால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். இதோடு ஆர்.சி.பி அணியின் பேட்டிங் லைன் அப் முடிகிறது.
பௌலிங்கில் சிராஜ், ஹர்ஷல் படேல் மற்றும் ஹெசல் வுட் ஆகியோர் எந்த யோசனையும் இல்லாமல் இடம்பெற்றுவிடுவர். ஆனால் யுஸ்வேந்திர சஹாலின் இடத்தில் எந்த ஸ்பின்னர் ஆடுவார் என்பதுதான் இங்கு சிக்கல். சபாஷ் அஹமத் அவருக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்துபவர் இல்லையென்றாலும் கடந்த சீசனில் பல முக்கிய தருணங்களில் தன்னை நிரூபித்தவர். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவ்வப்போது பங்காற்ற கூடியவர் அவர்.
இந்த ப்ளெயிங் 11-ஐ தவிர்த்து பெங்களுரு அணியின் பெஞ்சில் எக்கச்சக்க ஆப்ஷன்கள் உள்ளன. புதிய கேப்டனாக இருக்கும் சிஎஸ்கே-வின் முன்னாள் எல்லைச்சாமி, வீரர்களின் தொடர் பெர்பார்மன்ஸ் இவ்விரண்டும் கைகொடுத்தால் ஆர்.சி.பி-க்கு இவ்வருடம் 'ஈ சாலா கப் நம்தே' என்பது உறுதியாக வாய்ப்பிருக்கிறது.