சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஏலம் ஆரம்பம்!

கிளென் மேக்ஸ்வெல்
பிரீமியம் ஸ்டோரி
News
கிளென் மேக்ஸ்வெல்

வெளிநாட்டு வீரர்களில் வழக்கம்போல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு செம டிமாண்ட் இருக்கும்.

ன்…டூ…த்ரீ… தி ப்ளேயர் கோஸ் டு... சுத்தியலின் சத்தத்திற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த வாரம், ஐ.பி.எல் 13-வது சீசனுக்கான ஏலம் தொடங்கப்போகிறது. இந்த ஆண்டு என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன?

ஏலம் ஆரம்பம்!
ஏலம் ஆரம்பம்!

ஏலத்தின் மையப்புள்ளியாக இருக்கப்போவது ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல். உளவியல் காரணங்களுக்காக கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விலகிய அவரது பெயர் ஐ.பி.எல் ஏலப் பட்டியலில் இருந்ததே பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், சிறு ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கி விட்டார் மேக்ஸி. விக்டோரியா அணியினரோடு கடந்த வாரமே பயிற்சியைத் தொடங்கிவிட்ட அவர், முந்தைய உத்வேகத்தோடு களம் காண்பார் என எதிர்பார்க்கலாம். மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கும் பெங்களூரு, கிங்ஸ் லெவன் அல்லது அவரது பழைய அணியான டெல்லி கேப்பிடல்ஸ் இவருக்காகக் கடும் போட்டியில் ஈடுபடலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்த ஆண்டுக்கான ஏலத்துக்குத் தனது பெயரைப் பதிவிடவில்லை. அதேபோல், ஐ.பி.எல் அணிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவந்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், ஏலத்தில் பங்கேற்காமல் `புறக்கணிப்பை’ப் புறக்கணித்துள்ளார்.

ஐ.பி.எல் ஏலத்தில் ஆச்சர்யமே நட்சத்திர வீரர்கள் புறக்கணிக் கப்படுவதும், அறிமுகமில்லாத வீரர்கள் கோடிகளைக் குவிப்பதிலும் தான் இருக்கிறது. அப்படியான ஆச்சர்யங்கள் இந்த ஏலத்திலும் நிறைய காத்திருக்கின்றன. கொல்கத்தா வின் நம்பிக்கை நாயகனாக இருந்த ராபின் உத்தப்பா, டேல் ஸ்டெய்ன் போன்ற பெயர்கள் ‘அன்சோல்டு’ பட்டியலில் இணைவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. மும்பை இந்தியன்ஸ், யுவராஜ் சிங்கை வாங்கியதுபோல் தங்கள் முன்னாள் வீரர் உத்தப்பாவை வாங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில், அவரது ஐ.பி.எல் பயணம் முடிவுக்கு வரலாம்.

இயான் மோர்கன்
இயான் மோர்கன்

எதிர்பாராத கோடீஸ்வரர்கள் லிஸ்ட்டில் இணையவும் நிறைய பெயர்கள் இருக்கின்றன. ‘சையது முஷ்தாக் அலி’ தொடரில் அசத்திய மும்பை வேகப்பந்துவீச்சாளர் ஷாம்ஸ் முலானி பல கோடிகளுக்கு ஏலம் போகலாம். கிங்ஸ் லெவன், ராஜஸ்தான் ராயல்ஸ், சூப்பர் கிங்ஸ் அணிகள் அவருக்குப் போட்டி போடக்கூடும். அந்தத் தொடரின் டாப் விக்கெட் டேக்கரான தமிழக ஸ்பின்னர் சாய் கிஷோர் நிச்சயம் பல அணிகளின் கவனத்தைப் பெறுவார். அதேபோல் ரோஹன் கடம், ஷாரூக் கான், விராத் சிங் போன்றவர்களும் நல்ல தொகை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

வெளிநாட்டு வீரர்களில் வழக்கம்போல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு செம டிமாண்ட் இருக்கும். ஷெல்டன் காட்ரல் நிச்சயம் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார். கரீபியன் பிரீமியர் லீகில் அசத்திய பிராண்டன் கிங், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் போன்றவர் களுக்கும் பெரிய போட்டி இருக்கும்.

கிளென் மேக்ஸ்வெல்
கிளென் மேக்ஸ்வெல்

இங்கிலாந்து வீரர்களுக்கு இந்த முறை பாதியில் கிளம்பும் பஞ்சாயத்து இல்லை யென்பதால் ஜேம்ஸ் வின்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், பேன்டன், ஜோர்டான், சாம் கரண் போன்றவர்களை இந்த சீசனில் அதிகம் காண்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த அணியின் ஒருநாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து அணிகளின் விஷ் லிஸ்ட்டிலும் இருப்பார். கிங்ஸ் லெவன் அணிக்கு கேப்டன் மெட்டீ ரியல் இல்லையென்பதால், பிரீத்தி ஜிந்தாவின் அணிக்கு மோர்கன் ஆடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!

வழக்கம்போல் இந்த ஏலத்திலும் பிஸியாக இருக்கப் போவது கிங்ஸ் லெவன் நிர்வாகம்தான். கிட்டத்தட்ட தங்கள் அணியின் பாதியைக் கழற்றிவிட்டிருக்கும் அந்த அணியிடம் 42.7 கோடி ரூபாய் கைவசம் இருக்கிறது. கிறிஸ் லின், உத்தப்பா, பிராத்வெயிட் போன்ற காஸ்ட்லி வீரர்களை விடுவித்திருக்கும் நைட் ரைடர்ஸிடம் 35.65 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. குறைந்தபட்சமாக, மும்பை இந்தியன்ஸ் வசம் 13.05 கோடி ரூபாய் இருக்கிறது. அவர்களின் முதல் லெவன் ஏற்கெனவே பர்ஃபெக்டாக இருப்பதால், அவர்கள் வாங்கவேண்டியதெல்லாம் பேக் அப் வீரர்களைத்தான். அதனால், ஏலத்தில் மும்பை கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் 14.6 கோடி ரூபாய் இருக்கிறது. தங்களின் பழைய ஃபார்முலாவை இந்த முறையும் பின்பற்றி, ‘கோர்’ வீரர்களைத் தக்கவைத்திருக்கிறது சென்னை அணி. வாட்சன், பிராவோ போன்ற முன்னணி வீரர்கள் டி-10 லீக்கில் பழைய உத்வேகத்தோடு விளையாடியி ருப்பதால், அந்த அணிக்கு எந்த மாற்றமும் தேவைப்படப் போவதில்லை. தீபக் சஹாரின் எழுச்சி, அணிக்குள் இந்திய வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தையும் நிரந்தரமாக்கி யுள்ளது.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்

கடந்த ஆண்டு லுங்கி எங்கிடிக்கு ஏற்பட்ட காயம் சென்னை அணிக்குச் சற்று சிக்கலை ஏற்படுத்தியது. அதனால், ஒரு நல்ல வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை வாங்குவது அவசியம். சாம் பில்லிங்ஸ் இடத்துக்கு ஒரு பேட்ஸ்மேனையோ அல்லது பிராவோவுக்கு பேக் அப்பாக ஒரு ஃபாஸ்ட் பௌலிங் ஆல் ரவுண்டரையோ வாங்கலாம். இவர்களோடு சேர்த்து, இந்த முறையாவது ஓரிரு தமிழக வீரர்களை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஷாரூக் கான், சாய் கிஷோர், பாபா அபராஜித் போன்றவர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால், அதற்கான வாய்ப்பும் இருக்கிறது!