Published:Updated:

SA vs IND: அதிரடி புஜாரா; கிளாசிக் ரஹானே... ஆனாலும், இருவரின் எதிர்காலம் என்ன?

Pujara - Rahane | புஜாரா - ரஹானே

அணிக்காக மட்டுமல்லாமல் இருவரின் கரியர்களுக்காவும் இப்படியான இன்னிங்ஸ் ஒன்றை ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தனர்.

SA vs IND: அதிரடி புஜாரா; கிளாசிக் ரஹானே... ஆனாலும், இருவரின் எதிர்காலம் என்ன?

அணிக்காக மட்டுமல்லாமல் இருவரின் கரியர்களுக்காவும் இப்படியான இன்னிங்ஸ் ஒன்றை ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தனர்.

Published:Updated:
Pujara - Rahane | புஜாரா - ரஹானே
இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா நிர்ணயித்த 240 என்னும் இலக்கை நோக்கி மிக நேர்த்தியாக நகர்ந்து வருகிறார்கள் தென்னாப்பிரிக்க பேட்டர்கள். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ள அந்த அணிக்கு இன்னும் வெற்றி பெற 122 ரன்கள் மட்டுமே தேவை.
Pujara - Rahane | புஜாரா - ரஹானே
Pujara - Rahane | புஜாரா - ரஹானே

என்னதான் இன்றைய நாளில் பெரும்பாலான பந்துகளை இந்திய பௌலர்கள் தவறான லெந்தில் வீசினாலும் தென்னாப்பிரிக்க பேட்டர்களையும் பாராட்டி ஆகத்தான் வேண்டும். தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர்களுடைய போராட்டத்திற்கான விடை இன்று தெரிந்துவிடும்.

ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு மிகப்பெரிய போராட்டத்தை அரங்கேற்றி இருந்தனர் இந்திய அணியின் சீனியர் பேட்டர்களான புஜாரா மற்றும் ரஹானே. அணிக்காக மட்டுமல்லாமல் இருவரின் கரியர்களுக்காவும் இப்படியான இன்னிங்ஸ் ஒன்றை ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தனர். மேலும் ஏதோ ஒரு சாதாரண சூழ்நிலையில் களமிறங்கி சிறப்பானதொரு இன்னிங்ஸை ஆடி தங்களின் இருப்பை உணர்த்துவதைக் காட்டிலும் அணிக்குத் தேவையான நேரத்தில் அவர்கள் தங்களின் ஃபார்மை வெளிப்படுத்தியது அந்தப் பங்களிப்பை இன்னும் சிறப்பாக்கியுள்ளது.

Pujara | புஜாரா
Pujara | புஜாரா

புஜாரா மற்றும் ரஹானே கூட்டணி சேரும் போதும் அணியின் ஸ்கோர் 44-2 ஆக இருந்தது. அதற்கு மேல் விழும் விக்கெட் ஒவ்வொன்றும் அணியின் தோல்விக்கான பாதையாக அமையும் என்பதை இருவரும் நன்றாகவே உணர்ந்திருந்தனர். ஆனால் சீறி வரும் பவுன்சர்களைத் தாக்குப்பிடிக்க முதல் இன்னிங்ஸிலேயே ரொம்பவும் தடுமாறியிருந்தார் புஜாரா. போதாகுறைக்கு அவ்வப்போது ஏற்படும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வேறு சூழ்நிலையை இன்னும் மோசமாக்கியது.

என்ன செய்யலாம் என்று இருவரும் யோசித்து கொண்டிருக்க அதற்கான விடையை ஏற்கனவே கொடுத்துவிட்டு போயிருந்தார் எதிரணியின் டெம்பா பவுமா. இது மாதிரியான ஆடுகளங்களில் தடுப்பாட்டத்தை மட்டுமே நம்பியிருந்தால் வேலைக்கு ஆகாது என்று முதல் இன்னிங்ஸில் அவர் இந்திய பந்துவீச்சை மிக அருமையாக கவுன்ட்டர் செய்திருப்பார். மேலும் அதற்கு முன்னதாக ஆட்டமிழந்து சென்ற மயங்க்கும் இந்த விடை சரியானதுதான் என்று காட்டிவிட்டுப் போக அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் புஜாரா.

Rahane | ரஹானே
Rahane | ரஹானே

இரண்டாம் நாளின் கடைசி கட்டத்தில் விக்கெட் விழாமல் ஆடத்தான் இந்திய பேட்டர்கள் முயல்வார்கள் என்று தென்னாப்பிரிக்க பௌலர்கள் நினைத்துக்திருப்பர். ஆனால் கடைசி எட்டு ஓவர்களில் மட்டும் 40 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தது இக்கூட்டணி. தன் இன்னிங்ஸ் முழுவதும் 80-க்கு மேலான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார் புஜாரா. தடுப்பாட்டதிற்கான அறிகுறியே தெரியவில்லை. அவர் ஆடிய ஒவ்வொரு ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு க்ளீனாக இருந்தது. மறுபக்கம் ரஹானே புஜாராவை விட கூடுதல் நெருக்கடியிலேயே களத்திற்கு வந்தார். முதல் இன்னிங்ஸ் கோல்டன் டக் ஆகி சென்ற அவருக்கு இந்த இன்னிங்ஸே தன் கரியரின் கடைசியாக கூட இருக்கலாம். ஆனால் இவை எதுவும் தன் ஆட்டத்தை பாதிக்காதவாறு நேர்மறையாக பேட்டிங்கைத் தொடங்கினார். இரண்டாம் நாளில் அவர் ஆடிய ஒரு கவர் ட்ரைவே இதற்கு முழு சாட்சி.

இரண்டாம் நாளில் இறுதி ஓவர்கள் இவ்வாறு போக அடுத்த நாளையும் விட்டதிலிருந்து தொடங்கியிருந்தனர் இருவரும். பவுண்டரி போகபோகாத ஓவர்கள் என்பது மிக குறைவாகவே இருந்தது. ரஹானேவின் நம்பிக்கை உச்சத்திற்குச் செல்ல யான்சன் வீசிய அவுட் சைட் ஆப் ஷார்ட் பந்தை டீப் பாய்ண்டிற்கு சிக்ஸராக மாற்றி அனுப்பியிருந்தார். என்ன நடக்கிறது என்று தென்னாபிரிக்க அணியினர் சுதாரித்து கொள்ளும் முன்பாகவே 100-ஐ கடந்திருந்தது இவர்களின் பார்ட்னெர்ஷிப். ஆனால் இந்தக் கூட்டணியை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று இருவரையும் தன் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார் ரபாடா.

Rahane | SA vs IND
Rahane | SA vs IND

புஜாரா - ரஹானேவின் இந்த மகத்தான இன்னிங்ஸ் அணியை சரிவிலிருந்து காப்பாற்றினாலும் மிடில் ஆர்டரின் குழப்பத்தை இன்னும் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அடுத்த போட்டியில் கோலி அணிக்கு திரும்பினால் வெளியே உட்காரவைக்கப்படுவது யார்… புஜாராவின் ஸ்பாட்டிற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால் ரஹானேவின் இடம்தான் தற்போது கேள்விக்குறி. ஏனென்றால் விஹாரியும் மிக நேர்த்தியாக ஆடி அணிக்கு தேவையான நேரத்தில் நேற்று ரன்களை அடித்து கொடுத்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்க பௌலர்களையும் அவர் சந்திக்கும் விதம் மிக அருமையாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!