சினிமா
Published:Updated:

ஓ மை கோலி!

கோலி
பிரீமியம் ஸ்டோரி
News
கோலி

ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும். பின்வரிசை வீரர்கள் கடைசிக்கட்டத்தில் ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை முடிக்க வேண்டும்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் யாரிடம் தோற்கிறோம், எப்படித் தோற்கிறோம் என்பது மிகவும் முக்கியம். எந்தவிதப் போராட்டமும் இல்லாமல், எந்த எதிர்ப்பும் காட்டாமல் மொத்தமாக சரணடைவது, அதுவும் உலகின் நம்பர் 1 அணி அவமானகரமான தோல்வியைச் சந்திப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

ஓ மை கோலி!

‘`கடந்த 15 ஆண்டுகளில் இதுதான் சிறந்த அணி’’ என்பதுதான் இந்திய அணியைப் பற்றிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் கருத்து. அவர் சொல்வது ஒருவகையில் உண்மைதான். இந்தியாவுக்குள் விளையாட இதுதான் மிகச்சிறந்த அணி. ஆனால், இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் விளையாட அல்ல.

நியூஸிலாந்தில் டி20 தொடரை 5-0 எனக் கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரை 0-3 எனவும், டெஸ்ட் தொடரை 0-2 எனவும் இழந்திருக்கிறது. இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி இந்த டூரில் மொத்தமாக ரன் எடுக்கத் திணறியதும், பெளலிங் வித்தகன் பும்ரா விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் தள்ளாடியதுமே தோல்விக்கான மிக முக்கியமான காரணங்கள். ஆனால் இதையும் தாண்டி உள்ளே போனால், இந்தியாவின் தோல்விக்கு இன்னும் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

விராட் கோலி
விராட் கோலி

ஓ மை பேட்ஸ்மேன்களே!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து பிட்ச்களில் விளையாடும்போது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மிகவும் சிறப்பானதாக அமையவேண்டும். உத்தேசமாக 30 ஓவர்கள் வரை ஓப்பனர்கள் விக்கெட்டை விடாமல் தாக்குப்பிடித்து ஆடவேண்டும். அடுத்ததாக வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து இன்னிங்ஸை பில்ட் செய்யவேண்டும். டாப் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேனாவது ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும். பின்வரிசை வீரர்கள் கடைசிக்கட்டத்தில் ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை முடிக்க வேண்டும். ஆனால், எவற்றையுமே இந்திய பேட்ஸ்மேன்கள் நியூஸிலாந்துத் தொடரில் செய்யவில்லை.

பேட்ஸ்மேன்கள்தான் ஏமாற்றினார்கள்... இப்போதுதான் திறமையான பெளலர்களைக் கொண்ட சிறப்பான அணி இந்தியா வாயிற்றே என நினைத்தால் அங்கேயும் வேதனைகள்தான். இந்திய பேட்ஸ்மேன்கள் செய்யத்தவறிய அனைத்தையுமே நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்ய இடம் கொடுத்தது இந்தியாவின் பெளலிங் டிபார்ட்மென்ட். ஓப்பனர்கள் நீண்ட நேரம் நின்று விளையாடினார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடினார்கள். டெய்ல் எண்டர்கள் எல்லாம் சில பல பவுண்டரிகளை அடித்து விட்டுப்போனார்கள் என ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தது பும்ரா, ஷமி, இஷாந்த் கூட்டணி. முதல் டெஸ்ட்டில் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை எடுத்தாலுமே அவையெல்லாம் காலம் கடந்து கிடைத்த விக்கெட்டுகள்தான்.

கோலிக்கு என்ன ஆச்சு?!

4 முதல் 5 இன்னிங்ஸுக்கு ஒருமுறை சதம் அடித்துக்கொண்டிருந்த கோலி கடந்த 24 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கவில்லை. சதம் அடிக்காதது பிரச்னையில்லை. ஆனால் அவர் அவுட் ஆகும்விதம்தான் கவலையளிக்கிறது. வழக்கமாக தன்னை நோக்கி பந்தை வரவைத்து ஆடுபவர் கோலி. ஆனால் நியூஸிலாந்துத் தொடரில் பந்தைத் தேடித் தேடிச் சென்று ஆடிக்கொண்டிருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு முறையும் dipping balls என்று கூறப்படும் இன்கமிங் இன்ஸ்விங் பந்துவீச்சுக்கு மிகவும் எளிதாக எல்பிடபிள்யூ ஆனார் கோலி. பழைய கோலியாக இருந்திருந்தால் இந்தப் பந்துகளை மிகவும் லாகவமாகத் தடுத்து ஆடியிருப்பார். ஆனால் இப்போது Hand-eye coordination பெரிதாக மிஸ் ஆகிறது. அதனால்தான் தடுமாறுகிறார் கோலி.

5 வருட கோலி டெஸ்ட் கேப்டன்ஸி கரியரில் முதல்முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அவர் பேட்டிங் ஃபெயிலியரும் பெரிய காரணம். கோலி அவுட் ஆகிவிட்டால் தலைவனை இழந்த படைபோல் மற்ற வீரர்களும் பெவிலியனுக்கு அவசர அவசரமாக நடையைக் கட்டிவிடுகின்றனர். 90-களில் சச்சின் அவுட் ஆனால் இந்திய அணிக்கு என்னாகுமோ அதைப் பார்ப்பதுபோல் இருந்தது இந்த நியூஸிலாந்துத் தொடர்.

சரி பேட்டிங்கில்தான் சொதப்புகிறார், கேப்டன்ஸியில் சிறப்பான முடிவுகளை எடுக்கிறாரா கோலி என்றால், அதுவும் இல்லை. முக்கியமான தருணங்களில் தனது முடிவுகளால் அணிக்குப் பாதகத்தை ஏற்படுத்துகிறார். முதல் டெஸ்ட்டில் 80 ஓவர்கள் முடிந்தவுடன் புதுப் பந்தை எடுத்தபோது வேகப்பந்து வீச்சாளர்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு மாறாக அஷ்வினிடம் பந்தைக் கொடுத்து டெய்ல் எண்டர் களை ரன் சேர்க்க வைத்து விட்டார் கோலி.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாமிசனுக்கு ஜடேஜாவைப் பந்து வீச வைக்காமல், ஜாமிசன் நன்றாக ஆடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத் தினார். இதேபோல் பல பெளலிங் ரொட்டேஷன்கள் சம்பந்தம் இல்லாமல் நடந்துகொண்டிருந்தன. ஆனால், எதிர்ப்பக்கம் ஒவ்வொரு வீரருக்கும் எப்படிப் பந்து வீச வேண்டும், எங்கு ஃபீல்டர்களை நிறுத்த வேண்டும் என அருமையாகத் திட்டமிட்டுச் சொல்லி அடித்தார் கேன் வில்லியம்சன். முக்கியமாக டெயில் எண்டர்களைக் காலி செய்யும் வித்தையை கோலி, வில்லியம் சனிடம் கற்க வேண்டும்.

நியூஸிலாந்துத் தொடர் இந்திய அணிக்குள் இருக்கும் பிரச்னையை வெட்டவெளிச் சமாக்கியிருக்கிறது. இன்னும் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வில்லையென்றால், நாங்கள்தான் நம்பர் 1 என்று சொல்லிக்கொண்டே இன்னும் பல மோசமான தோல்விகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.